Group A :: சர்வேசன் 'நச்சுனு ஒரு கதை' - போட்டி: வாசக விமர்சனங்கள்
Surveyசன் -ஆக்கியவன் அல்ல அளப்பவன். Free Surveys!:: "சூப்பர் கதை வித் ய ட்விஸ்டும், நம் வட்டத்தில் பெருகும் ஆரோக்ய சூழலும்!" பதிவில்:
கதைகள் ஒவ்வொண்ணும், படிக்கவே விறு விறுன்னு இருக்கும். ஆரம்பிச்சதும், டாப் கியர்ல ஓடி, திடீர்னு க்ளைமாக்ஸ் பாத்தா, நம்ம நெனச்சே பாக்க முடியாத மாதிரி முடியும்.
இதுதான் முக்கியம் என்றாலும், நச் அம்சத்துக்கு ஒரு மதிப்பெண் (5); மற்ற அம்சங்களும் (5) சேர்த்து மொத்த மதிப்பெண் (10), என்று சீர் தூக்கி விமர்சிக்க எண்ணம்:
1) வினையூக்கி - பேய் வீடு
வினையூக்கியின் அழைப்பில் ஏற்கனவே படித்தது. மூன்றே கதாபாத்திரங்கள். கச்சிதமான உரையாடல்.
நச் - 1/5; மொத்தம் - 4 /10.
2) இராம்/Raam - செப்புத் தாழ்ப்பாள்
பாதி தட்டச்சிய ப்ளாகர் பதிவின் நடுவில் விண்டோஸ் தொங்குவது போல் எழுத்துப்பிழை ஒன்றிருந்தாலும் நெருடல். இங்கே நிறைய தடவை க்ராஷ் ஆகிறது. துவக்கத்தில் அவை தடைகள்.
பரந்து விரிந்த மலர்ந்த அழகுமலரென்றின் நடுநாயகமாக நின்று தன்னை சுற்றி அந்த மலரின் இதழ்களெனும் வெளிவட்டம் என்ற காதல் வளர்ந்ததை நினைத்து பார்க்கல்லான்.
என்று துவங்குவது, ரம்மியமான உரையாடல்களில் நகர்கிறது. அதன் பின் சடாரென்று நடை மாறி...
தினமும் அதேமாதிரியே கல்லூரி சென்று வந்தாள். ஒரு நாள் மாலை நேரத்தில் கல்லூரி முடிந்து நண்பர்களோடு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த பொழுது முத்துவின் தந்தை மருதய்யன் எதிர்ப்பட்டார்.
குறுநாவலுக்குரிய களம். அவசரகதியில் சிறுகதை ஆகியிருக்கிறது. முடிவும் ஒப்பவில்லை; நடுவில் நம்பமுடியவில்லை. இரண்டுமே நெடுங்கதை விவரிப்பில் சரி செய்திருக்க முடியும்.
நச் - 1/5; மொத்தம் - 5.5 /10.
3) வாக்காளன் - திருமணமாம் திருமணம்
இந்த திடுக்கிடும் கதைகளின் இறுதி ரொம்பவே சிரமமான வஸ்துவாக இருக்கிறது. கனவு, கற்பனை, ஃப்ளாஷ்பேக் என்று உட்டாலக்கடி ரொம்ப சுளுவாக முடிந்துவிடுகிறது. அந்த விதத்தில் ஏமாற்றம். ஆனால், முடிவை நோக்கிய எதிர்பார்ப்பு தூண்டும் நடை பிடித்திருந்தது.
நச் - 3/5; மொத்தம் - 5 /10.
4) TBCD - தனியே தன்னந்தனியே...நடப்பது..
பேய் விவரிப்புகளுக்குரிய எல்லா சாமுத்ரிகா லட்சணமும் வைத்து நச். முடிவு பன்ச்; கதைதான் காணோம்.
நச் - 3.5/5; மொத்தம் - 5.5 /10.
5) நிலா ரசிகன் - ஒரு நடிகையின் கதை....
அசத்தப் போவது யாரு மாதிரி சுறுசுறு விவரிப்பு. முடிவு தெரியாதபடிக்கு எடுத்து சென்றது கலக்கல். கதையெல்லாம் நமக்கெதுக்கு :)
நச் - 3.5/5; மொத்தம் - 5.25 /10.
6) மோகந்தாஸ் - கடவுள் என்னிடம் கரைச்சல் செய்த பொழுதொன்றில்
முடிவு அனேகமாக இப்படித்தான் யூகிக்க முடிந்தாலும் செமத்தியான ஓட்டம். ஏடு பார்த்தல் முதல் ரஜினி பாபா வரை பாப் கல்ச்சர் அணுக்கம். கதையையும் வைத்துக்கொண்டு நச்சும் வைத்திருக்கிறார். எனினும், அழுத்தம் தராத ஓட்டம், சிறுகதை என்று மட்டும் படித்துப் பார்த்தால் சிரிப்புத் தோரணமாக மட்டுமே மனதில் நின்று போகிறது.
நச் - 3.5/5; மொத்தம் - 7 /10.
7) கார்த்திக் பிரபு - அப்போ நீ தூங்கியிருப்ப !!!- சிறுகதை
சின்னச் சின்ன தகவல்கள் உண்டு. இரயில் பயணங்கள் சுகமானது. கவிதை போன்ற உவமைகள்; ஆனால், மிரட்டாத உரைநடை. நடுவில் ஒரு பத்தி வெட்டி ஒட்டலில் ஒட்டிக் கொண்டு திரும்பவந்துவிட்டது. புகைப்படங்கள் அழகு சேர்க்கிறது. ஏமாற்றாத, புத்திசாலித்தனமாக சதாய்க்காத, சுவாரசியமான சிறுகதை.
நச் - 4/5; மொத்தம் - 8 /10.
8) கோவி கண்ணன் - நண்பனின் தங்கை...
இவர்கள் நட்பை விவரிக்க வேண்டுமென்றால் 'கண்ணதிரே தோன்றினால்' படத்தின் கரன், பிராசாந்த் இருவரின் பாத்திரங்களைத்தான் குறிப்பிட வேண்டும்.
இந்த மாதிரி சினிமா உவமைகள் எனக்கு ஒவ்வாமை தரும். இயற்கை, அனுபவம் என்று எத்தனையோ கண் முன்னே இருக்க, திரைப்பட எடுத்துக்காட்டுகளை தவிர்த்து எழுதுதல் எனக்கு பிடிக்கும். கதாபாத்திரங்கள் மனதில் தங்க முடியாத சின்னஞ்சிறு அறிமுகங்கள் இன்னொரு குறை.
நச் - 1.5/5; மொத்தம் - 4 /10.
9) வீ.எம் - அரசியல்வாதி
கதை 'ஆர்' (Restricted for 17+) ரகம். வழக்கம் போல் ஸ்க்ரால் செய்து முடிவை ஒரு நோக்கு நோக்கினாலும் செம ட்விஸ்ட் தந்திருக்கிறார். சம்பவங்களைக் கொண்டு கதாமாந்தர்களை மனதில் பதியவைத்தல்; பிறிதொரு தட்டி பார்க்கும்போது இந்தப் பதிவை மின்னலடிக்குமாறு வைக்கும் அழுத்தம் எல்லாம் பாராட்டுகளைக் கோரி நிற்கின்றன.
நச் - 4/5; மொத்தம் - 7.25 /10.
10) பாசமலர் - ஆசைக்கு ஏது வெட்கம்?
எழுத்தாளர் தொலைக்காட்சி நெடுந்தொடர் நிறைய பார்ப்பார் போலத் தெரிகிறது. சொல்லாட்சி எல்லாம் எண்பதுகளின் 'வாராந்தரி இராணி'யை நினைவூட்டுகிறது. முடிவு எனக்கு எதிர்பாராதது.
நச் - 3/5; மொத்தம் - 4.5 /10.
11) செல்வன் - பூனைக்கு மணி கட்டியவள்
இந்த இடுகையின் முடிவு ரொம்ப புகழ்பெற்றதனால், பரவலாக விவாதிக்கப்பட்டதை ஆங்காங்கே பார்த்திருந்தேன். இருந்தாலும் திடுக் திருப்பம்தான். கதை என்று ஒன்றும் இல்லை.
நச் - 3/5; மொத்தம் - 5.5 /10.
12) ஜெகதீசன் - தப்பா நினைக்க மாட்டயே?
தெளிவான ஓட்டம். முடிவு நான் எதிர்பார்க்காததால் மெல்லிய புன்னகை கொடுத்தது.
நச் - 3.25/5; மொத்தம் - 6 /10.
13) ramachandranusha(உஷா) - நானே நானா?
இப்பொழுது படிக்காமல் முன்பே படித்திருந்த கதை. அப்போது இட்ட கருத்து: :)) 'அனுபவம்/நிகழ்வுகள்' என்று போட்டிருந்ததால் ஆசையாகப் படித்தேன்... நம்பவே கூடாது :)
உஷாவிடம் நிறைய எதிர்பார்ப்பு இருந்ததால் ஏமாற்றம் அடைகிறேன்.
நச் - 1/5; மொத்தம் - 3.5 /10.
14) இ.கா.வள்ளி - யாரோ அவள், என்னவள்?
இது எண்பதுகளில் (அல்லது இப்போது கூட?) வரும் 'தேவி' நடையில் செல்கிறது. முடிவெல்லாம் 'ஓ... ஜீஸஸ்' ரகம். (இந்தப் பதிவில் ரசிகன் பின்னூட்டங்கள் நெத்தியடி)
நச் - 1/5; மொத்தம் - 2 /10.
15) கிருஷ்ணா - பயணிகள் கவனிக்க . . .
'பொல்லாதவன்' படத்தில் 'எங்கேயும் எப்போதும்' மறுசுழற்சி என்றவுடன் அயர்ச்சி கலந்த அனுதாபம் எட்டிப்பார்த்தது. அதே போல் முதல் இடிப்பிலேயே இப்படித்தான் செல்லுமோ என்று அஞ்ச, அப்படியே நடக்க எதிலும் புதுமை இல்லை.
நச் - 1/5; மொத்தம் - 2 /10.
16) பிரதாப் குமார் சி - அப்பாயின்மென்ட் கிடைச்சிருச்சு....
பள்ளியில் தமிழ்த் தேர்வுக்கு விடை எழுதும்போது அதிக மதிப்பெண் பெற உத்தி என்று இதைச் சொல்வார்கள். திராவிடக் கட்சிகளில் அன்பழகன் என்று எழுதுவதை விட அன்பழகனார் என்று 'னார்' விகுதி சேர்த்து எல்லோரின் பெய்ரையும் குறிப்பிடு என்றார்கள். இங்கு பெரியார். இந்தக் கதையும் முடிவை வைத்துக் கொண்டு சம்பவத்தை விவரிக்கிறது. ஒற்றைப் பார்வை சமூக விமர்சனம்.
நச் - 3.25/5; மொத்தம் - 5.5 /10.
17) பெனாத்தல் சுரேஷ் - கடன் அட்டை
சுருக்கத்தை முன்பே இவரிடம் இருந்து கேட்டிருந்தேன். அப்போது அசுவாரசியமாய் 'இது தேறாத கேசு சுரேஷ்' என்றும் சொல்லியிருந்தேன். அதிலிருந்து மாறுபட்ட அதிர்ச்சி மதிப்பீடு (மட்டுமே) தரும் முடிவு. ஓட்டம் அருமை. முடிவு 'சிவாஜி'.
நச் - 2.5/5; மொத்தம் - 5 /10.
18) நக்கீரன் - வீட்டில்....? யாருமில்லை.
ஒரேயடியாக அனைத்து கதைகளையும் வாசித்தால் ஏற்படும் சோர்வா? அல்லது வாசகனை ஏமாற்றியதால் ஏற்படும் விரக்தியா. மதிப்பெண் அள்ளிவிட தட்டச்சு தடுத்தாட்கொள்கிறது.
நச் - 1/5; மொத்தம் - 2.5 /10.
19) ஹரன்பிரசன்னா - சனி
முன்பே படித்தது. அப்போது இட்ட பின்னூட்டம்: கதை, வடிவம், ஓட்டம் எல்லாமே சூப்பர்... (முடிவில் எதுவும் நச் இல்லையே!)
நச் - 1/5; மொத்தம் - 6 /10.
பிரசன்னாவின் பதிலை இங்கு இடுவது பொருத்தம்:
முடிவில் நச் என்பதைப் பற்றிய மிதமிஞ்சிய கற்பனைகள் உலவுகின்றன என்று தெரிகிறது. முடிவில் ஒரு சிரிப்பு, எதிர்பாராத சின்ன ட்விஸ்ட் போதும். அதை மீறி பெரிய நச்செல்லாம் வெகு சில சமயம் அமையலாம். அதுவும் கூட ஒருசிலருக்கு நச்சாகவும் ஒரு சிலருக்கு ஏற்கனவே எதிர்பார்த்ததாகவும் அமையும். இதுபோன்ற 'நச்சென்றே முடியும்' என எதிர்பார்ப்போடு படிக்கப்படும் கதைகளுக்கு இந்த சவால் (சங்கடம்!) இன்னும் அதிகம். இதை மனதில் கொண்டு, கதைக்கு எந்த அளவு நச் போதுமோ அது இருக்கட்டும்.
அப்படி பார்த்தால் இந்த முதல் பிரிவில் என்னுடைய வாக்கு: கார்த்திக் பிரபு
