வியாழன், மே 27, 2004

ஆனையடியினில் அரும்பாவைகள் (சிறுகதை)

நந்தினி காரை கிளப்பின போது காலை ஐந்து மணி இருக்கும். நான் பல சமயங்களில் தூங்க ஆரம்பிக்கும் நேரம் அது. அன்று, நான்கு மணிக்கு அலாரம் அடிப்பதற்கு அரை மணி முன்பே எழுந்து, அவளையும் எழுப்பிவிட்டேன். அவ்வளவு ஆவலும் எங்களது கல்லூரிக்கு ஒரு புனித யாத்திரை செய்யத்தான்.

அமெரிக்காவில் இருந்து நான் வருவதற்கு பல மாதங்கள் முன்பே ஒரு மெல்லிய இழையில் ஆரம்பித்த திட்டம். பல ஈமெயில்களுக்குப் பிறகு செயல் வடிவம் பெற்று, இப்பொழுது ஆறு மணி தூரத்தில் இருக்கிறது.

நந்தினியின் கணவரும் எங்களுக்கு நல்ல ஊக்கமாக இருந்தார். எங்களுடன் வாருங்களேன் என்ற அழைப்பையும் மறுத்து விட்டார். அவரும், என் குடும்பமும் வந்திருந்தால் இது ஒரு வழக்கமான சுற்றுலாவாக இருந்திருக்கும். இப்போது இந்த பயணத்தின் நோக்கமே வேறாகிப் போனது.

கடந்த இளமையை மீண்டும் சுவாசிக்கப் போகிறோம். இருந்த இடங்களில் மீண்டும் தொலைந்து போகப் போகிறோம். இனிமையான, வருத்தமான, வழக்கமான நினைவுகளில் உலா வரப் போகிறோம். வெறுமனே அசை போடாமல் இளமைக்குத் திரும்பப் போகிறோம்.

நந்தினி கல்லூரி காலத்தில் எங்களுக்குப் பிடித்த "சின்ன சின்ன ஆசை"யைப் போட்டு விட்டிருந்தாள். எதிர்காலம் என்னவென்று தெரியாத கல்லூரி காலம் போன்ற டில்லியின் முன்பனி, சாலையையும் சூரியனையும் காணாமல் செய்திருந்தது.

"நந்து... மஹேனும் பத்மாவும் ஒரே இடத்தில் வேலைக்கு சேர்ந்தார்களே? கல்யாணம் ஆயிடுத்தா?"

"ரெண்டு பேரும் சேர்ந்து கம்பெனி ஆரம்பிச்சுட்டா. உனக்கு ஏதாவது சாஃப்ட்வேர் ஆள் தேவைன்னா சொல்லுபா. அவங்ககிட்ட கேக்கலாம்".

ரமேஷின் பி.எச்டி. எங்கு உள்ளது, கீர்த்தி தேர்தலில் நிற்கிறானா, அடுல் கிரிக்கெட் அணியில் இருக்கின்றானா என்று எங்கள் நண்பர்கள் எங்கே இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று பேசுவதே காலை உணவாகிப் பசியாற வைத்தது.

நந்தினியின் கணவன் போட்ட ஸ்டார்பக்ஸ்ஸை மிஞ்சும் காபி குடித்துக் கொண்டே ரெஹ்மானிடமிருந்து "உன்னை நான் அறிவேன்... எனையன்றி யார் அறிவார்" ராஜாவுக்கு மாற்றி விட்டேன்.

கல்லூரியில் செய்வதற்கு நந்தினி பத்து அம்ச திட்டம் வைத்து இருந்தாள். அதில் நாகர்ஜியின் பெட்டிக்கடையில் 'ரப்ரி' சாப்பிடுவது எனக்கு மிகவும் பிடித்தது. வாழைப்பழத்தைத் துண்டு துண்டாக நறுக்கி ஒட்டகத்துப் பாலில் போட்டுத் தருவார். பரிட்சை பேப்பர் தந்த சோகத்தையும், கவுன்சிலில் சுட்ட பணம் கண்டுபிடிக்கப்பட்ட துக்கத்தையும் தூக்கி எறிய சரியான மருந்து அது. கூடவே சமோஸாவும் கிடைத்தால் சொர்க்கம் வசப்படும். எனக்கு இப்போது செரிக்குமா என்று ஒரு பயம் எட்டி பார்த்தது.

"ஆட்டமா.. தேரோட்டமா" என்று ராஜா அதிரடி செய்து கொண்டிருந்தார். பஜார் தெருவில் 'பான்ங்' அடிக்க வேண்டும். கிடைக்காவிட்டால் பியராவது குடிக்க வேண்டும். மீரா பவன் என்னும் பெண்கள் விடுதிக்குள் சென்று ஜென்ம சாபல்யம் அடைய வேண்டும். எங்களுடைய பத்து அம்சத் திட்டத்தில் நிறையவே பொருத்தம்.

"புது ரூட்டுலதான்" என்ற ராஜாவின் அரசாட்சியில் மெய்மறந்து, செய்து பார்க்க வேண்டிய எல்லாவற்றையும் அலசி முடிப்பதற்குள் காவிக்கொடித் தாங்கிய பலகை எங்களை கல்லூரி வளாகத்திற்கு வரவேற்றது.

நாங்கள் மட்டும் மாறவில்லை. எங்களுடைய கல்லூரியும் உரு மாறி இருந்தது. பத்து அம்ச திட்டத்தில் பல நிறைவேற்ற முடியாது. ராஜஸ்தானில் மதுவிலக்குக் கிடையாது. அதற்குள் இருக்கும் எங்கள் கல்லூரி ஊரில் பியரும் கிடைக்காது; 'பான்ங்'கும் கிடைக்கவில்லை. வகுப்புகளில் எங்கள் நினைவுகளை ஆரம்பித்தோம்.

"ஹேய் நந்து... இங்கேதான் முதல் முதலாக உன்னை ஃப்ரெண்ட் பிடிச்சேன்"?

"ஆமாண்டா... பக்கத்தில் உட்கார்ந்து நல்லா உரசுவே".

"போடீ... மூணு பேர் பெஞ்சியில், அஞ்சு பேர் உட்கார்ந்தா அப்படித்தான்".

இருவருக்கும் நல்ல பசி. முதல் ஆர்வம் தீர்ந்து விட்டதால் வயிறு நினைவூட்ட ஆரம்பித்தது. நேராக கடைத்தெருவுக்கு வந்தோம். பல தெரிந்த உணவு விடுதிகள் மறைந்து STD/ISD/PCO க்களும், Xerox கடைகளும் நிறைந்து இருந்தது.

தப்பித்த உணவு விடுதிக்குள் புகுந்து, மெனுவில் ஆறு வித்தியாசங்கள் பார்க்க ஆரம்பித்தேன்.

"இங்கேதான் என்னுடைய வாழ்நாள்லேயே முதன்முதலாக பிறந்த தின கேக் வெட்ட வெச்சேடா. ரொம்ப தாங்க்ஸ்பா"!

"நான் என்ன செஞ்சேன் நந்து? எல்லாம் தீபாவோட ப்ளான். 'பம்ஸ்' கொடுத்தது மட்டும் என்னோட திட்டம்."

"உன்னை பலி போடணும்டா... எவ்வளவு வலி தெரியுமா? அடுத்த நாள் பரிட்சைக்கு உட்காரவும் முடியாம... ஆம்பிளைகளுக்கு ஏன்தான் அடி உதையிலேயே புத்தி போகுதோ"?

நல்ல சாப்பாடு முடித்துவிட்டு, ஒவ்வொரு மெஸ்ஸாக நுழைந்து கிளம்பினோம். பெரிதாக ஆச்சரியப்படுத்தாத அதே திங்கட்கிழமை மெனு. கூப்பிட்ட குரலுக்கு சப்பாத்தியும் சப்ஜியும் கொணர்ந்த அதே சிப்பந்திகள். அதே நாவில் வைக்க முடியாத சுவை. இருந்தாலும் இப்போது எங்களுக்கு சுவைத்தது.

அடுத்து ஆசிரியர்களைத் தேடிப் பயணம். அப்படியே மாலைக்கு ஓடிப் போனது நேரம். சரஸ்வதி கோவிலின் ஐந்தரை மணி தீபாராதனை தவற விடக் கூடாது. செமஸ்டர் ஆரம்பத்திலும், இறுதியிலும் கூட்டம் அதிகம். நாங்கள் சென்ற போது பலர் கண்ணை மூடிக்கொண்டும், சிலர் கண்ணை மூடாமல் புது வரவுகளையும் வேண்டிக்கொண்டார்கள். குளிர்ந்தாலும் புல்வெளியில் அமர்ந்தோம். ஆங்கிலம் தெரியாதவர்களும் நயாகராவை ரசிப்பது போல புரியாத மொழியில் பாடப்பட்ட பஜன்களில் ஆழ்ந்து போனாள்.

"நந்து... மூன்றாவது வருஷக் கடைசியில் இங்கே உட்கார்ந்து விக்கி விக்கி அழுதது ஞாபகம் இருக்கா"?

"அது எப்படிடா மறக்க முடியும். அன்னிக்குத்தான் நீ வெளுத்து வாங்கினியே. ஊர் ஆயிரம் சொல்லும். ஆனால், நம்ம மனசுக்கு சரின்னு பட்டா எது வேணும்னா செய்யலாம். கழுதை மேல் போனவன் கதையா உலகத்துக்குப் பலவிதமான எண்ணங்கள், கருத்துக்கள். எல்லாவற்றையும் காதுல வாங்கிட்டு, முடிவை மட்டும் நாமதான் சிந்திச்சு எடுக்கணும்னு ஒரு பெரிய அட்வைஸ் இல்ல கொடுத்தே"?

"ஆமாம்பா.. என்னென்னவோ உளறிண்டு இருந்தேன் அன்று. நம்ம நட்பைக் காதலா கொச்சைப்படுத்திட்டாங்க. இன்னும் சில பேரு அவளோட எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கேன்னு கேட்டதுதான் என்னோட கோபத்தைக் கிளறிவிட்டது".

"அது தேவலையே. கலைவிழாவில உன்னோட ரூம்மேட் ஜனா, தண்ணியப் போட்டுட்டு வந்து, அவன் உன்னை உயிருக்குயிரா நேசிக்கிறான்; சொல்ல தில் இல்லை; அதான் நான் உடைக்கிறேன்ன போது நானே நம்பிட்டேன்"!

"அப்போ உன்கிட்ட உண்மைய விளக்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு".

நன்கு இருட்டியிருந்தது. எங்களின் விருந்தினர் மாளிகைக்குத் திரும்ப ஆரம்பித்தோம். அங்கேயே சாப்பிட்டு, சீக்கிரமாய் தூங்கி, காலையில் டில்லி திரும்பலாம் என்பதுதான் திட்டம். ரொம்ப நாளாய் பார்க்காத சந்திரன். முக்கால்தான் இருந்தார். இருந்தாலும் பௌர்ணமி போல் தோன்றியது எனக்கு. மெள்ளக் கையைக் கோர்த்து கொண்டு "பெஹ்லா நஷா..." பாடிக்கொண்டே வந்து சேர்ந்தோம்.

"டேய்... நான் குளிச்சுட்டு வந்துடறேன். கார்த்தாலே டைம் இருக்காது" என்று நந்து புகுந்து விட்டாள். ஆண்கள் சோம்பிக்காமல் டிவி சேனல் மாற்றுவது போல பெண்கள் அனைவருமே குளியலறையில் நேரம் செலவழிக்கிறார்கள்.

கல்லூரியின் பழைய செய்தித்தாள்களை அழகாக அடுக்கி இருந்தார்கள். பல வழக்கமான நிகழ்வுகள். புரட்டியதில் பெண்களின் கூடைப்பந்தாட்டம்தான் விளையாட்டு விழாவில் அதிகம் பேர் நுழைவு சீட்டு வாங்கிய நிகழ்ச்சி என்றிருந்தார்கள். ஒரு பெண், ஆண்கள் விடுதியில் மாட்டிக் கொண்டு நீக்கப்பட்டது செய்தியாக மிரட்டியது. கலைவிழாவில் கல்லூரிக்கு விடுமுறை அளிக்காதது பற்றி முறையிட்டிருந்தார்கள். எவ்வளவு நாட்கள் ஆனாலும் இந்த செய்திகள் மாறுமா என்பது சந்தேகமே.

நந்தினி நைட்டியில் தூங்கி இருந்தாள். எனக்கும் காலையில் விழித்தது, கண்ணை சொக்கியது. விளக்கை அணைத்து, மனைவி இல்லாத ஒருத்தியுடன், ஒரே கட்டிலில் முதல் முறையாக படுக்கை. கண்ணை மூடிக் கையைப் போட்டேன். அவளின் போர்வைக்குள் நுழைந்தபோது விளக்கைப் போட்டாள் நந்தினி.

"கிளம்பலாமா? இப்பவே கிளம்பினா நாளைக்கு என் அச்வினை வகுப்புக்கு வழியனுப்பலாம்".

தூக்கம் கலைந்து எழுந்த நான் "டைம் என்னாச்சு?" என்று கேட்டு பதில் வராமல் இரண்டு அடித்து பத்து மணித்துளிகள் என்று அறிந்தபோது சூரிதாருக்கு மாறி இருந்தாள்.

"தோழா...தோழா... தோள் கொடு தோழா"வை கத்தவிட்டு உள்ளூர் தேனீரோடு வண்டியைக் கிளப்பினாள்.

"நந்து 'ரோஜாக்கூட்டம்' பார்த்தியா? தமிழ் சங்கத்தில் போட்டார்களா"?

"இல்லேப்பா... நான் 'ஃபைவ் ஸ்டார்'தான் லயிச்சு பார்த்த கடைசிப் படம்".

அதன் பிறகு நான் தூங்கி போனேன். அவள் விழித்திருந்து என்னை மீண்டும் டெல்லியில் 'கந்தர் சஷ்டி கவச'த்துடன் நுழைத்தாள்.

-பாலாஜி
பாஸ்டன் - (ஃபெப். - 2 - 2003)

தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும்

 • விடுமுறை: அமெரிக்காவில் போரில் வீழ்ந்த வீரர்களை நினைவு கூறும் தினம். அதை முன்னிட்டு புத்தாண்டுக்குப் பிறகு முதல் விடுமுறை. இந்தியாவாக இருந்தால் பொங்கல், சுதந்திர தினம், அம்பேத்கார் நாள், குரு கோபிந்த் பிறந்த நாள், மே தினம் என்று சன் டிவியும் இன்ன பிற நிகழ்ச்சிகளும் களிக்கலாம். 'ஊரோடு ஒத்து வாழ்' என்பதால், இங்கு ஊர் சுற்ற கிளம்புகிறோம். சூது என்னைக் கவ்வியதா... நான் சூதை கவ்வவிட்டேனா என்பதை லாஸ் வேகாசில் இருந்து திரும்பிய பிறகு சொல்கிறேன்.

 • வலைப்பதிவில்லையேல் வாழ்க்கையில்லை: திருமண நாளைக் கொண்டாட சென்ற விடுமுறையில் கூட பலரும் ஆர்வமாக வலைப்பதிவதை இன்றைய நியு யார்க் டைம்ஸ் அலசுகிறது. சில வித்தியாசமான பதிவுகளை அறிமுகம் செய்தும், குணாதிசங்களை நினைவுகூர்ந்தும் வழக்கமானவற்றை எழுதியிருக்கிறார்கள். வலைப்பதிவாளர் ஒருவர் சொல்வது போல் கிட்டத்தட்ட போதை பழக்கம்தானா இதுவும்?

 • அவசியமில்லாத தகவல்: Trisha's official tamil site என்று தேடினால் தலை பத்தில் என்னுடைய இங்கிலிஷ் பதிவு வருகிறது.

 • கண்டுக்கினாங்க: இன்னொருவர் ஏதோ நல்லா இருக்குப்பா என்று சொல்லும்போது வரும் சந்தோஷமே தனி. அப்படி இவர் சொன்னதும் மகிழ்ச்சி பிறந்தது.

 • ஏக் நஜர்: 7-G ரெயின்போ காலனி பாடல்கள் பிடித்திருந்தது. அது குறித்து கச்சிதமான விமர்சனம் + அறிமுகம் பார்த்தேன். ட்ரெயிலர் பார்க்க சினிசவுத் போகலாம்.

 • விகடன் கிசுகிசு: மிஸ்டர் மியாவ்: தெலுங்கிலும் தமிழிலுமாகத் தயாரான அந்தப் ‘புது’ப் படம் முதலில் தெலுங்கில் ரிலீஸானது. அங்கே எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்காததால் கொஞ்சம் கலங்கிப் போனாராம் பிரகாசமான டைரக்டர்.. ஆனால், தமிழில் படம் தப்புப் பண்ணாது என்ற பேச்சு இருப்பதால் தெம்பாக இருக்கிறார். (சிம்ரன் நடிச்ச கடைசிப் படம் என்பதால் மக்கள் அனைவரும் கனிவோடு விமர்சிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்)

 • சியாமளன் மேட்டர்: 1978 முதல் மே மாதம் ஆசியர்களின் மாதமாக அமெரிக்காவில் கொண்டாடப்பட்டு வருகிறது. Black History Month-க்காக சிறப்புத் திரைப்படங்கள், பேட்டிகள், குறும்படங்கள், துணுக்கு செய்திகள் என்று கலக்கும் தொலைகாட்சிகள் 'Crouching Tiger...'ஐக் கூட உலகத் தொலைகாட்சிகளில் முதன்முறையாக்கவில்லை.

 • நிரபராதிகள் மேல் அபாண்டம்: குற்றமற்ற வினிதாவின் மேல் போலிப் புகார் தொடுத்ததாக தீர்ப்பு வந்திருக்கிறது. காவல்துறையை கண்டித்த முக்கியமான விஷயத்தை குறித்து யாருமே வலைப்பதியவில்லை.

 • மலரோடு மலர் இங்கு...: 'பம்பாய்' படம் போல் தோன்றினாலும் ஒன்பது வருட காத்திருப்புக்குப் பிறகு உஜாலாவும் ஆசாத்தும் மணமுடித்திருக்கிறார்கள். அமெரிக்காவில் ஒருபால் திருமணத்திற்கு எதிராக கொடி பிடிக்கிறார்கள். இந்தியாவிலோ இன்னும் இரு பால் திருமணமே ததிங்கிணத்தோம் போடுகிறது. அமெரிக்காவில் ஒளிபரப்பப்படும் பிபிசியில், இந்த நிகழ்ச்சி எப்போது வரும்?

 • ஒளியிலே தெரிவது?: தமிழ்நாடு மின்சார வாரியம் இணையத்தளம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால், சென்னை-மைலாப்பூரில் இருபத்தி நான்கு மணி நேரமாக மின்சாரம் இல்லாததை அறிவிக்காமலும் எப்பொழுது வரும் என்பதை தெரிவிக்காமலும் உள்ளது. பாவம்... இற்றைப்படுத்துவதற்கு அவர்களுக்கும் மின்சாரம் இல்லையோ... என்னவோ?

புதன், மே 26, 2004

ரசிக்கும் எழுத்துக்கள்

 • பூக்கடை காவல் நிலையம் துவங்கி, துறைமுகம் வரையிலான முதலாளி மீனாட்சி சுந்தரத்தின் சமஸ்தானத்தில் வீசும் காற்று, அடிக்கும் வெயிலில் நேரும் மாறுதல்கள் கூட அவர் கவனத்திலிருந்து பிசகாது.

 • கஸ்டம்ஸ்காரனை சமாளிச்சிடலாம்; கட்டினவ பிராண்டி எடுத்துருவா. பேரின்பம் வேணும்னா பெண்ணாசையை விடுன்னு சொல்வாங்க இல்ல? நா சொல்றேன், சிற்றின்பம் வேணும்னாலும் பெண்ணாசை கூடாது.

 • கடவுளை வணங்கலாமே தவிர, புரிஞ்சிக்க முயற்சி பண்ணக் கூடாதுடா!

 • கசாப்புக் கடை பக்கம் ஐயமாரு வூடு கட்னாலும் காலு எது, ஈரல் எதுன்னு கவுச்சு திங்கறவனுக்குத்தானேடா தெரியும்!

 • சுவாரசியமாடா முக்கியம்? சில்லறைதான் முக்கியம்! சில்லறைதான் சுவாரசியம் தர்ற விஷயம். சில்லறை கிடைக்கிற எல்லா தொழிலும் சுவாரசியமானதுதான்.

 • யார் நிஜ முதலாளிகள் என்று யாருக்குமே தெரியாது.

 • பசி, தாகம், புரட்சி. இது மூணும் இல்லாத மனுஷனே கிடையாது.

 • எப்பவுமே கீழ்மட்டத் தொடர்புகளை விட்றாம வெச்சிருக்கணும்; அதே சமயம், மேல்மட்டக் காரியங்களையும் கவனமா முடிக்கணும்!

 • பணக்காரர்களின் காசையெல்லாம் ஹார்ட் அட்டாக் வடிவத்தில் கறந்து விடுவது என்று கலி புருஷன் முடிவு செய்து விட்டானோ?

 • செய்வதெல்லாம் குற்றம்தான். எனினும், அதைக்கூட ஒரு கலை உணர்வுடன் ரசிக்கிற லாகவம். தன்னை மாதிரி எத்தனை குற்ற நாட்டுகளை நட்டு, நீரூற்றி வளர்த்து வாழ வைக்கிறார்.
 • ஃபுல் டைம் பொறுக்கியானாலும் பாசம் மறந்துடுமாடா?

 • பெற்றவர்கள் எதிர்பார்ப்பது காசை மட்டும் அல்ல என்பது அவன் அறியாததல்ல. ஆனாலும், அதைத் தவிர தன்னால் வேறெதுவும் செய்து விட முடியாது என்று அவனுக்கு உறுதியாகத் தோன்றியது.

 • எவனோ ஒருத்தன் நமக்கு வேலை தரான். நமக்குத் தெரிஞ்ச வேலை. நம்ம திறமைக்கேத்த கூலி அதுல கிடைக்கப் போகுது. அவ்ளோதானே? அது அமைச்சரா இருந்தா என்ன? எம்.எல்.ஏ.,வா இருந்தா என்னா? அட, பாகிஸ்தான்காரனாவே இருந்தாத்தான் என்ன?

 • தொழில் சற்று வளர்ந்தால் இன்னும் ஆள் எடுத்துக் கொள்ளலாம். பர்மா பஜாரில் மிகவும் மலிவாகக் கிடைக்கிற விஷயம் அது ஒன்றுதான்.

 • குரு ப்ரம்மா, குரு விஷ்ணு... அப்புறம் என்ன? என்னமோ இழவு... சினிமாவில் பார்த்தது, மறந்து விட்டது.

 • இந்த விஷயம் உண்மையாயிருக்கும் பட்சத்தில் ஓர் ஆறுதலும் நிம்மதியும் கிடைக்கக்கூடும். கோப வெறிக்கு ஒரு குறுக்கு வடிகால், குரூரத்தின் இயற்கை வெளிப்பாடு.

 • சே! ஒரு நிமிஷத்துக்கும் அடுத்த நிமிஷத்துக்கும் எத்தனை பெரிய நிம்மதி வித்தியாசம்!

தூணிலும் இருப்பான் - பா. ராகவன்
சபரி / ரு. 55

குமுதம்.காம்

சோமரத்னே திசயனாயக்கே - உரையாடல்: "வசந்தகுமார்: ‘லிட்டில் ஏஞ்சலை' நான் இப்படி உள்வாங்கிக் கொள்கிறேன். பெரைரா, ஆட்சியாளர்களையும், தமிழ்ச் சிறுமி தமிழர்களையும், பெரைராவின் மகனான பிரச்னைக்குரிய சிறுவன் இலங்கை தேசத்தையும் பிரதிபலிக்கிறார்கள். சிறுமியின் முயற்சியால்தான் சிறுவன் சுமுகமான நிலைக்கு வருகிறான். இனபேதம் மறைந்து அமைதி திரும்புகிறது. ஆனால், சிறுமி அங்கிருந்து சென்றதும் சிறுவன் பழையபடி கலவர மனநிலைக்குத் திரும்பி விடுகிறான். இந்தப் படத்தின் பிரதான பின்னணி 1983 இனப்படுகொலை; பதின்மூன்று சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதும், அதைத் தொடர்ந்து தமிழர்கள் பழிவாங்கப்பட்டதும்தான். இலங்கை வரலாற்றின் அழிக்க முடியாத கறை இது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் மறந்து போன அதனை மறுபடியும் நினைவுபடுத்துவது இலங்கையில் நடைபெற்று வரும் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு இடையூறு ஏற்படுத்துவதாகாதா?
"இதை இப்போது சுட்டிக்காட்டுவதன் மூலம், மக்களிடம் இது மறுபடியும் நிகழக்கூடாது என்கிற எண்ணமும் அதன்பால் வெறுப்புணர்வும் ஏற்பட வழி செய்யமுடியும். நாம் இப்போது சில நேரங்களில் ஹிட்லரைப் பற்றிப் பேசுகிறோம். அவர் செய்தது சரி என்று சொல்லவா? அல்ல; அதை ஞாபகப்படுத்துவதன் மூலம் அதன் தீயப் பக்கத்தைக் காட்டவே."Truth, Love & a little Malice: குஷ்வந்த் சிங் - கி அ சச்சிதானந்தம்:
இந்திரா காந்திக்கும் அவருடைய இரண்டாம் மருமகளான மேனகா காந்திக்கும் இடையிலான மோதலை, மாமியார் மருமகள் சண்டையைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். மேனகா காந்தியை தன் நேர்முக உதவியாளராக இந்திராகாந்தி நியமித்தார். இதை சோனியா காந்தி கடுமையாக எதிர்த்தார். தன் நாடான இத்தாலிக்கே தன் குடும்பத்துடன் திரும்பிப் போய்விடுவதாக மிரட்டினார். இந்திரா காந்தியால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இந்திராகாந்தி, மேனகாவை வீட்டை விட்டுத் துரத்தி விட்டார். பத்திரிகைகள் மாமியார் மருமகள் சண்டையைப் பெரிது படுத்தின.


விக்ரமாதித்யன்: "வாழ்வினுடைய சாரமே இல்லாத வெறும் மொழியை வைத்துக்கொண்டு உற்பத்தி செய்யப்படும் கவிதைகளைத்தான் நான் ‘டொமஸ்டிக்' கவிதைகள் என்கிறேன். அவற்றில் அக்கவிஞனுடைய வாழ்வுகூட இல்லை. மொழியால் செய்யப்படும் கட்டடங்கள்தான் எல்லாம். வாழ்வும் மொழியும் இசையும் போதுதான் நல்ல கவிதை பிறக்க முடியும். அது இங்கு நடக்கவில்லை.

ராமர் பிறப்பதற்கு முன்பே ராமாயணம் எழுதப்பட்டுவிட்டது. இவ்வளவு பெரிய முனிவர் எழுதி விட்டாரே என்று அவனும் அதுபடி வாழ்ந்து விட்டான் என்று ஒரு ஐதீகம் இருக்கிறது. இதுபோல் நான் குடிகாரன் என்பதும் முன்பே தீர்மானிக்கப்பட்டுவிட்டது."

'அச்சாணி'

மூடப்படும் தேவாலயங்கள் | பாஸ்டன் க்ளோப் தலையங்கம்

SOURCE: Data analysis by Bill DedmanTamil Christian Songs:
மாதா உன் கோவிலில்
மணிதீபம் ஏற்றினேன்
தாயென்று உன்னைத்தான்
பிள்ளைக்குக் காட்டினேன் மாதா....

மேய்ப்பன் இல்லாத மந்தை வழி மாறுமே
மேரி உன் ஜோதி கண்டால் விதி மாறுமே
மெழுகு போல் உருகினோம்
கண்ணீரை மாற்ற வா

காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே
தரைகண்டிடாத ஓடம் தண்ணீரிலே
அருள்தரும் திருச்சபை
மணியோசை கேட்குமோ

பிள்ளை பெறாத பெண்மை தாயானது
அன்னை இல்லாத மகனை தாலாட்டுது
கர்த்தரின் கட்டளை
நானென்ன சொல்வது

செவ்வாய், மே 25, 2004

மெடிமிக்ஸ் - தினகரன்: தமிழ் சினிமா விருதுகள்

விருது பெற்றவர் திரைப்படம் வழங்கியவர்கள்
சிறந்த நடிகர் விக்ரம் பிதாமகன் சரத்குமார்
சிறந்த நடிகை ஸ்னேஹா பார்த்திபன் கனவு ராதிகா & மெடிமிக்ஸ் நிர்வாகி
தலைமுறை சிறப்பு விருது - நடிகர் ஜெமினி கணேசன்   கே பாலச்சந்தர் & விஜயகுமார்
தலைமுறை சிறப்பு விருது - நடிகை சரோஜா தேவி   ஏவிஎம் சரவணன் & சிந்தாமணி முருகேசன்
சிறந்த இயக்குநர் பாலா பிதாமகன் மெடிமிக்ஸ் நிர்வாகி
சிறந்த அறிமுக இயக்குநர் செல்வராகவன் காதல் கொண்டேன் தனுஷ் & நதியா
சிறந்த அறிமுக நடிகர் ரவி ஜெயம்  
சிறந்த அறிமுக நடிகை சதா ஜெயம்  
சிறந்த குணச்சித்திர நடிகர் ரகுவரன் திருமலை ஸ்ரீகாந்த் & தேனப்பன்
சிறந்த குணச்சித்திர நடிகை சங்கீதா பிதாமகன் ஜி தியாகராஜன் & ஷ்யாம்
சிறந்த நகைச்சுவை நடிகர் கருணாஸ் திருடா திருடி குஷ்பூ
சிறந்த வில்லன் ஜீவன் காக்க காக்க நெப்போலியன் & சித்ரா லஷ்மணன்
சிறந்த ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் பிதாமகன் பிசி ஸ்ரீராம் & விந்தியா
சிறந்த இசை தினா திருடா திருடி ரீமா சென்
சிறந்த பாடகர் ஹரீஷ் ராகவேந்திரா 'தேவதையைக் கண்டேன்' சிபிராஜ் & அருண்குமார்
சிறந்த பாடகி மாலதி 'மன்மத ராசா' இப்ராஹிம் ராவுத்தர் & தாரிகா
சிறந்த பாடலாசிரியர் வைரமுத்து இயற்கை சேரன்
சிறந்த கலை கே பிரபாகரன் அன்பே சிவம் ஜெய் ஆகாஷ் & உமா
சிறந்த நடனம் சிவசங்கர் 'மன்மத ராசா' விக்னேஷ் & ஸ்ருதிகா
சிறந்த கதை பாக்யராஜ் சொக்கத்தங்கம்  
சிறந்த வசனம் ஹரி சாமி  
சிறந்த குழந்தை நட்சத்திரம் பேபி கல்யாணி ஜெயம்  
சிறந்த சண்டை ஸ்டன் சிவா பிதாமகன் ஸ்ரீமான் & கணிகா
விமர்சகரின் சிறந்த படம் அன்பே சிவம் லட்சுமி மூவி மேக்கர்ஸ் கஸ்தூரி ராஜா & ரமேஷ் கன்னா

 
ஆதாரம் + நன்றி:
1. Y! India Movies
2. தினகரன் தமிழ் சினிமா விருதுகள்
3. தினகரன் - 2004 (1)
4. தினகரன் - 2004 (2)
5. விருது பெற்றிருக்கவேண்டிய பாடல்??

விரல் நுனியில் குறள்

திருக்குறள்: என்னிடம் இருக்கும் பதிப்பு http://www.suvadi.com என்னும் முகவரியை சுட்டுகிறது. தற்போது அது இயக்கத்தில் இல்லை. 'விரல் நுனியில் குறள்' மிகவும் உபயோகமான நிரலி. தமிழில் திருக்குறள்; கூடவே சுருக்கமான அர்த்தம். ஆங்கிலம் வசதிப்படுமானால் ஆங்கிலம்; தமிழில் அர்த்தம் வேண்டுமானால் தமிழ். அதிகாரம் வாரியாக டக் டகென்று மேயும் வசதி.

Installation Instructions: Kural works under Windows 95, 98 and NT©. Unzip the kural.zip file and extract the Kural.exe file to any directory on your PC. That's all. To uninstall, simple delete the Kural.exe file.

எழுதியவர்: இளங்கோ சம்பந்தம்
கிடைக்கும் சுட்டி: திருக்குறள்

வாதம் vs. விவாதம்

நான் பார்த்த இணையத்தில் இந்த நாள் மட்டும், எந்த ஒரு விவாதமும் முழுமையாக முடியவடியவில்லை. மணிக்கணக்காய் விவாதம் செய்தாலும் முடிவில் 'என் கருத்து எனக்கு, உன் கருத்து உனக்கு'; உன் மூக்கு, என் மூக்கு என்று முடிந்து விடுகிறது. இந்த விவாதத்தில் நமக்கு மிஞ்சுவது சிறிது மன உளைச்சல்தான். இப்படி பைசா பிரயோஜனம் இல்லாத ஒரு விஷயத்துக்கே நம்மால் ஒத்து போக முடியவில்லையென்றால் எப்படி இதையே பிழைப்பாக நடத்தும் அரசியல்வாதிகளும், சினிமா நட்சத்திரங்களும் ஒத்துப் போவார்கள். ஆனால் நாம் விடாமல் பக்கம் பக்கமாக அரசியல்வாதிகள் முதல் அனைவரையும் இப்படி செய்ய வேண்டும், அவரோடு பேசி சமாதானம் ஆக வேண்டும் என்று எழுதுகிறோம். நாம் இப்படி செய்வது...

1. ஊருக்குதான் உபதேசம்.
2. நான் செய்வது சரி ஆனால் அவர்கள் அப்படி செய்யக்கூடாது (சமூகத்தின் பார்வைபடுவதால்).
3. அட போய்யா பெருசா வந்துட்டான்.
4. நான் செய்வது சும்மா பொழுது போகாமல்; ஆனால் அவர்களுக்கு இது பிழைப்பு, ஆகவே அவர்கள் ஒத்துப் போக வேண்டும்.

திங்கள், மே 24, 2004

கவர்ந்த உபயோகங்கள்

 • பயிற்சிநிலை பொறுக்கி
 • பரிபூரண பொறுக்கி
 • மீனாட்சி என்றால் தாமிர தேகம்
 • கோவிலுக்கு சென்று நன்றி அறிவிப்பு கூட்டங்கள்
 • சாகசம் கலந்த வருமானம்
 • மானசீக குரு; மரியாதைக்குரிய நண்பன்
 • ஓயாத ஞாபக படையெடுப்புகள்
 • பிசாசெனக் கவிந்து நின்ற தனிமை
 • கலை நேர்த்தியுடன் செய்கிற அயோக்கிய கவிஞன்
 • முகத்தில் அறையும் விஷச் சொற்கள்
 • ஆத்மசுத்தியுடன் கெட்ட காரியங்கள்
 • பால்பாயிண்ட் பேனா சைஸில் எழுதப்பட்ட திருக்குறள்

தூணிலும் இருப்பான் - பா. ராகவன்
சபரி / ரு. 55

தமிழோவியம் - விமர்சனம்

1. பேரழகன்: 'படத்தை தாராளமாகப் பார்க்கலாம்' என்று சொன்னதால் பார்க்காவிட்டாலும், மற்றுமொரு இரட்டை வேட மலையாள ரீமேக் படம். விவேக் காமெடி ஊனமுற்றவர்களைப் புண்படுத்தாத மாதிரிதான் இருந்தது. என்னுடைய கல்லூரி காலத்து நண்பர்கள் சேரும்போது ஜாலியாக கலாய்த்துக் கொண்டு, ஒருத்தர் காலை இன்னொருவர் வாரிவிட்டுக் கொண்டு அரட்டை அடிப்போம். அது போலத்தான், (விவேக்) குழந்தை-சின்னா (சூர்யா) நட்பும் காட்டப்பட்டிருந்தது. (தேவையில்லாத டிஸ்க்ளெய்மர்: இப்பொழுதுள்ள இணைய நட்பை குறித்து இதனால் எதுவும் குறிப்பிட்டு சொல்லப்படவில்லை :-)

'பேரழகன்' நிஜத்தை பிரதிபலிப்பதாகவும் இல்லை. மலையாள மறுபதிப்பாக இருப்பதால், தேவையில்லாத செண்டிமெண்ட் சோகக் காட்சிகளும் அதிகம். மிகவும் ரசித்த வசனகவிதையையும் காட்சியாக்கத்தில் எவ்வளவு இயலுமோ, அவ்வளவு சொதப்பியிருந்தார்கள். 'அம்புலி மாமா' பாடல் ஆண்களுக்குப் பிடிக்கலாம்; அவர்களின் typical கற்பனைகளின் வடிகாலாக பாடல் படமாக்கப்பட்டுள்ளது. ஏவிஎம் மார்க்கெட்டிங்குக்காக மட்டுமே படம் ஓடுகிறது.

2. பருந்துப் பார்வை: சென்ற ஆண்டு 'இணையக்குழுக்களின் ஆண்டு' என்றால், இந்த ஆண்டை வலைப்பூக்களின் ஆண்டாக நிச்சயம் சொல்லலாம். ஏன் சார்... மதுரபாரதி சாருக்கு மட்டும் அவருடைய பெயரின் மேல் சுட்டினால் வலைப்பதிவுக்கு செல்லுமாறு வசதி செய்து தரவில்லை :-)

3. பதில்கள்: PingBack குறித்து கேள்விப்பட்டவுடன், ஒரு கேள்வியாக்கி அனுப்பி வைத்திருந்தேன். பதிலளித்த வலைப்பையனுக்கு நன்றி. தமிழ் வலைப்பூக்களில் இது எவ்வளவு தூரம் முக்கியம், அதன் தேவை என்ன, எப்படி செயல்படுத்த முடியும் என்பதை நீங்கதான் சொல்ல வேண்டும்!

4. கதை: 'சுய சாசனம்' என்று ஒரு கதை ஆரம்பித்து இருக்கிறேன். படிச்சுட்டு உங்கள் பொன்னான பின்னூட்டங்களைத் தர வேண்டுகிறேன். கடவுள் மட்டும்தான் பதில் எழுதுவதில்லை என்பது பொன்மொழி. வாசகர்களாகிய நீங்களாவது அவ்வப்போது கருத்துக்களை சொல்ல வேண்டும்! (அட்வான்ஸ் நன்றிகள் :)

5. சமையல்: தலைப்பை மாற்றலாம்; நான் ரொம்பவும் சுவைக்கும் பகுதி. இவற்றையெல்லாம் யூனிகோடில் போட்டால், பின்னொரு நாளில் தேடுவதற்கு வசதியாக இருக்குமே. இந்த வாரமும் பயனுள்ள வட இந்திய உணவு முறையை எளிமையாக அறிமுகம் செய்ததற்கு நன்றி.

6. தராசு: 'பின்குறிப்பு' நல்லாத்தான் இருக்கு. ஆனால், சம்பந்தா சம்பந்தமில்லாமல் 'பிகு' போடறாங்க. தராசு எழுதிய பிரதமர் விஷயத்துக்கும், ஜெயலலிதா வாபஸ் வாங்கியதற்கும் எப்படி எங்கே லிங்க் இருக்கிறது என்பது அடியேனுக்கு எட்டவில்லை! தனியாக இன்னொரு சுட்டி கொடுத்தோ, அல்லது இரண்டு தராசு ஆகவோ எழுதியிருக்க வேண்டும்.

7. ரமா சங்கரன்: தமிழோவியத்தில் தவறவிடக்கூடாத பகுதி.

8. முத்தொள்ளாயிரம்: கொஞ்சம் அரைத்த மாவையே அரைப்பது போன்ற பாடல்களைக் கூட சுவைபட வழங்குவது ஒரு கலை. நன்றாக செய்து வருகிறார் சொக்கன். ஒவ்வொரு வாரமும் தலைப்பிலேயே, பாடலுக்கு ஒரு மினி அறிமுகம் செய்யலாம். காட்டாக இந்த வாரத்துக்கு: சேர அரசுக்கு மக்கள் அதிருப்தி! என்று தினமலர் போல் போட்டால், என் போன்ற டீ கடை பெஞ்ச் ஆசாமிகள் கூட முதலில் படிப்பார்கள் ;-)

9. மேட்ச் ஃபிக்ஸிங்: அபிஜித் கலே லஞ்ச வழக்கின் முடிவு இந்த வாரம் வெளியாகுமாமே? போன வாரம் கிரிக்கெட் உலகில் நடந்தவற்றை பத்ரி எழுதுவது போல் எனக்கு மிகவும் பிடித்த அமெரிக்க என்.பி.ஏ செய்திகளை இதே போல் யாராவது (தமிழில்) தொகுத்துத் தர வேண்டும்.

10. முத்துராமன்: ஊக்குவித்தல் என்று நான் ஒரு வார்த்தையில் சொல்வதற்குப் பின் இவ்வளவு அர்த்தங்களா!? ஹ்ம்ம்... எதற்கு நீங்கள் ஊக்குவிக்க வேண்டும் என்பதை சுருக்கமாக அலசியுள்ளார்.

11. வானவில்: சிறிய வயதில் இந்தக் கதையை கேட்டிருந்தால் எடக்கு முடக்கான கேள்விகள் எதுவும் கேட்டிருக்க மாட்டேனாக இருந்திருக்கும். இப்பொழுது நிறையத் தோன்றுகிறது! ஏன் சன்னியாசம் பெற்றுக் கொள்ள வேண்டும்? (எனக்கு இன்னும் மனம் பக்குவம் அடையவில்லை போல!) எதற்காக வாழ்க்கையை அனுபவிக்கக் கூடாது? (அப்புறம் கொழுப்பு, கொலஸ்ட்ரால், ட்ரைக்ளிசரைட் என்று அவதிப்படக் கூடாது அல்லவா?) -- சிறுவர்கள் படிப்பதற்கான சிறப்பான பகுதி.

12. காந்தீய விழுமியங்கள்: வாரம்தோறும் தமிழோவியத்தில் தவறவிடக்கூடாத இன்னொரு பகுதி. (இந்தியாவில் குற்றங்களுக்கு தரப்படும் தண்டணைகள் அதிகம் என்றே காந்திஜி நினைக்கிறார்.)

13. தன்னிலை விளக்கம்: தராசு Ext. அல்லது தராசு Express!

காணாமல் போனவை: சினிமாப் பாடல்களை சுவைபட வழங்கிய சந்திரவதனா, அமர்க்களமாக ஆரம்பித்த ஹரி கிருஷ்ணனின் 'வேர்கள்', அவ்வப்போது வரும் 'வெங்கட்', சில வாரம் முன்புதான் தொடங்கிய 'கார்த்திக் ராமாஸ்'...

மத்திய அமைச்சரவை

பத்ரி அதிர்ச்சியான ஆச்சரியங்கள் என்று மந்திரி சபை பட்டியலையும் அதை குறித்தத் தன்னுடைய கருத்தையும் பதிந்துள்ளார். தொடர்ந்து எழுந்த சில எண்ணக் கேள்வி குழப்பங்கள்:

1. கமல்நாத்: கல்கத்தாவின் செயிண்ட். சேவியர்ஸ் கல்லூரியில் இருந்து வணிகவியலில் பட்டம் பெற்றவர். ஹவாலா டைரி குறிப்பில் இடம் பெற்றவர். 1991ல் சுற்று சூழல் துறை அமைச்சராக இருந்தவர். அப்பொழுது உலகளாவிய அளவில் மாசுக் கட்டுப்பாடு நிர்ணயங்களையும், அபராதங்களையும் வகுத்தவர். தொடர்ந்து நெசவுத்துறையை கவனித்தபோது முன்னெப்போதும் இல்லாத அளவு பஞ்சு உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் சாதனை படைத்தார்.

2. தமிழகம்: இதுவரை மத்திய அமைச்சரவையில் எப்போதுமே இல்லாத அளவில் 12 பேர் அமைச்சர் பதவி பெற்றுள்ளனர் என்பது மகிழ்ச்சிகரமானது. வருமாண்டுகளில் தமிழகம் செழிக்க இது உதவும். மத்திய - மாநில அரசுகளிடையே உறவுகள் பலப்பட்டால் பலன் அதிகமாக இருக்கும்.

3. வாரிசு ராஜ்ஜியம்: தயாநிதி மாறனும் அன்புமணியும் அமைச்சரவையில் இருக்கிறார்கள். முன் அனுபவம் அதிகம் இல்லையெனினும் இருவருமே நிறைய படித்தவர்கள். எம்.பி.பி.எஸ் டாக்டருக்கு சுகாதாரத்துறையும், ஹார்வார்ட் மேலாண்மை படித்தவருக்கு தகவல் தொடர்புத்துறையும் தந்திருக்கிறார்கள். தயாநிதி மந்திரியாவார் என்று தெரிந்துதான் மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள். அன்புமணி அமைச்சராவதும், சோனியா பிரதம மந்திரியாக வாய்ப்புள்ளது மாதிரி ஓரளவு அனுமானிக்கப்பட்டதுதான். விஜய், சூர்யா போன்ற நடிகர்களின் திறமைக்கு மதிப்பு கொடுப்பது போல், இவர்களுக்கும் வாய்ப்பளித்து, பொறுத்திருந்து மதிப்பிட வேண்டும்.

4. பாமகவின் மூர்த்தி: ரெயில்வேயில் அதிரடியாக நல்ல காரியங்களை செய்து வந்தவர்தான். ஆனால், இவர் மீண்டும் இடம்பெறாததற்கு (வாரிசு அரசியல் தவிர) சில காரணங்களைக் குறிப்பிடலாம். அதிகாரிகளிடம் இவர் அதிருப்தி சேகரித்ததாக வந்த ஜூ.வி. செய்திகள். இந்தத் தேதிக்குள் அதை முடிப்பேன் என்பது மக்களிடம் செல்வாக்கை உயர்த்தலாம். ஆனால், அதை செய்து முடிக்க அதிகாரிகளின் சனி/ஞாயிறு இழப்புகள், அரசுக்கு ஆகும் ஓவர்டைம் பட்ஜெட் மீறல்கள் போன்றவை வெளியில் தெரியாது.

5. Conflict of interest: அமெரிக்காவின் துணை ஜனாதிபதியுடன் வேட்டைக்குப் போகும் உற்ற ஜட்ஜ் நண்பர், அவருடைய வழக்கை விசாரிக்கிறார். இங்கு நட்பை விட நீதித்துறையின் மேல் உள்ள மதிப்பு முக்கியம். அவ்வாறே, (சன் டிவி) உறவை விட (தகவல் தொடர்புத்துறை) அமைச்சகம் மனசாட்சிப்படி முக்கியத்துவம் பெறும் என்று நம்பலாம். அவ்வாறே இல்லாவிட்டாலும், மந்திரிசபையில் பங்கு வகிக்கும் திமுக, அனைத்து முடிவுகளிலும் தன்னுடைய கருத்தை வலியுறுத்தி மாற்றியமைக்க முயலும்; இப்பொழுது, காங், திருடனின் கையிலேயே சாவியைக் கொடுத்து விட்டதால், தயாநிதி மாறனுக்குக் கூடுதல் பொறுப்பும், ஊடகங்களின் உன்னிப்பான ஆராய்தலும் கிடைக்கும்.

தகவல் ஆதாரம்: ரீடிஃப், என்.டிடி.வி, The Hindu : The Union Council of Ministers

பிகு: ரிடிஃப் போன்ற தளங்களுக்கு அரசாங்க அறிக்கை போல் ஏதாவது கிடைத்து, அதை அப்படியே வெளியிட்டிருக்கலாம்; சாதனைப் பட்டியலில் எவ்வளவு தூரம் உண்மை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஞாயிறு, மே 23, 2004

சிறுவர் புத்தகங்கள் - ஆர். பொன்னம்மாள் (11)

திருக்குறள் கதைகள் - 1,2,3,4: முதல் பாகம் 1981-இல் வெளிவந்தது. அடுத்த மூன்று பாகங்களும் வானதியின் புதல்வர் திரு. ராமநாதன் ஊக்கப்படுத்த எழுதியதே 2000வது ஆண்டில்தான். ஒரே சமயத்தில் வெளிவந்த இவை தேனோடு தரப்பட்ட ஔடதம்.

மூதுரைக் கதைகள்: மூதுரைச் செய்யுள் ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் சொல்வதோடு கதைகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகளையும் பெரியோர்களையும் சுவாரசியப்படுத்த இடை இடையே கவிதைகளும், புதிர்களும் கூட உண்டு.

மகாபாரதக் கதைகள் - 1,2,3,4 பாகங்கள்: வானதி திருநாவுக்கரசு அவரளின் மூத்த புதல்வர் திரு. சோமு அவர்கள் மகாபாரத்தில் ஒரு நிகழ்ச்சியும் விடாமல், அதிகமாக நீட்டாமல், அதிகமாக வர்ணிக்காமல் சிறுவர்களுக்கான கதைகளாகக் கொடுக்க முடியுமா என்னும் வேண்டுகோளை ஏற்று வெளிவந்த நூல்கள் இவை. இன்னும் பல பதிப்புகளையும், இன்றும் பெரும் வரவேற்பைப் பெறும் நூல்கள் இவை. கம்பர், வால்மீகி, வில்லிபாரதம் என்று எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு, யுத்த காண்டத்தையும் ரத்த களறி இல்லாமல் வெகு நளினமாக எடுத்து செல்லும் புத்தகம்.

மரியாதை ராமன் கதைகள்: திருவரசு வெளியீடு - இருபது கதைகள் கொண்டது. 1998இல் வெளிவந்தது. எளிய தமிழில் தோண்டி எடுக்கப்பட்ட புதையல் இது. 'குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.யை பற்றி அம்மா சொல்வார்கள். திறமை அதிகம். விளம்பரத்தைப் புறக்கணித்த மனிதர் என்று. என் தாயும் அப்படித்தான். 'யானைக்குப் பானை சரி' கதையைப் படித்தபோது இதை உணர்ந்தேன்.

(சிறு குறிப்பு வளரும்)

சனி, மே 22, 2004

12-பி ரீமேக்

படம் பெயர்: Sliding Doors (சறுக்கும் கதவுகள்)

தமிழில்: 12-B

நடிகர்கள்: "ஷேக்ஸ்பியரின் காதல்" புகழ் க்விநெத் பால்ட்ரோ
"பேஸிக் இன்ஸ்டின்க்ட்" புகழ் ஜீயான்
மற்றும் பலர்

ஒற்றை வரிக்கதை: பஸ்ஸுக்கு பதிலா ட்ரெயின்;
ஷாமுக்கு பதிலா க்விநெத்.

விலாவரியாக: வழக்கம்போல் எழுந்து வேலைக்கு செல்லும் ஹீரோயினை, சீட்டைக் கிழித்து வீட்டுக்குத் துரத்துகிறார்கள். ஹெலன் பாதாளவண்டியின் மூடும் கதவுக்குள் நுழைந்து சென்றால்/செல்லாவிட்டால் என்ன என்ன நடக்கக் கூடும்? டக்குன்னு புடிச்சா காதலனுடைய கள்ளத்தொடர்பு பளிச். அத்தோட விட்டது சனின்னு, சுடச்சுட ஒரு புது "அலைபாயுதே" "மாதவன்" வேற டாவடிக்கறார். இன்னொரு பக்கம் ஜேப்படி, ஏமாற்றும் வீட்டுக்காரன், பெண்டு கழற்றும் வேலைன்னு ஒரே சோகம்.

க்ளைமாக்ஸ்: 12-B முடிவுதான் இங்கும் :(

தெரிந்து கொண்டது: ஒரு நாவல் எழுதினால் போதும். கோடீஸ்வரர் ஆகி விடலாம். (தமிழில் அல்ல; ஆங்கிலத்தில்)

தெரிந்து கொள்ள வேண்டியது: இந்தப் படமும் சுட்ட பழம்தான். குறுட்டுத் யோகம் (Kieslowski's "Blind Chance"/"Przypadek") என்னும் படத்தை/கதையை அடிப்படையாகக் கொண்டது. அவர் இன்னும் சூப்பர்; மூன்று கிளைகள்.

மனதில் நிற்கும் வசனங்கள்:
முதல் சந்திப்பில் "மாதவன்" ஹீரோயினிடம் - "அலையலையான முடியோட, பூனைக்கண்ணோட, சுமாரான அழகாத்தான் இருந்தாலும் உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு"

அமெரிக்கக் காதலி ரெண்டுக் காதலிக்காரனிடம் - "நான் ஒரு பொண்ணு! எனக்கு என்ன வேணும்னு சொல்ல மாட்டேன்; ஆனா வேண்டியது கிடைக்கலேன்னா கெட்ட கோபம் வரும்."

பட(ங்களின்) அறிவுரை(கள்):
* எல்லாருக்கும் எல்லாவாட்டியும் நல்லதே நடக்காது.
* பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.
* வாழ்க்கையே சோகமா இருந்தாலும் எப்படியாவது வெளிச்சம் கிட்டும்.
* "கோடீஸ்வரி"யில் வேண்டுமானால் கேள்விகளுக்குப் பொறுமையாக பதில் சொல்லலாம்; நிஜ வாழ்க்கையில் எகிறிடும்.

(செப். 16 - 2002)

வெள்ளி, மே 21, 2004

ஹாரி பாட்டர் பார்த்ததுண்டா?

i'm in gryffindor!

எந்த வீடு @ nimbo.net

வெகு விரைவில் புது ஹாரி பாட்டர் படம் வருகிறது. ஹாரி பாட்டர் படம் பார்க்காவிட்டாலும் இந்த கணிப்பை எடுத்து பார்க்கலாம். ஆனால், முடிவின் தாத்பரியம் தெரியாமல் போகும். நான் க்ரிஃபிண்டார் என்பதை நம்பமுடியவில்லை. 'ஸ்லிதெரின்' ஆக இருக்கத்தான் வாய்ப்பு என்று எண்ணியிருந்தேன்!

தினபூமி

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதை எதிர்க்கிறேன் - மன்மோகன்சிங்:
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுவதை பொதுவாக தாம் எதிர்ப்பதாக புதிய பிரதமராக பதவி ஏற்கப் போகும் டாக்டர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். இருந்தாலும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் ஆந்திர அரசின் முடிவு நியாயமானதே என்றார். தமிழகத்தில் இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்கும் வகையில் விவசாயிகளுக்கு மணியார்டர் மூலம் நிதிஉதவி செய்யப்பட்டது. ஆனால் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இலவச மின்சாரம் தமிழகத்தில் நிறுத்தப்பட்டு விட்டதைப் போல போராட்டம் நடத்தின. கொள்கை அளவில் தாம் இதை ஏற்கவில்லை என்றும் கூறினார் மன்மோகன்சிங்.

இத்தாலியில் இளையராஜா இசை நிகழ்ச்சி - இளையராஜா:
நான் இதுவரை மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்தேன் முதன் முறையாக இத்தாலியில் கடந்த மே மாதம் 14, 15_ம் ஆகிய நாட்களில் எனது இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சி இத்தாலியில் வாழும் இந்தியர்களுக்காக இல்லை. இத்தாலி ரசிகர்களுக்கு தான் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி வருட வருடம் "மாடர்ன் ஆப் ஒப்ரா'' என்ற இடத்தில் இசை குழுவினர்களின் நிகழ்ச்சி நடைபெறும். இசை நிகழ்ச்சியின் முடிவில் எனது இசை நிகழ்ச்சி நடைபெற்றது. எனது இசை நிகழ்ச்சி முக்கிய நிகழ்ச்சியாக நடந்தது.

சொல்லாத காதல் - தமிழ்மதி:
"தன்னுறு வேட்கை கிழவன்முற் கிளத்தல்
எண்ணுங் காலைக் கிழத்திக் கில்லைப்
பிறநீர் மக்களின் அறிய ஆயினால்
பெய்ந்நீர் போலும் உணர்விற் றென்ப'' என்பது தொல்காப்பியம்.

தோழியிடம் சொல்லிப் புலம்புகின்றாள். இது
"நோயலை கலங்கிய மதனழி பொழுதின்
காமம் செப்பல் ஆண்மகன் கமையும்
யானே பெண்மைதட்ப நுண்ணிதின் தாங்கி'' (நற்.94)
என்ற பாடலடிகளில் புலம்கின்றது.

ஆண்டாள், தன் `நாச்சியார் திருமொழியில் (13:1) இந்த உணர்வுக்கு ஆட்பட்டுத்தான் "பெண்ணின் வருத்தமறியாத பெருமான்'' என்று பாடித்தவிக்கின்றாள்.

சினிமா துணுக்குகள்:

 • வித்யாசாகரின் இசையில் இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா ஒரு பாடலை பாடியுள்ளார். எந்தப் படத்துக்குப் பாடியிருக்கிறோம் என்பதே அவருக்குத் தெரியாதாம். கரு. பழனியப்பன் இயக்கும் `சதுரங்கம்' படத்துக்காகத்தான் இவர் பாடியிருக்கிறார்.
 • ஒரு பாடல் எழுதுவதற்கு 10 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார்கள் தமிழ்ககவிஞர்கள்.

குவிஸ்:
 • 'JANE EYRE' நூலின் ஆசிரியர் யார்?
 • `பாக்ஸிங்' விளையாட்டில் ஒரு ரவுண்ட் என்பது எவ்வளவு?

விடுகதைகள் :
 • சின்னவன் ஓடுவான் அடுத்தவன் நடப்பான் பெரியவன் தவழுவான். அவர்கள் யார்?
 • சுனை ஒன்று சுவர் மூன்று அது என்ன?

தமிழ் நாள்காட்டிநன்றி: sysindia.com - தமிழர் பக்கம்

வியாழன், மே 20, 2004

ஆய்த எழுத்து

Dinamani.com - Kadhir: ""உயிர், மெய் இரண்டின் துணையின்றி ஆய்த எழுத்து தனித்து இயங்காது. மாதவன், சூர்யா, சித்தார்த்தின் பாதை தனித்தனியானது. ஆனால் ஒருவரையொருவர் சாராமல் வாழமுடியாது என்பதே படத்தின் கரு' என்கிறார் இயக்குநர் மணிரத்னம்."

ரீடிஃப்: பிரேம் பானிக்கர் ஆய்த எழுத்தின் இந்தி வெளியீடுக்கு விமர்சனம் கொடுத்துள்ளார். நான் இவருடைய கிரிக்கெட் வர்ணனைகளை வெகு காலமாக படித்து வந்தவன். சில வருடம் முன்பு வரை இந்தியா கலந்து கொள்ளும் ஆட்டங்களின் விமர்சனங்களை இவர் ரீடிஃபில் கிரிக்கெட் பகுதிகளில் எழுதி வந்தார். இந்தியா தோற்றால் ஏறி மிதிப்பதும், ஜெயித்தால் தலையில் தூக்கி வைத்து கூத்தாடுவதும் சாதாரணமாக நடக்கும். ஆனால், புள்ளி விவரங்களோடு, படு நுட்பமாக அலசுவார். ஹிந்துவின் மோகன் பார்வைகள் படித்து பழக்கப் பட்டவனுக்கு இவருடையது கொஞ்சம் தீவிர ஆராய்ச்சி போலத் தோன்றும்.

ஆய்த எழுத்தையும் அக்கு வேறு ஆணி வேறாக பிய்த்து எழுதியிருக்கிறார். அந்த அதி முக்கியமான காட்சி என்ன என்று அறிந்து கொள்ளும் ஆவல் ரொம்ப இருந்தால் ஏ. ஆர். ரெஹ்மான் விசிறி குழுமத்தில் போய் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

உண்ணி - பா. ராகவன்

எதிர்வீட்டு மாலதி ஒரு பூனை வளர்த்துக்கொண்டிருந்தாள். பூனைக்குட்டி என்றும் வளர்ந்த பூனை என்றும் சொல்ல முடியாத பருவத்துப் பூனை அது.

கல்லூரிக்குச் செல்லும் நேரம் நீங்கலாக மாலதியைப் பெரும்பாலும் அந்தப் பூனையுடன் தான் பார்ப்பேன். வாசல் படியில் அமர்ந்து அதன் ரோமத்தைக் கோதிவிட்டுக்கொண்டோ , அதன் மூக்குடன் தன் மூக்கை உரசி விளையாடிக்கொண்டோ இருப்பாள்.

பூனையின் மேனி பார்க்கமட்டுமே பரிசுத்தம். எத்தனை கிருமிகள், உண்ணிகள் இருக்குமோ? ஐயோ, இந்தப்பெண் ஏன் இப்படி ஈஷுகிறாள்; உடம்புக்கு ஏதாவது வந்துதொலைக்கப் போகிறதே என்று எனக்குத் தான் எப்போதும் பதறும்.

எதிர்வீடு தான் என்றாலும் எங்காவது பார்த்தால் அடையாளம் கண்டு அரைப் புன்னகை செய்யுமளவு மட்டுமே எங்களுக்குள் நெருக்கம் என்பதால் கொஞ்சம் தயங்கினேன். போயும் போயும் முதல் சம்பாஷணையைப் பூனை உண்ணியிலிருந்தா தொடங்குவது?

ஒரு நாள் நட்ட நடு ராத்திரி ஒன்றுக்குப் போகவென எழுந்திருக்க வேண்டியதானது. உறக்கம் கலைந்ததால் கொஞ்சம் வெளியே வந்து இரவின் மரகத வெளிச்சத்தை அனுபவித்தபடி சற்று நின்றேன்.

தற்செயலாக எதிர்வீட்டு மொட்டைமாடியைப் பார்த்தால், அங்கே மாலதி! எப்போதும் போல் அப்போதும் அவள் மடியில் அந்தப் பூனை. என் யூகம் சரியானால், அவள் அப்போது அந்த ஜந்துவுடன் பேசிக்கொண்டிருந்தாள்.

மிகத் தீவிரமாக.

என் வியப்பு அதுவல்ல; பூனையும் தன் மொழியில் கிசுகிசுப்பாக பதில் சொல்லிக்கொண்டிருந்தது தான்.

இது என் பிரமை, அல்லது தூக்கக் கலக்கத்தின் காரணமாயிருக்கும் என்று நினைத்தேன். ஒரு வேளை அவள் சித்தம் பிறழ்ந்தவளாக இருப்பாளோ? ஐயோ பாவம் வயசுப் பெண். நாளைக்கே கல்யாணமாகி புருஷன் என்றொருவன் வந்தால் , இதைக்கண்டு என்ன சொல்வான்? ஜீவ காருண்யம் உத்தமமானது தான். ஆனால் இது வேறுவிதமாகவல்லவா இருக்கிறது?

அவள் தன் பூனைக்கு வெங்காய சாம்பார் சாதமும் தக்காளி ஜூஸும் பாப்கார்னும் (ரகசியமாக) பான்பராகும் தருவதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். அப்போதே அவளிடம் இல்லாவிட்டாலும் அவளது பெற்றோரிடம் சொல்லலாம் என்று நினைத்திருக்கிறேன். எதுவோ என்னை அப்போதெல்லாம் தடுத்தது.

ஆனால் இந்த அர்த்தராத்திரி கூத்தைப் பார்த்தபின் என்னால் என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

விடியட்டும் என்று காத்திருந்தேன். பல் கூடத் துலக்காமல் நேரே அவள் வீட்டுப் படியேறி, கதவைத் தட்டிவிட்டு நின்றேன்.

சில விநாடிகளில் கதவு திறந்தது. அவர் எதிர்ப்பட்டார். படபடவென்று விஷயத்தைக் கொட்டிவிட்டு, கவனித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு, பதிலுக்குக் கூடக் காத்திராமல் வீட்டுக்கு வந்து கதவைச் சாத்திக்கொண்டேன்.

அடுத்த சில நாட்களில் அவள் மீண்டும் என் பார்வையில் தென்பட்டபோதெல்லாம் பூனை இல்லாமல் தான் இருந்தாள். ஆனால் முகம் மட்டும் வாடியிருந்தது போலிருந்தது. நான் ஏதும் செய்வதற்கில்லை என்று நினைத்துக்கொண்டேன்.

விரைவில் அவள் சகஜநிலைமைக்குத் திரும்பியதையும் கவனித்தேன். பூனையை மறந்துவிட்டாள் போலிருக்கிறது .

எனக்கு அரிக்க ஆரம்பித்தது.

நன்றி: புத்தகப் புழு

புதன், மே 19, 2004

இந்திய புத்தகங்கள் வாங்கும் இடங்கள்

புத்தகம் வாங்குவதற்காக சில இணையத்தளங்கள்.

1. இந்தியா க்ளப்

அழகாக வகைபடுத்தியுள்ளது ரசிக்கத்தக்கது. என்ன வாங்க வேண்டும் என்று குறிக்கோளோடு வருவது ஒரு ஜாதி; பொழுதுபோகாமல் உள்ளே வந்தவர்களுக்கும் வழி காட்டுகிறது இந்தத் தளம்.

2. ஃபர்ஸ்ட் & செகண்ட்:

கஸ்டமர் கேள்விகளுக்கு சுடச்சுட பதில், விளக்கம் என என்னை மிகவும் கவர்ந்த தளம். வாரம் ஒரு புத்தகம் அல்லது மாதம் ஒரு புத்தகம் என்று புக் கிளப் நெறிபடுத்துவதும் இங்கு உபயோகமானது. எல்லா உறுப்பினரும் குறிப்பிட்ட நூலை படித்து முடித்து, இரண்டு வரி பேசி, (நேரில் சந்திக்க முடியாவிட்டால் இணையத்தில் தட்டி) கலந்துரையாடுவதும் இனிமை.

3. காந்தளகம்:

நண்பர் ஒருவர் உபயோகித்துள்ளார் என்பது தவிர வேறு எதுவும் பெரியதாக அறியேன். அனைத்து புத்தகங்களுக்கும் ஒரு catalaog மாதிரி இருப்பதால் மிகவும் பயனுள்ளது. ஆனால், shipping காசு அதிகம் என்பது என் தாழ்மையான கருத்து.

அதை விட அதி முக்கியமாக, தவணை அட்டையை பயன்படுத்தி வாங்க முடியாது. இங்கு உள்ளவர்களுக்கு (இந்திய) ரூபாயில் செலவு கணக்கைக் காண்பிப்பதை விட (அமெரிக்க) டாலரில் எவ்வளவு ஆகும் என்று சொன்னால் கம்மி போல் தோன்றும் :)

4. ரீடிஃப்

டாலரில் காண்பிக்கிறார்கள். ரீடிஃப் ஒரு பெரிய நிறுவனம் போன்ற எண்ணத்தை விதைத்திருக்கிறார்கள். ஆங்கிலப் புத்தகங்கள் வாங்குவதற்கு உபயோகமான தளம்.


5. சிலிகான் இந்தியா:

தற்சமயம் எனக்கு மிகவும் பிடித்த தளம். தினசரி மடலில் குட்டி முன்னுரையுடன் முகப்புப் படத்தையும் கொடுத்து நாய்க்கு ரொட்டித் துண்டு போல் உள்ளிழுப்பார்கள். அமேசான் அளவு மதிப்பீடுகளும், விமர்சனங்களும் கொடுக்காவிட்டாலும் பெஸ்ட் செல்லர்ஸ் வைத்திருப்பது, கவர்ச்சிகரமான விளம்பரங்கள், கொஞ்சம் குறிப்புகள் என்று புத்தகங்களை வாங்கத் தூண்டும்படி அமைத்திருக்கிறார்கள்.

வலைப்பதிவுகளின் தலை பத்து தலைவலி பட்டியல்

Jeremy Zawodny's blog:
1. மறுமொழி தருவதற்கு வசதி செய்து தராமல் விட்டு விடுவது.

2. சொந்தமாக எதுவும் எழுதாமல், ஏற்கனவே படித்த பதிவுகளின் சுட்டிகளைத் தந்தே காலத்தை ஓட்டுவது.

3. வலைப்பதிவுகளில் வலைப்பதிவதின் அருமை பெருமைகளை குறித்து மட்டுமே எழுதுவது.

4. ஆங்கிலப் பதிவுகளுக்கே பெரும்பாலும் பொறுத்தமென்றாலும், எழுத்துருவை தக்கினியூண்டு சைஸில் வைத்துக் கொள்வது; இயங்கு எழுத்துரு பயன்படுத்தாவிட்டால், எவ்வாறு தமிழைக் காண்பது என்பதற்கு உதவி பக்கங்களின் சுட்டி தராமல் இருப்பது.

5. 'என்னைப் பற்றி' என்று எந்த குறிப்பும் இல்லாமல் மொட்டையாய் வைத்திருப்பது.

6. (Blogroll குறித்து சொல்லியிருக்கிறார்; அதில் எனக்கு உடன்பாடில்லை; ஆதலால் பில் [#15] சொல்வதை வழிமொழிகிறேன்:) மற்றவர்கள் எப்படி வலைப்பதிய வேண்டும் என்று சதா அறிவுறுத்துவது.

7. என்னால் இன்று வலைப்பதியவே முடியவில்லை; நான் ரொம்ப பிஸியாக்கும் என்று வழிசலாக தினசரி வலைப்பதிவது.

8. மேய்ந்த வலைப்பதிவுகளின் தாக்கமாகவே தன்னுடைய பதிவுகளை வைத்திருப்பது. பின்னூட்டங்கள் மட்டுமே வலைப்பதிவாகாது.

9. ஆர்எஸ்எஸ் செய்தியோடை (RSS) கொடுக்காமல் இருப்பது.

10. பின் தொடரும் வசதியை (TrackBack) சரியாக உபயோகம் செய்யாதது.

எரிக் இவற்றை தலை பத்து கருத்துகணிப்பின் மூலம் வரிசைப் படுத்தியுள்ளார். தமிழ் வலைப்பதிவுகளுக்கென்று தனியாக ஒரு தலை பத்து கொடுக்கலாம். கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல் எறியலாமா :)

செவ்வாய், மே 18, 2004

தமிழகத்தை முன்னேற்றுவாரா முதல்வர்?

ஜெயலலிதா இரண்டாம் முறையாக முதல்வர் பொறுப்பேற்றபோது தமிழகத்தை முதன்மையான மாநிலமாக்குவதுதான் தனது லட்சியம் என்றார். அதற்காக இதுவரை என்ன செய்துள்ளார் என்று பார்ப்போம்.

1. சென்னையை தொழில் முதலீட்டைக் கவரும் நகரமாக மாற்ற ரூ. 1,800 கோடியில் ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறார்.
2. கிராமப்புற கட்டமைப்புக்கு ரூ. 2,000 கோடி.
3. மூன்று இடங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலம்.
4. இரண்டு இடஙளில் ஆயத்த ஆடை தயாரிப்பு மையம்.
5. இரண்டு இடஙளில் தோட்டக்கலை மையம்.
6. மாநிலத்தில் 62% மக்களின் விவசாயம் சார்ந்த நிலையை மாற்றுவதற்காக, தொழிற்துறையில் புதிய திட்டங்கள்.

சமீபத்திய இந்தியா டுடே- தமிழில் அவரது ஆட்சியின் பற்றி எரியும் தலை பத்து பிரசினைகளாக சொல்லப்படுபவை:

1. விவசாயம்:

 • காவிரி டெல்டா பகுதியில் நெல்கொள்முதலை நிறுத்தியது.
 • இலவச மின்சாரத்தை ரத்து செய்வது.

2. தண்ணீர்:
 • கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ஆரம்பம்.
 • ஏரி/குளங்களை சீர் செய்தல்.

3. தொழில் துறை
 • நேரடியாக சந்திக்கமுடியாமை.
 • BPO போன்ற திட்டங்களுக்கு சலுகை தரவில்லை.

4. மெகா திட்டங்கள்:
 • தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது.
 • சேது சமுத்திரம் மீண்டும் ஆய்வு செய்யப்படுகிறது.
 • கூடன்குளம் முடியவில்லை.
 • நாங்குநேரி (திமுக அரசால் அடிக்கல் நாட்டப்பட்டது) தொழில் பூங்கா கிடப்பில் இருக்கிறது.
 • பம்பா-அச்சன்கோவில் நதிநீர் இணைப்பில் முன்னேற்றம் இல்லை.
 • சென்னை பறக்கும் ரயில் திட்டம் இன்னும் முடியவில்லை.

5. உள் கட்டமைப்பு:
 • 51.18% கிராமங்களே (சாலைகளால்) நகரங்களுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன.
 • போக்குவரத்துக் கழகங்கள் தனியார்மயமாக்குவது

6. ஆரம்பக் கல்வி
 • 75% குழந்தைகள் 18 வயதிற்குள் பள்ளிப்படிப்பை நிறுத்திவிடுகிறார்கள்.
 • தனியார் பள்ளிகளின் தரம் மற்றும் பணம் பிடுங்கும் போக்கு.

7. சுற்றுச் சூழல்:
 • மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் தமிழகத்தில்தான் அதிகம்.
 • பாலாற்றுப் படுகை மொத்தமாகப் பாழாகி விட்டது.
 • 25,000 ஹெக்டேர் காடுகள் ஆண்டுதோறும் அழிக்கப்படுகிறது.

8. சுற்றுலா:
 • தமிழகம் என்றால் ஜெ-கலைஞர் சண்டைதான் நினைவுக்கு வருவதாக சொல்கிறார்கள்

9. நெசவாளர் பிரச்னை:
 • கஞ்சித்தொட்டியில் ஒரு வேளைக் கஞ்சிக்காக நிற்கிறார்கள்.
 • இலவச வேட்டி-சேலை திட்டம் நிறுத்தப்பட்டது.
 • பஞ்சு விலையேற்றம்.
 • அதீத மின் கட்டணம்.
 • நவீன முறைகளுக்கு மாறவில்லை.
 • கோவையில் 15/20 நூற்பாலைகள் மூடப்பட்டுள்ளன.

10. பெண்கள் பிரச்னை:
 • பெண்களுக்கு எதிரான குற்றங்களில் இந்தியாவிலேயே முண்ணனி வகிக்கிறது.
 • தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; தொடர்பு கொள்ள உரிய வசதிகள் இல்லை.
 • பெண் போலீசார் சென்சிட்டிவாக இல்லை.


இந்தப் பட்டியலையும் மற்ற மாநிலங்களோடு ஒப்பு நோக்க வேண்டும். வளரும் நாடுகளின் குறியீடுகள் (economic indicators) கூட ஒப்பிட்டு அலசலாம்.

ஆதாரம்: இந்தியா டுடே, ரீடிஃப்.காம், கல்கி.

அலைகள்

16 வில்லன்கள் நடிக்கும் புதிய திரைப்படம் தனுஷ்:
தனுஷ் நடிக்காவிட்டாலும் அவருடைய பெயரை வைத்து ஒரு திரைப்படம் தயாராகிறது. இளையராஜா இசையமைக்கும் இப்படத்தில் புதுமுகம் குருமணி கதாநாயகனாக நான்கு வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தில் மொத்தம் 16 வில்லன்கள் நடிக்க அடிதடி சண்டைப்படமாக வெளிவருகிறது. இப்படத்தில் முக்கிய பாத்திரம் ஒன்றில் சரவணன் நடிக்கிறார் பிதாமகனுக்குப் பிறகு அவர் இப்படத்தில் பேசப்படுவார்.தமிழ் நாடு 2050 - குமுதம்: 2050ம் ஆண்டு டிசம்பர் மாத செய்திகளின் தொகுப்பு இது.
 • சத்தியமங்கலம் மாநில முதல்வர் வீரப்பர்
 • வலுக்கிறது காவிரிப் பிரச்னை... களத்தில் சிலம்பரசன்!
 • தொடையப்பா ரிலீஸ் ஆனது!
 • 'அண்ணாமலை 12' ராதிகாவுக்குப் பாராட்டு!

முழுப் பட்டியல்

ஏ.ஆர்.ரஹ்மான் நேர்காணல் (1999) - வேணுஜி

திரை அம்பலம்:
என் இசை வாழ்வில் நான் மூன்று விஷயங்களை உள்ளடக்கி இருக்கிறேன். தொழுகை, இசையமைத்தல், மேலும் இசையைக் கற்றல்-இந்த மூன்றும் எனக்கு இன்றியமையாதவை. மூன்று விஷயத்திற்கும் எனக்கு அவகாசம் வேண்டும்.

என் பாடல் பதிவில் வழக்கமான இசைக்கருவிகளின் திறன் மேம்பட்டு ஒலிப்பதால் அவை இசைக்கருவிகளின் வாயிலாக இசைக்கப்படாதது போல் தோன்றுகிறது

நான் இங்கு பதிவு முடிந்ததும் அதை மிக மட்டமான 'ஒலிபெருக்கியில்' ஒலிக்க விட்டுதான் சோதனை செய்கிறேன். நான்கு வகையான ஒலிபெருக்கியில் கேட்டு திருப்தி ஏற்பட்டவுடன்தான் பாடலைப் பதிவு செய்கிறேன்.

மிகத் திறமையான இயக்கத்தில் பாடல்கள் இல்லாமலேயே படத்தை வெற்றியடைய வைக்க முடியும். 'குருதிப்புனல்' தமிழ்ப்படமும், நான் பின்னணி இசையமைத்த ஃபயர்' ஆங்கிலப்படமும் இதற்கு உதாரணங்கள்.

நவீன தொழில்நுட்பத்தில் அமையும் இசையை, 'இசையின் வளர்ச்சி' என்று சொல்லலாமா?

'இசை என்றைக்குமே ஒன்றுதான். அதைக் கொண்டு சேர்க்கும் 'வாகனங்கள்' தான் மாறிக்கொண்டிருக்கின்றன. கால்நடை, கட்டை வண்டி, கார் என்று மாறி வந்தாலும் பயணம் ஒன்றுதான் இல்லையா? இசையும் இப்படித்தான்.'

'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்ற உங்கள் நம்பிக்கை, தன்னம்பிக்கையைக் குறைப்பதாக இல்லையா?

'தன்னம்பிக்கையே இறைவன் கொடுத்ததுதான்'.

திங்கள், மே 17, 2004

சாலையோரச் சிந்தனைகள் - என். சொக்கன்

தினம் ஒரு கவிதை:

என்னுடைய 'செல்ல' வாகனம், ஹைதராபாதில் வேலைக்குச் சேர்ந்த புதிதில் வாங்கியது. ஆகவே, ஆந்திரப் பிரதேசப் பதிவெண்தான் அதில் உண்டு. பின்னர், பெங்களூருக்கு மாறியபோதும், இங்கேயே நிரந்தரமாய் இருந்துவிடுகிற யோசனை இல்லை என்பதால், கர்நாடக நம்பருக்கு வண்டியை மாற்றாமல், உரிய வரியைக் கட்டிவிட்டு, ஆந்திர நம்பரையே வைத்துக்கொண்டேன்.

இதனால், ஒரு புதிய பிரச்சனை முளைத்தது - சாலையோரங்களில் என் வாகனத்தை மடக்குகிற போக்குவரத்துக் காவலர்கள், என் வண்டியில் 'AP' முத்திரையைப் பார்த்ததும், சுபாவமாய் தெலுங்கில் பேசத்துவங்கிவிடுகிறார்கள். (அதெப்படியோ, பெங்களூரிலுள்ள பெரும்பான்மை போலீஸ்காரர்களும், ஆட்டோ க்காரர்களும் கன்னடத்தோடு, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய பாஷைகளையும் சரளமாய்ப் பேசுகிறார்கள் !)

ஹைதராபாதிலிருந்த காலத்தில், ஏராளமான நாகார்ஜுனா, வெங்கடேஷின் படங்களைப் பார்த்துப் பழகியதால், எனக்குத் தெலுங்கு ஓரளவு புரியும். என்றாலும், அவர்களுக்குத் தெலுங்கிலேயே பதில் சொல்வதற்கான இலக்கண அறிவோ, அசட்டு தைரியமோ லேது ! ஆகவே, நான் அவர்களைப் பார்த்துத் திருதிருவென்று விழிக்க, அதை அவர்கள் தப்பாய்ப் புரிந்துகொண்டு, 'ஊதிக் காட்டு', என்று எனது சுவாச ஆல்கஹால் அளவைச் சோதிப்பார்கள்.

அடுத்து, எனது ஓட்டுநர் உரிமத்தைக் கேட்பார்கள் - நானும் ஒரு முழ(ழு) நீள ஜெராக்ஸ் பிரதியொன்றை எடுத்து நீட்டுவேன் ! (இப்போதெல்லாம், பர்ஸில் வைத்துக்கொள்கிறாற்போல், ஒற்றை அட்டையில் டிரைவிங் லைசன்ஸ் தந்துவிடுகிறார்கள். ஆனால், நான் விண்ணப்பித்தபோது, அந்த நடைமுறை இல்லை - பாக்கெட் சைஸ் கந்த சஷ்டி கவசம்போல, ஒரு குட்டிப் புத்தகமே உண்டு, எப்போதும் அதன் ஜெராக்ஸ் பிரதியைக் கையிலெடுத்துக்கொண்டு திரியவேண்டும் !)

அந்தக் காவலர்கள், என்னுடைய உரிமத்தை கவனமாய்ச் சோதித்தபின், அவர்களின் முகத்தில் ஒரு நிச்சயமான திகைப்பைப் பார்க்கலாம், 'வண்டி, ஆந்திரப் பிரதேசத்தில் பதிவாகியிருக்கிறது, வண்டிக்கு உரியவன், தமிழ் நாட்டில் டிரைவிங் லைசன்ஸ் எடுத்திருக்கிறான், ஆனால், வண்டி இப்போது கர்நாடகாவில் ஓடிக்கொண்டிருக்கிறது ! இப்போது, இவனிடம் நாம் என்ன மொழியில் பேசுவது ?'

இந்தக் குழப்பத்துடன் அவர்கள் என்னை மேலும், கீழும் பார்த்துவிட்டு, 'சரி, கிளம்பு !', என்று அனுமதித்துவிடுகிறார்கள் !

ஆனால், எல்லாக் காவலர்களும் இப்படியில்லை, சென்ற வருடம், கோரமங்களாவில் ஒரு மீசைக்காரபோலீஸ், தவறான இடத்தில் வண்டியை நிறுத்தியதற்காக என்னைப் பிடித்துவிட்டார்.

'நூறு ரூபா ஃபைன் கட்டு, இல்லைன்னா, எனக்கு அம்பது ரூபா கொடு !', என்று நேரடியாகவே பேரம் பேசினார் அவர்.

'ஃபைன் கட்டிடறேன் ஸார்', என்றேன் நான்.

அவர் மெல்லமாய்த் தலையாட்டினபடி, பெரிய சட்டைப் பாக்கெட்டிலிருந்து ரசீது புத்தகத்தை எடுத்துப் பிரித்தார், இன்னொரு பாக்கெட்டில் பேனாவைத் தேடிப் பிதுக்கினார்.

நானும் அவசரமாய் என்னுடைய பர்ஸை வெளியிலெடுத்துப் பிரித்தேன், ஆனால், சோதனையாய், அதனுள் ஒரே ஒரு இருபது ரூபாய் நோட்டுதான் இருந்தது ! ஆனால், நல்லவேளை - எங்கள் வங்கியின் தானியங்கிப் பணம் வழங்கு இயந்திரம் (ATM-க்கு இதுதானா தமிழ் ?), அடுத்த தெருவிலேயே இருந்தது - அங்கிருந்து பணம் எடுத்துக்கொண்டு, உடனே திரும்புவதாக அவரிடம் சொன்னேன்.

அவர் என்னை நம்பாமல் பார்த்து, 'வருவீங்களா ?', என்றார்.

'கண்டிப்பா வருவேன் ஸார்', என்று அவருக்கு உறுதி சொல்லிவிட்டு, வண்டியைக் கிளப்பினேன்.

பின்னர், ஏ.டி.எம்.மில் பணம் எடுத்துக்கொண்டு, நேராக அவரிடமே திரும்பினேன், நூறு ரூபாயைக் கொடுத்து ரசீது கேட்டேன்.

அவர் என்னுடைய பணத்தைத் திருப்பிக்கொடுத்துவிட்டார், 'நீங்க திரும்பி வரமாட்டீங்க-ன்னு நினைச்சேன் !', என்றார்.

'அதனால என்ன ஸார் ? இப்போதான் வந்துட்டேனே !'

'பரவாயில்லை ஸார், உங்க நேர்மைக்கு என்னாலான மரியாதை ... நீங்க ஃபைன் கட்டவேண்டாம், போய்ட்டுவாங்க !', என்று சிரித்தார் அவர்.

அப்போது, அவரது பெருந்தன்மையை ஏற்றுக்கொண்டு, நான் உடனடியாய்க் கிளம்பிவிட்டேன். என்றாலும், இன்றுவரை அந்தச் சம்பவம் என்னை உறுத்திக்கொண்டுதானிருக்கிறது - இவற்றில் எது பெரிய குற்றம்? - தவறான இடத்தில் நான் வண்டியை நிறுத்தியதா ? அந்தக் காவலர் ஐம்பது ரூபாய் லஞ்சம் கேட்டதா? அல்லது, நான் நியாயமாய்ச் செலுத்தவேண்டிய நூறு ரூபாய் அபராதத்தை, அவராகத் தள்ளுபடி செய்ததா ? அல்லது, இதுதான் சாக்கு என்று, நான் அந்தச் சலுகையைப் பயன்படுத்திக்கொண்டதா ?


வார சுரபி - இணைய இதழ்

அண்ணா கண்ணன், பொறுப்பாசிரியர்:

தரமான, ஆரோக்கியமான படைப்புகளை இந்த இதழில் தொடர்ந்து அதிக அளவில் வெளியிட இருக்கிறோம். புதிய சிந்தனைகளைத் தூண்டுவதும் இலக்கிய வளர்ச்சியுமே எமது நோக்கங்கள. இது, வணிக ரீதியிலான முயற்சியன்று எனவே, இதில் பங்களிக்கும் படைப்பாளர்களுக்குத் தனியே சன்மானம் வழங்க இயலாது. ஆயினும், அவர்கள் இந்தியாவுக்குள் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அமுதசுரபி அச்சிதழை அனுப்புவோம்.

ஓராண்டு முழுவதும் (2004 மே முதல் 2005 ஏப்ரல் வரை) அதிகப் படைப்புகளை அனுப்பிய மூவருக்குச் சிறப்புப் பரிசு வழங்குவோம். எனவே, எழுத்தாளர்கள் அதிக அளவு பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

மின்னஞ்சல் முகவரி வைத்துள்ள எழுத்தாளர்கள், அதனைத் தெரிவித்தால் அவர்கள் படைப்பின் கீழ் அதனை வெளியிடுவோம். இது, வாசகர்கள், கருத்துத் தெரிவிக்க உதவும்.

அஞ்சல் மூலம் படைப்புகளை அனுப்புவோர்,
‘வார சுரபி’, அமுதசுரபி,
ஏ--- 7, இரண்டாம் அவென்யு, அண்ணாநகர் கிழக்கு,
சென்னை - 600 102. என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

சேது - திரைக்கதை

தமிழ்.காம்:

அம்பி: ஆமா... மாமா... வேதத்தை மட்டும் படிச்சு நான் என்னத்த கண்டேன்? அவளாவது உலகத்தைப் புரிஞ்சுக்கட்டுமேன்னுதான்...
----
மிட் ஷாட் - அண்ணன் : ஓ... கெளரவம்! அப்புறம்... இப்படியே பண்ணிக்கிட்டு இருப்பீங்க... நான் கிடந்து கோர்ட்ல கேவலப்பட வேண்டியது... அப்படித்தானே? அதை விடு, சேதுன்னு பார்த்துப் பார்த்து எவ்வளவு அழகா பேர் வச்சோம். இப்ப ஏதோ ஒண்ணு சொல்லிக் கூப்பிட்டுக்கிட்டு இருக்கானுங்களே...

குளோஸ் ஷாட் - குழந்தை : சிய்யான்... சிய்யான்...

மிட் ஷாட் - அண்ணன் : ஆ... சிய்யான். ஏன்டா, அதைக் கேட்கும் போதே நாக்கைப் பிடுங்கிக்கிட்டு சாகலாம் போல இருக்கு. காலேஜ்க்கு போனமா படிச்சோம்ன்னு இல்லாமே, சண்டியர்த்தனம் பண்ணிக்கிட்டு திரியறாரு. கேட்டா கெளரவப் பிரச்சனையாம். இப்போ படிக்கிற மாதிரியா இருக்கான்? அவன் தாடியும் டிரெஸ்சும்...
----
சேதுவின் நண்பன் கூப்பிட நிற்கிறாள் அபிதா.
அபிதா : ம்...?
நண்பன் : உங்க மயில் இறகு குட்டி போட்டா நேக்கும் ஒண்ணு தர்றேளா...? நானும் வளர்த்துக்கறேன்...
பெண்ணைப் போன்ற பாவனையுடன் கேட்கிறான் நண்பன்.
அபிதா : ம்...
----
குளோஸ் ஷாட் - குருக்கள் : அது உன் பெரிய பாட்டியோட பேர் இல்லையோ...?
குளோஸ் ஷாட் - அபிதா : சரி வச்சேளோ இல்லையோ... அதுக்கு என்ன அர்த்தமுன்னு இப்போ சொல்லுங்கோ.
குளோஸ் ஷாட் - குருக்கள் : அதுக்கு இப்போ என்ன அவசரம்...?
குளோஸ் ஷாட் - அபிதா : காலேஜ்ல எல்லாரும் கிண்டல் பண்றாப்பா...என்னன்னு சொல்லுங்கோ...
----
அண்ணி பக்கம் திரும்பிய குருக்கள் : யாரு பேருக்கு...?
அண்ணி : சிய்யான்...
குளோஸ் ஷாட் - சேதுவின் அண்ணன் அதிர்ச்சியாக மனைவியைப் பார்க்கிறார்.
குளோஸ் ஷாட் - அண்ணி பயந்தபடி...
அண்ணி : அய்யோ...! சேது, மக நட்சத்திரம், சிம்ம ராசி.
குருக்கள் : ஓம்...
----


ஞாயிறு, மே 16, 2004

கே.ஜே. யேசுதாஸ் - சந்திப்பு: கேடிஸ்ரீ

ஆறாம்திணை - இன்றைய பக்கம்: அன்று கண்ணதாசனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் அரசியல் ரீதியாக சில கருத்துவேறுபாடுகள் இருந்த காலத்தில், படத்தில் ஒரு பாடலுக்கு பலர் பாடல் வரி எழுதிக்கொடுத்தும் திருப்தியாகவில்லை.

கடைசியில் அவரே ஏன் நாம் கண்ணதாசனை அழைக்கக்கூடாது என்று கூறினார். எல்லோரும் தயங்க அதெல்லாம் இருக்கட்டும்... அவர் அவர்தான்... அவரிடம் சென்று கதைக்கான சூழலை சொல்லி பாடல் எழுதி வாருங்கள் என்றார். கண்ணதாசனும் அதற்குரிய பாடல் வரியை எழுதி அனுப்பினார். 'ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ' என்ற பாடல்.. அங்கு பகை ஓடியது.. கலைதான் நின்றது... பகைவர்களையும் நண்பர்களாக்கி கொள்ளும் குணம் உடையவர்.

எனக்கு இசையமைப்பாளராக ஆக வேண்டும் என்கிற ஆசை உண்டு. நான் ஐந்தாறு மலையாள படங்களுக்கு இசையமைத்துள்ளேன். தமிழில் Jesus chirst என்கிற படத்திற்கு இசையமத்திருக்கிறேன். ஆனால் என்னுடைய இசையமைப்பாளர் ஆசையை பாதியில் நிறுத்திவிட்டேன். ஏனென்றால் என்னுடைய நினைவாற்றல்தான் அதற்கு காரணம்.

ஒருமுறை நான் ஒரு பாடலை கேட்டேன் என்றால் அந்தப் பாடல் என்னுள் ஆழமாக பதிந்துவிடும். இதனால் நான் இசையமைக்கும் போது பல தடவை என் இசையமைப்பில் அந்தப் பாடல்களின் தாக்கல்/சாயல் பிரதிபலிக்கும்.. மறுபடியும் மறுபடியும் ஏற்கெனவே வந்த பாடல்களின் சாயல் என்னுடைய இசையில் வருவதை நான் விரும்பவில்லை.

இக்காரணத்தினால் எனக்கு இசையமைப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது.. நிறைய நேரம் எனக்கு தேவைப்பட்டது.. ஆனால் இன்றைய காலத்தில் உடனுக்குடன் எல்லாம் கிடைக்கவேண்டும் என்கிற நிலையில் என்னால் தொடர்ந்து படங்களுக்கு இசையமைக்க முடியவில்லை.

என்னுள் வாய்ஸ் பேங்க் பற்றிய எண்ணம் உருவானதற்கு காரணம் சித்ரா என்றே கூறுவேன். ஏனென்றால் சித்ரா ஆரம்ப காலத்தில் எங்களின் திருவனந்தபுரத்தில் உள்ள தரங்கிணி ஸ்டூடியோவில் எல்லோருக்கும் டிராக் பாடிக்கொண்டிருந்தார், அதனால் அவருக்கு நல்ல பயிற்சி இருந்தது. சுஜாதா போன்றவர்கள் இந்த வகையில் வந்தவர்கள் தான்.

நான் முதலில் வாய்ஸ் பேங்க் பற்றி விளம்பரம் செய்யும் போது கர்நாடக சங்கீத வித்வான்களைத்தான் மனதில் நினைத்து விளம்பரம் கொடுத்தேன். நான் நினைத்தது உன்னிகிருஷ்ணன், உன்னிமேனன் போன்ற வித்வான்களை. ஆனால் மேடை கச்சேரி செய்பவர்கள் எல்லோரும் தவறாக புரிந்துககொண்டு அதிகளவில் வந்துவிட்டார்கள். 40 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துவிட்டது. விண்ணப்பங்கள் இலவசம் என்பதால் அதிகளவில் வந்தது.

கர்நம் என்றால் காது... அடக்கம் என்றால் காதில் அடக்க வேண்டியது என்று அர்த்தம்.. குரு முன்னால் உட்கார்ந்து அவரின் முகபாவத்திலிருந்து கற்றுக்கொள்வது போல் இணையத்தின் மூலம் கற்றுக்கொள்ள முடியாது என்பது என்னுடைய கருத்து.

சனி, மே 15, 2004

வலைப்பூ குறுக்கெழுத்து (விடைகள்)

வலைப்பூ குறுக்கெழுத்து (விடைகள்)


இடமிருந்து வலம்
1. அன்பே சிவமாய் அமர்ந்திருக்கிறார் - (5) : வாமதேவன்
3. புத்தம் சரணம் கச்சாமி - (2,3) : என் முரசு
5. இக்கு இல்லாத தமிழ் Think Tank - (3,2) : தமிழ் டுபு(க்கு)
8. உறுமி - (3) : மேளம்
9. ஆர்க்டிக்காரரின் குறிப்பு - (5,3) : நாடோடியின் பதிவு
10. இவ்வார வலைப்பூ ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல; மீனாக்ஸின் ·பேவரிட் இலக்கிய வடிவங்கள், தலைகீழாக - (4,6) : கவிதைப் பதிப்புகள்
13. இளைஞன் - (4) : குறும்பூ
14. குழம்பிப் போன தமிழ் சைவம் - (3) : ள்பிளை(பிள்ளை)

மேலிருந்து - கீழ்
1. தை வருதா? பந்தல் கட்டி, கச்சேரி; இல்லாவிட்டால் வாய்ப்பந்தல்கள்! (4,4) : வார்த்தை மேடைகள்
2. முதல் போன கார்த்திக் - (1, 4) : (வந்)தே மாதரம்
3. ஜெமினி பிக்சர்ஸ் படக்காரரின் பதிவு தன்னிலைபடுத்தினால் - (2,9) : என் புத்துயிர்ப்புகள்
4. கண்ணன் போட்ட கட்டுமானப் படம் - (3) : ரதம்
6. நாமக்கல் வலைப்பூ ஆசிரியர் - (2,3) : ராஜா பதவி
7. இருக்கிறதா? இல்லையா? - (4) : கடவுள்
9. சபாநாயகம் சொல்லும் கருப்புக்கனி (3,3) : நாகப் பழம்
11. மாமே பிச்சு உதறிட்டீங்க - (4) : கலக்கு
12. எட்டிப் பார்க்கலாம் - (3) : கதவு


ஒருவர் மட்டுமே போட்டியில் கலந்து கொண்டு அனைத்துப் பரிசுகளையும் வெல்கிறார் - பவித்ரா.இந்தியா டுடே: மே-12-2004

அலமாரி
உண்மை சார்ந்த உரையாடல்கள் - தொகுப்பாசிரியர்: கண்ணன்
வெளியீடு: காலச்சுவடு - பக்கங்கள்: 288 - ரூ.140/-

- நிகழ்கால சிந்தனைப் போக்குகளின் பல்வேறு மடங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நேர்காணல்கள்.
உங்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு
தேர்தலில் தாவூத் போட்டியிட அனுமதிக்கலாமா?

1. கிரிமினல் குற்றச்சாட்டு உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை வேண்டும்.
2. கொடூர குற்றங்கள் செய்து தண்டனை பெற்றவர்கள் மட்டுமே தடை செய்யப்பட வேண்டும்.
3. கிரிமினல் பிண்ணனி உள்ளவர்களை அரசியல் கட்சி வேட்பாளராக நியமனம் செய்யக்கூடாது.
4. மேல்முறையீடு நிலுவையில் உள்ளவர்கள் கூட தடை செய்யப்பட வேண்டும்.
5. எந்த சிவில் அல்லது கிரிமினல் குற்றச்சாட்டு இருந்தாலும் வேட்பாளர்கள் தடை செய்யப்பட வேண்டும்.

தாவூத் மீது தேசத்திற்கு எதிரான சதியிலிருந்து தாக்குதல்கள், கொலைகள் என்று பல குற்றச்சாட்டுகள் இருகின்றன. ஆனால், அவர் மீது குற்றப்பத்திரிகைதான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றவாளி என்று நிரூபணமாகவில்லை.


பிரச்சாரம்: தலைவர்களின் பயணம்
வாஜ்பேயி ஜனவரி 13லிருந்து 65,999 கிமீ பயணம் செய்திருக்கிறார்.
சோனியா டிசம்பர் 27லிருந்து 58,982 கிமீ பயணம் செய்திருக்கிறார்.


இந்த வார சலசலப்பு
நான் தமிழை நேசித்ததால் கலைஞரை நேசித்தேனே தவிர கலைஞரை நேசித்ததற்காக தமிழை நேசிக்கவில்லை.
- டி.ராஜேந்தர் (தினத்தந்தியில்)

புகைப் பிடிக்கும் பழக்கம் புராண காலத்திலிருந்தே இருக்கிறது. ஏதோ பாபா படத்தில் மட்டுமே இப்பழக்கம் உள்ளதாக ராமதாஸ் சொல்வது விசித்திரமாக உள்ளது.
- இல.கணேசன் (தினமலரில்)நன்றி: இந்தியா டுடே மே-12-2004

ஆன்மிகப் புத்தகங்கள் - ஆர். பொன்னம்மாள் (10)

பாண்டுரங்க மகிமை என்னும் பக்த விஜயம்: கிரி ட்ரேடிங் மற்றும் காமகோடி நிறுவனர் திரு. சொர்ணகிரி அவர்கள் பக்த விஜயம் எழுதும்படி கேட்டுக் கொண்டது 1980-இல். 96-இல் இருந்து காமகோடியில் 'பரமாச்சார்யாள் பாதையிலே', நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி, எல்லை தெய்வங்கள், விவேக சிந்தாமணி என்று பல பகுதிகளில் 'ஆழ்வார்களின் வரலாற்றையும்' மாதப் பகுதியாக எழுதி வந்தார். வேமன்னா, கோபால்தாசர் போன்ற பக்தர்கள் வரலாறு சேர்ந்து பெருகிக் கொண்டே போய், நாராயண பட்டத்ரி, பில்வமங்கள், எழுத்தச்சன் என்று மலையாள அடியார்களும் இணைய ஜூன் 2003-இல் புத்தகமாக வெளிவந்தது. ஆயிரம் பக்கங்களைத் தாண்டும் இந்த நேர்த்தியான வெளியீட்டை எவர் படிக்கத் தொஅங்கினாலும் கீழே வைப்பது சிரமம். பள்ளி இடைவேளையில் வந்து எழுதிய மட்டும் இங்க் மை காய்வதற்கு முன் சுடச்சுடப் படித்துவிட்டு ஓடிய அந்த இனிய பொழுதுகளையும் மறக்க முடியவில்லை; படித்த பெரியோர்களின் தியாக உணர்வும் பொதுமனித அக்கறையும் வராலாறுகளும் மறக்கவில்லை.

தேவி திருவிளையாடல்: இதுவும் 1980-இல் எழுதி முடிக்கப்பட்டது. ஆனால், 1997-இல்தான் வானதியால் வெளியிடப்பட்டது. பராசக்தியின் லீலைகள்; மதுரை, காசி, கன்யாகுமரி வரலாறுகளும், மகிஷாசுரமர்த்தனி, சும்பநிசும்ப, பண்டாசுர வதம் எல்லாம் சொல்லப்பட்டிருக்கும் ஆன்மீக நூல்.

தசாவதாரம்: கங்கை புத்தக நிலைய வெளியீடாக டிசம்பர் 2001-இல் வெளிவந்த நூல். 184 பக்கங்களில் அனாவசியமான வர்ணனைகள் எதுவுமில்லாமல் பத்து அவதாரங்களையும் சிறுவர்களுக்கு ஏற்ற கதை வடிவில் சொல்லப்பட்டிருக்கின்றன.

(சிறு குறிப்பு வளரும்)

வெள்ளி, மே 14, 2004

வலைபாயுதே...

1. மரத்தடியில் லலிதா (ராம்) மட்டும் எழுதிக் கொண்டிருந்த கர்னாடக இசை விமர்சன உலகுக்கு ஒரு புதிய வலைப்பதிவாளர் வந்திருக்கிறார். மேண்டலின் சீனிவாஸ் குறித்த பதிவோடு ஆரம்பித்திருக்கிறார் ஜெய்கணேஷ். அவரை மாதிரியே இவரும் ரொம்ப பயமுறுத்தாமல் எளிய தமிழில் இனிய கர்னாடக கச்சேரிகளை அறிமுகம் செய்வார் போலத் தெரிகிறது. யூனிகோடுக்கு மாறிடுங்களேன் சார்!?

2. நக்கல் நாகராஜன் 'மே மாத சிறப்பு கேள்வி'யாக மே பதினெட்டின் தாத்பரியத்தை விசாரித்திருந்தார். வழக்கம் போல் 'மணநாள்', பத்தாவது பிட் அடித்த நாள், முதல் முதலாக மலபார் பீடி குடித்த நாள், சதாம் வீழ்ந்த நாள் என்று ஏதாவது சொல்வார் என்று நினைத்தால், வேறொன்றை சொல்கிறார். 'சரியா/தவறா' என்று சொல்லுங்க! நான் விடைக்காக வாலியை துணைக்கழைத்துக் கொண்டேன்.

3. திருப்பதி படித்ததில் பிடித்தவற்றைப் பகிர்ந்து கொள்கிறார்:

எல்லோரும் நல்லவர்கள் தான்,
சந்தர்பம் கிடைக்காமல் இருக்கும் வரை

முதல்முறையாக ஒரு இத்தாலியப் பெண் பிரதம மந்திரியாகிறார்

ஆளுங்கட்சிக்கு எதிரான அலை என்கிறார்கள். சோனியா வெளிநாட்டவர் என்பதெல்லாம் செல்லாது என்கிறார்கள். 'ஜனகனமன... ஜனங்களை நினை' என்கிறார்கள். பணக்காரர்கள் பணம் மட்டுமே கொடுப்பார்கள்; நடுத்தர மக்கள் வாய்கிழிய விமர்சிக்க மட்டுமே செய்வார்கள்; ஏழைகள் மட்டுமே வாக்களித்து, ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருபவர்கள் என்கிறார்கள். மக்கள் நலனுக்காக பாடுபடவேண்டும், மன்மோகன் சிங் பிரதமராக வேண்டும், என்று எல்லாம் நிறைய ஆசைப் பட்டியல் தொடர்கிறது.

சோனியா காந்தி பிரதம மந்திரியாகப் போகிறார். வாஜ்பேயைப் போல அவரும் கூட்டணி ஆட்சியமைக்கிறார். அவரைப் போலவே மந்திரிசபையை பாலன்ஸ் செய்வது, யாதவ்களை திருப்திபடுத்துவது, அயோத்தியா பிரசினையில் மௌனம் சாதிப்பது, இஃப்தார் விருந்துக்கு செல்வது, பாகிஸ்தான் பார்டரை தொட்டு வருவது, என்று இன்றியமையாத கடமைகளை செவ்வனே செய்வார்.

அவர்தான் பிரதம மந்திரி என்பது இன்னும் முடிவாகவில்லை. இருந்தாலும், காங்கிரஸ் கட்சியில் அவரை எதிர்க்கும் திராணி ஒருவருக்கும் இல்லை. இந்தியாவில் அரசியல் கட்சிகளும் குடும்பங்களும் ஒரே விதமான மனப்பான்மை கொண்டவை. குடும்பங்களில், பெரியவர்களை மறுத்துப் பேசினால், பெற்றோர்களுக்கு மரியாதை தருவதில்லை; தாந்தோன்றி என்று விமர்சிக்கப் படுவார். கட்சித்தலைவரை எதிர்த்துப் பேசினால், துரோகி என்று முத்திரை குத்தப்படுவார். கட்சியை விட்டே நீக்கப்படுவார். சோனியா இல்லாவிட்டால், அந்த இடத்தில் ராகுல் அமர்வார் என்பதாலும் பெரிய வித்தியாசம் எதுவுமில்லை.

இத்தாலிய குடிமகள் உரிமையைத் துறந்ததனால், பிஜேபி ஆரம்பித்த இரட்டைப் பிரஜா உரிமை போன்றவற்றை என்ன செய்யப் போகிறார் என்று சொல்லவேண்டும். பொருளாதார தாராளமயமாக்கலை எப்படி கட்டுப்படுத்தப் போகிறார், எங்கு என்பதையும் இப்போதே தெளிவாக திட்டம் போட்டு, கம்யூனிஸ்ட்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பாடதிட்டங்களை, ஐஐடி/ஐஐஎம் கட்டண விவகாரம், கல்வித்துறையில் ஆக்கபூர்வமான மாற்றங்கள் என்ன என்பதையும் வெளியிட வேண்டும். எம்.எம். ஜோஷி செய்தது போல் திரைமறைவில் அரங்கேற்றாமல், விவாதத்துக்குப் பிறகு அவசியம் புதிய கொள்கைகளைக் கொண்டுவர வேண்டும். லல்லூ போன்றவர்கள் எதிர்த்தாலும், பெண்களுக்கு மக்களவையில் ரிசர்வேஷன் தரவேண்டும். பாகிஸ்தானுடனான நல்லுறவுக் கொள்கையில் மாற்றங்கள் இருந்தால் சொல்ல வேண்டும்.

இவை போன்ற நாட்டின் பாதையை திருத்தக்கூடிய அயோத்தியா முதல் விவசாய நலத்திட்டங்கள் வரை ஒரு ப்ளூ-பிரிண்ட் போட்டு ஒப்புதல் வாங்கிக் கொண்டு கூட்டணி ஆட்சியமைக்க வேண்டும்!

ஒரு வெளிநாட்டினர் நாட்டின் மிகப் பொறுப்பான பதவியில் அமர்வதை ஒரு என்.ஆர்.ஐ.யாகப் பொறுக்க முடியவில்லை. ஆனால், என்னுடைய குழந்தையே அமெரிக்கவாசியாக இருந்துவிட்டு, பின்பு என்றாவது ஒரு நாள் இந்தியராக மாறி, தேர்தலில் போட்டியிட்டால் ஆதரிக்க மாட்டேனா? தலைமையில் மட்டும் மாற்றம் வந்தாலும், அதிகாரிகளும் ஆணையர்களும் ஆங்காங்கே மாற்றப்பட்டாலும், அவர்களின் செயல்பாடுகளில் பெரிய மாறுதல் எதுவும் வந்துவிடப் போவதில்லைதானே?

சன் டிவி: ஏ.ஆர்.ரெஹ்மான் நேர்காணல்

திண்ணையில் சன் டிவியில் நடந்த கலைஞர் கலந்துரையாடல் விரிவாக அலசப்பட்டிருக்கிறது. ஒரு ஆதரவு கருத்து, ஒரு மாற்று கருத்து, ஒரு கிண்டல் கருத்து என்று எல்லாவற்றையும் தொட்டிருக்கிறார்கள். எனக்கு தமிழ்ப் புத்தாண்டு அன்று கொடுக்கப்பட்ட ஏ.ஆர்.ரெஹ்மானின் செவ்வியை குறித்து எழுத ஆவலாக இருக்கிறது. ஒரு நல்ல நேர்முகத்தை எப்படி எடுக்க வேண்டும் என்பதை அர்ச்சனாவின் மூலமாக அறிந்து கொண்டேன். ஒரு நேர்மையான பேட்டியை அளிப்பது எவ்வாறு என்பதை இசைப்புயல் சொன்னார்.

பேட்டி எடுப்பவரை குறித்த அறிவு, அவரைப் பேச விடுவதற்காக எடுத்துக் கொண்ட மௌனங்கள், opne-ended கேள்விகள், பேட்டியாளர் ரொம்ப எடுத்துக் கொடுக்காமல் எதிராளியை ஆடவிட்டு, கண்களில் ஆர்வம் காட்டுவது என்று அழகாகத் தொகுத்தார். என்னுடைய வாழ்த்துக்கள்.

சாதாரணமாக ரெஹ்மான் கொஞ்சம் மூடி டைப்; ரொம்ப கலகலப்பாக பேச மாட்டார் என்று எல்லாம் குற்றம் சாட்டுவார்கள். அன்று மனம் திறந்துதான் உரையாடினார். இதற்கு முன் அவரை நேரில் சந்தித்து அளவளாவியதையும் சொல்ல வேண்டும். லண்டனில் விமானத்தின் உள்ளே செல்வதற்காகக் காத்திருக்கும்போதுதான் அவரை கவனித்தேன். ரொம்ப குள்ளமாக, தலைமுடி கூந்தலாக விரிய, கையில் ஒரு சிறிய பெட்டியுடன், கண்ணாடி போட்ட ஆஜானுபாகுவான ஒருவர் ஏ.ஆர். ரெஹ்மான் போல் இருப்பதை பார்த்தேன். குழந்தைகளோடு விமானம் ஏறுபவர்களுக்குக் கொடுக்கப்படும் முன்னுரிமையால், என்னை சீக்கிரமே ஏறிக் கொள்ள அழைக்க அவரை அவர்தானா என்று உறுதிபடுத்திக் கொள்ளும் வாய்ப்பை இழந்து சென்னை செல்லும் என் விமானத்திற்குள் சென்று விட்டேன்.

சென்னையில் இறங்கி பெட்டிகளின் வருகைக்காகக் காத்திருக்கும்போது மீண்டும் அதே முகம். கையெழுத்து வாங்குவதற்காக ஒரு பேப்பர், பேனா (விற்றால் நல்ல காசு வருங்க!) எடுத்துக் கொண்டு "நீங்க பார்ப்பதற்கு ரெஹ்மான் மாதிரியே இருக்கீங்க" என்று அழகான பெண்ணிடம் வழியும் ஆண் போல் அறிமுகம் செய்வித்துக் கொண்டேன். ரொம்ப எளிமையாக என்னைப் பற்றி விசாரித்து, நான் எதற்காக வந்திருக்கிறேன், என்ன வேலை பார்க்கிறேன் என்று நான் சாதாரணமாக ஒரு இந்தியரைப் பார்த்தவுடன் கேட்கும் எல்லாக் கேள்விகளையும் கேட்டு ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்தார்.

"சார் உங்களை ரொம்பத் தொல்லைபடுத்த விரும்பவில்லை; அப்புறம் பார்ப்போமா"?

"அது எல்லாம் ஒண்ணும் இல்லீங்க. எனக்கு என்ன கஷ்டம்? லக்கேஜ் எடுக்க மானேஜர் இருக்கார். எனக்கு ஒரு வேலையும் இல்ல. உங்களுக்காவது அந்த டென்ஷன்" என்று இயல்பான சிரிப்போடு தான் லண்டனில் வந்த வேலையை குறித்தும் பகிர்ந்து கொண்டார். நான் பிய்த்துக் கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது என்று கூட செல்லமாய் அலுத்துக் கொள்ளலாம்.

சன் டிவி நேர்காணலில் அவர் ஹஜ் பயணம் சென்று வந்ததை உணர்ச்சிகரமாகப் பகிர்ந்து கொண்டார். மலேசியாவில் இருக்கும்போது திடீரென்று ஒரு குரல் மெக்காவுக்கு வருமாறு அழைக்கிறது. முதல் முறை அங்கு செல்பவர்கள் முடிதுறக்க வேண்டும். எனவேதான் புதிய குள்ள முடி உருவம். பலர், இந்த மாதிரி ஆழ்குரல் தன்னை ஐயப்பன் அழைத்ததாகவும், பாபா பேசியதாவும், வைஷ்ணோ தேவி கூப்பிடுவதாகவும் சொல்கிறார்கள். என்றாவது, என்னை யாராவது அழைக்க வேண்டும்.

இந்திய இசையை உலகெங்கும் எடுத்துச் செல்லும் தூதுவனாக அசைப்படுகிறார். ஒரு கணிப்பொறியாளன் அடுத்த பதவிக்கு செல்வதை எப்போதுமே நினைத்திருப்பான். குறைந்தபட்சம் அடுத்த டெக்னாலஜி என்ன வருகிறது என்று கழுகுப் பார்வை பார்த்துக் கொண்டேயிருப்பான். அதேபோல் அவரும் தமிழில் சாதித்தாகி விட்டது. ஹங்கேரி, லண்டன் என்று சிம்பொனி கட்டியாயிற்று. பாம்பே ட்ரீம்ஸ் போன்ற தியேட்டரில் கால் பதித்தாயிற்று. அடுத்து என்ன செய்யலாம், எவ்வாறு அடுத்த படிக்கு செல்லலாம் என்று விருப்பப்படுகிறார். அனேகமாக வெளிநாட்டிலேயேத் தங்கிவிடும் நாள் வெகுதூரத்தில் இல்லை. அங்கேயே செட்டில் ஆனாலும், இந்திய இசையை மறக்க மாட்டார் என்பது உறுதி.

வெளிநாடு சென்று தனியே இருப்பதால் மனம் தனிமையால் வெதும்புவதாகவும் ஒத்துக் கொண்டார். ஒரு சிம்பொனி கொடுக்க மூன்று நான்கு மாதம் ஆகின்றது. அமெரிக்கர்கள், லண்டன் ஆர்க்கெஸ்ட்ரா, டட்ச், ஹங்கேரி என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் நோட்ஸ் கொடுக்க வேண்டும். அவர்கள் மேலை நாட்டு (western classical) இசையைப் பயில்பவர்கள். அவர்களுக்கு 'தகிடத்தகிடத்தகிட' என்று கொடுத்தால் மிரண்டு விடுவார்கள். கஷ்டப்பட்டு அவர்களின் 'தகி டகி தகி டகி' போன்ற இடைவெளி விடும் பழக்கத்தைத் தடுத்து நம்ம ஊர் இசைப்படி கொண்டு வருவார். பிறகு, மீண்டும் இன்னொரு பாடலுக்கு அவர்கள் பாணியில் வாசிக்க சொல்வதற்குள் தாவு தீர்ந்து விடும் என்பதை அலட்டல் இல்லாமல், விவரித்தார்.

நியு படத்தில் சூர்யாவுடன் வேலை செய்ததை விவரித்தார். சூர்யா ஒரு hyperactive பேர்வழி. பாடல் தளத்திற்கு தன்னுடைய சொந்த இசையோடவே வந்து விடுகிறார். எப்பொழுதும் செய்வத விட இன்னும் நன்றாக இசை வருவதற்காக மிகவும் ஆர்வத்துடன் செயல்படுகிறார். தன்னுடைய படத்தின் ஒவ்வொரு நுணுக்கத்திலும் அதீத அக்கறை காட்டுகிறார் என சம்பவங்களைக் கொண்டு அடுக்கினார்.

தனக்கு மிகவும் பிடித்த பாடலாக 'வந்தே மாதரம்' சொன்னார். எல்லா படைப்பாளியையும் போல் இசையமைத்த பிறகு நகததைக் கடித்துக் கொண்டு ரசிகர்களின் முடிவுக்காக காத்திருந்திருக்கிறார். இசையமைக்கும் போது அவர் மிகவும் ரசித்ததாகவும், ஆனால், பின்பு ஒலிநாடாவில் கேட்கும்போது பயம் வந்திருக்கிறது. மோசமான இணைய க்னெக்ஷனில் வைரஸ் புகுந்து லொள்ளு செய்வது போல், ராம் கோபால் வர்மாவும் 'என்னடா, ரொம்ப கத்தி விட்டாய்' என்று வேல் பாய்ச்சியிருக்கிறார். இப்போது அந்தப் பாடல் எவ்வளவு புகழ் பெற்றது என்பது நாம் அறிந்ததே. ஆதலினால், அனைவரும் இப்பொழுதே தங்கள் உதறல்களை ஒதுக்கிவிட்டு உளறல்களை வெளியிடுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

நிகழ்ச்சி முடிவில் ஆய்த எழுத்தின் 'ஜனகனமன'வை வாசித்து காட்டினார். கண்ணை மூடிக் கொண்டு அனுபவித்துப் பாடினார். என்னவாக இருந்தாலும் ஆயிரம் ஆர்க்கெஸ்ட்ராவுடன், வாய்ஸ் வித்தைகள் செய்து வரும் டிஜிட்டல் சவுண்ட் ட்ராக் போல் வரவில்லை. எனினும், இப்படி சாதாரணமாகப் பாடுவதை, எப்படி அவ்வளவு வித்தியாசமான பாடலாக மாற்றியிருக்கிறார் என்று ஆச்சரியப்படுவதை நிறுத்தவும் முடியவில்லை.

தமிழில் தற்போது இவருக்குப் படமே இல்லையாம். ஜக்குபாய் மட்டும்தான் இப்போது என்று விஷயமறியா வட்டாரங்கள் சொல்கிறது. ரஜினி படத்துக்கு ரெஹ்மான் தேவையில்லை. ஏன் சார், 'அன்னியனு'க்கு இசையமைக்கவில்லை என்று அர்ச்சனா கேட்கவில்லை; ரெஹ்மானும் பதிலளிக்கவில்லை.

நன்றி: தமிழோவியம்.காம்

புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு