ஞாயிறு, பிப்ரவரி 08, 2004

இதுதான் நியூயார்க் - வைரமுத்து

வானைத் தொடத் துடிக்கும்
விஞ்ஞான விரல்களாய்க்
கட்டடங்கள் புடைத்து நிற்கும்

கால்வலித்த மேகம்
உச்சிமாடியில்
உட்கார்ந்து போகும்

தீப்பிடித்த வீடாய்
வாழ்க்கை விரையும்

மூழ்கும் கப்பலின் எலிகளாய்க்
கார்கள் பறக்கும்

கார்நிறுத்த இடம் கிடைத்தால்
உலோபியின் புதையலாய்
உள்ளம் களிக்கும்

போகத்தின் உச்சத்தில் பேசும்
பொருளற்ற வார்த்தைகளாய்
அங்கங்கே மெல்லிசை காதுகிழிக்கும்

வீதியில் பூக்கும்
வெள்ளை ரோஜாக்கள்
பெண்மையின் அடையாளங்களை மட்டும்
மூடி மறைத்து முறுவலிக்கும்

'வா' என்று கேட்க
வண்டுக்கும் உரிமையுண்டு

'போ' என்று தள்ளப்
பூவுக்கும் உரிமையுண்டு

கணவனுக்கு - மனைவியினும்
காரின் கற்பு
முக்கியமாகும்

மனைவிக்கு
பர்த்தாவை விடவும்
'பாத்ரூம்' சுத்தம் முக்கியமாகும்

நடைபாதைக் காதல்
மூச்சுவிட மறந்து
முத்தமிட்டுக் கொண்டிருக்கும்

சுற்றிவரும் போலீஸ்
ஒட்டிய உதடுபிரிக்க
உதவும்

0

ஷாம்பூ போட்டுக் குளித்த
மரங்கள்

வாழை இலைச் சாலைகள்

முடிவெட்டிக் கொண்ட
புல்வெளிகள்

கட்டடங்களை
உரசி பறக்கும்
உலோகப் பறவைகள்

எல்லாம் இருந்தும்
ஏதோ ஒன்று இல்லாத வாழ்க்கை

0

அறிவு -
உறவை
டாலர்களாய்ப் பார்க்கும்
உணவை
வைட்டமின்களாய்ப் பார்க்கும்

நாற்பது வரைக்கும்
அவர்கள் சாப்பிட உணவு

நாற்பதுக்குப் பிறகு
அவர்களை சாப்பிடும் உணவு

வாரத்தில் ஐந்துநாள்
வாழ்க்கை விற்கப்படும்

வாரத்தில் இரண்டுநாள்
வாழ்க்கை வாங்கப்படும்

பாசம்
பாலித்தீன் பை

காதல்
கைதுடைக்கும் காகிதம்
....

அங்கங்கே
ரகசியக் குரலில்
கோஷம் கேட்கும்

வீட்டுக் கூரையில்
நிலா வேண்டுமா?

மாத்திரை போடு

சூரியனில் நடக்க வேண்டுமா?
மாத்திரை போடு

கிளியோபாட்ராவை
எழுப்பித் தருகிறோம்

மாத்திரை போடு

இப்படி
வீதி முனைகளில்
சுலபத் தவணையில்
தற்கொலை விற்கும்

0

பாப்கார்ன் கொறித்துக் கொண்டே
பள்ளி மாணவி சொல்வாள்:

'இன்றைக்கே
கலைத்து விடுங்கள் டாக்டர்

நாளை
பத்தாம் வகுப்பு பரீட்சை'

0
1989

நன்றி: வைரமுத்து கவிதைகள்
(கி.பி. 2000 வரை கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதைகளுள்
அறிஞர்கள் தேர்ந்தெடுத்த தொகுப்பு)

உரிமை: டாக்டர் பொன்மணிவைரமுத்து

ரூ. 300/-
சூர்யா வெளியீடு





என்னுடைய சில சிதறல்கள்:

* அமெரிக்கா வருவதற்கு முன்பே படித்து விட்ட கவிதை.
* வார்த்தைகளும் எண்ணங்களும் பிரமிப்பை ஏற்படுத்தியது அந்தக் காலம்.
* சொல்லமைப்புகள் மட்டுமே ஒரு 'அட...'வையும், தட்டையான பிம்பங்கள் மேல் ஒரு 'ஹ்ம்ம்ம்...'மும் போடுகிறேன் இந்தக் காலம்.
* நியூ யார்க்கை குறித்து மற்றவர்கள் இன்னும் இப்படித்தான் கற்பனை செய்து வைத்திருக்கிறார்களா....!

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு