வியாழன், ஜனவரி 03, 2008

எழுத்தாளர்களுக்கு... சிறுகதை எழுதுவது எப்படி? - டிப்ஸ்

சர்வேசன் போட்டிக்கு வந்த நச்னு சில கதைகளைப் படித்தபோது பா. ராகவன் முன்பு பகிர்ந்ததை மீள்பதிவாக இட்டால், சிலருக்கு உபயோகம் ஆகலாம் என்னும் உரிமைதுறப்பு பணிவன்போடு:

பழைய பெட்டிகளைக் கொஞ்சம் குடைந்துகொண்டிருந்தேன். எழுத ஆரம்பித்து அதிசுமார் 20 கதைகள் வரை பிரசுரமாகியிருந்த தொண்ணூறுகளின் முற்பகுதியில் எனக்கான சிறுகதை இலக்கணம் என்று ஒரு பத்திருபது பாயிண்டுகள் எழுதிவைத்தேன். இப்போது தற்செயலாக அகப்பட்ட அந்தக் குறிப்புகளை இங்கே போடலாம் என்று தோன்றியது. காப்பிரைட் என்னுடையது அல்ல. யார்யாரோ சொன்னதன் தொகுப்பு அல்லது திரட்டு அல்லது திருட்டு.


1. கையெழுத்துப்பிரதியாக 5 பக்கங்களுக்கு மேல் ஒரு சிறுகதை வளராமல் பார்த்துக்கொள்.(பெரும்பாலான சப் எடிட்டர்களுக்கு இது விஷயத்தில் பொறுமை இருப்பதில்லை)

2. தன்மை ஒருமையில் ஒரு டிரா·ப்ட் எழுதிக்கொண்டு பிறகு அதை தேர்ட் பர்சனுக்கு மாற்றி எழுதுவது நல்லது. நான் என்று தொடங்கி எழுதும்போது தான் கதையில் ஒரு உயிர்ப்பு வருகிறது.

ஆனால் கதைக்கு நான் கூடாது என்பதால் எழுதிவிட்டு அவனாக்கிக் கொள்வது பெட்டர்.

3. ஒரு செண்டன்ஸில் நாலைந்து சொற்களுக்கு மேல் கூடாது.

4. நாலு பேராவுக்கு ஒரு வர்ணனை வை. பெண்ணையோ, பேயையோ உன்னையோ எதையாவது ரெண்டு வரி வருணிப்பதன் மூலம் கொஞ்சம் வாசனை கூடுகிறது.

5. கதாபாத்திரம் ஒரு அலைவரிசையில் இயங்கிக்கொண்டிருக்கும்போது நீ குறுக்கே மூக்கு நுழைக்காதே. கதாபாத்திரத்தின் கருத்துடன் உன்னுடையது ஒத்துப்போகாவிட்டால் ஒன்றும் கொலைபாதகம் இல்லை.

6. கூடியவரை சிறுகதையில் காலம் காட்டாதே. அதாவது மணி, நாள், மாதம், வருஷமெல்லாம் வேண்டாம். உணர்ச்சிகளை முக்கியப்படுத்து. தேவையானபோது மட்டும் சம்பவங்கள்.

7. செகண்ட் பர்சனில் கதை எழுதிப்பழகு. அது தொழில்நுட்பத் தேர்ச்சி தரும்.

8. புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், கி.ரா., இவர்களெல்லாம் சிறுகதையில் மிகவும் சாதித்தவர்கள் என்பார்கள். ஆனால் உனக்கு உதவாது. ஆரம்பத்தில் நீ பின்பற்றவேண்டியவர்கள் ஜானகிராமன், சுஜாதா, ஆதவன், சுப்ரமணியராஜு, சுந்தரராமசாமி ஆகியோர் மட்டுமே.

9. ஒரு போதும் முழுக்கதையை முடிவு செய்துவிட்டு எழுதத் தொடங்காதே. உனக்கு அந்த உரிமை இல்லை. முதல் வரிக்கு மட்டும் முயற்சி செய். கதை தன்னை உற்பத்தி செய்துகொள்ளும்.

10.சிறு சிறு விவரங்கள் சிறுகதைக்கு முக்கியம். ஒரு கதையில் ஆள், உயரம்,வாசனை,நடை, நாற்றம்,லே அவுட், மேனரிசம், கோபம், புன்னகை,அழுகை, துடிப்பு, வேகம்,சூழல், செயல், செயலின்மை, பேச்சு, மௌனம் இதெல்லாம் வரவேண்டும்; தெரியவேண்டும்.

11. வசனங்கள் கூடியவரை குறைவாக இருக்கவேண்டும். வசனம் என்பது நாடகத்தின் கருவி. சிறுகதைக்கு மௌனமே சிறப்பு.

12. ஒரு கதை எழுதுமுன் ஒரு நல்ல கதையைப் படி. உனக்கு உகந்தது, அசோகமித்திரனின் மகா ஒற்றன், ஆதவனின் கருப்பாக, உயரமாக…, லா.ச.ரா.வின் த்வனி. இந்த சமயத்தில் தி.ஜாவையோ சுஜாதாவையோ தொடாதே. வாசனை ஒட்டிக்கொள்ளும்.

(திண்ணை-யில் இருந்து: சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல் - 1 : ஆதவன் | 2 | 3)


13. எழுதி முடித்ததும் கடைசியிலிருந்து வெட்டிக்கொண்டு வா.(வரிவரியாக.)

14. மிரட்டும் சொற்கள் வெண்டாம். எளிமையே ஆபரணம்.

15. ஒவ்வொரு கதை எழுதி முடிக்க முடிந்ததும் கடவுளுக்கு நன்றி சொல்லு.

பி.கு: இவையெல்லாம் என்க்கு நானே சொல்லிக்கொண்டவை. இன்றுவரை, அநேகமாக அனைத்து ரூல்களையும் பின்பற்றுகிறேன்.யாருக்காவது உபயோகப்படுமானால் சந்தோஷம்.எழுதுவது எப்படி என்பதனைப் பற்றி சாண்டில்யன் கட்டுரை:

நல்ல எழுத்துக்கு வேண்டியது - முதலில் உணர்ச்சி வேகம். இரண்டாவது ஆழ்ந்த படிப்பு.

எழுத முற்படுவோர், தாங்கள் எழுதவேண்டியது அவசியந்தானா? அதற்கான வேட்கை, உணர்ச்சி வேகம் இயற்கையாக இருக்கின்றனவா என்பதை யோசித்துக்கொள்ளவேண்டும்.

இரண்டாவதாக, தங்களுக்கு ஆழ்ந்த படிப்பு இருக்கிறதா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். இல்லையென்று தோன்றும் பட்சத்தில், படிக்கவும் முயலவேண்டும். கற்பனை தானாக ஊறிவிடுமென்பது வீண் பிரமை.

"தொட்டனைத்து ஊறும் மணற்கேணி, மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் கல்வி", என்று தெய்வத் திருவள்ளுவரே கூறியிருக்கிறார்.

நல்ல கதைக்கோப்பும், கதை வேகமும், சொல்லாட்சியுமுள்ள கதை எத்தனை பெரிதாயிருந்தாலும் மக்கள் அதனைப் படிப்பார்கள். இந்த அம்சங்கள் இல்லாத கதை, எத்தனைச் சிறியதாக இருந்தாலும் மக்களின் மனத்தை ஆட்கொள்ளமுடியாது.

கற்பனைச்செறிவும், இயற்கையையும் வாழ்க்கையையும் ஊன்றிப்பார்க்கும் திறனும் இருந்தால், உவமைகள் உங்கள் பேனாவின் மையில் தானாகப் பிரவாகமாகிவிடும்.

- சாண்டில்யனின் 'நாவல் எழுதுவது எப்படி?' (சில பகுதிகள்)


Thinnai: "ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை :: சுந்தர ராமசாமி"

என்னுடைய முதல்பட்சமான அக்கறைகள் வாழ்க்கையைப் பற்றியவை. இந்த அக்கறைகளைச் சார்ந்துதான் இலக்கியப் படைப்புக்கள் உருவாகின்றன. ஆக, ஒரு இலக்கியப் படைப்பாளி என்று எடுத்துக் கொள்ளும் போதும் சரி, வாழ்க்கையைப் படைப்புக் கண்ணோடு பார்க்க விரும்புகிறவன் என்று எடுத்துக் கொள்ளும் போதும் சரி முதல்பட்சமாக நான் ஒரு வாசகனாக இருப்பதையே உணருகிறேன்.

நம்முடன் உரையாட வந்தவர்கள் ஏதோ சாதாரண விஷயங்களைப் பற்றி நம்மிடம் சொல்வதில்லை. அவர்களுடைய வாழ்க்கைக் கண்ணோட்டத்தில் மிகச் சாரமான பகுதியை - மிக மேலான பகுதியை - அதிக அளவிற்குப் பொருட்படுத்தத் தகுந்த பகுதியைப்பற்றியே நம்மிடம் பேசுகிறார்கள்...எல்லா சிறந்த எழுத்தாளரையும் நாம் இருக்குமிடத்திலிருந்தே சந்திக்க முடியும். இந்தப் பெரிய வாய்ப்பை எண்ணி எவன் புளகாங்கிதப்படுகிறானோ அவனைத்தான் நான் சிறந்த வாசகன் என்று கருதுகிறேன்.

துறை சார்ந்த சமாளிப்பு என்பது ஒன்று; இந்தத் துறை சார்ந்த வல்லமை என்பது மற்றொன்று. பெரும்பாலும் எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் - அது வைத்தியமாக இருக்கலாம், அல்லது பொறியியலாக இருக்கலாம் - அல்லது வணிகமாக இருக்கலாம் அல்லது சட்டமாக இருக்கலாம் -
அந்த துறையைச் சேர்ந்தவர்கள் அதிக அளவுக்கு அந்தந்த துறையைச் சார்ந்த உத்திகள், பந்தாக்கள், சொற்றொடர்கள் ஆகியவற்றைக் கற்று, அதில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர் போன்ற பாவனையைப் பிறரிடம் உருவாக்கி அதன் மூலம் வாழ்க்கையைச் சமாளித்துக் கொண்டிருக்கக்கூடிய கோலத்தைத்தான் அதிக அளவில் பார்க்க முடிகிறது.


முக்கியமாக இன்று நான்கு விஷயங்களை நான் உங்களுடைய கவனத்திற்குக் கொண்டு வர விரும்பினேன். ஒன்று வாசிப்பு சம்பந்தபட்ட விஷயம்; மற்றொன்று உங்களுக்கு உகந்த துறையை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டு அந்தத் துறையில் நீங்கள் போதிய திறமை பெற்று நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளக்கூடிய விஷயம். மூன்றாவது தாழ்வு மனப்பான்மை என்று நான் நம்பக்கூடிய நோயிலிருந்து முற்றாக விடுதலை பெறுவதற்கான வழிகள். நான்காவது இந்திய வாழ்க்கையைச் சார்ந்தோ, தமிழக வாழ்க்கையைச் சார்ந்தோ, தமிழக வாழ்க்கையை எதிர்கொள்ளுவதன் மூலம் நமக்குச் சொந்தமான, சுயமான கண்ணோட்டங்களை நாம் உருவாக்கி கொள்ளக்கூடிய முயற்சி. இந்த நான்கு கருத்துக்களையும் விவாதத்திற்காக உங்கள் முன் வைக்கிறேன்.கடைசியாக விளம்பரங்களுக்கு நடுவில் வலைப்பந்தல் வைத்திருக்கும் சர்வேசன் வாக்கெடுப்புக்கு விளம்பரம்: சிறந்த 'நச்'© கதை - இறுதிக்கட்ட வாக்கெடுப்பு ஆரம்பம்

37 கருத்துகள்:

you could highlight this too:

http://mrnatarajan.blogspot.com/2008/01/blog-post.html

//கடைசியாக விளம்பரங்களுக்கு நடுவில் வலைப்பந்தல் வைத்திருக்கும் சர்வேசன் வாக்கெடுப்புக்கு விளம்பரம்//

:)

சூப்பரு... :)

மெலட்டூர் சுட்டிக்கு நன்றி. தவறவிட்டிருப்பேன்... பயனுள்ள குறிப்புகள்!

இராம் __/\__

:):):) மிக்க மிக்க நன்றி

நல்ல குறிப்புகள். நன்றி பாலா. (உடனே இவற்றை எல்லாம் பயன்படுத்தி நிறைய கதை எழுதி கொலை செய்யப் போகிறேன் என்று நினைத்துவிடவேண்டாம்)

சிறுகதை எழுத தேவையான, பயனுள்ள குறிப்புகள்! நன்றி !!

வினையூக்கி... __/\__

மெலட்டூர்.இரா.நடராஜனின் ஆலோசனைகளில்

'புதிய கோணத்தில் கதை சொல்லுவது ஜெயிக்கும் குதிரையில் பணம் கட்டுவது மாதிரி.' என்னும் கருத்து எனக்குப் பிடித்திருந்தது.

கவிதை நடையில், கடிதம் மாதிரி, விருமாண்டி மாதிரி... இப்படி ஏதாவது

குமரன்,
---இவற்றை எல்லாம் பயன்படுத்தி நிறைய கதை எழுதி ---

நீங்கள் நச் கதை எழுதினீங்களா...?

உங்கள் பதிவில் நச் தேடினால் கிடைத்தது: கூடல்: கண்ணன் அல்லால் தெய்வமில்லை!!!

திவ்யா,

எம்புட்டு கதை எழுதி இருக்கீங்க... இருங்க! படிச்சுட்டு வரேன்

வாவ். இவ்ளோ.. மேட்டர் இருக்கா..
கதை கூட தானா வருமா? எனக்கு தான் அப்படி வரதில்லையா? ஆஹா ஆஹா! சரி :)
ட்ரை செய்வோம்!

நச்....

பா.பாலா,

காற்றடிக்கும் திசையில் பயணிப்பதை விட எதிர் திசையில் பயணிப்பது தான் சவால். நீங்கள் சொன்னதில் பல ஒரு வழிக்காட்டியாக கொள்ளத்தக்கதே,

சில மட்டும் நெருடலாக உள்ளது, எனவே உங்களது வழிமுறைகளை பொதுமைப்படுத்தி அதனை சிறுகதை எழுத சூத்திரம் என்று சொல்ல முடியாமல் போகிறது.

நீங்கள் சொன்னது போல சொல்லும் அனுபவம் இல்லை, எனது உணர்வின் அடிப்படையில் சில தோன்றுகிறது.

//9. ஒரு போதும் முழுக்கதையை முடிவு செய்துவிட்டு எழுதத் தொடங்காதே. உனக்கு அந்த உரிமை இல்லை. முதல் வரிக்கு மட்டும் முயற்சி செய். கதை தன்னை உற்பத்தி செய்துகொள்ளும்.//

அப்படி எனில் கதைக்கரு என்ன என்று கூட சிந்திக்காமல் முதல் வரியை தேர்வு செய்ய வேண்டுமா?

அப்படிப்பார்த்தால் சினிமாவில் பிரபலமாக சொல்லப்படும் "ஒன் லைனர் தீம்" அடிப்பட்டு விடும். நீங்கள் முதல் வரியை என்று சொன்னது கதைக்கருவை மையமாகக்கொண்ட அந்த ஒரு வரிக்கதை கருவா?

முதலில் கதைக்கரு எது என்று தேர்வு செய்யாமல் காகிதத்தில் கையை வைத்தால் அது அலைதலாக முடிந்து ஒரு கட்டுரையாக வரக்கூடும், அல்லது தற்போது சொல்லப்படும் பின்னவீனம் ஆகி விடும்( ஒன்றும் புரியாது :-))

//12. ஒரு கதை எழுதுமுன் ஒரு நல்ல கதையைப் படி. உனக்கு உகந்தது, அசோகமித்திரனின் மகா ஒற்றன், ஆதவனின் கருப்பாக, உயரமாக…, லா.ச.ரா.வின் த்வனி. இந்த சமயத்தில் தி.ஜாவையோ சுஜாதாவையோ தொடாதே. வாசனை ஒட்டிக்கொள்ளும்.//

எந்த நல்லக்கதையையும் படித்து விட்டு அதன் சூட்டோடு எழுத உட்கார்ந்தால் அதன் வாசனை ஒட்டிக்கொள்ளவே செய்யும்.

எனவே கதை எழுத நல்லக்கதைகளை படிக்க வேண்டும் என்பது சரியான பரிந்துரை அல்ல என நினைக்கிறேன்.

படிக்க வேண்டும் ஆனால் அது கதையாக இருக்க வேண்டும் என்று சொல்வது இடறுகிறது, அப்படி கதைக்களைப்படித்து கதைகளை உற்பத்தி செய்வதால் தான் பலரும் தற்போது தனித்து தெரியாது போய்விடுகிறார்கள்.

ஒரு சங்கப்பாடலைப்படித்து அதன் தாக்கத்தில் ஒரு கதை எழுதலாம். ஆனால் அசோகமித்திரனைப்படித்து அதன் தாக்கத்தில் கதை எழுதப்போனால் அதிகப்பட்சம் அந்த வார விகடனில் அக்கதை வந்து அல்ப ஆயுசில் காணாமல் போகலாம். தனி அடையாளம் வராது.

கதை அல்லாத பல துறை சார்ந்த , கதைக்கு தேவையான பின் விவரம் அளிக்க கூடிய நூல்கள் படிக்கலாம்.

மயிலாப்பூர் பார்த்த சாரதி கோயில் முன் என ஒரு கதை எழுத துவங்கினால் அது என்ன தான் அற்புதமான கருவினை கொண்டது எனினும் நிற்காதே!

//15. ஒவ்வொரு கதை எழுதி முடிக்க முடிந்ததும் கடவுளுக்கு நன்றி சொல்லு.//

நாத்திகர்களுக்கு கதை எழுத வராது அல்லது அவர்கள் முயல மாட்டார்கள் என்ற முன்முடிவுடன் சொல்லியுள்ளீர்கள் போல :-))

அப்படியே கொஞ்சம் மொழி இலக்கணத்தையும் படிக்க வேண்டும் என்று சேர்த்துக்கொள்ளுங்கள். எழுத்துப்பிழையுடன் எழுதி என்ன இலக்கியம் படைத்து விட முடியும்.

மொழியில் ஆளுமையுடன் இருந்து ,கற்பனை வளமும் இருந்தால் தானே படைப்புகள் ஊற்றெடுக்கும் என்று சிலர் சொல்லக்கேள்விப்பட்டுள்ளேன்.

கண்ணதாசன் சொன்னதாக படித்த ஒன்று, ஒரு எழுத்தில் ஒரு வார்த்தை ஆரம்பிக்கிறது என்றால் அதே எழுத்தில் ஆரம்ப்பிக்கும் , ஒத்த பொருள் தரும் ,இணையான 10 சொல்லாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போது தான் ஒரு டூயுனுக்கு பாட்டு எழுத வேண்டும் என்றால் முன்னர் வந்த பாடல்கள் இல்லாமல் புதிதாக தடுமாறாமல் ஒரு பாடல் வரும், வார்த்தைகள் தெரியவில்லை எனில் தடுமாறும் என்று சொன்னாராம்.

அவரிடம் இந்த வார்த்தை மீட்டருக்கும் வரவில்லை என்று சொன்னால் உடனே பொருள் மாறாமல் அடுத்த வார்த்தையை சொல்லி அசத்துவாராம்.

இங்கே வார்த்தைகள் என்பது மொழி அறிவின் விசாலம் ஆகும்.

கலைஞர் கூட சமயயோசிதமாக பதில்கள் அளிக்க காரணம் அவரின் மொழி ஆளுமை தானே!

ஒரு வேளை நீங்கள் மொழி ஆளுமை கதை வாசிப்பு மூலம் வரும் என்கிறீர்களா, அப்படி எனில் அது முன்னவரின் வார்த்தைகளை கடன் வாங்குதலாக தான் முடியும்.

தகவல்கள் நல்லாத்தான் இருக்குது..

ஆனா இதைச் சொல்கிறவர்களின் கதைகளை படித்தால் எல்லா கதைகளும் இந்த இலக்கணங்களுக்குள் வந்துவிடாது.

இலக்கணம் ஒரு referenceதான்.. மற்றபடி it is a creative process. நான் பொதுவா கதையின் ஒன்லைனர் ஒன்றை முடிவு செஞ்சுட்டு கொஞ்ச நேரம் யோசிப்பேன். பொதுவா ஒருநாளைக்கு அதிகமா யோசிக்கிறதில்ல.

அப்புறம் மட மடன்னு எழுதிடுவேன். ஒரேயடியா அத முடிச்சிரணும். பிசவம் மாதொரி இத எப்பண்டா முடிப்போங்கிற அனுபவம்தான் அது.

என்னுடைய கெட்ட பழக்கம் என் கதைகளை நான் திரும்ப வாசிச்சு திருத்துறதில்ல.

உரையாடல்கள் நிச்சயம் சேர்ப்பேன். உரையாடல்கள் இல்லாத கதைகளை படிக்க பிடிக்காது எனக்கு. அதனால அப்படி எழுதுறதுமில்ல. (இனிமேதான் முயற்சிக்கணும் :)

அடடா ஆலோசன வழங்குற அளவுக்கு இவன் பெரிய ஆளாண்ணு கேக்காதீங்க.. ஏதோ என்னுடைய அனுபவத்த சொல்லணும்னு தோணிச்சு.

ட்ரீம்ஸ் & சேவியர் __/\__

வவ்வால்... நன்றி! மூச்சு வாங்குது :)

இருங்க இன்னொரு தடவை படித்துவிட்டு வருகிறேன்!

காற்றடிக்கும் திசையில் பயணிப்பதை விட எதிர் திசையில் பயணிப்பது தான் சவால்.

தேர்ந்த மாலுமியாகிய பின் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் செலுத்தும் திறமை வரும். இப்பொழுதுதான், பாய்மரத்தை விரிப்பவர், படகைக் கவிழாமல் துவங்குவதற்கான பரிந்துரைகளாக இவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

சிறுகதை எழுத சூத்திரம் என்று சொல்ல முடியாமல் போகிறது.

நிச்சயம் ஒப்புக் கொள்ள வேண்டியது. சொவ்வறையில் விச்சுளி (agile), அருவி (waterfall) என்று பல வழிகாட்டல் இருப்பது போல் இதையும் எடுத்துக் கொள்ளலாம்.

கதைக்கரு என்ன என்று கூட சிந்திக்காமல் முதல் வரியை தேர்வு செய்ய வேண்டுமா?

சிலவிதமான கதைகளுக்கு முடிவு முக்கியமானது. ஆனால், இறுதியில் ஆசிரியரால் திணிக்கப்படும் நீதி, அதிரடி திருப்பம் ஆகியவற்றை மனதில் கொண்டு எழுதுவது நேரத்தே கொண்டு போய் சேர்க்கும் point-to-point ஓட்டுநரின் கடமையுணர்ச்சியை ஒத்தது.

சுற்றுலா வழிகாட்டி போல் கதாசிரியர் இயங்குவதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது. புராதன சரித்திரச் சின்னங்கள், நவீன மாளிகை, கேளிக்கை, கல்லறை, மலை என்று எல்லா இடத்துக்கும் தனக்குக் கொடுக்கப்பட்ட நேரத்துக்குள் அழைத்து செல்லலாம். எத்தனை இடம் பார்த்தோம் என்பது சிறுகதையின் க்ளைமேக்ஸ். எப்படி அனுபவித்தோம் என்பது மட்டுமே முக்கியம்.

சினிமாவில் பிரபலமாக சொல்லப்படும் "ஒன் லைனர் தீம்" அடிப்பட்டு விடும்.

இங்கே சிறுகதை அல்லவா பேசப்படுகிறது?

கதைக்கரு எது என்று தேர்வு செய்யாமல் காகிதத்தில் கையை வைத்தால் அது அலைதலாக முடிந்து ஒரு கட்டுரையாக வரக்கூடும்,

கட்டுரை என்பதை கருத்தும் தகவல்களும் மட்டும் நிரம்பியதாக வைத்துக் கொள்ளலாம். அந்தக் கட்டுரைகளிலேயே பேச்சுவழக்கு, உரையாடல், உவமைகள், போன்ற புனைவில் மட்டுமே வந்துபோன பல நுழைக்கப்படுகிறது. Rafting செல்வது குறித்து கதை எழுதினால், நதி, ஓடம், கூட வருவோர் என்று நிறைய குறிப்புகள் தேவை.

கதை எங்கே நடக்கிறது, என்ன சம்பவங்கள் என்று மனதில் படம்பிடித்தபிறகுதான் எழுத ஆரம்பிக்கிறார்கள். இன்ச் பை இன்ச் அலசிவிட்டு நோட்பேட் திறக்க வேண்டாம் என்பதைத்தான் பாரா அப்படி சொல்லியிருப்பார். வாந்தி எடுப்பதற்கு பதில் spontaneity- ஐ விரும்பலாம்.

நல்லக்கதைகளை படிக்க வேண்டும் என்பது சரியான பரிந்துரை அல்ல

கணினி மொழி கற்றுக் கொண்டாலும், ஆதிகால எட்டு பிட்டு பொட்டி தட்டலும் தெரிந்து வைத்துக் கொள்வது நிரலாளருக்கு முக்கியம். கடந்து வந்த பாதைகளை வரலாறு சொல்லித் தருவது போல்...

'ஒரு ஊரில் ஆலமரம் இருந்தது' என்று ஆரம்பிக்கலாமா; 'அவினாசி செல்லும் சாலையில் பனி படர்ந்திருக்க அந்த அதிகாலை வேளையில்' (ராஜேஷ்குமார் போல் ஒரு முயற்சி :); சாண்டில்யன், தேவன் என்று அந்தக் கால ஆள்களையும்; சுரா, எஸ் ரா, ஜெமோ என்று இந்தத் தலைமுறை படைப்பாளிகளையும் படித்தால்தானே 'பரிணாம வளர்ச்சி'யை அறிந்துகொள்ள முடியும்.

கதைக்களைப்படித்து கதைகளை உற்பத்தி செய்வதால் தான் பலரும் தற்போது தனித்து தெரியாது போய்விடுகிறார்கள்.

இது வரை வராத புதிய உத்தி என்றறிய முடியும். சொன்ன கதையை சொல்லாத விதத்தில் உணர்த்த முடியும். செய்திகளைப் படித்து கதைகளை உற்பத்தி செய்வதை விட, கற்பனைகளைப் படித்து குதிரைகளை பறக்கவிட்டு குளம்பொலிகளை எழுத்தில் பிடிப்பது பெட்டர்.

கதை அல்லாத பல துறை சார்ந்த , கதைக்கு தேவையான பின் விவரம் அளிக்க கூடிய நூல்கள் படிக்கலாம்.

அனுபவிக்க முடியாத விஷயங்களுக்கு (மொகஞ்சதாரோ நாகரிகம் போன்றவை) இது கை கொடுக்கலாம். தெற்காப்பிரிக்காவிற்கே செல்லாமல், 'ஏ.என்.சி. தலைவர் நான்காவது கல்யாணம் செய்ததை புனைவாக்குகிறேன்' என்று அந்த நாட்டு விவரங்களைப் புத்தகங்களில் படித்து புனைவாக மாற்றுதலில் எனக்கு ஒப்புதல் கிடையாது. அது இலக்கியம் என்பதில் நம்பிக்கையும் இல்லை.

சிறில்... சீக்ரெட் ஆஃப் சக்சஸை போட்டு உடைச்சிருக்கீங்க... பின்பற்றுவதுதான் கடினம்.

நீங்கள் தொடர்ந்து செய்லாக்கி எங்களை மகிழ்விப்பதற்கு நன்றி :)

வவ்வால்... மிச்சமொழி தொடர்கிறது :)

நாத்திகர்களுக்கு கதை எழுத வராது அல்லது அவர்கள் முயல மாட்டார்கள் என்ற முன்முடிவுடன் சொல்லியுள்ளீர்கள் போல :-))

எல்லாப் புகழும் அசலாக எழுதியவருக்கு அர்ப்பணம். ஆனால், இந்த புல்லட் பாயின்ட்களில் கூட கதைக்கான நேர்த்தியான முடிவை இங்கு காண்கிறேன்.

மொழி இலக்கணத்தையும் படிக்க வேண்டும் என்று சேர்த்துக்கொள்ளுங்கள்.

101% உண்மை. எங்கே ', எப்பொழுது " போன்றவை உட்பட சில விஷயங்களில் கவனம் செலுத்தி, திருத்தி பதிந்தால் கண் நோகாமல் படிக்கலாம்.

கலைஞர் கூட சமயயோசிதமாக பதில்கள் அளிக்க காரணம் அவரின் மொழி ஆளுமை தானே!

புத்திசாலித்தனம், சந்தர்ப்பத்திற்கேற்ற சாதுர்யம், அனுபவம் கூடிய நிதானம் போன்ற இன்னும் சிலவும் சொல்லாட்சியுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

மொழி ஆளுமை கதை வாசிப்பு மூலம் வரும் என்கிறீர்களா,

ஃப்ளாஷ்பேக்கை எப்படி சொல்வது? கதை எங்கு தொய்கிறது; அதை எப்படி சுவாரசியமாக்கலாம்? நேர்கோட்டில் உணரவைக்காமல், அதே சமயம் எல்லாவற்றையும் சொற்குப்பையாக விளக்காமல், வாசகனை 'அட' போட வைத்து குறிப்பால் உணர்த்துவது எப்படி? போன்ற நுட்பங்களை அறிய சாம்பிள் code பார்ப்பது போல் உதாரணக் கதைகளை படித்து நுட்பம் அறிந்து கொள்ளலாம்.

மிச்ச கதைக்கு விமர்சனம் எழுதாமா அம்போன்னு வீட்டுட்டீங்களே?
இனி எழுதினாலும், பிசு பிசுத்திடுமே.
அந்தந்த டைமுக்கு செய்யவேண்டியத செய்யணும்னு ஏதோ ஒரு குறள் இருக்குல்ல? :)

அத்த வுடுங்க, ஒரு புது வெளையாட்ல உங்கள லிங்க் பண்ணிவிட்டுட்டேன்.
சிம்பிள் தான்.

Click here for details

பதிவும் சரி, பின்னூட்டங்களும் சரி. படிக்கும்போதே ...........யப்பா...
கண்ணைக் கட்டுதே......

பா.பாலா,

விரிவான பதிலுக்கு நன்றி!

ஒன் லைனர் என்பது முக்கியமானது என்பதை சொல்லவே சினிமாவை சொல்லி இருந்தேன் , மற்றப்படி அது சிறுகதை எழுதவும் தேவை என சொல்லத்தான் வந்தேன்.சரியாக சொல்லத்தவறிட்டேன் போல.

சிறில் கூட அடுத்த பின்னூட்டத்தில் ஒரு வரிக்கதை உருவாக்கிக்கொள்வதாக சொல்லியுள்ளார் பாருங்கள்.
//நான் பொதுவா கதையின் ஒன்லைனர் ஒன்றை முடிவு செஞ்சுட்டு கொஞ்ச நேரம் யோசிப்பேன்.//

குமுதத்தில் ராகி.ரங்கராஜன் அல்லது சுஜாதா என நினைக்கிறேன் யாரோ எ.க.எ (எப்படிக்கதை எழுதுவது) என்று எழுதியப்போது இப்படி முதலில் ஒரு வரிக்கதை உருவாக்குங்கள், பின்னர் அதை ஒரு பக்க கதை ஆக்குங்கள், அதை பின்னர் சிறுகதை ஆக்குங்கள், நாவல் கூட ஆக்காலம் என்று வழி சொன்னதாக நினைவு.

சினிமாவில் சிலர் செய்யும் பழக்கத்தை படித்ததை இங்கே சொல்லிச்செல்கிறேன்,

மணி ரத்னம் பெரும்பாலும் இப்படி ஒன் லைனர் போல நாலைந்து சொல்லி அதை வைத்து ஒரு கதை எழுத சொல்வாராம் சுஜாதாவிடம் , பின்னர் அப்படி தேரும் கதைகளை வைத்து திரைக்கதைக்கு போவார்களாம்.

ஷங்கர் வசனமாக ஒரு கதையை டேப்பில் பதிவு செய்து கொடுத்து விடுவாராம் அதைக்கேட்டு விட்டு பின்னர் சுஜாதா ஒரு நாவல் எழுதித்தருவாராம் அதை பின்னர் திரைக்கதை, வசனம் அமைத்து பயன் படுத்துவாராம்.

இந்த சம்பவங்களை சுஜாதா விகடனில் சொன்னதை நீங்களும் படித்திருப்பீர்கள்!

எல்லாவற்றையும் படித்து விட்டு எழுத முடியாது என்று சொன்னாலும் பின்புலம் சார்ந்து படிப்பது கதையினை வலுக்கூட்டப்பயன்படும். சென்னையிலேயே இருந்திருந்தாலும் சென்னையைப்பற்றி விவரமாக சொல்ல வேண்டும் எனில் சென்னையின் வரலாறு சார்ந்த நூல்களைப்படித்தால் தானே தெரியும்.

கன்னிமரா நூலகம் என்றால் எல்லாருக்கும் தெரியும் ஆனால் கொஞ்சம் நுணுக்கமாக ஏன் அந்த பெயர் வந்தது(லார்ட் கன்னிமரா என்பவர் அப்போது சென்னையின் கவர்னர்) என்று கதையில் சொல்லி சென்றால் அக்கதையின் நம்பகத்தன்மை அதிகரிக்கும் தானே!தமிழில் நன்கு தெரிந்த உதாரணம் பொன்னியின் செல்வன் எழுத கல்கி அதே போன்ற சரித்திர நாவல்களைப்படிக்கவில்லை, சரித்திர நூல்களை, கல்வெட்டுகளை, ஓலைச்சுவடிகளைப்படித்ததாக சொல்வார்கள்.(அது நாவல் என்று சொல்லலாம், ஆனால் பொதுவாக எழுத என்று வைத்துப்பார்த்தால்)

இப்படிப்பட்ட பின்புலத்தினை கூர் தீட்டக்கண்டிப்பாக பல நூல்களின் வாசிப்பு தேவை.

//போன்ற நுட்பங்களை அறிய சாம்பிள் code பார்ப்பது போல் உதாரணக் கதைகளை படித்து நுட்பம் அறிந்து கொள்ளலாம்.//

நீங்கள் சொன்னதில் தவறில்லை ஆனால் இயல்பான கிரியேட்டிவிட்டி அடிபட கூடும் என்ற ஒரு கருத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை சொல்லவந்தேன்.

உதாரணமாக கதையை நாம் எழுதாமல் நம்மை அது செலுத்தி செல்லவேண்டும் என்பது போல நமக்கான ஸ்டைல் எழுத எழுத தன்னால் அமைய வேண்டும், முன்னர் அவர் இப்படி , அப்படி எழுதியுள்ளார்கள் என்றுப்பார்த்து நம்மை வடிவமைத்துக்கொண்டால் நமது இயல்பான ஸ்டைல் என்ன என்பதே தெரியாமல்ப்போய்விடும்.

நீங்கள் சொன்ன பல உத்திகளும் பின்பற்றக்கூடியதே என்பதையும் அறிவேன்.மேற்கொண்டு எனது பார்வையில் பட்டதை சொன்னேன் தவறாக நினைக்கவேண்டாம்.பெரிதாக எழுதி இடத்தை ஆக்ரமித்துவிட்டேன் :-))

துளசி...
உங்களுக்கு பொறுமை ஜாஸ்தி :))

சர்வேசன்,
ஏதோ ரெண்டு வரி விமர்சனம் போட்டேங்குறதுக்காக இவ்வளவு பெரிய்ய தண்டனையா ;))

அடுத்த வாரத்துக்குள் இட்டு விடுகிறேன்.

---இயல்பான கிரியேட்டிவிட்டி அடிபட கூடும்---

இலக்கியம் படைப்பது (!), புனைகதை வரைவது (!!) எல்லாம் உணர்ந்து அனுபவிக்கும் கலையாக மட்டுமே பார்ப்பதா (அல்லது) அறிவியல் பூர்வமாக பிரித்து மேய்ந்து சூத்திரங்களுக்குள் அடக்கி விட முடியுமா?

ஓவியத்தின் பன்முகத்தன்மையை அறிய எனக்கு உதவி தேவைப்படும். அணுக முடியாத ஆக்கங்களை வாசித்து புரிந்து கொள்ள கோனார் மாதிரி யாராவது ரிவ்யூ நோட்ஸ் போட்டால் உபயோகமாகிறது.

இன்று படித்த பள்ளிக் கூட விடைத்தாளில் இருந்து: ஆவலுடன் பாவருலம் ஆறுகால் வண்டினமும் காவலரைச் சூழும் கலைசையே!

இவ்வடிகளில் காவலர் என்ற சொல் காவலர் என ஒரு சொல்லாய் நின்று அரசனையும் கா+அலர் எனப் பிரிந்து நின்று சோலையின்கண் உள்ள மலரையும் உணர்த்துவதால் இது பிரிமொழிச்சிலேடையணியாகும்.
--------------------------
சினமென்னும் சேர்ந்தாரைக்கொல்லி இனமென்னும் ஏமப்புணையைச் சுடும்.

தொடர்புடைய இருபொருள்களுள் ஒன்றை உருவகப்படுத்தி, அதனோடு தொடர்புடைய மற்றொன்றை உருவகப்படுத்தாமல்விடுவது ஏகதேச உருவக அணியாகும். இச்செய்யுளில், இனத்தை ஏமப்புணையாக உருவகம் செய்தமைக்கு ஏற்ப, அதற்குத் தொடர்புடைய பிறவியைக் கடலாக உருவகம் செய்யாமையால் இஃது ஏகதேச உருவக அணியாகும்.

இந்த மாதிரி நுட்பம் எல்லாம் demo மாதிரி இல்லாமல் கலைநயத்துடன் வெளிப்பட 1. அனுபவம் (சொந்தமாக எழுதிப் பார்ப்பது) 2. வாசிப்பு (பிறர் எழுதியதை அறிவியல் பூர்வமாக ஆராய்வது) - இரண்டுமே முக்கியம்.


---பட்டதை சொன்னேன் தவறாக நினைக்கவேண்டாம்.பெரிதாக எழுதி இடத்தை ஆக்ரமித்துவிட்டேன் ---

நார்னியா சிங்கம் மாதிரி சீறிய நீங்களா... உங்களுக்குள் இவ்வளவு அடக்கமா... உங்கள் கருத்துக்கள் மூலம் என்னை செம்மையாக்குவதற்கான நன்றிகள் சொல்லிக் கொள்கிறேன் :)

Live India Vs Australia 3rd One Day.


http://tv.haplog.com/sop.php?src=sop://broker.sopcast.com:3912/33407Enjoy!!!தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)

நிறைய நல்ல கருத்தூஸ். எனக்குப் படும் சில மேலதிக கருத்துகள்:

1. ஒற்றைச் சம்பவமாக கதை இருப்பது நலம். வருடங்கள் உருண்டோடின.. எல்லாம் சிறுகதைக்கு டூ மச்!

2. தன்மை ஒருமை எனக்கு வசதியாகவே இருக்கிறது - விலக முடியாத தன்மையினால். பாயிண்ட் ஆப் வியூ மாற வாய்ப்பே இல்லை. இரண்டாவது முறை எழுதும் வழக்கம் இல்லாததால் மூன்றாம் மனிதனாக எழுதுவதில்லை.

3. தெரிந்த இடங்களை மனிதர்களை எழுதும்போது வரும் ப்ளோ, முழுக் கற்பனையில் வருவதில்லை. எங்கேயோ ஒரு போலித்தனம் வந்துவிடுகிறது.

4. கரு அமையும்போதே கடைசிவரி ட்விஸ்டும் அமைந்தால் சரி.. அப்படி அமையாவிட்டால் திணிப்பது போலித்தனமாகத் தெரியும். கதைக்குதான் ட்விஸ்டே தவிர ட்விஸ்டுக்கு கதை இல்லை.

---தன்மை ஒருமை எனக்கு வசதியாகவே இருக்கிறது ---

தங்கள் கதைகள் கற்பனையும் கலந்து விழுவதால் இது ஒன்றவே வைக்கிறது.

சில சமயம், இந்த மாதிரி கதை சொல்வது ஏதோ டைரி படித்த உணர்வையும் கொடுக்காமல், புனைவின் தாக்கத்தையும் தராமல் போகும் அபாயம் இருப்பதை படித்து தெரிந்திருக்கிறேன்

சூப்பர்,நல்ல குறிப்புகள்.ஆனால் ஒரு மனிதனின் எழுத்துக்கள் எதாவது கட்டுபாட்டுக்குள் இருந்தால் அது உண்மையான எழுத்தை விட்டு விலகி போகி கொண்டிருக்கிறது என்பது என் கருத்து.
A third goal of Wordsworth’s poetry is to illustrate the way in which poetry is a “spontaneous overflow of powerful feelings.”

jeyamohan.in » Blog Archive » நாவல் - ஒரு சமையல்குறிப்ப�

jeyamohan.in » Blog Archive » கட்டுரை வடிவம் பற்றி ஒரு �

jeyamohan.in » Blog Archive » புதிய குரல்கள் : "புதிய தடுமாற்றங்கள் :தமிழ்ச் சிறுகதை , இன்று…"

Thinnai: "தமிழில் சிறுகதை - தொடக்ககால இலக்கணங்கள்

தேவமைந்தன்"

அருமையான கருத்துக்கள்!

பா.ராகவனின் அட்வைஸ்கள் அனைத்துமே இன்றைய காலத்திற்குத் தேவையானதுதான்..

'பாபா'வின் தொகுப்பபிற்கு எனது நன்றிகள்.

jeyamohan.in » Blog Archive » சிறுகதை ஒரு சமையல்குறிப்

Right now,

i didn't write anything...

but now onwards i can write stories..

Thank you.....

////"தொட்டனைத்து ஊறும் மணற்கேணி, மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் கல்வி", என்று தெய்வத் திருவள்ளுவரே கூறியிருக்கிறார்.///


கொடுமை...திருக்குறள் படும்பாடு.

அது கல்வி இல்லை அறிவு.

மற்றும்,

ஏழு வார்த்தைகளில் உண்டான திருக்குறளுக்கு வார்த்தைகளை எட்டாக மாற்றியதன் காரணம் என்னவோ....

///"தொட்டனைத்து ஊறும் மணற்கேணி, மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் கல்வி", என்று தெய்வத் திருவள்ளுவரே கூறியிருக்கிறார்.///

கொடுமை...
திருக்குறள் படும்பாடு.
அது கல்வி இல்லை அறிவு.

மற்றும்,

ஏழு வார்த்தைகளில் உண்டான திருக்குறளுக்கு வார்த்தைகளை எட்டாக மாற்றியதன் காரணம் என்னவோ....

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு