வியாழன், ஏப்ரல் 29, 2004

குடிநீர்த் தட்டுப்பாடு நீங்க நிரந்தர வழி - ப.மு.நடராசன்

கட்டுரையாளர்: முன்னாள் துணை இயக்குநர் (நிலவியல்), நீர் ஆய்வு நிறுவனம்.

இந்திய நாட்டில் ராஜஸ்தான் மாநிலத்திற்கு அடுத்தபடியாக நீர்வளத்தில் மிகவும் பின்தங்கிய மாநிலம் தமிழகம் ஆகும். தமிழகத்தின் தண்ணீர்த் தட்டுப்பாட்டை போக்கும் வழிகள்:

மழைநீர் சேகரிப்பு: தமிழகத்தின் 70 ஆண்டுகளின் சராசரி மழையளவு 925 மில்லி மீட்டர் ஆகும். இந்த மழை நீரை வீட்டுக் கூரைகள் அல்லது செயற்கை முறை நிலநீர்ச்செறிவு ஆகிய வழிகளில் சேகரிக்க முடியும். தமிழகத்தில் பெய்யும் எல்லா மழைநீரையும் சேகரித்தால் 4,57,900 கோடி கனஅடி தண்ணீர் பெற்று, தமிழக மக்கள் அனைவருக்கும் நபருக்கு நாள் ஒன்றிற்கு 5,730 லிட்டர் தண்ணீர் வழங்க முடியும். தற்பொழுது இங்கு சராசரியாக வழங்கப்படும் 70 லிட்டரைவிட இது 82 மடங்கு கூடுதலாகும்.

தமிழகத்தில் பெய்யும் மழை நீரைச் சேகரிப்பதால் பெரும் பயன் விளைவது உண்மை. ஆனால் தமிழகத்தின் வீட்டுக்கூரையின் பரப்பளவு இம்மாநிலத்தின் பரப்பளவில் சுமார் 5 விழுக்காடு. எனவே 1,850 கோடி கனஅடி நீரைத்தான் வீட்டுக்கூரைகளின் மூலம் சேகரிக்க முடியும். இத்தண்ணீரைக் கொண்டு தமிழக மக்களின் அன்றாட ஆண்டுத் தேவைக்குத் தேவைப்படும் 5,604 கோடி கனஅடி நீரில் சுமார் 33 விழுக்காடு தேவையை மட்டுமே பூர்த்தி செய்ய முடியும்.

செயற்கை நிலநீர்ச் செறிவு: சுமார் 30 வகைப்பட்ட செயற்கை நிலநீர்ச் செறிவுமுறைகளால், தமிழகத்தின் நிலநீர்ச் செறிவை மேற்கொள்வதன் மூலம் கூடுதலாக 37,500 கோடி கனஅடி நிலநீரைப் பெருக்க முடியும்.

* தமிழகத்தின் மொத்த ஆண்டு நீர்வளம் 1,67,400 கோடி கனஅடி.

* கி.பி. 2025 ஆம் ஆண்டில் தமிழகத்தின் நீர்த்தேவை 2,42,300 கோடி கனஅடி.

* நீர் இருப்பிற்கும் பற்றாக்கு றைக்கும் உள்ள இடைவெளி 74,900 கோடி கனஅடி - அதாவது 47.74 விழுக்காடு பற்றாக்குறை.

* கி.பி. 2050 ஆம் ஆண்டில் தமிழகத்தின் நீர்த் தேவைக்கும் இருப்பிற்கும் உள்ள இடைவெளி 1,49,900 கோடி கனஅடி - அதாவது 89.55 விழுக்காடு பற்றாக்குறை.

ஆனால் கூரை மழைநீர் சேகரிப்பு, செயற்கை நிலநீர்ச் செறிவு ஆகிய வழிகளில் 39,350 கோடி கனஅடி நீரைத்தான் சேகரிக்க முடியும். எனவே இக்கூடுதல் நீர்வளத்தைக் கொண்டு கி.பி. 2025 ஆம் ஆண்டு மற்றும் கி.பி. 2050 ஆம் ஆண்டின் தமிழக நீர்த்தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது.

இந்திய நதிகளில் ஒவ்வொரு நல்ல பருவமழைக் காலத்திலும் சுமார் 52,54,800 கோடி கனஅடி நீர் கடலில் வீணாகின்றது. கிழக்கு நோக்கிப் பாயும் மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா ஆகிய தென்னக நதிகளில் நல்ல மழைப் பருவத்தில் சுமார் 2,51,600 கோடி கனஅடிநீர் கடலில் வீணாகின்றது.

* தமிழகத்தின் கி.பி. 2025 ஆம் ஆண்டின் நீர்த்தேவையில் சுமார் 39 மடங்கும்,
* கி.பி. 2050 ஆம் ஆண்டின் நீர்த் தேவையில் சுமார் 25 மடங்கும் இந்திய நதிகளில் வீணாகின்றது.

இதைப்போல மேலே கூறியுள்ள மூன்று தென்னக நதிகளில் தமிழகத்தின் கி.பி. 2050 ஆம் ஆண்டின் நீர்த்தேவையில் சுமார் இரு மடங்கு தண்ணீர் கடலில் வீணாகின்றது. எனவே நதிகள் இணைப்பின் வாயிலாகத் தமிழகத்தின் தண்ணீர்த் தட்டுப்பாட்டை முற்றிலுமாகப் போக்க முடியும்.

கடல்நீரைத் தூய்மைப்படுத்திப் பயன்படுத்துவது ஒன்றே தமிழகத்தின் தண்ணீர்த் தட்டுப்பாட்டை நிரந்தரமாகத் தீர்க்கக்கூடிய மாற்று ஏற்பாடு ஆகும். பல மத்திய கிழக்கு நாடுகள், அவற்றின் தண்ணீர்த் தேவைகளை கடல்நீரைத் தூய்மைப்படுத்தும் பல்வேறு வழிகளில் நிறைவேற்றி வருகின்றன. இவற்றில், குறைவெப்பப் பல்வழி காய்ச்சி வடிக்கும் முறையில் (Low Temperature Multi Effect Distillation Process - MED) ஒரு லிட்டர் கடல்நீரைத் தூய்மைப்படுத்த ஐந்து பைசா செலவாகின்றது. தமிழகத்தின் தண்ணீர்த் தட்டுப்பாட்டைப் போக்க இவ்வழியே மிகவும் சிறந்ததாகும்.

கடல்நீரைத் தூய்மைப்படுத்தி தமிழகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாகத் தேவைப்படும் 3,000 கோடி கனஅடி தண்ணீரைப் பெற ரூ. 4,248 கோடி செலவு செய்யவேண்டும். ஒவ்வொரு நாளும் 8 கோடி கனஅடி நீரைப் பெற ரூ. 12 கோடி கூடுதலாகச் செலவு செய்து கடல்நீரைத் தூய்மைப்படுத்த வேண்டும்.


சென்னை நகரின் குடிதண்ணீர்த் தட்டுப்பாட்டைப் போக்க தெலுங்கு கங்கைத் திட்டத்திற்குச் சுமார் 1000 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. அதனால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. காவிரியில் தண்ணீர் இருந்தால்தான் வீராணம் திட்டம் வெற்றி பெறும். சென்னையில் தற்பொழுதுள்ள வறட்சியைப் போக்க 700 கோடி ரூபாய் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனாலும் நிரந்தரத் தீர்வு காண முடியாது. ஆனால் மேலே கூறியுள்ள மொத்தச் செலவையும் கடல்நீரைத் தூய்மைப்படுத்தப் பயன்படுத்தினால், 1,734 கோடி கனஅடி நீர்வளத்தைப் பெருக்கி, நபருக்கு நாள் ஒன்றிற்கு 245 லிட்டர் வீதம் சென்னை மக்களுக்குத் தொடர்ந்து தண்ணீர் வழங்க முடியும்.

நன்றி: தினமணி - 27-04-2004

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு