திங்கள், அக்டோபர் 17, 2005

சுந்தர ராமசாமி

 • கலாச்சாரம் அரசியலை பாதிப்பதற்கு பதில் அரசியல் இங்கே கலாச்சாரத்தை பாதிக்கிறது. அரசியல்வாதிகளின் கண்ணோட்டமே வாழ்வின் பொதுக்கண்ணோட்டமாக மாறிவிட்டது.

 • சாகித்ய அகாதமி பரிசு ஒரு சாதாரண சின்ன பரிசு. அதை பெறுவதற்கே இங்கே ஜனாதிபதியின் சிபாரிசு தேவைப்படுகிறது. பரிசு பெற்ற படைப்பாளிகளைக் கேட்கிறேன். துணிச்சல் இருந்தால் வெளியில் வந்து சொல்லுங்கள்... எந்த சிபாரிசும் இல்லாமல் பரிசு பெற்றேனென்று. சிபாரிசால் பரிசு பெறும் எழுத்தாளனுக்கு உண்மையில் ஆத்ம சந்தோஷம் இருக்குமா ?

  நாற்பதாண்டு கால தமிழ் இலக்கிய கலாச்சார வெற்றி தோல்விகளின் சாட்சியாக, தமிழ்ச் சமூகத்தின் தாழ்ச்சியின் மீதோர் தார்மீகக் கோபமும், அதன் எழுச்சியில் தீவிர முனைப்பும், கலைக்கோட்பாடுகள் பற்றிய சில பிடிவாதங்களும் கொண்டவர்.

  கேள்வி: சின்ன வயசிலேயே கம்யூனிஸ்ட் கட்சியை சிநேகித்ததற்கான காரணம் ?

  வாழ்க்கையின் கஷ்டங்கள் என் மனசை பாதித்தது. முக்கியமாக இந்தியாவின் வறுமை. நாங்கள் ஓரளவு வசதியாய் இருந்தாலும் எங்கள் உறவினர்கள் படும் துன்பங்கள் என் இதயத்தை இம்சித்தது. அதோட ரஜனி பாமிதத் எழுதிய 'இன்றைய இந்தியா' படித்தேன்.

  அவர் ஒரு கம்யூனிஸ்ட் - அந்த புத்தகம் என்னை பாதித்தது. கம்யூனிஸ தத்துவத்தின் மூலம் இந்தப் பிரச்சினைகளிலிருந்து விடுதலை கிடைக்கும் என்ற எண்ணம் என்னுள் எழுந்தது.


  கேள்வி: சோசலிச எதார்த்தவாத இலக்கியம் படைக்க முடியும்னு நம்புகிறீர்களா ?

  என்னுடைய ஆரம்ப கால கதைகளே அதற்கு சாட்சி. நான் கலைநயத்தை காப்பாற்றிக் கொண்டே முற்போக்கான கருத்துக்களை எழுதிவந்துள்ளேன். அதில் வெற்றியும் பெற்றேன்னு நினைக்கிறேன். எனக்கு கலைநயம் மிகவும் முக்கியம். நீங்க எந்த விஷயத்தை முன்வைத்தாலும் கூட அதில் மனிதனோட மனசை ஈர்க்கிற சக்தி இருந்தாத்தான் அது சமூகத்தை பதிக்கும். நான் கலை அம்சத்தை வற்புறுத்தக் காரணமே கலை சமூகத்தை பாதிக்கணும்ங்கறதாலதான்.

  எப்பவுமே கலை இலக்கியம் மனிதனை பாதிக்கக் கூடியதாகத்தான் இருக்கணும்ங்கறது என் நம்பிக்கை. முற்போக்கான கருத்துக்கள் இருந்தும் கூட ஒரு நாவல் சரியான நாவல் இல்லைன்னு ஏன் சொல்றேன்னா முற்போக்கான கருத்துக்களால் பாதிக்கக் கூடிய சக்தி அந்த நாவலுக்கு இல்லை. அது கலைநயத்தோடு சொல்லப்படலை. அது போய்ச் சேராது.


  கேள்வி: நீங்கள் மார்க்சிய விரோதியா ?

  மார்க்ஸின் சிந்தனைகளை நான் ஒப்புக் கொள்கிறேன். அதில் சந்தேகமே கிடையாது. ஒரு பகுதி முக்கியமாக மார்க்ஸ் செய்த எல்லாக் காரியங்களும் ஐரோப்பிய பின்னணியில், அதுவும் 19- ம் நூற்றாண்டில் இறுதியில் செய்யப்பட்டவை. அதில் கணிசமான ஒரு பகுதி இன்றும் நமக்கு உபயோகமாக இருக்கும் . ஆனால், அதற்கு மேலாக வேறொரு விதமான கலாச்சார பின்னணியும், மனோபாவங்களும், மத நம்பிக்கைகளும் கொண்ட நம்முடைய மக்களுக்கு ஏற்புடையதான கருத்துக்களைக் கொண்டு போகும் அளவுக்கு மார்க்ஸீயத்தை வளர்த்தெடுக்கவில்லை.

  நீங்க ஒரு கம்யூனிஸ்டா என்று கேட்கும்போது நீங்க தத்துவத்தை சேர்ந்த ஆளா கட்சியைச் சார்ந்த ஆளா என்பது முக்கியமான விஷயம். நீங்க ஒரு எழுத்தாளன்னு சொன்னா கட்சி எடுக்கிற ஒவ்வொரு நிலையும் ஆதரிக்கணும்கிற கட்டாயம் உங்களுக்கு இருக்குமேயானால் நீங்க சிறப்பான விஷயங்களை உருவாக்க முடியாது. அரசியல்ரீதியாக பல்வேறுபட்ட காரணங்களுக்காக கட்சி பல்வேறுபட்ட நிலை எடுக்கும். அதெல்லாம் எழுத்தாளர்களைக் கட்டுப்படுத்த முடியாது. நான் கம்யூனிசத்தை விமரிசிக்கக் கூடிய எல்லா சந்தர்ப்பத்திலேயும் கட்சியினுடைய போக்கைத்தான் விமரிசிக்கிறேன்.

  இப்ப 1977-இல் இருந்து 1990 வரையிலும் சோவியத்துல நடந்த எல்லா விஷயங்களையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிச்சு வந்திருக்கு. இதை நான் எதிர்க்கிறேன். நான் மட்டும் எதுக்கலே . சோவியத்துல உள்ள தலைமைப் பீடமே எதுக்குது. இன்னிக்கு சோவியத் தலைமைப் பீடம் ஒரு முற்போக்கான நடவடிக்கையை எடுக்குதுன்னா இதுக்குமுன்னே உலகத்தை சேர்ந்த பல எழுத்தாளர்களும் நானும் எடுத்திருக்கோம். நேற்று நாங்க சொன்ன விமரிசனங்களுக்காக எங்களை முத்திரை குத்துவது, இந்த விமரிசனங்களை கட்சித் தலைமையிலிருந்து ஒருவன் உருவாக்கக் கூடிய சந்தர்ப்பத்துல அவனைப் பரிபூரணமா ஏற்றுக் கொள்வது அவனைப் பரிபூரணமா ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலையிலும் எங்களைத் திரும்பவும் விமரிசனம் பண்ணுவது - இதை எந்த விதமான கருத்துலக நாகரிகத்துல சேர்த்துக் கொள்வீங்க? உலகத்துல ஸ்டாலினை விமரிசனம் செய்தவர்கள் எல்லாம் பிற்போக்குவாதின்னு சொன்னா கோர்பசேவ் பிற்போக்குவாதிதான்.


  நன்றி : சுபமங்களா - இதழ் #6
  சுய அறிமுகம் - சில சிதறல்கள்

 • நான் 1931இல் பிறந்தேன். பள்ளிப் படிப்பு என்று சொல்லும்படி எனக்கு ஒன்றும் இல்லை. பள்ளிக்கு சென்ற குறைந்த காலத்தில் என் மனம் வகுப்பறை ஜன்னல் வழியாக வெளியே தாவித் தன் போக்கில் அலைந்து கொண்டிருந்தது. என் புத்தகங்களைப் படிக்கும்போது நான் ஏதேனும் கற்றுக் கொண்டிருப்பதாக வாசகர்களுக்குத் தோன்றினால் அவை என் சுய முயற்சியில் அறிந்து கொண்டவைதான்.

 • சுயமாகக் கற்க புத்தகங்களைத் தேடிக் கொண்டு போகிறேன். கிடைக்கும் புத்தகங்களிலிருந்து எனக்கு விருப்பமானவற்றைத் தேர்வு செய்கிறேன். என் சுதந்திரத்திற்குள் நிற்கும் தேடலும் தேர்வும். என் விருப்பம் போல் படிக்கிறேன். படிக்காமலும் இருக்கிறேன். பாதி படித்த நிலையில் அலுப்பு மேலிட நிறுத்திக் கொள்ளவும் செய்கிறேன். மனதில் தோன்றும் மதிப்பீடுகளை உருவாக்கிக் கொள்கிறேன். அவற்றை நண்பர்களுடனும் வாசகர்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன். ஆசிரியர்களிக் குறுக்கீடு அற்ற வாசிப்பின் மூலம்தான் ஆளுமையை ஓரளவேனும் வளர்த்துக் கொள்ள முடிந்தது என்று நம்புகிறேன்.

 • நான் அறிஞர்களின் வரிசையில் ஒருவன் அல்ல. அறிஞர்களின் முக்கியமான குணம் தெளிவு. என் ஆதாரமான குணம் சந்தேகம்.

 • என் கருத்துக்களை முன்வைக்கும்போது அவை உருவாக்கும் எதிர்வினைகள் மீது எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு. எதிர்நிலைகள் மீதும் கவனம் உண்டு.

 • பதினெட்டு வயதுவாக்கில் தமிழ் எழுதக் கற்றுக் கொண்டேன். இருபது வயதுவாக்கில் என் முதல் கதையை எழுதினேன் . தகழி சிவசங்கர பிள்ளையின் 'தோட்டியின் மகன்' நாவலை மலையாளத்திலிருந்து மொழி பெயர்த்தேன். அதை ஒரு சாகஸம் என்றுதான் சொல்லவேண்டும். அதற்கு முன்னர் நான் அரைபக்கம் கூட மலையாளத்திலிருந்து மொழிபெயர்த்தது இல்லை. என் திறமையைப் பற்றி யோசித்திருந்தால் அந்தப் புத்தகத்தின் பக்கமே போகத் துணிந்திருக்க மாட்டேன். இளமையின் சாகஸம் ! எதிலேனும் ஏறி விழுந்து தன்னை இனங்கொண்டுகொள்ள வேண்டும் என்ற துடிப்பு.

 • நான் சமத்துவத்திலும் ஜனநாயகத்திலும் நம்பிக்கை கொண்டவன். வாழ்வின் குறிக்கோளைத் தீர்மானிக்கும் இவ்விரு அடிப்படைகளிலும் நம்பிக்கையற்ற ஒரு மனம் சிந்தனைகளை ஆழப்படுத்திக் கொள்வது சாத்தியம் என்று நான் நம்பவில்லை. சமத்துவம், ஜனநாயகம், மனித நேயம் உட்பட வாழ்வை மேலெடுத்துக் செல்லப் பயன்படும் சகல தத்துவங்களையும் அவற்றின் சாராம்சங்களிலிருந்து பிரித்து அடையாளங்களிலிருந்து மாற்றும்போது அவற்றின் அர்த்தங்களையே நாம் இழந்துவிடுகிறோம். தமிழ்ச் சூழல் சாரங்களில் சக்கைகளிலிருந்து அடையாளங்களை உற்பத்தி செய்யும் மிகப் பெரிய தொழிற்சாலையாக இயங்கிக் கொண்டிருக்கிறது. சாரங்களை இனங்காணவோ வறுமைப்படுத்தவோ மறு பரிசீலனை செய்யவோ உதறவோ திராணியற்று அடையாளங்கள் சார்ந்து ஏமாறும் குணம்தான் இன்று நம் பின்னடைவிற்கு முக்கியக் காரணம் என்று நினைக்கிறேன்.

  விண்நாயகன், 1999 டிச. 1-15 & டிச. 16-31

  நன்றி: ஆளுமைகள், மதிப்பீடுகள் - காலச்சுவடு பதிப்பகம்
  குறிப்பு

  சுந்தர ராமசாமி நாகர்கோவிலில் 1931இல் பிறந்தார். பள்ளியில் மலையாளமும் ஆங்கிலமும் சம்ஸ்கிருதமும் கற்றார். 1951இல் 'தோட்டியின் மக 'னைத் தமிழில் மொழிபெயர்த்ததே முதல் இலக்கியப் பணி. 1951இல் புதுமைப்பித்தன் நினைவு மலரை வெளியிட்டார். இவரது முதல் கதையான 'முதலும் முடிவும்' அதில் இடம்பெற்றது. மூன்று நாவல்களும் பல கட்டுரைகளும் சுமார் 60 சிறுகதைகளும், பசுவய்யா என்ற பெயரில் கவிதைகளும் எழுதியுள்ளார். 1988 இல் காலச்சுவடு இதழைத் தொடங்கி எட்டு இதழ்களையும் ஒரு ஆண்டு மலரையும் வெளியிட்டார்.

  சுந்தர ராமசாமிக்கு டொரொண்டோ (கனடா) பல்கலைக்கழகம் வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான 'இயல்' விருதை (2001) வழங்கியுள்ளது.

  வாழ்நாள் இலக்கியப் பணிக்காக 'கதா சூடாமணி' விருதையும் (2003) பெற்றுள்ளார்.

  மனைவி : கமலா

  குழந்தைகள் : தைலா, கண்ணன் , தங்கு.

  நாவல்கள்:
  ஒரு புளியமரத்தின் கதை (1966)
  ஜே.ஜே.: சில குறிப்புகள் (1981)
  குழந்தைகள் பெண்கள் ஆண்கள் (1998)

  சிறுகதைகள்
  காகங்கள் (2000)
  மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம் (2004)

  கவிதை
  107 கவிதைகள் (1996)

  விமர்சனம்
  ந பிச்சமூர்த்தியின் கலை: மரபும் மனித நேயமும் (1991)
  காற்றில் கலந்த பேரோசை (1998)
  விரிவும் ஆழமும் தேடி (1998)
  இறந்த காலம் பெற்ற உயிர் (2003)

  மொழி பெயர்ப்பு
  செம்மீன் (1962)
  தோட்டியின் மகன்
  தொலைவிலிருக்கும் கவிதைகள் (2004)

  நினைவுக் குறிப்புகள்
  ஜீவா (2003)
  கிருஷ்ணன் நம்பி (2003)
  க.நா.சு . (2003)
  சி.சு. செல்லப்பா (2003)

  பிற
  தமிழகத்தில் கல்வி: வே. வசந்தி தேவியுடன் ஓர் உரையாடல் (2000)
  இவை என் உரைகள் (2003)
  இதம் தந்த வரிகள்(2002) - கு அழகிரிசாமி - சு .ரா. கடிதங்கள்
  வாழ்க சந்தேகங்கள் (2004)
  வானகமே இளவெயிலே மரச்செறிவே (2004)

 • 2 கருத்துகள்:

  ஒரு கதை சொல்பவராக அவரது எழுத்துக்கள் என்னைக் கவர்ந்தவை.

  ஒரு கட்டுரையாளராக சுந்தர ராமசாமியின் கருத்துக்கள் பலவற்றோடு நான் முரண்பட்டுப்போகிறேன்.

  1.டானியேல் எழுத்துக்கள் பற்றிய அவர் கருத்துக்கள்.

  2. மரணதண்டனைக்கு எதிரான சிந்தனைகள்

  3. ஒரு சோஷியாலஜிஸ்ட் கலைஞனாக இருக்க முடியாது.

  4. உளவியலாளர் பற்றிய அவரது ஒருதலை பட்சமான உயர்வான
  கருத்துக்கள்.

  5. ஆனால், "என் படிப்பனுபவமும், படைப்பனுபவமும்" என்னும் கட்டுரை அருமை. அதில் அவர் சொல்வார், " எனக்கு மூன்று தகுதிகள் இருக்கின்றன. அவை, நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன், எழுதிக்கொண்டிருக்கிறேன், வாழ்ந்து கொண்டிருக்கிறேன்."

  தான் இல்லாத போதும் தன் சாராம்சத்தை வாழ வைத்துக் கொண்டிருப்பவன் தான் படைப்பாளி.

  (இவை என் உரைகள் - 1987 முதல் 2002 வரையிலான தொகுப்பு,
  செப்டம்பர் 2003 பதிப்பு
  காலச்சுவடு பதிப்பகம், விலை - ரூ 140)

  டானியேல் குறித்த கருத்துக்கள் போன்றவற்றை இனிமேல்தான் படிக்க வேண்டும்.

  கதைகளை விட கட்டுரைகளுக்காக அதிக சர்ச்சையில் சிக்கியவராக சு.ரா. இருப்பார். (சிறுகதைகளுக்கான எதிர்வினைகளில் 'பிள்ளை கெடுத்தால் வினை' மட்டுமே நினைவில் நிற்கிறது.) க.நா.சு, மௌனி, ஜீவா போன்றோர் முதல் அசோகமித்திரன் குறிப்புகள் வரை கடுமையான விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. மனசாட்சியில் இருக்கும் dichotomyஐ அப்படியே எழுத்தில் கொண்டு வருவதாலும் இருக்கலாம்.

  கருத்துரையிடுக

  புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு