தினமணி நாளிதழ்
ஆந்திரம்: முதல்வர் சந்திரபாபு நாயுடு தொகுதியில் 18 சதவீத வாக்குப்பதிவு. பா.ஜ.க உடனான உறவு மறுபரிசீலனை: திரிணமூல் சூசகம்.
ரஜினியை "பயமுறுத்திய' பத்திரிகையாளர்கள்!
புதுதில்லி, ஏப். 27: தேர்தல் ஆணையத்துக்கு வந்த ரஜினிகாந்த், தில்லி பத்திரிகையாளர்களின் மோதலைக் கண்டு திகைத்து நின்றார். ரஜினி, கேட்டுக்கு உள்ளேயே நின்றுகொண்டார். தொலைக்காட்சி கேமராமேன்கள், மைக்கைக் கம்பி வழியாக உள்ளே நீட்ட, அங்கு நின்றபடியே பேட்டியளித்தார் ரஜினி. பல நிருபர்களால் அதைக் கேட்க முடியவில்லை. பேசிவிட்டு தனது வாடகை வாகனத்தில் ஏறி வெளியே வந்தார் ரஜினி. ஆனால், நிருபர்களும், கேமராமேன்களும் வழியை அடைத்துக் கொண்டு அவரிடம் பேசுவதற்கு முண்டியடித்துச் சென்றனர். இருந்தபோதிலும், ரஜினி வாகனத்தின் டிரைவர் மிக சாமர்த்தியமாகக் கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னேறினார். அந்த நேரத்தில், சில நிருபர்கள் வாகனத்தின் ஓரத்தில் ஏறி, மேல் இருந்த கம்பியைப் பிடித்துக் கொண்டு தொங்கினர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரஜினிகாந்த், தனது காரின் கண்ணாடியை இறக்கினார். அந்த நேரத்தில் தனது கையை உள்ளே நீட்டிய ஒரு நிருபர், மிகவும் கோபமாக, "மரியாதையாக வண்டியை நிறுத்து, குத்திவிடுவேன்' என்று டிரைவரைப் பார்த்து ஆவேசமாகக் கத்தினார். போலீசார் அவரை மிகவும் கஷ்டப்பட்டு வண்டிய விட்டுப் பிரித்தனர். இந்த தள்ளுமுள்ளுக்கு இடையில் இன்னொரு நிருபர், தனது விசிட்டிங் கார்டை ரஜினி மீது தூக்கிப் போட்டு அடிதடியிலும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளப் படாதபாடுபட்டார்.
மயிலை ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலய 80-ம் ஆண்டு நிறைவு விழா
சென்னை, ஏப். 27: சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீவேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் சுவாமிகளும் அலர்மேலுமங்கையும் சமேதராக பிரதிஷ்டை செய்யப்பட்டு 80 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன. இதனைக் கொண்டாடும் வகையில் ஏப்ரல் 28-ம் தேதி முதல் மே 2-ம் தேதி வரை விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று நாட்களும் காலை, மாலை இருவேளைகளிலும் சிறப்பு ஹோமம் நடைபெறும். 30-ம் தேதி டோலோஸ்தவமும், மே 2-ம் தேதி பூர்ணாஹுதி யும் நடைபெறும்.
ஸ்தல வரலாறு: இந்த ஆலயம் 1924-ல் பிரதிஷ்டை செய்யப்பட்டாலும், பூர்வாங்கமாக 1832-ல் ஸ்தாபிக்கப்பட்டது. தாமல் வில்லிவலம் வீரராக வச்சாரியார் தானமாக அளித்த நிலத்தில் ஆலயம் நிர்மாணிக்கப்பட்டு, ஸ்ரீ வேதாந்த தேசிகர் மற்றும் ஸ்ரீ ஹயக்ரீவர் விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த ஆலயத்தின் வேதபாராயண சபை 1905-ல் உருவாக்கப்பட்டது. 1975-ல் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கான மூலவரும், உற்சவமூர்த்திகளும் செய்யப்பட்டன. ஸ்ரீசுதர்சன ஆழ்வாரும் பிரதிஷ்டை செய்யப்பட்டார். ராஜகோபுரமும், சன்னதிகளுக்கு மேல் விமானங்களும் அமைக்கப்பட்டன.
கருத்துரையிடுக