படித்ததில் பதிந்தது
பிரபல எழுத்தாளர் ராஜ ஸ்ரீகாந்தன் காலமானார்: மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபாடு கொண்ட ஸ்ரீகாந்தன், எழுத்தாளர் அழகு சுப்பிரமணியம் ஆங்கிலத்தில் எழுதிய சிறுகதைகளைத் தமிழாக்கம் செய்து 'நீதிபதியின் மகன்" என்ற தலைப்பில் புத்தகமாக்கினார். அதற்காக அவருக்கு சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது. சிறுகதையாசிரியராக ஆற்றிய பணிகளுக்காக, அவருடைய சிறுகதைத் தொகுதியான 'காலச்சாளரம்" என்ற நூலுக்கு சாகித்திய மண்டலப் பரிசும் கிடைத்தது. இதுவரை, நான்கு நூல்களை வெளியிட்டுள்ள ராஜ ஸ்ரீகாந்தன், 'சூரன் கதை" (வதிரிப் பெரியர் சூரன் பற்றியது) என்ற நூலை வெளியிடவிருந்தார். மூன்று நாவல்களை அச்சுக்கும் கொடுத்திருந்தார்.
நன்றி: ஈழ இலக்கியம்
வல்லிக்கண்ணன் - வண்ணநிலவன்: உரையாடல்கள் என்பவை பலவகைப்பட்டன. சிலருடன் பேசிக் கொண்டிருக்கும்போது, பேச்சுக்குப் பேச்சு தங்களுடைய அபிப்பிராயத்தை சொல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். சிலர் எதிரே இருப்பவருடைய அபிப்பிராயம் எவ்வளவுதான் வித்தியாசப்பட்டாலும் அதை வெளியே சொல்லாமல் மௌனமாக இருப்பார்கள். சிலர் நாசூக்காகத் தாங்கள் நினைப்பதைச் சொல்லிவிட்டுச் சும்மா இருப்பார்கள். சிலருடன் பேசும்போதே, உரையாடல் என்பது முறுக்கேறி விவாதமாகி, இனி நேரில் பார்த்துப் பேச முடியாதபடி, பகையாகவே முற்றி விடும்.
வ.க. எதையும் ஆணித்தரமாக, முகத்திலடிக்கிற மாதிரி பேசவே மாட்டார்கள். அவர்களது கட்டுரைகள் கூட இப்படித்தான் இருக்கும். கட்சி கட்டி நிற்கிற உத்தேசமே வ.க.வுக்கு கிடையாது. எதையும் ஸ்தாபிக்க வேண்டும், தன் வாதத்தை நிலை நிறுத்த வேண்டும் என்ற எண்ணமே வ.க.வுக்குக் கிடையாது.
வ.க.வின் கட்டுரைகள் மேம்போக்கானவை, ஆழமில்லாதவை என்று கூறப்படுவதற்குக் காரணம், வ.க.விடம் வாதம் செய்கிற போக்கு அறவே இல்லாமல் போனதுதான். பெரும்பாலும் எல்லாவற்றையும் ரசிக்கிற மனோபாவம் வல்லிக்கண்ணனுடையது. தன்னைப் பற்றிய தகவல்களைக் கூட ஒரு மூன்றாவது மனிதன் சொல்வதைப் போலத்தான் வ.க. சொல்வார்கள். ஒரு விட்டேற்றியான மனம். அதேசமயம் பிறருடைய கஷ்டங்களைக் கண்டு உருகிவிடும் மனம் வ.க.வுடையது.
நன்றி: சமாச்சார் தமிழ்
ஒரு நல்ல விமர்சனம் என்பது எப்படி இருக்கவேண்டும் - மனுஷ்ய புத்திரன்: நல்ல விமர்சனம், மோசமான விமர்சனம் என்று எதுவுமில்லை. எல்லா விமர்சனங்களும் சார்பானவை. நோக்கங்களுள்ளவை. படைப்பைப்போலவே விமர்சனத்திற்கும் எல்லைகள் இல்லை. என்னைப் பொறுத்தவரை நல்ல விமர்சனம் என்னைப் பாராட்டி எழுதப்படுபவை.
நன்றி: மரத்தடி
பழம்பெரும் மரபினோரே!
வருக, வருக! எனக்கும் ஹரிக்கும் இதைவிடப் பேருவகை இருக்கமுடியாது. மரபின் வளத்தில் ஆழவேரூன்றிப் புதுமை விழுதுகளை விடவேண்டியவர் நாம்.
பழமை பழமை என்று
பாவனை பேசலல்லால்
பழமை இருந்த நிலை - கிளியே
பாமரர் ஏதறிவார்?
என்றான் பாரதி. உணர்ச்சி வசப்பட்டு (காரணமறியாமல்) என் பாரம்பரியம்தான் உயர்ந்தது என்று உரக்கக் கூவுவதோ, அல்லது முற்றிலும் வீண் என்று ஒதுக்கித் தள்ளிவிட்டுப் 'புதுமை படைக்கிறேன்' என்று கிளம்புவதோ இரண்டும் அறிவீனம். மரபை அறிவோம் - விருப்பு வெறுப்பின்றி. அதன்பின் அவரவர் விருப்பம். இது ஒரு திறந்த மன்றம். பரிமாறல் மிக அவசியம். அவரவர் புரிதலை அவரவர் சொல்லுங்கள். மொத்தத்தில் எல்லோரும் வளம்பெறுவோம். அவரவர் ஐயங்களைப் பொதுவில் இடுவோம். ஆளுக்கு ஒரு கைகொடுத்தால் எந்தத் தேரையும் நகர்த்தலாம்.
மரபிலக்கியம் ஒரு தங்கச்சுரங்கம். ஆனால் அவ்வளவே உழைப்புத் தேவை. பயனோ அளவற்றது!
வாருங்கள், சேருங்கள், வளம் பெறுங்கள், வளப்படுத்துங்கள்.
அன்புடன்
மதுரபாரதி
ஹரிகிருஷ்ணன்
Yahoo! Groups : marabilakkiyam
கருத்துரையிடுக