செவ்வாய், ஜனவரி 06, 2004

நாட்குறிப்பு என்பது கடிகாரத்துடன் இணைக்கப்படாத டைம்பாம

டயரி எழுதுவோர் கவனிக்க! - மதுரபாரதி

நன்றி: தென்றல்

"புத்தாண்டு பிறந்தாச்சு. எல்லோருக்கும் புதிய நாட்குறிப்புப் புத்தகங்கள் வரும் நேரம் இது. அதைப் பற்றிய சில முன்னெச்சரிக்கைகளைச் சொல்லிவிடுவது எல்லோருக்கும் நல்லது என்று தோன்றியது.

நாட்குறிப்பு எழுதுவதால் நிறையப் பலன்கள் உண்டு. நீங்கள் என்னைப் போல் மறதி மகாதேவனாக இருந்தால், அன்றைய விஷயங்களையெல்லாம் அதில் எழுதிவைத்துவிட்டால் மறக்காமல் இருக்கும். "பதினாலு பைசா குடுத்தாப் போதும், திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து டவுனுக்குப் போயிடலாம் தெரியுமா அந்தக் காலத்தில்" என்று பிற்காலத்தில் பீற்றிக்கொள்ள உதவும். ஆனால் அப்போது வாங்கிய மொத்தச் சம்பளமே முந்நூறு ரூபாய்தான் என்பதைச் சொல்லக்கூடாது.

'காலையில் கெட்ட கனவு கண்டு எழுந்தேன். தோசைமாவு புளித்திருந்தது. கடைசிவீட்டுக் கமலாம்பாளுக்குப் பெண் குழந்தை பிறந்தது. ஆபீசுக்குப் போனேன். பஸ்சில் ஒரே கூட்டம். மதியம் கொண்டுபோன தயிர்சாதமும் புளிப்பு" என்று இவ்வாறு மிக முக்கியமான சமாசாரங்களை எதிர்காலத்தின் பொருட்டாக, சரித்திரக் கண்ணோட்டத்தோடு எழுதுபவர்களும் உண்டு. ஆனந்தரங்கம்பிள்ளையின் வாரிசுகள். என் பெரியப்பா ஒருவர் துருப்பிடித்த (ஒரிஜனலாகப் பச்சைப் பெயிண்ட் அடித்து மூடிமேல் கிளிப்படம் வரைந்த) டிரங்க் பெட்டிகள் நிறைய அவர் சிறுவயது முதல் எழுதிய பல நாட்குறிப்புகளை அடைத்து வைத்திருக்கிறார். 'டைம் காப்ஸ்யூல்' என்று சில அரசுகள் தமது 'சாதனை'களையும் தனக்கேற்றவாறு சரித்திரம் எழுதுபவர்களின் படைப்புகளையும் ஆழப் புதைத்து வைப்பதுண்டு.

பிற்காலத்தில் தோண்டியெடுத்துப் பார்ப்பவர்களுக்கு இதன் மூலம் நமது நகைச்சுவை உணர்வு நன்றாகப் புரிய வாய்ப்பு இருக்கிறது. அதேபோலப் பெரியப்பாவின் டயரிகளையும் ஆழப்புதைத்து வைத்தால் நல்லது என்று நான் நினைப்பதுண்டு. மொத்தத்தில் இரண்டுமே ஆழப் புதைக்கப்படவேண்டியவை என்பதில் கருத்து வித்தியாசம் இருக்கமுடியாது.

என்னுடன் படித்த பிரகாஷ் பரிட்சைக்குப் படிப்பதாகச் சொல்லிவிட்டு ராத்திரி பத்து மணிக்குமேல் உட்கார்ந்துகொண்டு அன்றைக்குத் தன்னைப் பார்த்து மையல் கொண்ட மடந்தையரின் பெயர் இத்தியாதிகளை எழுதி மகிழ்வான். பெரும்பாலும் இவனுடைய கற்பனைதான்.

ஆனால் எழுதி எழுதி தானே நம்பத் தொடங்கிவிட்டான். சின்ன வயதில். கல்யணமானபின் பெண்டாட்டி கையில் மாட்டினால் என்ன ஆவது. விவாகரத்து வரைக்கும் போய்விடுமே!

அதனால்தான் நிறையப்பேர் நாட்குறிப்பு எழுதுவதில்லை என்று நினைக்கிறேன்.

என்னுடைய தூரத்துச் சித்தப்பா (அவர் கனடாவில் இருந்தார் - ரொம்ப தூரம்தானே) டயரியின் எல்லாப் பக்கங்களிலும் மேலே பிள்ளையார் சுழி போட்டுவிட்டுக் கீழே விதவிதமாய்க் காக்காய்ப் படங்கள் போட்டிருப்பார். ஆர்.கே. லக்ஷ்மணுக்குப் போட்டிதான். ஆனால் வரைந்திருப்பது காக்காய் என்று அவர் சொல்லித்தான் தெரிந்துகொள்ளவேண்டும். சலவைக்கணக்கு, ஹைக்கூ, ஸ்ரீ ராம ஜயம், பழைய பேப்பர்க்காரனுக்கு விலைக்குப் போட்டவைகளின் கணக்கு, தான் செய்த, செய்யவேண்டிய, செய்ய மறந்த வேலைகளின் பட்டியல் என்று இவற்றில் ஏதாவது ஒன்றுமட்டும் எழுதப் பயன்படுத்துபவர்களும் உண்டு. ஜனவரி 7ஆம் தேதி புது டயரி கிடைத்ததும் 'இன்றைக்கு இந்த டயரியை ராமசாமி கொடுத்தார். இனிமேல் தவறாமல் எழுதுவேன்' என்று சூளுரைத்துவிட்டு, 9ஆம் தேதியோடு மறந்துவிட்டவர்கள் ஏராளம்.

என் நண்பன் சுப்பு மறக்கமாட்டான். காலையில் எழுந்து பல்தேய்த்ததும் டயரியை எடுத்துவைத்துக்கொண்டு மணிரத்னம் அடுத்த படத்துக்குக் கதை யோசிக்கிற தோரணையில் உட்காருவான். ஊஹ¥ம், ஒன்றும் தோன்றாது. கொஞ்சநேரம் உட்கார்ந்தபின் தன் மனச்சிக்கலை (காலையில் எவ்வளவு முக்கினாலும் சில சிக்கல்கள் ஏற்படத்தான் செய்யும்) ஒப்புக்கொண்டு, டயரியை மூடிவைத்துவிட்டு வேறு வேலையைப் பார்ப்பான். முதல் பக்கத்தில் பெயர், முகவரி, பிளட்குரூப் எழுதியது தவிர அந்த நாட்குறிப்பில் மற்றப்படி வேறெதுவும் இல்லை. ஆனாலும் அதற்கு நீங்கள் சுப்புவைப் பழிக்கமுடியாது.

ராம்கி கொஞ்சம் ஆங்கிலத் தேர்ச்சி பெற்றவன் - அதைக் காட்டிக்கொள்ளாமல் இருக்கமுடியாது. "டயரி என்று சொல்லுவதே தப்பு, அந்த வார்த்தைக்கும் பால்பண்ணைக்கும் தொடர்பு உண்டு" என்பான். டைரி என்பதுதான் சரியாம். எப்படியோ பத்துக்கு அஞ்சு வார்த்தை ஆங்கிலம் கலக்காமல் பேசவோ எழுதவோ கூடாது என்று தமிழர்கள் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறோம். இதில் சரி தப்பெல்லாம் பார்க்கவா முடியும்?

நான் பார்த்தவரையில் யாருடைய நாட்குறிப்பு செக்ரட்டரியால் எழுதப்படுகிறதோ, அதுதான் தவறாமல் ஒழுங்காகச் செய்யப்படுகிறது. நானும் ஒரு அழகான செக்ரட்டரிக்காகத்தான் காத்துக்கொண்டிருக்கிறேன் - தவறாமல் நாட்குறிப்பு எழுதத்தான். அட, யாரய்யா அது, டைம்பாமை நினவுபடுத்தறது!"

முழுவதும் படிக்க

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு