வெள்ளி, ஏப்ரல் 30, 2004

அருள் - திரைப்பாடல் அறிமுகம்

'அநியாயம் பண்ணினா ஆண்டவனுக்குப் பிடிக்காது; அசிங்கமாப் பேசினா அருளுக்குப் பிடிக்காது' என்று அருள் விக்ரம் உதாருடன் நம்மை வரவேற்கிறார். ட்ரெய்லரில் நிறைய அடிதடி; சண்டை முடிந்தவுடன் வேல் கம்பு; அப்புறம் மேற்சொன்ன வசனம். தொடர்ந்து குத்து சண்டை. டிஷ¤ம் டிஷ¥ம் ம்யுசிக் என்று நிறைய முஷ்டி தூக்கும் ரத்தம்.

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

மருத மலை அடிவாரம் ஒக்கடாத்துப் பப்படாமே: நா. முத்துகுமார் - எல்.ஆர்.ஈஸ்வரி, டிப்பு, தேனி குஞ்சரம்மா - ***/4

காதல் எதிர்ப்பு அருள்வாக்கு டப்பாங்குத்து. கொஞ்ச நாட்கள் அனைவரின் வேதமாக உலாவரும். எல்.ஆர்.ஈஸ்வரி இன்னொரு ரவுண்டு வரவேண்டும்.

'கண்ண பார்த்து
கலர பார்த்து
காதலுன்னு நம்ப வேண்டாம்

லைட்டா நீ சிரிச்சாலும்
லைட் ஹவுஸில் பார்த்தேன்னு
சும்மாவே சுத்துவானே ரீலு

லேசா நீ பார்த்தாலும்
ரோசாப்பூ தூக்குதுன்னு
காதுலதான் வைப்பானே பூவு'


பத்து விரல்: வைரமுத்து - எஸ்.பி.பி., ஸ்வர்ணலதா - *.5/4

வரிகள் புரியும் சாதாரணமான தாலாட்டு. இரண்டு நல்ல பாடகர்கள் கடமையை முடித்திருக்கிறார்கள். ஆபீஸில் கேட்காதது உத்தமம். தூங்கிவிடும் அபாயம் இருக்கிறது. புதிய அறிவியல் விஷயங்களை சொல்லும் ஆர்வத்தில் பாதரசத்தின் தன்மையை எழுதியிருக்கிறார்.

ஓசையில்லாத பிம்பத்தை போல விழுந்து விட்டாயே மனசுக்குள்ள!

புண்ணாக்குன்னு: நா. முத்துகுமார் - டிப்பு, ஸ்ரீராம் - **/4

காரணமில்லாமலோ காரணத்துடனோ சாமியின் 'வேப்பமரம் பாடல்' நினைவுக்கு வரலாம்.
'கள்ளில் சிறந்த கள்ளு ஒத்த மரத்து கள்ளு
டயரில் பெரிய டயரு லாரியோட டயரு'


ஒட்டியாணம்: வைரமுத்து - ஹரிஹரன், மதுமிதா - **/4

வைரமுத்து இனிப்பான காதல் பாடல்களை எழுதிக் கொண்டிருந்தார். இப்ப அவருக்கு என்னாச்சுங்க ?

'தங்கத்தோடு நான் தாரேன்
அங்கத்தோடு நீ வாரியா?
மஞ்சக் கயிறு நீ தந்தா
என்ன உரிச்சு தாரேன்யா'


சூடாமணி: ஸ்னேஹன் - ரஞ்சித், ஷாலினி சிங் - **/4

சிட்டி காலத்திற்கு ஏற்ற பாய்ஸ் 'டேட்டிங்' ஆகவும் இல்லாமல், முதல் மரியாதை எசப்பாட்டாகவும் முடியாமல் தவிக்கும் பாடல்.

'ஆம்பளைக்கு எப்பவுமே கை கொஞ்சம் நீளம்
கூட்டத்தில் பொண்ணு இருந்தா சீண்டிப் பார்க்க தோணும்
பொம்பளைக்கு எப்பவுமே வாய் ரொம்ப அதிகம்
ஆம்பளையக் கண்டா எப்பவுமே ஜாடை பேசத் தோணும்'


'மின்னலே' ஹாரிஸ் ஜெயராஜும் தெரியவில்லை; 'சாமி'யும் ஆடவில்லை. இந்த ஒலி நாடாவைக் கேட்காவிட்டால் பெரிதாக ஒன்றும் தவறவிடப்போவதில்லை. கவிதைக்கெல்லாம் கஷ்டப்படாத பாடல் வரிகள். ஆனால், எனக்கு 'கில்லி'யின் பாடல்கள் கூட பெரிதாக ரசிக்கவில்லை. சிலர் இப்பொழுது ரம்மியமான பாடல்கள், புத்திசை கானங்கள் என்று விமர்சிக்க, படம் ஹிட்டானதால் 'கொக்கரக்கோ'வை நூற்றியெட்டு முறை கேட்டதாலும் குழப்பத்தில் உள்ளது போல், இந்தப் பாடல்களுக்கும் வாய்ப்பு இருக்கிறது.

நன்றி: தமிழோவியம்

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு