வெள்ளி, ஜூன் 11, 2004

பின்னூட்டம் (ரா.கா.கி)

லாஸ் ஏஞ்சலஸ் சுவாமிநாதன்: கதையை விரும்பி படிப்பதற்கு வாசகனின் ஆர்வம், மொழிப்புலமை, வயது, கிடைக்கும் ஓய்வு நேரம், ஆசிரியரின் பிரபலம், படிக்க பத்திரிக்கை கிடைக்கிற வாய்ப்பு, படித்து ஏற்பட்ட தேர்ச்சி, கதையைப் பற்றிய விளம்பரம்.

இப்படி பல காரணங்கள் இருக்கு.

ஆர்வம்: "அந்தப் பொண்ணை விவரிக்கறான் பாரு..சூப்பர்"
ஆர்வமின்மை: "ஆறு பக்கம் படிக்கணுமா?"
மொழிப்புலமைஇன்மை :"டமில் ரொம்ப படிக்கல சார்..பிரெஞ்சு படிச்சேன்.. இதுதான் 'கா'னாவா?"
வயது: பழம் தின்னு கொட்டை போட்டாச்சு. இந்த வயசுல எனக்கு காதல் கதை வேணுமா சார்?

பத்திரிக்கையின் மெத்தனம்:
இன்றைக்கு பல பத்திரிக்கைகள் போட்டியிலே இயங்கும்போது வரும் கதைகளை நன்கு பரிசீலித்து, வெட்டி ஒட்டி போட சரியான ஆசிரியர் குழு இல்லாத நிலையில், கதை போடுவது ஒரு சடங்காக ஆகிவிடுகிறது.

"ரெண்டு பக்கத்துக்கு எதாவது மேட்டர் வேணுமில்ல, போட்டுத் தொலைங்க"

படித்து ஏற்பட்ட தேர்ச்சி:
வாசகன் கொஞ்சம் விசயம் தெரிஞ்சவன், இல்ல அவனே கதை எழுதறவன்னா, படிக்கறச்சே சீக்கிரம் சலிப்பு வந்திரும்.

"கைநாடியைத் தொட்டவுடனே அவனுக்கு லிவர் கேன்சர் இருப்பது தெரிந்தது", "சோழன் எக்ஸ்பிரஸ் சரியான நேரத்தில் வந்திருந்தது", "கூட்டமில்லாத பேருந்தில் ஏறினான் பெரியசாமி" -- இதை படிச்ச ஒடனே என்னங்கடா புரூடா விடறானுகன்னு மூடிடுவான்.

ஆசிரியரின் பிரபலம்:
பிரபல ஆசிரியர் சுஜாதான்னா படிச்சுரணும்னு படிப்பான். சரி ஒழிஞ்சு போறது, இரா.முருகன், லாவண்யா இப்படி சில பேரு எழுதினா படிப்பான்.. ஊர் பேர் தெரியாத ஆள்னா சந்தேகம்தான்..

கதையைப் பற்றிய விளம்பரம்: "இந்தக் கதையில எத்தினி தடவை ரஜினின்னு வருதுன்னு சரியா சொன்னா வைரமோதிரம் தருவாங்களாம்"

பத்திரிக்கை படிக்க வாய்ப்பு:
"காப்பி மட்டுமில்ல, குமுதம், விகடன் எல்லாம் நிறுத்தியாச்சு"
"இந்த கதை புத்தகமா ஒனக்கு சோறு போடும்? போய் பாடத்தை படிறா"

ஓய்வு நேரம்: "படிக்கணுனு பாக்கறேன்..ஆபீஸ்ல ஆடிட்.."
"புத்தகத்தை திறந்தேன்...டிவில டிஸ்கவரி சானல்ல முதலை காட்டினான்."
"எவ்ளொ பெரிசு...மூடிட்டேன், புத்தகத்தை.."
"படிக்க உட்கார்ந்தா கரண்ட் போயிடுச்சு"

படிக்கறதுக்கு இவ்வளவு இடைஞ்சல்..........

இத்தனையும் மீறி இன்னிக்கும் படிக்கறவன் இருக்கான். ராகவன் சொன்னாப்புல ஆசிரியருக்கு கடிதம் போடறான் "சுமதியின் தியாகம் கண்ணில் நீர் வரவழைத்தது"ன்னு. தன் பேராவது பிரிண்டுல வராதான்னு..

ஆனால் முழு கவனத்தோட வாசிக்கறவன் ரெண்டு பேர்தான்..ஒருத்தன் எழுதினவன், இரண்டாவது அதை பத்திரிகைக்கு அச்சுக் கோக்கிறவன்..



சிஃபி ராயன்: இந்தக் கடுதாசி போடறவன் ஒருத்தன் இருக்கான் பாருங்க.... பயங்கர விசேஷமானவன். எனக்குத் தெரிஞ்சு ஒழுங்கா படிக்கற யாரும் கடுதாசியே போடுவதில்லை. படிக்கறதே பெரிசு. இதில கடுதாசி வேறயா?

ஆனால் பத்து பாயிண்டு போல்டில் அயன்புரம் சத்தியநாராயணன், அரவக்குறிச்சி அசோக்ராஜா, ஐயாறு வாசுதேவன் என்று எந்த பத்திரிகையிலேயும் சில பிரஹஸ்பதிகளைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

இதிலும் சில விசேஷப் பிரபுக்கள் உண்டு. தினமணியில் கடிதம் எழுதுபவர்கள் ஒருவிதம் என்றால், வாரப் பத்திரிகைகளுக்கு கடிதம் எழுதுபவர்கள் ஒருவிதம். இவர்கள் எழுதாத விஷயமே இருக்காது.

1. அனைத்துப் பத்திரிகைகளிலும் கேள்வி கேட்பார்கள்
2. ஆங்கில பத்திரிகை/நாளிதழ்களில் இருந்து சுட்டு துணுக்கு எழுதுவார்கள்
3. காலட்சேபம், கூட்டம் என்று போய் சுவாரசியத் தகவல் என்று பிட் எழுதுவார்கள்
4. அப்புறம் நிச்சயம் வாசகர் கடிதம் எழுதுவார்கள்

வாசகர் கடிதம் பற்றி நண்பர் திருப்பூர் கிருஷ்ணன் ஒரு சுவாரசியமான தகவல் சொன்னார். ஒரு பதினைந்து பைசா (இப்போ இன்னா வெல சார்...) தபால் கார்டில் நடுவில் ஒரு போடு போட்டுவிட்டு, மேல் பகுதியில்,

அன்புள்ள ஆசிரியருக்கு
...........தேதியிட்ட இதழில் வெளிவந்த எழுத்தாளர்
.....................கதை பிரமாதம். அற்புதம். இதுபோல்
எழுத்தாளர்களை ஊக்குவியுங்கள்.

கீழ்ப் பகுதியில்

அன்புள்ள ஆசிரியருக்கு
....................தேதியிட்ட இதழில் வெளிவந்த
எழுத்தாளர்....................கதை படு திராபை. எப்படி
இப்படிப்பட்ட கதையைப் பிரசுரிக்கிறீர்கள். இனியாவது நல்ல கதைகளைப்
பிரசுரியுங்கள்.

என்று எழுதி மறக்காமல் ஊர்பெயருடன் தன் பெயரை வேறு வண்ண பால்பேனாவில் எழுதுவாராம்.

இதுவாவது பரவாயில்லை. வேறொரு சுவாரசியம் அப்புறம் சொல்கிறேன். மின் இதழ் வாசகர் கடிதங்கள் எப்படி இருக்கும் தெரியுமா?


சொக்கன்: ஆமாம், மின் இதழ்களுக்கெல்லாம் வாசகர் கடிதங்கள் வருகிறதா என்ன ? நம் மின் வாசகர்களெல்லாம் தெய்வத்துக்கு நிகரானவர்களாயிற்றே, படிப்பதே பெரிய விஷயம், இதில மின்னஞ்சல் வேற கேட்குதா என்று கண்களை உருட்டி உறுமுகிறவர்களாயிற்றே!

'தினம் ஒரு கவிதை' அனுபவத்தில் சொல்கிறேன் ... இணையத்தில் பிரசுரமான எதையாவதுபற்றி அரை பேர் கடிதம் எழுதினால், ஆயிரம்பேர் படித்திருக்கிறார்கள் என்று அர்த்தம்,

அதில் எத்தனைபேர் ஊன்றிப் படித்தார்கள் என்பதை பா. ராகவரிடம்தான் கேட்கவேணும்!

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு