திங்கள், மே 17, 2004

சாலையோரச் சிந்தனைகள் - என். சொக்கன்

தினம் ஒரு கவிதை:

என்னுடைய 'செல்ல' வாகனம், ஹைதராபாதில் வேலைக்குச் சேர்ந்த புதிதில் வாங்கியது. ஆகவே, ஆந்திரப் பிரதேசப் பதிவெண்தான் அதில் உண்டு. பின்னர், பெங்களூருக்கு மாறியபோதும், இங்கேயே நிரந்தரமாய் இருந்துவிடுகிற யோசனை இல்லை என்பதால், கர்நாடக நம்பருக்கு வண்டியை மாற்றாமல், உரிய வரியைக் கட்டிவிட்டு, ஆந்திர நம்பரையே வைத்துக்கொண்டேன்.

இதனால், ஒரு புதிய பிரச்சனை முளைத்தது - சாலையோரங்களில் என் வாகனத்தை மடக்குகிற போக்குவரத்துக் காவலர்கள், என் வண்டியில் 'AP' முத்திரையைப் பார்த்ததும், சுபாவமாய் தெலுங்கில் பேசத்துவங்கிவிடுகிறார்கள். (அதெப்படியோ, பெங்களூரிலுள்ள பெரும்பான்மை போலீஸ்காரர்களும், ஆட்டோ க்காரர்களும் கன்னடத்தோடு, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய பாஷைகளையும் சரளமாய்ப் பேசுகிறார்கள் !)

ஹைதராபாதிலிருந்த காலத்தில், ஏராளமான நாகார்ஜுனா, வெங்கடேஷின் படங்களைப் பார்த்துப் பழகியதால், எனக்குத் தெலுங்கு ஓரளவு புரியும். என்றாலும், அவர்களுக்குத் தெலுங்கிலேயே பதில் சொல்வதற்கான இலக்கண அறிவோ, அசட்டு தைரியமோ லேது ! ஆகவே, நான் அவர்களைப் பார்த்துத் திருதிருவென்று விழிக்க, அதை அவர்கள் தப்பாய்ப் புரிந்துகொண்டு, 'ஊதிக் காட்டு', என்று எனது சுவாச ஆல்கஹால் அளவைச் சோதிப்பார்கள்.

அடுத்து, எனது ஓட்டுநர் உரிமத்தைக் கேட்பார்கள் - நானும் ஒரு முழ(ழு) நீள ஜெராக்ஸ் பிரதியொன்றை எடுத்து நீட்டுவேன் ! (இப்போதெல்லாம், பர்ஸில் வைத்துக்கொள்கிறாற்போல், ஒற்றை அட்டையில் டிரைவிங் லைசன்ஸ் தந்துவிடுகிறார்கள். ஆனால், நான் விண்ணப்பித்தபோது, அந்த நடைமுறை இல்லை - பாக்கெட் சைஸ் கந்த சஷ்டி கவசம்போல, ஒரு குட்டிப் புத்தகமே உண்டு, எப்போதும் அதன் ஜெராக்ஸ் பிரதியைக் கையிலெடுத்துக்கொண்டு திரியவேண்டும் !)

அந்தக் காவலர்கள், என்னுடைய உரிமத்தை கவனமாய்ச் சோதித்தபின், அவர்களின் முகத்தில் ஒரு நிச்சயமான திகைப்பைப் பார்க்கலாம், 'வண்டி, ஆந்திரப் பிரதேசத்தில் பதிவாகியிருக்கிறது, வண்டிக்கு உரியவன், தமிழ் நாட்டில் டிரைவிங் லைசன்ஸ் எடுத்திருக்கிறான், ஆனால், வண்டி இப்போது கர்நாடகாவில் ஓடிக்கொண்டிருக்கிறது ! இப்போது, இவனிடம் நாம் என்ன மொழியில் பேசுவது ?'

இந்தக் குழப்பத்துடன் அவர்கள் என்னை மேலும், கீழும் பார்த்துவிட்டு, 'சரி, கிளம்பு !', என்று அனுமதித்துவிடுகிறார்கள் !

ஆனால், எல்லாக் காவலர்களும் இப்படியில்லை, சென்ற வருடம், கோரமங்களாவில் ஒரு மீசைக்காரபோலீஸ், தவறான இடத்தில் வண்டியை நிறுத்தியதற்காக என்னைப் பிடித்துவிட்டார்.

'நூறு ரூபா ஃபைன் கட்டு, இல்லைன்னா, எனக்கு அம்பது ரூபா கொடு !', என்று நேரடியாகவே பேரம் பேசினார் அவர்.

'ஃபைன் கட்டிடறேன் ஸார்', என்றேன் நான்.

அவர் மெல்லமாய்த் தலையாட்டினபடி, பெரிய சட்டைப் பாக்கெட்டிலிருந்து ரசீது புத்தகத்தை எடுத்துப் பிரித்தார், இன்னொரு பாக்கெட்டில் பேனாவைத் தேடிப் பிதுக்கினார்.

நானும் அவசரமாய் என்னுடைய பர்ஸை வெளியிலெடுத்துப் பிரித்தேன், ஆனால், சோதனையாய், அதனுள் ஒரே ஒரு இருபது ரூபாய் நோட்டுதான் இருந்தது ! ஆனால், நல்லவேளை - எங்கள் வங்கியின் தானியங்கிப் பணம் வழங்கு இயந்திரம் (ATM-க்கு இதுதானா தமிழ் ?), அடுத்த தெருவிலேயே இருந்தது - அங்கிருந்து பணம் எடுத்துக்கொண்டு, உடனே திரும்புவதாக அவரிடம் சொன்னேன்.

அவர் என்னை நம்பாமல் பார்த்து, 'வருவீங்களா ?', என்றார்.

'கண்டிப்பா வருவேன் ஸார்', என்று அவருக்கு உறுதி சொல்லிவிட்டு, வண்டியைக் கிளப்பினேன்.

பின்னர், ஏ.டி.எம்.மில் பணம் எடுத்துக்கொண்டு, நேராக அவரிடமே திரும்பினேன், நூறு ரூபாயைக் கொடுத்து ரசீது கேட்டேன்.

அவர் என்னுடைய பணத்தைத் திருப்பிக்கொடுத்துவிட்டார், 'நீங்க திரும்பி வரமாட்டீங்க-ன்னு நினைச்சேன் !', என்றார்.

'அதனால என்ன ஸார் ? இப்போதான் வந்துட்டேனே !'

'பரவாயில்லை ஸார், உங்க நேர்மைக்கு என்னாலான மரியாதை ... நீங்க ஃபைன் கட்டவேண்டாம், போய்ட்டுவாங்க !', என்று சிரித்தார் அவர்.

அப்போது, அவரது பெருந்தன்மையை ஏற்றுக்கொண்டு, நான் உடனடியாய்க் கிளம்பிவிட்டேன். என்றாலும், இன்றுவரை அந்தச் சம்பவம் என்னை உறுத்திக்கொண்டுதானிருக்கிறது - இவற்றில் எது பெரிய குற்றம்? - தவறான இடத்தில் நான் வண்டியை நிறுத்தியதா ? அந்தக் காவலர் ஐம்பது ரூபாய் லஞ்சம் கேட்டதா? அல்லது, நான் நியாயமாய்ச் செலுத்தவேண்டிய நூறு ரூபாய் அபராதத்தை, அவராகத் தள்ளுபடி செய்ததா ? அல்லது, இதுதான் சாக்கு என்று, நான் அந்தச் சலுகையைப் பயன்படுத்திக்கொண்டதா ?


1 கருத்துகள்:

ஐயா, வேதாளம் விக்ரமாதித்தனைக் கேட்டது மாதிரி கேக்கிறீங்களே, நியாயமா?

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு