சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, பிப்ரவரி 29, 2008

ஜெயந்தி சங்கரின் 'பின் சீட்' சிறுகதைத் தொகுப்பிற்கு நூல் விமரிசனம்

கங்கா பிரவாகமும் தீபாவளி விருந்தும்

இணையத்தில் கிடைக்கப்பெற்ற அந்த வார கல்கியின் இரண்டொரு பக்கங்களை அச்சுப் பிரதி எடுத்து வந்திருந்தேன். தவறுதலாக தரையில் விழுந்திருந்தது. இரண்டாம் வகுப்பு படிக்கும் மகள் ஓடி வந்தாள். இலையுதிர் மரங்களில் இருந்து விழும் வண்ணம் மாறிய இதழ்களை கவனியாமல் அவசரமாக ஓடும் நதி போல் அவற்றை மிதித்துக் கொண்டே அன்றைய தினத்தில் நடந்தவற்றை சொல்லி முடிக்கும் வேகத்துடன் விவரித்துக் கொண்டிருந்தாள். அவளைக் கையமர்த்தி, 'எதன் மேல் நிற்கிறாய் தெரியுமா? சரஸ்வதி!' தொட்டு ஒத்திக் கொள்!' என்று கோபமும் அதிகாரமும் கலந்த அணைக்கட்டாய் அவளை நிறுத்தினேன்.

'பின் சீட்' தொகுப்பில் வரும் கதைகளும் இப்படித்தான். வாழ்க்கையில் புறக்கணிக்க எத்தனிக்கும் விழுமியங்களையும் மறக்க விரும்பும் கோட்பாடுகளையும் விட்டுவிட்ட கலாச்சாரக் குழப்பங்களையும் முரணாக வினாக்கள் ஆக்கும் தொகுப்பு.

மொத்தம் பதினாறு சிறுகதைகள்.

சிங்கை சஞ்சிகைகள் கல்கி மற்றும் இணைய இதழ்களில் வெளியானவற்றின் தொகுப்பாக மதி நிலையத் தொகுப்பாக வெளியாகியுள்ளது. ஒவ்வொன்றிலும் பலவிதமான நாயகர்கள் தென்படுகிறார்கள். அம்மா கோந்துகள். மக்கள் செல்வம் தங்களுடன் பசையாக இருக்க விரும்பும் பெற்றோர்கள்; பற்றற்ற மாந்தர்கள்; ஆசையை விட நினைப்பவர்கள்; விட்டதாக நினைப்பவர்கள். எல்லோரையும் உலாவ விட்டு அடர்த்தியான கதைகளில் மூழ்க வைக்கிறார் ஜெயந்தி சங்கர்.

நகைச்சுவை அரிதாகவே எட்டிப் பார்க்கிறது. வெரைட்டியான சிங்கப்பூரில் உரையாடல்களின் செழுமை மூலம் எட்டு திசைகளாக விரியும் சம்பவங்கள். நதி பெருக்கெடுத்து ஓடுகிறது. கரும்பு ரசம் போன்ற சுவைநீர், கடலில் திடீரென்று கலந்து உப்புத் தண்ணீர் ஆகிறது.

'அம்மா பேசினாள்' கிரியும் மகாமக நதியாக சாதிக்க நினைத்து ஓடிப் போய் களைக்கிறான். குடிக்கத் தகுதியற்ற நீரானாமோ என்று சோம்பித் துவளாமல், கயலும் கெண்டையும் எதிர்நீச்சலடிக்கும் சூழலை அமைத்துத் தர ஆசைப்படுகிறான்.

புத்தகத்தின் தலைப்புக் கதையான 'பின் சீட்' தமிழ் சினிமா போல் சூடான திரைக்கதையாக விரிகிறது. சிறு வயது மதிப்பீடு போராட்டங்களினால் ஏற்படும் நெருக்குதல்கள்; பெண்களைத் தவறாகப் புரிந்து கொள்ளுதல்; நாயகி தீபா, 'தம்பிக்கு எந்த ஊரு' ரஜினியாக மனமாற்றம் அடைதல்; நம்பர் ஒண்ணாக இருப்பதை விட உச்சங்களைத் தொடுபவர்களை உருவாக்கும் மனப்பக்குவத்தை எட்டுதல் போன்ற மேலாணமையும் மசாலாவும் கலந்த கதை.

  • மேலை நாட்டுக் கலாச்சாரமான concierge services-ஐ அறிமுகப்படுத்தும் 'சேவை';

  • மக்களை எடை போட்டு நிர்தாட்சண்யமாக்கும் நிறவெறியையும், செல்நெறி தேர்ந்ந்தெடுத்தல் குழப்பங்களையும் வெளிக்கொணரும் 'கண்ணாலே பேசிப் பேசி';

  • காலத்திற்கேற்ப காலணிக்குள் நுழைந்து பொருத்திக் கொண்ட ஏபிசிடிக்களையும், பழைய செருப்புக்குள் தைத்து விடப்பார்ர்ப்பவர்களின் நடுக்கங்களையும் சமாதானப்படுத்தும் 'பார்வை'.

  • பல்வேறு களங்களில் பயணிக்கும் சிற்றருவிகள். ஓடத்தில் பேரருவியாக என்னை மிகவும் ஆர்ப்பரிக்க வைத்தவையாக 'ஜேட் வளையல்',எந்தையும் தாயும், அக்கா மற்றும் திரவியம்
  • ஆகியவற்றை குறிப்பிடலாம்.


நிறம் பார்த்தோ வயசைப் பார்த்தோ அன்பு உருவாகாது. 'மிருகா' என்றழைக்கும் கிழவியின் பாசம்; ரங்கோலியாக வாழ்க்கையை ரசிக்கும் கிழவியின் பவள வளையல் குறியீடு; உற்றவருக்கு உடல்நலம் சரியில்லை என்னும்போது உள்ளார்ந்து எழும் மனக்கிலேசம்; கோடை கால நூறு பாகை வெப்பம் எல்லோரையும் சுட்டெரிக்கும்.

சத்தியமான சூரியனின் கதிர் போல் அனைவருக்குள்ளும் தகிக்க வைக்கும் மனிதத்தை வெளிக்கொணரும் கவிதையான கதை 'ஜேட் வளையல்'.

பெண் எழுத்தாளரின் மெல்லிய குரல் வெளிப்படும் ஆக்கமாக 'அக்கா'. வீடற்ற முதியவர்களின் நிலை குறித்து உணர்த்தும் 'திரவியம்'. வீடிருந்தும் வாசலிருந்தும் அனாதரவாகி அன்னியப்படும் மாடி வீடுகளைத் தொடும் 'எந்தையும் தாயும்'.

ஒவ்வொன்றும் முத்திரைக் கதைகள். அக்கா மற்றும் திரவியம் சிறப்பாக எடுத்தாளப்பட்டிருந்தாலும், பளிச்சென்ற முடிவுகளும், அவை உணர்த்தும் தீர்ப்புகளும் சற்றே நெருடலாகவே உள்ளன. உரத்துப் பேசாமல் உணர்ச்சிகளை மட்டும் பேச விட்டிருந்தால் மேலும் மெருகேறியிருக்கும்.

இதே பாணியில் 'அப்பாவின் மனைவி' நாவலுக்குரிய செறிவுடனும் கதாபாத்திரங்களும் கொண்டிருக்கிறது. 'தலைச்சன்' அப்பாவின் மனமாற்றங்களும் சடாரென்று நிகழ்ந்து நம்ப இயலாதவொன்றாக ஆக்குகிறது. ஆசிரியர் இதே பின்புலத்துடன் விரிவாக பிறிதொரு புனைவு வடிவத்தில் இவற்றைக் விரிவாகக் கையாண்டால் நிறைவாக இருந்திருக்கும்.

ஜெயந்தி சங்கரின் பல கதைகளில் போதனையும் ஊடே இடம்பெற்றிருக்கிறது. குறிப்பாக 'உன் காலணிக்குள் நான்' பள்ளிக்கூட Moral Science பாடம் போல் தென்பட்டது.

குடிகாரனின் லீலைகளை விவரிக்கும் 'நான் அவனில்லை'யும் மகப்பேறின் மகத்துவத்தை முன்வைக்கும் 'மழலைசொல் கேளாதவ'ரும் திறம்படக் கையாண்டிருந்தால், தற்போதைய நிலையில் வாசகனுக்கு குற்றவுணர்வு கலந்த அயர்ச்சிக்கு பதிலாக, சரியான தாக்கங்களைக் கொடுத்திருக்கும்.

இந்தத் தொகுப்பில் நான் முன்னமே வாசித்திருந்தது 'கடைசிக் கடிதம்' மட்டுமே. மீண்டும் வாசிக்க ஆரம்பிக்கும் முன்னே மனத்தில் தங்கிப் போன நினைவுகளை மீட்டெடுத்து, மீள்வாசிப்பில் மறக்கவியலாத நாவலின் பன்முகப்பரிமாணங்களை வாசகனுக்குள் பாய்ச்சும் தன்மையுடன் விரிந்தது. பிரச்சினைகளைக் கண்டு ஓட வேண்டுமா? தன்னால் தீர்வு காண முடியாத அச்சத்தால், பிறரின் முடிவுக்கே விட்டுச் செல்வது சிறந்ததா? பேசாப்பொருளை எப்படி அறிமுகம் செய்வது? வாழ்க்கையில் எடுத்த முடிவுகள் சரிதானா? தவறு என்றால் எப்போது மாற்றிக் கொள்ளலாம்? மன்னிப்பு எதற்கு தேவை? யாருக்கு பாவம்? யார் பாவம்?

ஒவ்வொரு கதையிலும் வினாக்களும் கதாவாசகனின் அனுபவங்களுக்கு ஏற்ற அர்த்தங்களும் புலப்பட்டாலும், அவை யாவும் மிக சிறப்பாக 'கடைசிக்கடித'த்தில் வெளியாகியுள்ளது.

மஞ்சள் ரிப்பன், ஸ்பாஸிர்ரிஸ் போன்ற வினோத பதங்களை சிங்கப்பூரை எழுத்தில் மட்டுமே தரிசித்தவர்களுக்காக இன்னும் விரிவாக எடுத்துரைத்து லாவகமாக கதையில் விவரித்து, தெரியாத விஷயங்களை அறிமுகம் செய்வித்திருக்கலாம்.

கதைகளில் பெரும்பாலானோர் குற்றமற்ற உத்தமராக இருப்பதை போல் வார்த்தைகளில் வரும் பிழைகளைக் களைந்தெடுத்தால் வாசிப்பு ஈர்ப்பு அதிகரிக்கும். பாரத கண்டத்தை விட்டுப் போனாலும் தீபாவளி கொண்டாடுவது தொடர்கிறது. பத்தாவது படிக்கும் வரை ஆயிரம் வாலா-வா அல்லது அணுக்கத்தில் ஆட்டம் பாம் போடுவதா என்னும் போட்டா போட்டி. கொஞ்சம் கெத்து வந்த வயதில் ரேமண்ட்ஸே வாங்கித் தைக்க அப்பா தயார் என்றாலும் கேப் காக்கியோ, ஏபர்கோம்பி ·பிட்ச் பொன்னெழுத்துப் பொறிக்கப்பட்ட ஆடையோ தாங்கி உலா வரும் ஒளிக்கதிர் போட்டி.

தலை தீபாவளிக்கு மிடுக்கு; ஊர் விட்டு ஊர் வந்திருந்த போது கொண்டாடிய ராம் லீலா மேளா; அமெரிக்காவோ ஆப்பிரிக்காவோ, அயல்நாட்டில் இருக்கும் பத்து தெற்காசிய குடும்பங்களைக் கஷ்டப்பட்டு ஒன்றுகூட்டி திருவிழா கொண்டாட்டம்.

பெற்றோரை விட்டு, சொந்த ஊரை விட்டு தள்ளி இருந்தாலும், தடாலடியாக பண்டிகை தினத்தன்று 'உள்ளேன் அய்யா' போட்டு, சாப்பிடத்தெரியாத தலைவாழை இலையில் அஜீரணம் தரும் எண்ணெய் சமாச்சாரம் தொட்டு திரட்டிப்பால் இரண்டாம் முறை வாங்கி, பூண்டு ரசத்தை கொஞ்சம் தரையில் இருந்து எடுத்து இலைக்குள் தள்ளி, தயிர் சாதத்துக்குப் பிறகு இராஜாவாக பிறக்கும் ஆசையில் பாயசம் சாப்பிட சிரம்பப்பட்டாலும் வயிறு முட்ட வைக்கிறது பின் சீட் தொகுப்பு. சுற்றாரும் வம்பும் இனிப்பும் தீபாவளி லேகியமும் கலந்து பூர்விகத்தை திரும்பிப் பார்க்க சொல்லும் விருந்து.


பின் சீட் (2006)
ஆசிரியர் - ஜெயந்தி சங்கர்
பக்கங்கள் - 153/ விலை- Rs 66
மதி நிலையம்

நன்றி: வடக்கு வாசல் ‍ ஃபிப்ரவரி 2008


தொடர்புள்ள பதிவு: சிங்கை முரசு: எளிமையாக வெளியீடு கண்ட கனமான நூல்கள் - பனசை நடராஜன்:
ராம. கண்ணபிரான்: கதாமாந்தர்களை அறியா பருவத்தினர் மற்றும் அறிந்த பருவத்தினர் என்று வகைப் படுத்துவதாகக் கூறினார். பதின்பருவத்தினரின் உடல், மன மாற்றங்கள், அவர்களுடைய நண்பர்களின் அணுகுமுறையால் முக்கியத்துவம் பெறுகிறதென்றும், அறிந்த மனிதர்களிடம் தான் தியாக மனப்பான்மையும் மோசமான குணங்களையும் ஒருங்கே பார்க்க முடிகிறது என்றும் சொன்னார்.


அருள் குமரன்: அம்மா பேசினாள், தலைச்சன், மறுபக்கம், கடைக் கடிதம் போன்ற சிறுகதைகளைக் குறித்து விரிவாகச் சொன்னார். பலதரப்பட்ட மனிதர்களின் வாழ்வை, அவரது சொந்த அனுபவமோ என்று சந்தேகித்துவிடும் அளவுக்கு எதார்த்தமாய், வாசகனை உள்ளிழுத்துச் செல்லும் வகையில் மிகைப் படுத்தாமல் அருகில் அமர்ந்து சொல்வது போன்ற உணர்வுடன் நூலாசிரியர் சொல்லியிருப்பதாகக் கூறி வியந்தார்.

தன்னை எழுத்தாளர் என்று சொல்லிக்கொண்ட முதியவர் ஒருவர் எழுந்து சிங்கப்பூரில் கதை எழுத கரு கிடைக்கவில்லை என்று தான் நினைத்திருக்கையில் இவ்வளவு திறம்பட சிங்கப்பூர் சூழல்களைக் கையாண்டு எழுதிவருகிறீர்களே என்று சொல்லிப் பாராட்டியதோடு, தகுந்த அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்று அக்கறையுடன் கூறினார்.

வியாழன், ஜனவரி 03, 2008

எழுத்தாளர்களுக்கு... சிறுகதை எழுதுவது எப்படி? - டிப்ஸ்

சர்வேசன் போட்டிக்கு வந்த நச்னு சில கதைகளைப் படித்தபோது பா. ராகவன் முன்பு பகிர்ந்ததை மீள்பதிவாக இட்டால், சிலருக்கு உபயோகம் ஆகலாம் என்னும் உரிமைதுறப்பு பணிவன்போடு:

பழைய பெட்டிகளைக் கொஞ்சம் குடைந்துகொண்டிருந்தேன். எழுத ஆரம்பித்து அதிசுமார் 20 கதைகள் வரை பிரசுரமாகியிருந்த தொண்ணூறுகளின் முற்பகுதியில் எனக்கான சிறுகதை இலக்கணம் என்று ஒரு பத்திருபது பாயிண்டுகள் எழுதிவைத்தேன். இப்போது தற்செயலாக அகப்பட்ட அந்தக் குறிப்புகளை இங்கே போடலாம் என்று தோன்றியது. காப்பிரைட் என்னுடையது அல்ல. யார்யாரோ சொன்னதன் தொகுப்பு அல்லது திரட்டு அல்லது திருட்டு.


1. கையெழுத்துப்பிரதியாக 5 பக்கங்களுக்கு மேல் ஒரு சிறுகதை வளராமல் பார்த்துக்கொள்.(பெரும்பாலான சப் எடிட்டர்களுக்கு இது விஷயத்தில் பொறுமை இருப்பதில்லை)

2. தன்மை ஒருமையில் ஒரு டிரா·ப்ட் எழுதிக்கொண்டு பிறகு அதை தேர்ட் பர்சனுக்கு மாற்றி எழுதுவது நல்லது. நான் என்று தொடங்கி எழுதும்போது தான் கதையில் ஒரு உயிர்ப்பு வருகிறது.

ஆனால் கதைக்கு நான் கூடாது என்பதால் எழுதிவிட்டு அவனாக்கிக் கொள்வது பெட்டர்.

3. ஒரு செண்டன்ஸில் நாலைந்து சொற்களுக்கு மேல் கூடாது.

4. நாலு பேராவுக்கு ஒரு வர்ணனை வை. பெண்ணையோ, பேயையோ உன்னையோ எதையாவது ரெண்டு வரி வருணிப்பதன் மூலம் கொஞ்சம் வாசனை கூடுகிறது.

5. கதாபாத்திரம் ஒரு அலைவரிசையில் இயங்கிக்கொண்டிருக்கும்போது நீ குறுக்கே மூக்கு நுழைக்காதே. கதாபாத்திரத்தின் கருத்துடன் உன்னுடையது ஒத்துப்போகாவிட்டால் ஒன்றும் கொலைபாதகம் இல்லை.

6. கூடியவரை சிறுகதையில் காலம் காட்டாதே. அதாவது மணி, நாள், மாதம், வருஷமெல்லாம் வேண்டாம். உணர்ச்சிகளை முக்கியப்படுத்து. தேவையானபோது மட்டும் சம்பவங்கள்.

7. செகண்ட் பர்சனில் கதை எழுதிப்பழகு. அது தொழில்நுட்பத் தேர்ச்சி தரும்.

8. புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், கி.ரா., இவர்களெல்லாம் சிறுகதையில் மிகவும் சாதித்தவர்கள் என்பார்கள். ஆனால் உனக்கு உதவாது. ஆரம்பத்தில் நீ பின்பற்றவேண்டியவர்கள் ஜானகிராமன், சுஜாதா, ஆதவன், சுப்ரமணியராஜு, சுந்தரராமசாமி ஆகியோர் மட்டுமே.

9. ஒரு போதும் முழுக்கதையை முடிவு செய்துவிட்டு எழுதத் தொடங்காதே. உனக்கு அந்த உரிமை இல்லை. முதல் வரிக்கு மட்டும் முயற்சி செய். கதை தன்னை உற்பத்தி செய்துகொள்ளும்.

10.சிறு சிறு விவரங்கள் சிறுகதைக்கு முக்கியம். ஒரு கதையில் ஆள், உயரம்,வாசனை,நடை, நாற்றம்,லே அவுட், மேனரிசம், கோபம், புன்னகை,அழுகை, துடிப்பு, வேகம்,சூழல், செயல், செயலின்மை, பேச்சு, மௌனம் இதெல்லாம் வரவேண்டும்; தெரியவேண்டும்.

11. வசனங்கள் கூடியவரை குறைவாக இருக்கவேண்டும். வசனம் என்பது நாடகத்தின் கருவி. சிறுகதைக்கு மௌனமே சிறப்பு.

12. ஒரு கதை எழுதுமுன் ஒரு நல்ல கதையைப் படி. உனக்கு உகந்தது, அசோகமித்திரனின் மகா ஒற்றன், ஆதவனின் கருப்பாக, உயரமாக…, லா.ச.ரா.வின் த்வனி. இந்த சமயத்தில் தி.ஜாவையோ சுஜாதாவையோ தொடாதே. வாசனை ஒட்டிக்கொள்ளும்.

(திண்ணை-யில் இருந்து: சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல் - 1 : ஆதவன் | 2 | 3)


13. எழுதி முடித்ததும் கடைசியிலிருந்து வெட்டிக்கொண்டு வா.(வரிவரியாக.)

14. மிரட்டும் சொற்கள் வெண்டாம். எளிமையே ஆபரணம்.

15. ஒவ்வொரு கதை எழுதி முடிக்க முடிந்ததும் கடவுளுக்கு நன்றி சொல்லு.

பி.கு: இவையெல்லாம் என்க்கு நானே சொல்லிக்கொண்டவை. இன்றுவரை, அநேகமாக அனைத்து ரூல்களையும் பின்பற்றுகிறேன்.யாருக்காவது உபயோகப்படுமானால் சந்தோஷம்.



எழுதுவது எப்படி என்பதனைப் பற்றி சாண்டில்யன் கட்டுரை:

நல்ல எழுத்துக்கு வேண்டியது - முதலில் உணர்ச்சி வேகம். இரண்டாவது ஆழ்ந்த படிப்பு.

எழுத முற்படுவோர், தாங்கள் எழுதவேண்டியது அவசியந்தானா? அதற்கான வேட்கை, உணர்ச்சி வேகம் இயற்கையாக இருக்கின்றனவா என்பதை யோசித்துக்கொள்ளவேண்டும்.

இரண்டாவதாக, தங்களுக்கு ஆழ்ந்த படிப்பு இருக்கிறதா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். இல்லையென்று தோன்றும் பட்சத்தில், படிக்கவும் முயலவேண்டும். கற்பனை தானாக ஊறிவிடுமென்பது வீண் பிரமை.

"தொட்டனைத்து ஊறும் மணற்கேணி, மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் கல்வி", என்று தெய்வத் திருவள்ளுவரே கூறியிருக்கிறார்.

நல்ல கதைக்கோப்பும், கதை வேகமும், சொல்லாட்சியுமுள்ள கதை எத்தனை பெரிதாயிருந்தாலும் மக்கள் அதனைப் படிப்பார்கள். இந்த அம்சங்கள் இல்லாத கதை, எத்தனைச் சிறியதாக இருந்தாலும் மக்களின் மனத்தை ஆட்கொள்ளமுடியாது.

கற்பனைச்செறிவும், இயற்கையையும் வாழ்க்கையையும் ஊன்றிப்பார்க்கும் திறனும் இருந்தால், உவமைகள் உங்கள் பேனாவின் மையில் தானாகப் பிரவாகமாகிவிடும்.

- சாண்டில்யனின் 'நாவல் எழுதுவது எப்படி?' (சில பகுதிகள்)


Thinnai: "ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை :: சுந்தர ராமசாமி"

என்னுடைய முதல்பட்சமான அக்கறைகள் வாழ்க்கையைப் பற்றியவை. இந்த அக்கறைகளைச் சார்ந்துதான் இலக்கியப் படைப்புக்கள் உருவாகின்றன. ஆக, ஒரு இலக்கியப் படைப்பாளி என்று எடுத்துக் கொள்ளும் போதும் சரி, வாழ்க்கையைப் படைப்புக் கண்ணோடு பார்க்க விரும்புகிறவன் என்று எடுத்துக் கொள்ளும் போதும் சரி முதல்பட்சமாக நான் ஒரு வாசகனாக இருப்பதையே உணருகிறேன்.

நம்முடன் உரையாட வந்தவர்கள் ஏதோ சாதாரண விஷயங்களைப் பற்றி நம்மிடம் சொல்வதில்லை. அவர்களுடைய வாழ்க்கைக் கண்ணோட்டத்தில் மிகச் சாரமான பகுதியை - மிக மேலான பகுதியை - அதிக அளவிற்குப் பொருட்படுத்தத் தகுந்த பகுதியைப்பற்றியே நம்மிடம் பேசுகிறார்கள்...எல்லா சிறந்த எழுத்தாளரையும் நாம் இருக்குமிடத்திலிருந்தே சந்திக்க முடியும். இந்தப் பெரிய வாய்ப்பை எண்ணி எவன் புளகாங்கிதப்படுகிறானோ அவனைத்தான் நான் சிறந்த வாசகன் என்று கருதுகிறேன்.

துறை சார்ந்த சமாளிப்பு என்பது ஒன்று; இந்தத் துறை சார்ந்த வல்லமை என்பது மற்றொன்று. பெரும்பாலும் எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் - அது வைத்தியமாக இருக்கலாம், அல்லது பொறியியலாக இருக்கலாம் - அல்லது வணிகமாக இருக்கலாம் அல்லது சட்டமாக இருக்கலாம் -
அந்த துறையைச் சேர்ந்தவர்கள் அதிக அளவுக்கு அந்தந்த துறையைச் சார்ந்த உத்திகள், பந்தாக்கள், சொற்றொடர்கள் ஆகியவற்றைக் கற்று, அதில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர் போன்ற பாவனையைப் பிறரிடம் உருவாக்கி அதன் மூலம் வாழ்க்கையைச் சமாளித்துக் கொண்டிருக்கக்கூடிய கோலத்தைத்தான் அதிக அளவில் பார்க்க முடிகிறது.


முக்கியமாக இன்று நான்கு விஷயங்களை நான் உங்களுடைய கவனத்திற்குக் கொண்டு வர விரும்பினேன். ஒன்று வாசிப்பு சம்பந்தபட்ட விஷயம்; மற்றொன்று உங்களுக்கு உகந்த துறையை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டு அந்தத் துறையில் நீங்கள் போதிய திறமை பெற்று நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளக்கூடிய விஷயம். மூன்றாவது தாழ்வு மனப்பான்மை என்று நான் நம்பக்கூடிய நோயிலிருந்து முற்றாக விடுதலை பெறுவதற்கான வழிகள். நான்காவது இந்திய வாழ்க்கையைச் சார்ந்தோ, தமிழக வாழ்க்கையைச் சார்ந்தோ, தமிழக வாழ்க்கையை எதிர்கொள்ளுவதன் மூலம் நமக்குச் சொந்தமான, சுயமான கண்ணோட்டங்களை நாம் உருவாக்கி கொள்ளக்கூடிய முயற்சி. இந்த நான்கு கருத்துக்களையும் விவாதத்திற்காக உங்கள் முன் வைக்கிறேன்.



கடைசியாக விளம்பரங்களுக்கு நடுவில் வலைப்பந்தல் வைத்திருக்கும் சர்வேசன் வாக்கெடுப்புக்கு விளம்பரம்: சிறந்த 'நச்'© கதை - இறுதிக்கட்ட வாக்கெடுப்பு ஆரம்பம்

பழைய இடுகைகள் முகப்பு