ஆய்த எழுத்து
'ஆய்த எழுத்து' வலைத்தளத்தை வாராவாரம் மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். ஹிந்தி 'யுவா'வுக்கும் தமிழுக்குமாக ஒரே போஸ்டராக இருக்கட்டுமே என்று மொத்தமாக ஆங்கிலத்திலேயே கொடுப்பது சோம்பேறித்தனத்தை காட்டுகிறதா அல்லது தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஆங்கிலத்தில் கொடுத்தால் மட்டுமே புரியும் என்று நினைத்தார்களா என்று தெரியாது.
அஜய் தேவ்கன், விவேக் ஓபராய், அபிஷேக் பச்சான் என்று மூன்று நாயகர்கள். சேரி, மாடி, மிடில் கிளாஸ் என ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒருவர். 'செல்வநாயகமாக' பாரதிராஜா (ஹிந்தியில் ஓம் பூரி?). மூன்று ஹீரோக்களுக்கு மட்டுமே லைம்லைட். ஏன் ஹீரோயின்களுக்கும் ட்ரெயிலர்களிலோ, டீஸர்களிலோ முக்கியத்துவம் கொடுக்கவில்லை? சுகாசினி அடக்கி வாசிக்கிறார் போல. ரொம்ப மூக்கை நீட்டினால் சரிகா போல் அகிவிடுமோ என்று நினைத்திருப்பார்.
தமிழில் இன்பசேகராக மாதவன் தாதாத்தனம் காட்டுகிறார்.
'எனக்குப் பணம் வேணும்
பவர் வேணும்'
பதவி வேணும்'
என்ற மிரட்டலுடன் உருட்டுகட்டைகளுடன் தொண்டர் புடைசூழ புஜம் காட்டுகிறார்.
அவருடைய ஜோடி 'சசி' என்று செல்லமாகக் கூப்பிடப்படும் ரன் ஜாஸ்மின். நடுத்தர குடும்பம். எல்.ஐ.சி வேலை செய்யும் சமத்து அப்பாவின் சுட்டிப் பெண். கல்லூரிக்கு ஒழுங்காக சென்று படிப்பில் முதல் மார்க் எடுக்கும் இன்னொரு ரேவதி. 'மௌன ராகம்' கார்த்திக் போன்ற அடியாள் மாதவனுடன் காதல். அவன் அவளுக்காக உலகைக் கொண்டு வர தயார். மணி ரத்னம் பட கதாநாயகிகள் போல் அவளுக்கு அவன் சாதாரண மனிதனாக வேண்டும்.
'மைக்கேல் வசந்த்' சூர்யாவுக்கு ஜோடி 'கீதாஞ்சலி' இஷா தியால். ஐந்து வயது வித்தியாசம். ஆனால், அஞ்சாவது வயதில் இருந்தே நட்பு; வயதுக்கு வந்த பின் காதலாக உருமாற்றம் 'கீது' (சூர்யா இப்படித்தான் கூப்பிடுவார் என்று நம்பலாம்) பொலிடிகல் சயின்ஸ் படித்துக் கொண்டு ப்ரெஞ்ச் கற்றுக் கொடுக்கிறாள். அவள் அவனுக்காக பெசண்ட் நகர் பீச், பனகல் பார்க், ஸ்பென்ஸர் ப்ளாசாவின் ·புட் கோர்ட் என்று காத்திருக்கிறாள். அவனோ ரத்தகளறியாய் உதைபட்டு வந்து சேருகிறான். அவளுக்கு 'மில்ஸ் அண்ட் பூன்' காதல். அவனுக்கோ திருமணம் என்னும் instituition மீது நம்பிக்கை கிடையாது (கொஞ்சம் 'அலைபாயுதே'?). ஆனால், இருவரும் ஒருவர் மீது இன்னொருவர் தூய காதலில் உள்ளார்கள்.
'இந்த அமெரிக்கன் ஸ்காலர்ஷிப் எனக்கு வேண்டாம்
நான் போக விரும்பலை
தமிழ்நாட்டிலேயே இருக்க விரும்பறேன்'
'அர்ஜுன் பாலகிருஷ்ணன்' என்னும் சுத்த ஐயர் பெயரை வைத்துக் கொண்டு அமெரிக்க கனாக்களுடன் 'பாய்ஸ்' சித்தார்த் (ஹிந்தியில் வரும் விவேக் ஓபராய் பின்னுவார் என்று தோன்றுகிறது). ஜோடியாக மீரா - த்ரிஷா.
'என் ·பிலாஸபி ரொம்ப சிம்பிள்
நாம நம்மளப் பாத்துக்கணும்
உலகம் தானா தன்னை பாத்துக்கும்'
இன்றைய இளைய் தலைமுறையை கொஞ்சம் ஸ்டீரியோடைப் செய்ய நினைத்துள்ளார். காதலிப்பார்கள்; பைக்கில் ஊர் சுற்றுவார்கள்; துணையின் பிறந்த நாளை மறக்க முடியாத பரிசுகளுடன் கொண்டாடுவார்கள்; கல்யாணம் என்று வரும்போது வேறொரு துணையை சிரித்துக் கொண்டே தேர்ந்தெடுத்து நண்பர்களாக விலகி விடுவார்கள். They have better things to worry than love.
ஏ.ஆர். ரெஹ்மானின் இசையில் பாடல்கள் நல்ல ஹிட். சுஜாதாவின் வசனம், பல வெற்றிப் படங்களின் சாயலில் கதை சுருக்கம், பொறாமைப்பட வைக்கும் நட்சத்திர அணிவகுப்பு என்று நாம்தான் அதீத ஆர்வக் கோளாறில் நிறைய எதிர்பார்த்து ஏமாற்றமடையக் கூடாது.
இது தேர்தல் காலம்
வாஜ்பேய் ஜெயிப்பது அனேகமாக உறுதிதான். அவருக்கு எதிராக நட்சத்திர வேட்பாளராக ராம் ஜெத்மலானி போட்டியிடுகிறார். ராஜீவ் காந்திக்கு எதிராக ஒரு நாளைக்கு இருபது கேள்விகள் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இப்பொழுது தாத்தா வாஜ்பேய்க்கு ஒரு கேள்வி முன் வைத்துள்ளார்.
ஊர்ந்து ஊர்ந்து கஷ்டப்பட்டு நகரும் ஒருவர் எப்படி பிரதம மந்திரியாக அல்லது எம்.பி.யாக எப்படித் திறம்பட செயல்பட முடியும்?
'வாஜ்பேய்க்கு வேண்டுமானால் நான் நண்பராக இருக்கலாம்;
அவர் எனக்குத் தோழர் அல்ல!'
- ராம் ஜெத்மலானி (சொன்னதாக 'சன் நியுஸ்')
கருணாநிதிக்கு மூக்குமேல்
கோபம் வருவது தெரிந்த விஷயம்தான். அதுவும் 'ஞாபகம் வருதே' போல் கணக்குக் கேட்டு பத்தாண்டு வனவாசம் அனுப்பிய ம.கோ.ரா.வையும் தற்போதைய கழுவுற நீரில் நழுவுற மீன் ரஜினியையும் முடிச்சு போட்டால்? வெடித்து விட்டார். கருணாநிதியை யாராலும் அசைக்க முடியாதாம். 'தளபதி' படத்தில் சூர்யாவிடம் அடிபட்டு குற்றுயிராகக் கிடக்கும் தேவாவின் நிலையை குறித்து விசாரிப்பார் அவரது மனைவி.
'சூர்யா' ரஜினி: 'தேவாவுக்கு ஒண்ணும் ஆகாதாம்'.
கீதா: 'டாக்டர் சொன்னாங்களா?
சூர்யா: 'தேவாவே சொன்னான்!'
ஆனால், நிருபர்களுக்கு செய்திகளைத் திரித்துத் தருவதுதான் வேலை. அடுத்த குடுமிப்பிடி சண்டை எப்படி ஆரம்பித்து வைப்போம் என்று ஆவலுடன் காத்திருப்பார்கள்.
சச்சின் எடுக்கமுடியாத ஆறு ரன்னை முதல் கேள்வியாகக் கேட்டு வாயில் போட்டுக் குதப்ப ஜர்தா கிடைக்குமா என்று தேடுவார்கள்.
'முதல் கேள்வியாக "ஆறு ரன் எடுக்க முடியாததில் வருத்தமா" என்று கேட்பார்கள். உண்மையாக 'ஆமாம்' என்று சொன்னால் எனக்கும் அணித் தலைவருக்கும் தகராறு என்று ரிப்போர்ட் செய்வார்கள். என்னுடைய சுய விருப்பு வெறுப்புகள் வேறு; அணியின் நன்மைகள் திட்டங்கள் வேறு'.
- சச்சின் டெண்டுல்கர்.
டெண்டுல்கர் நின்றால் ஓட்டுப் போடுவோம் என்று இளைய தலைமுறை சொல்லாத குறைதான். 'ஆய்த எழுத்தின்' அர்ஜுனாக
'எனக்கு என்ன நன்மை' என்று கேட்கிறார்கள். இந்தியாவில் எப்படி இவ்வளவு செல்லாத வோட்டுகள் என்ற சந்தேகம் எப்போதும் எனக்கு உண்டு. மிண்ணனு வாக்குப்பதிவு வந்தாலும் செல்லாத வோட்டுத்தான் போடப்போகும் இவர்களால்தான் என்று இப்போதுதான் அறிந்து கொண்டேன்.
அவர்கள் வோட்டு அளிப்பதில் இல்லை பிரச்சினை. சாதி சார்பில்லா வேட்பாளர்களாக அரசியலில் நுழைந்து மனங்கவர் முகத்துடனும் மிஸ்டர். க்ளீனாகவும் இருப்பார்களா?
- பாஸ்டன் பாலாஜி
நன்றி:
தமிழோவியம்.காம்