திங்கள், பிப்ரவரி 16, 2004

ஜனவரி மாசத்துச் சிதறல்

* நியு யார்க் டைம்ஸ்: அமெரிக்கப் பங்குசந்தையில் கிட்டதட்ட அனைத்து பங்குகளுக்கும் கொண்டாட்டம்தான். வரலாறு காணாத அளவு சிறுதொழில் பங்குகளும் சக்கைபோடு போடுகின்றன. பணம் புரள விடுவதில் நுகர்வோர்கள் மூன்றில் இரண்டு பங்கு செலவழித்துக் கொண்டு, தொழில் நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டார்கள். உணவுக்கும் ஆடைக்கும் செலவழிப்பதை விட பன்மடங்கு படிப்புக்கும், மருத்துவர்களுக்கும், காப்பீடுகளுக்கும், மருந்து மாத்திரைகளுக்கும் செலவழிக்க நேரிடுகிறது. சூதாட அதிகம் செல்கிறார்கள். அமெரிக்காவில் வாரந்தரிகளும், தினசரிகளும் படிப்பது குறைவது கவலை தந்தாலும், டிவி பார்ப்பதும், இணையம் சுற்றுவதும் அதிகரித்தாலும், புத்தகம் படிக்கும் பழக்கத்தைக் கைவிடாமல் அதிகரித்து இருக்கிறார்கள். அமெரிக்கர்கள் தொடர்ந்து பணத்தைக் கரைப்பதிலும், டால்ர் மதிப்பு ஏறாமல் இருப்பதிலும்தான் அடுத்த சுற்று ஆட்குறைப்பு நடக்காமல் இருக்க வழிவகுக்கும்.

* பிபிசி: முன்பொருமுறை சென்னை திரையரங்கில் எஸ்.ஏ. சந்திரசேகர் ஹேண்டிகாம் வைத்து படம் எடுக்க முயற்சித்ததாக வதந்தி சாற்றபட்டார். இணையத்தின் உபயத்தில் 'உலகக் கணினி பெட்டியில் முதன்முறையாக' என்று 'மேட்ரிக்ஸ்' முதற்கொண்டு பல படங்கள் வெளியிடப்பட்டதால், இனி தியேட்டரில் சொந்த உபயோகத்திற்காகக் கூட வீடியோ எடுக்கக்கூடாது என்று பல மாநிலங்கள் சட்டம் கொண்டு வந்திருக்கின்றன. 'திரைப்பட சங்க' உறுப்பினர்களே சொல்வது போல் படத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் திருடாமல் இருந்தால்தான் விசிடி உலா வருவதைத் தடுக்க முடியும்.

* பிபிசி: இணையத்தினால் ஓழுங்காக வீட்டுக்கணக்குப் போடுபவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். பெற்றோர்கள், அண்ணாக்கள், அக்காக்களின் உதவியையும் பள்ளி மாணவர்கள் விட்டு வைப்பதில்லை. வலைத்தளங்கள் இருப்பதால் மாணவர்களுக்கு வீட்டுவேலை அதிகமானதா அல்லது வீட்டுவேலை அதிகமானதால் இணையத்தை நாடுகிறார்களா என்று தெரியவில்லை.

* நியுயார்க் டைம்ஸ்: மத்திய பிரதேசத்தில் வசிக்கும் ரவி ஷாம் சவுத்ரி ஒவ்வொரு நாளும் சிகாகோ வர்த்தக மைய நிலவரங்களைப் பார்வையிடுகிறார். சோயாபீனின் விலைமாற்றங்களை கவனிக்கிறார். விலை ஏறிக்கொண்டிருந்தால் உள்ளூர் வியாபாரிகளை காலம் கனிய காத்திருக்கவோ, இறங்க ஆரம்பித்தால் உடனடியாக விற்கவோ அறிவுறுத்த முடிகிறது. ஒரு இ-சௌபல் 2500 விவசாயிகளை சென்றடைகிறது. உலக சந்தை பட்டியல், வானிலை விவரங்கள், மண் சோதனை டிப்ஸ், என அவசியமான அனைத்து விஷயங்களும் கீபோர்ட் நுனியில் கிடைக்கச் செய்கிறது. அறுபது நிறுவனங்கள் பங்கு கொண்டு மூவாயிரம் இ-சௌபல்கள் அமைத்து பதினெட்டாயிரம் கிராமங்களையும் பதினெட்டு லட்சம் விவசாயிகளையும் உலகப்பொருளாதாரத்தோடு ஐக்கியப்படுத்துகிறது. கொசுறாக மின்னஞ்சல் அனுப்புவதும், இந்தியா எ·ப்எமில் பாட்டு கேட்பதும் அரட்டை அடிப்பதும், பத்தாவது பரீட்சை முடிவுகள் பார்ப்பதும் செய்கிறார்கள்.

* பிபிசி: இரத்தகுழாய்களில் இருந்து கொழுப்பு வெளிவரும் கொடூரமான சித்தரிப்பை புகைபிடிப்பவர்களுக்கான புதிய பயமுறுத்தலாக விளம்பரம் செய்கிறார்கள். புகைபழக்கத்தால் பிரிட்டனில் வருடத்திற்கு 120,000 மக்கள் இறக்கிறார்கள். விளம்பரம் நண்பர்கள் சிகரெட் பத்த வைப்பதில் தொடங்குகிறது. புகை வருவதற்கு பதிலாக சிகரெட் நுனியில் இருந்து கொழுப்புக் கசிவதாக தொடர்கிறது. 2010-க்குள் ஒண்ணரை மில்லியன் மக்களை மனம் மாறச் செய்யும் என்னும் நம்பிக்கையில் விளம்பரம் ஆரம்பித்துள்ளது.

* பிபிசி: இங்கிலாந்து மக்களின் குணாதிசயங்களை மாற்றும் வலையகங்களாக கூகிள், ஈ-பே, ·ப்ரெண்டெஸ் ரியுனைடெட் தளங்கள் உள்ளது. புதுமையான வலைத்தளங்கள் பட்டியலில், நண்பர்கள் பலரை வலைப்பதிய வைக்கும் ப்ளா·கர், அரட்டை அடிக்கும் ஏஓஎல்-மெஸெஞ்சர், எம்பி3 திரைப்பாடல்களைப் பகிர்ந்து கொள்ள உதவும் நேப்ஸ்டர் ஆகியவை இடம்பிடித்துள்ளன.

* பிபிசி: மக்களின் தேடலுக்கு முதல் காரணம் 'வதந்தி'. பிரிட்டிஷ் மகாபிரபுகளுக்கு இளவரசர் சார்லஸ் செய்யும் லூட்டிகள் தேட வைத்தது என்றால், உலகத்தில் உள்ள அனைவரும் ப்ரிட்னி ஸ்பியர்ஸின் கல்யாணம், காதல், எம்டிவி முத்தம் என்று தேடினார்கள். 'குழந்தை பொறுக்கி' என்று பட்டம் பெற்ற முன்னாள் இசை சக்கரவர்த்தி மைக்கேல் ஜேக்ஸன், 'இணைய கவர்ச்சி ராணி' என்று புகழ் தேடிக் கொண்ட பாரிஸ் ஹில்டன் ஆகியோருடன் ஈராக் யுத்தம், 'மேட்ரிக்ஸ்' திரைப்படம் ஹாரி பாட்டர் ஆகியோரும் தலை பத்துத் தேடலில் இடம் பிடித்துள்ளார்கள்.

* ஐஎச்டி: 'குடியரசு' கட்சியின் முக்கிய கொள்கைக்கே சோதனை. அரசாங்கம் எதிலும் மூக்கை நீட்டாமல் ஒதுங்கியே இருந்து குறைந்த செலவில் இயங்க வேண்டும் என்பது அவர்களின் தார்மீகக் கொள்கை. நிறுவனங்களுக்கு பல துறைகளிலும் கால்பதித்து லாபத்தை அதிகரிக்க வாய்ப்பு. செனேட்டில் அதிக அளவில் 'சுதந்திர' கட்சிவாதிகள் இருந்ததனாலும், பில் க்ளிண்டன் ஜனாதிபதியாக இருப்பதனாலும்தான் இதை செயல்படுத்த முடியவில்லை என்று குற்றம்சாட்டிவந்தார்கள். கடந்த மூன்றாண்டுகளாக செனேட், காங்கிரஸ், ராஷ்டிரபதி எல்லோரும் 'குடியரசு' கட்சிவசம் என்றாலும் அரசு ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதேத் தவிர குறையவில்லை. மக்களுக்குப் பிரச்சினைகள் தன்னலேயே தீர்ந்து கொண்டால் போதும். அரசு இயந்திரத்தைக் குறைத்துத் தன் மேல் பாரத்தை சுமத்தாதவரைத்தான் தேர்ந்தெடுப்பார்கள்.

* நியு யார்க் டைம்ஸ்: சீனா சார்ஸ் கிருமியின் தாக்குதலை தடுக்க பத்தாயிரம் (சிவெட்) பூனைகளைக் கொளை செய்தார்கள். கிராமப்புற சீனர்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளுள் இந்தப் பூனை வகையும் அடக்கம். இந்தப் பழக்கத்தினால்தான் போன வருடம் அதிக அளவு சார்ஸ் பரவியதாக நம்பப்படுகிறது.

* நியு யார்க் டைம்ஸ்: இசைவிரும்பிகள் காசு கொடுக்காமல் எம்பி3க்களைத் திருடுவதை தடுக்க தொழிற்நுட்பத்தின் ஐந்து 'தாதா' நிறுவனங்கள், இண்டெல், நோக்கியா, சாம்சங், தோஷிபா, மாட்ஸ¤ஷிடா கைகோர்த்துக் கொண்டன. மைக்ரோசா·ப்ட் 'என் வழி தனி வழி' என்று இன்னொரு காக்கும் வித்தையை முன் வைத்திருக்கிறது. இந்த இரண்டு பேர் தவிர ஆப்பிள் மெக்இண்டாஷ், ரியல் நெட்வொர்க்ஸ், சோனி, ·பிலிப்ஸ் இன்ன பிறர் சேர்ந்து கொண்டு எங்கள் காப்புரிமை நுட்பமே தலை சிறந்தது என்று பறை சாற்றி வருகிறார்கள். 'ஊர் ரெண்டு பட்டால் 'கூத்தாடி' திருடனுக்குக் கொண்டாட்டம்'.

* பிபிசி: இந்தியாவில் மீன்களைக் கொண்டு மலேரியாவைக் கட்டுபடுத்துகிறார்கள். இந்தியாவின் பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க நிதியை பூச்சி மருந்துகள் மூலம் மலேரியா தடுப்பதில் செலவழிக்கிறார்கள். ரொம்ப சுளுவான இந்தப் புது ஐடியா மூலம் மலேரியா பரப்பும் கொசுக்கள் உள்ள குட்டை குளங்களில் இந்த மீன்களை விட்டு விடுகிறார்கள். கொசுக்கள் முட்டை பொரித்தவுடன், குஞ்சுகள் பறப்பதற்குள் மீன்களுக்கு உணவாகி விடுகின்றன. பூச்சி மருந்துகளுக்கு பாச்சா காட்டும் எதிர்ப்புத்தனமை வளர்ந்துவிட்ட கொசுக்களை அழிப்பதற்கு இதுதான் எளிதான உத்தி.

நன்றி: தமிழோவியம்

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு