வெள்ளி, ஏப்ரல் 23, 2004

ஜெயகாந்தனாருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஜெயமோகன்: ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் - 1
ஜெயகாந்தன் படைப்புகள் உரத்த குரல் கொண்டவை, வாதாடக் கூடியவை, பிரச்சார நெடி அடிப்பவை , நேரடியாக அப்பட்டமாக தன் உள்ளுறைகளை விரித்துப்போடும் தன்மை கொண்டவை ,ஆகவே கலைத்தன்மை குன்றியவை என்பது நம் சூழலில் பொதுவாக உள்ள கருத்து. இக்கருத்தை உருவாக்கியவர் க.நா.சுப்ரமணியம். மிக வலுவாக பரப்பியவர் சுந்தர ராமசாமி. இருவருமே ஜெயகாந்தனை விரிவான ஆய்வுக்கு உள்ளாக்கவில்லை என்று யோசிக்கும்போது துணுக்குறல் ஏற்படுகிறது.

[அக்கினிப்பிரவேசம்] அவள் அதன் பிறகும் ஒரு சூயிங் கம்மை மென்றபடி இருக்கிறாள். அவன் அவளுக்கு தந்தது அது. அந்த சூயீங் கம்மை அவள் அந்த உடலுறவுக்கு பிறகு தான் வாயில் போட்டிருக்கவேண்டும் ! களங்கமின்மை என்பது மேல்மனதின் ஒரு பாவனைதானா? ஆழ்மனதில் அவள் அவ்வனுபவத்தைத்தான் ' அசை ' போடுகிறாளா? அம்மாவின் பதற்றமும் அழுகையும் நிகழும்போது சூயிங் கம் மென்று கொண்டிருக்கும் அவளுக்குள் வேறு ஒரு பெண் புன்னகை செய்துகொண்டாளா? 'அம்மன் சிலையாக' தன்னை ஆக்கிய அனைத்துக்கும் எதிரான புன்னைகை?

ஜெயகாந்தனை அவர் கடைப்பிடித்த முற்போக்கு அழகியலை மதிப்பிட முற்போக்கு அழகியலில் சாதனை படைத்த யஷ்பால் [ இந்தி ] பிமல் மித்ரா [வங்கம்] நிரஞ்சனா[ கன்னடம்] தகழி சிவசங்கரப்பிள்ளை [மலையாளம்] ஆகியோரையே ஒப்பீடுகளாகக் கொள்ளவேண்டும். ஜெயகாந்தன் மார்க்ஸியத்தை கோட்பாட்டளவில் ஏற்றுக்கொண்ட முற்போக்குப் படைப்பாளி. நம் சூழலில் பாரதி, பாரதிதாசன், புதுமைப்பித்தன், விந்தன் முதலியோரை மார்க்ஸியத்தை ஏற்காத முற்போக்கினர் எனலாம். இவர்களிடமிருந்து அழகியலைப்பெற்றுக் கொண்டு விலகி கோட்பாட்டளவில் மார்க்ஸியத்தை ஏற்றுக் கொண்டவர்கள் ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன்.

கௌரிப்பாட்டி [யுக சந்தி] போன்ற சுயசிந்தனையை முன்வைத்து சமூகத்தை ஒட்டுமொத்தமாக எதிர்த்து நிற்கும் 'முதுகெலும்புள்ள ' கதாபாத்திரங்களைத்தான் அவர் அதிகம் படைத்துள்ளார். மனிதன் அவன் வாழும் சமூகத்தின் துளி, அவனது சிந்தனை அக்காலகட்ட சிந்தனைகளின் ஒரு விளைவு என அவரது கதைகள் சொல்வது இல்லை. தகழி சிவசங்கரப்பிள்ளை , பி.கேசவதேவ், பிமல் மித்ரா ஆகியோரின் ஆக்கங்களில் வருகிற 'உறுதியான முதுகெலும்புள்ள பாட்டாளி ' இந்திய சமூகத்தை மிக மிகக் கவர்ந்த ஒரு கதாபாத்திரம் . அக்கதாபாத்திரங்களை திரையில் வலிமையக நடித்துக் காட்டிய சத்யன் [மூலதனம், நீங்கள் என்னை கம்யூனிஸ்டு ஆக்கினீர்கள், அனுபவங்கள் தவறுகள், அடிமை போன்ற திரைப்படங்கள் வழியாக] கேரள மனதில் ஓர் ஆழ்படிமமாகவே உறைந்துவிட்டார். தமிழில் பாட்டாளி என்பதற்கு பதிலாக ரட்சகன் என்ற படிமம் திரையில் உருவாக்கப்பட்டது.

நவீனத்துவ இலக்கியம் அதன் இருத்தலிய அடிப்படையில் மனிதனை காமமும் வன்முறையுமாக குறைத்துவிட்ட போது இலட்சியவாதம் ஒருவகை அதிகப்பிரசங்கமாக , வெற்றுக் கனவாக , அசட்டுத்தனமாக கருதப்பட்டது. ஜெயகாந்தன் மட்டுமல்ல இலட்சியவாத கதாபாத்திரங்களைப் படைத்த ப. சிங்காரம் [ புயலிலே ஒரு தோணி] எம் .எஸ். கல்யாணசுந்தரம் [ முப்பது வருடங்கள்] போன்ற படைப்பாளிகள் கூட இங்கு புறக்கணிப்புக்குத்தான் ஆளாகியிருக்கிறார்கள்.

முற்போக்கு அழகியலில் இருவகையான போக்குகள் உண்டு. அவற்றை யதார்த்தவாதம், இயல்புவாதம் என்று தோராயமாக வகைப்படுத்தலாம். யதார்த்தவாதம் என்பது எழுத்தாளந்தான் கண்ட யதார்த்தத்தின் சித்திரத்தை அளிக்கமுயல்வது . புறவுலகத்தின் தகவல்களுக்கு சமானமாகவே எழுத்தாளனின் சுயமும் அங்கே இடம் பெறுகிறது. ஜெயகாந்தன் யதார்த்தவாத எழுத்தாளர் என்றால் ஆர் ஷண்முக சுந்தரம், பூமணி பெருமாள் முருகன் கண்மணி குணசேகரன் போன்றவர்கள் இயல்புவாத எழுத்தாளர்கள். பூமணியின் படைப்புகளில் உள்ள அமைதியை நாம் ஜெயகாந்தனின் கதைகளில் எதிர்பார்க்கமுடியாது. ஜெயகாந்தன் படைப்புகளில் அவரது ஆளுமையே முதன்மையாக வெளிப்படுகிரது, அவரது பார்வையே மையமாக உள்ளது. அப்படி இருக்கக் கூடாது என்று அவரது எழுத்துக்கு நிபந்தனை போட விமரிசகனுக்கு உரிமை ஏதும் இல்லை. ஜெயகாந்தன் முற்போக்கு அழகியலில் செயல்பட்டவர். அவரை நவீனத்துவ அழகியல் கொள்கைகளினால் அளவிடும் அசட்டுத்தனத்தை முதலில் செய்தவர் நகுலன். சுந்தர ராமசாமி அவ்விமரிசனத்தை மிகவும் தீவிரப்படுத்தினாலும் எழுதவில்லை. நேர்ப்பேச்சில் தொடர்ந்து பல வருடங்கள் அதை வெளிப்படுத்தினார்.

ஜெயகாந்தனின் மரபுத்தொடர்பு இரு தளங்களில். ஒன்று நமது சித்தர் மரபுடனான அவரது ஈடுபாடு. இரண்டு நம் மரபின் லௌகீகமான அறம் குறித்த அவரது புரிதலில். என் பார்வையில் அவரது மிகச்சிறந்த இலக்கிய ஆக்கமான 'விழுதுகள் ' இந்த ஈடுபாட்டின் விளைவே. முற்போக்கு என்பது ஒரு முடிவற்ற முன்னகர்வு என்றும் நேற்றைய முற்போக்குச்சக்திகளுடன் இன்றைய முற்போக்குசக்திகள் ஆன்மீகமான ஒரு தொடர்பைக் கொண்டுள்ளன என்பதற்கும் சிறந்த உதாரணமாக அமையும் படைப்பு அது. மௌனி, தி.ஜானகிராமன், லா.ச.ரா ஆகியோரின் ஆன்மீகம் பற்றிய மன உருவகங்கள் லௌகீகத்துக்குள் நின்று அடையப்பெற்றவை, முதிர்ந்த லௌகீக நிலையாக ஆன்மீகத்தைக் காண்பவை. நகுலன் நீல பத்மநாபன் ஆகியோரின் படைப்புகளில் ஆன்மீகம் வெற்று பக்தியாக வடிவம் கொள்கிறது . கி.ராஜநாராயணன், சுந்தராமசாமி, ஜி.நாகராஜன் ஆகியோரிடம் ஆன்மீகத் தேடல் என்ற அம்சமே இல்லை. அவர்கள் உலகின் தத்தளிப்புகள் மீது ஓங்கூர் சாமியின் உக்கிரச் சிரிப்பு அலையடிக்கிறது.

ஜெயகாந்தனை இக்கட்டுரையில் முதலில் வகுத்தது அவர் மீறும் இடங்களை அடையாளம் காண்பதற்காகவே.
நன்றி: முழு கட்டுரைக்காக - திண்ணை & நினைவூட்டியதற்காக - பிகேஎஸ்

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு