வெள்ளி, பிப்ரவரி 20, 2004

எனக்குப் பிடித்தக் கதைகள்(73) - பாவண்ணன்

தேடியதும் கிடைத்ததும் - கரிச்சான் குஞ்சுவின் "நூறுகள்"

1)
பிறகு ஏதோ முடிவுக்கு வந்ததைப்போல பெட்டியை எடுத்துக்கொண்டு விறுவிறுவென்று ரயிலிலிருந்து இறங்கினாராம். நிலையத்தை விட்டு பத்துநிமிட தூரம் நடந்து வந்து ஒரு விடுதிக்குள் தேநீர் குடிப்பதற்காக நுழைந்தாராம். பிறகு, வெகுஇயல்பாக அப்பையைத் திறந்து பார்த்தாராம். குழந்தைகளுக்கான ஒருசில ஆடைகள். சில புதிய காலணிகள். வண்ணக் காலுறைகள். ஒரு பொம்மை. சில ஆப்பிள்கள். கொய்யாப்பழங்கள். இவற்றுக்கிடையே கைக்குட்டையால் கட்டப்பட்ட நூறு ரூபாய்க் கட்டொன்றும் இருந்ததாம். யாரிடமிருந்தோ கைப்பற்றிக்கொண்டு ஓடோடி வந்ததைப்போன்ற எண்ணங்களும் பின்னாலேயே யாராரோ துரத்திக்கொண்டு வருவதைப்போன்ற எண்ணங்களும் ஒருசில நொடிகளுக்கு மனத்தை அழுத்தினவாம்.


"அந்தப் பயணமே யாரையாவது பார்த்துப் பணத்தைப் புரட்டி எடுத்துக்கொண்டு வருவதற்காகத்தான். பத்துப்பேரைப் பார்த்தோம். பார்க்காத அந்தப் பதினோராவது ஆள் தாமாகவே முன்வந்து கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார் என்று எண்ணிக்கொள்ளலாமே" என்று பதறும் தன் மனத்துக்கு ஆறுதல் சொல்லிவிட்டுக் கிளம்பினாராம். வீட்டுக்கு வந்ததும் அறையை மூடிக்கொண்டு பணத்தை எண்ணியிருக்கிறார். பத்தாயிரம் ரூபாய். அப்போதே மகனை அழைத்துக்கொண்டு பெங்களூருக்குச் சென்று கல்லூரியில் சேர்த்துவிட்டு விடுதிக்கும் பணத்தைக் கட்டிவிட்டு வந்தாராம். திரும்பிவரப் பேருந்துக்கான பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மிச்சப் பணத்தை அங்கேயே ஒரு வங்கியில் மகனுடைய பெயரில் போட்டுவிட்டாராம்.


எல்லாவற்றையும் சொல்லிமுடித்துவிட்டுத் தான் செய்தது சரியா தவறா என்ற கேள்வியை என் முன்னால் வைத்தார். நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமே எழவில்லை. சரி என்கிற பதிலையே அவர் ஒரு பக்கம் முன்வைத்துக்கொண்டு தவறுதான் என்கிற வாதங்களுக்கான கருத்தோட்டங்களை அடுக்கினார். தொடர்ந்து அவர் வாதங்களை அவரே நொறுக்கும்படி சரிதான் என்கிற வாதங்களுக்கான கருத்தோட்டங்களையும் அடுக்கினார்.

----
2)
வாழ்வும் ஒரு சீட்டாட்டம் போலத்தான். வெற்றிக்கான சீட்டு கிடைத்துவிட்டால் ஆட்டத்தில் மகிழ்ச்சி பிறந்துவிடும். ஆனால் அச்சீட்டின் வருகையோ வராமையோ நம் கையில் இல்லை. அட்டைகளின் சுழற்சியில் யாருக்கு அது வருமோ , யாருக்கு அது பொருந்திப்போகுமோ என்பது இறுதிவரை தெரிவதே இல்லை. வாழ்வில் அடைகிற வெற்றிக்கும் இப்படி ஒரு வெற்றிச் சீட்டு தேவைப்படுகிறது. சிலருக்கு இந்த வெற்றிச் சீட்டு எந்த முயற்சியும் இல்லாமலேயே கிடைத்துவிடுகிறது. வேண்டாம் என்று உதறித் தள்ளினாலும் காலடிக்கு வந்து சேர்கிறது. வேண்டும் என்ற தவமிருப்பவர்கள் கைகளில் அகப்படுவதே இல்லை. இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டில் வெற்றி எப்போது வரும் எப்போது கைநழுவிப்போகும் என்பது தெரிவதும் இல்லை.

எப்போதுமே தோல்வியைத் தழுவுகிறவர்தான் அவர். வாய்ப்பேச்சில் எப்படியாவது வெளியுலகில் காரியங்களைச் சாதிக்க முயல்பவர். கதை நடக்கும் நாளில் வெளியுலகில் தம் காரியத்தில் வெற்றி காண முடியாதபடி பெருந்தோல்விகள் காத்திருக்கின்றன. தன் படுக்கைக்கு நூறாவது பெண்ணை அழைத்துவந்ததை வெற்றியாகக் கொண்டாடுகிறவன் முதலாக சுந்தர காண்டத்தை நூறாவது முறையாகப் பாராயணம் செய்வதை வெற்றியாகக் கொண்டாடுகிறவன் வரை யாரும் உதவ முன்வரவில்லை. மாறாக காலமெல்லாம் தோல்வியையே தந்தபடியிருந்த சீட்டாட்டம் வெற்றியைத் தருகிறது. வெற்றிக்கும் தோல்விக்கும் தனிப்பட்ட அர்த்தம் எதுவுமில்லை. அவை வெறும் சொற்குவியல். அந்த உண்மையை நாம் கண்டடையும்போது நம் மனத்தில் "நூறுகள்" என்னும் கரிச்சான் குஞ்சுவின் சிறுகதை ஆழமாக வேரூன்றுகிறது.

*

http://www.thinnai.com/ar0822035.html

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு