செவ்வாய், ஏப்ரல் 20, 2004

சென்னையில் ஒரு வெயில் காலம் - 2

சுங்கத்துறை அதிகாரிகளை வில்லன் போல் சித்தரித்த சில பதிவுகளை பார்த்திருக்கிறேன். அனேகமாக அவர்கள் எல்லாரும் பம்பாய் அல்லது டில்லியை மட்டுமே சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அமெரிக்கக் குடிபுகலை விட வேகமாக நகரும் க்யூ, குழந்தைகளை வைத்துக் கொண்டிருப்பவருக்கு என தனி வரிசை, வாயிலில் இன்முகத்துடன் 'காமிரா ஏதாவது உள்ளே இருக்கா? லேப்டாப் திரும்ப எடுத்துண்டு போயிடுவீங்க இல்லியா?' என கனிவான விசாரிப்பு என்று சுறுசுறுப்பாகவும் சினேக உணர்வோடும் வரவேற்கிறார்கள். 'Shining India' உண்மையோ இல்லையோ; 'Discover India' என்பது நிதர்சனம்.

பிரிட்டிஷ் ஏர்வேசில் வந்தால் பெட்டி படுக்கை வரத் தாமதமாகலாம். மற்ற (ஐரோப்பாவில் இருந்து தொடங்கும்) விமானங்கள் சீக்கிரமே கொண்டு வந்து வைத்து விடுகிறார்கள். எஸ்கலேட்டர் பாட்டுக்கு பெட்டிகள் இல்லாமல் வெறுமனே சுற்றிக் கொண்டிருக்க, அதற்கு அருகில் ட்ரா·பிக் ஜாமில் மாட்டிக் கொண்டிருக்கும் கார்கள் போல், வரிசையாக அடுக்கப்பட்ட பெட்டிகளின் நடுவே 'இரும்புக் கோடரி' கண்டுபிடித்தது போல் என்னுடைய லக்கேஜ்களை கண்டுகொள்வது எளிது. வெளியே எடுத்து வருவதற்கு தினசரி ஜிம் பயிற்சி தேவை.

நடுநிசி தாண்டிய இரவில் வீட்டுக்கு செல்லும் வழியில் தேர்தல் ஜோர் தெரியவில்லை. பத்து மணிக்கு மேல் புது டில்லியில் நாய் கூட ரோந்து சுத்தாது. பெங்களூர் எம்.ஜி. ரோடும், கல்கத்தாவின் பார்க் ஸ்ட்ரீட்டிலும் அப்பொழுதும் சில பாதசாரிகளைப் பார்க்கலாம். சென்னையின் எல்லா தெருக்களிலும் பலவிதமான போக்குவரத்தைக் காண முடியும். அது இன்னும் அமைதியாகத் தொடர்கிறது. ஆனால், பிரும்மாண்டமான கட்-அவுட்கள், தோரணங்கள், போஸ்டர்கள் எல்லாமே கொஞ்சம் அடக்கி வாசிக்கபட்டது போல் இருந்தது.

சில தேர்தல் சுவரொட்டிகளை பத்ரி படம் பிடித்துக் கொண்டிருந்தார். நான் பிடிக்க வேண்டும் என்று நினைத்து மறந்த ஒன்று: 'பதிமூன்று மாதங்களில் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள் அவர்கள் (உம்மணாமூஞ்சி ஜெ.ஜெ. புகைப்படம்); நிலையன ஆட்சியைக் கொடுக்க வைத்தவர்கள் (கலைஞர் சிரிக்கிறார்)'. என்ன சொல்ல வருகிறார்: 'எங்களைத் தேர்ந்தெடு... மீண்டும் பிஜேபிக்கோ காங்கிரசுக்கோ ஆதரவு தந்து கொண்டே ஆட்சி பீடத்தில் தொடருவோம்' என்கிறார்களா? திமுகவின் கண்ணகி சிலை பளிச்சென்று முகத்தில் அறைகிறது. காமராஜர் சாலையில் சீரணி அரங்கமும், கண்ணகியும் இல்லாதது அழகு சேர்த்தது போல்தான் இருக்கிறது.

கோட்டையை பார்க்க நிறைய வெள்ளையர்கள் வந்திருந்தார்கள். சென்னை எங்குமே வெளிநாட்டினரை அதிகம் பார்க்க முடிந்தது. ஸ்பென்சர் ப்ளாசாவில், ஷாப்பிங் அரங்குகளில் என்று எல்லாவிதமான இடங்களிலும் தென்பட்டார்கள். ஆட்டோகாரர்கள் மாதிரி விஷயம் அறிந்தவர்கள் எவருமே இருக்க முடியாது. ரேடியோ மிர்ச்சியில் வரும் எழுபதுகளின் பாடலாசிரியரை சொல்கிறார்கள். சிம்ரன் மீண்டும் நடிக்க வருவது குறித்து அலசுகிறார்கள். ப.சிதம்பரத்தின் அரசியல் இயலாமையை அங்கலாய்க்கிறார்கள். விஜய்காந்த் நேர்மையானவர்; ஈகோ பார்க்காதவர்; கலைஞருக்குப் பின் அரசியலுக்கு வருவார் என்றும் மன்மோகனாமிக்ஸையும் அருண் ஜெட்laaw-வையும் தொட்டு புஷ்-ஒசாமா வரை தொட்டு 'கனவு மெய்ப்பட வேண்டுமை' திருட்டு விசிடியில் பார்ப்பேன் என்று திருவான்மியூர் டு திருமங்கலம் செல்லும் வரை அலுக்காமல் பேசுகிறார்கள்.

நான் படித்த சாந்தோமில் அனைவரும் ஸ்தோத்திரப் பாடல்கள் பாடுவது கட்டாயமாகிவிட்டது. இன்னும் தமிழ் மீடியம் உள்ளது. ஆனால், அங்கு படிப்பவனும் ஆங்கிலத்தில்தான் அளவளாவுகிறான். பத்தாவது பரிட்சை நடந்ததால் படிப்பில் காட்டும் ஆர்வம் அதிகம்; அதற்கு ஈடாக தோழிகளின் படிப்பிலும் அவர்களுடன் செல்லும் கோடை கால camp குறித்தும், பரிட்சை முடிந்து அழைத்து செல்லப் போகும் ட்ரீட்களுக்குமான திட்டமிடுதலில் காட்டும் ஆர்வமும் நிறைய.

சாந்தோம் தேவாலயத்தின் ஞாயிறு காலைகளில் கூட்டம் வாயிலைக் கடந்து நுழைவாயிலை எட்டிப் பிடிக்கிறது. கபாலீஸ்வரர் தேர் திருவிழாவில் இன்னும் என்ஜின் எதுவும் இழுக்காமல் வடம் பிடித்து, முட்டுக்கட்டை போட்டு, ·ப்ளாட் மாடிகளில் இருந்து பிஸ்லேரி தண்ணீர் பக்கெட் பக்கெட்டாக இழுப்பவர்கள் மேல் ஊற்றி, ரங்கராட்டினம் சுற்றி, பஞ்சு மிட்டாய் வாங்கி, கல் உப்பு கொட்டி, நான் எட்டாவது படிக்கும்போது பார்த்த அதே பொம்மைகளை விற்றுக் கொண்டாடுகிறார்கள். பக்தர்கள் செருப்போடு விபூது, குங்குமம் வாங்கிக் கொள்வது மட்டுமே மாற்றம். 'உயிர்மை'யில் ஜெயமோகன் சொல்வது போல் 'விஷ்ணுபுர' களியாட்டங்கள் தேர் திருவிழா முன் எதையும் நான் பார்க்காதது மகிழ்ச்சியாக இருந்தது.

ஆனால், ரிஷபத்தின் முன் 'குருவி குடைஞ்ச கொய்யாப்பழ' டான்ஸ் போல் கரகாட்டம் இருந்தது. சூடான இசை, அதை விட sugestive nuance movements என்று கொஞ்சம் எசகுபிசகாக சாமிக்கு முன்பு இரவு ஒரு மணிக்குக் கூத்து நடந்து கொண்டிருந்தது. அறுபத்து மூவருக்காக நீர்மோர், சாம்பார் சாதம், வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், சுண்டல், முறுக்கு, பட்டாணி என்று சகலமும் சகலாமானோரும் அளித்தார்கள். அடுத்த நாள் பிஷாடனராக இறைவனார் வந்தார். ஆனால், யாரும் எதுவும் விநியோகிக்கவில்லை.

(தொடரலாம்)

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு