வியாழன், ஏப்ரல் 29, 2004

ஈ-தமிழில் இப்போது நடக்கும் கருத்து வாக்கெடுப்பு

எது இல்லாமல் இருக்கவே முடியாது?
1. செல்ஃபோன்
2. புத்தகம்
3. இணையம்
4. இசை
5. டிவி


நம்மால் பல விஷயங்கள் இல்லாமல் இருக்க முடியாது. மாலை நேரத்து இஞ்சி டீ, காலையில் 'கௌசல்யா சுப்ரஜா', குளித்தவுடன் ஊதுபத்தி ஏற்றுவது, அப்படியே மூணு நிமிஷம் கண் மூடியோ, தலையில் குட்டிக் கொண்டோ 'இந்த நாள் இனிய நாளாக' கடவுளிடம் வேண்டுகோள், பிபிசி செய்திகளின் மின் மடல், நான்கு மணிக்குக் கொறிக்க முந்திரி பக்கோடா, இத்தாலிய ஓட்டல்களில் வாயில் கரைவதற்காக செய்யப்படும் பதார்த்தங்கள், பர்ஸில் வைக்க மயிலை ஆஞ்சநேயர், சில்லறையாக சில பணத்தாள் என்று ஆளாளுக்கு மாறுபடும்.

எனக்குத் தோன்றிய ஐந்தை வைத்து ஒரு கருத்துகணிப்பு தொடங்கினேன். இப்பொழுது விழுந்திருப்பது என்னவோ ஏழு வோட்டுதான். அதில் நால்வர் 'புத்தகம்' என்று தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அவர்களை பனி கொட்டும் பாஸ்டனில் பின்னிரவு இரண்டு மணிக்கு ஓடாத காரில், புத்தகத்தை மட்டும் கொடுத்து காத்திருக்க செய்ய வேண்டும். செல்பேசி இருந்தால் உற்றாரை கூப்பிட்டு நிலையை விளக்கலாம். இணையம் இருந்தால் மின்மடல் அனுப்பியோ, யாஹுவில் யாராவது மாயாவியாக இருக்கிறார்களோ என்று தேடலாம். டிவி இருந்தால் எப்போது பனி நிற்கும் என்பதையாவது அறிந்து கொள்ளலாம்.

கேள்வியின் குறிக்கோள் அது அல்ல என்றே இப்போது தோன்றுகிறது. கொஞ்ச நேரம் நமக்கே நமக்காக கிடைத்தால், வேறு எதுவும் செய்ய முடியாத சமயத்தில் செல்பேசியை எடுத்து யாரையாவது கூப்பிட்டு கதைப்போமா, புத்தகத்தை எடுத்து வாசிப்போமா, இணையத்தில் புகுந்து புரட்டுவோமா, ஜாகிர் உசேன் தபலாவையோ, 'ஜாகீர் உசேன் தபலா இவள்தானா'வையோ ஒலிப்போமா, டிவி முன் டாகுமெண்டரியையோ திரைப்படத்தையோ ரசிப்ப்போமா என்பதே கேள்வியின் குறிக்கோள் என்று தோன்றுகிறது.

இல்லை வெறுமனே உட்கார்ந்து விட்டம் பார்த்துக் கொண்டிருப்போமா?

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு