செவ்வாய், ஏப்ரல் 20, 2004

சந்திப்புகள் என்பவை சுவருடைத்தல் - எஸ்.பாபு

பிகேஎஸ் எழுதிய சந்திப்புகள் படித்தவுடன் சமீபத்தில் படித்த இந்தக் கவிதை நினைவில் வந்தது.

சந்திப்புகள் என்பவை சுவருடைத்தல்

முதற் சந்திப்பின்போது
அவரவர்க்குள்ளிருக்கும்
சுவர்களுக்கப்பால்
பதுங்கி இருந்தோம்
எதிராளிக்கு ஏதுந் தெரியாதபடி

அடுத்தடுத்த சந்திப்புகளில்
உவகை தராத
உதட்டுச் சொற்களுக்கு நடுவே
இருவருக்கும் பொதுவான
உணர்வுப் பொறியொன்று
தெறித்து விழுந்த கணத்தில்
உடைக்கத் தொடங்கினோம்
நம் வெளிச்சுவர்களை

கூப்பிடவுடன் வந்துவிடுகிற
குழந்தையைப்போல
எதிர்பாராத இனிய அதிர்ச்சியாய்
அமைந்துவிட்ட சந்திப்புகளில்
மேலும் மேலுமென சுவருடைத்து
உறவின் இடைவெளி
சிறுக்கக் கண்டு களித்திருந்தோம்

அதன்பின்
பெருஞ்சுவரொன்று
பெயர்ந்து விழுந்தது
பலகீனங்களையும் பிழைகளையும்
நாம் பகிர்ந்து கொண்டபோது

மிச்சம் மீதி இருக்கும்
அந்தரங்கத் திரைகள் கிழித்து
உனக்குள் நானும் எனக்குள் நீயும்
உள்ளிறங்கி
விரல் நுனிவரை
வியாபித்து விட முடியாதெனவும்
தெரியும் நமக்கு.

நன்றி: காளான் பூக்கும் காலம் - எஸ்.பாபு
தமிழினி ரூ. 25/-


பிகு: இதற்கும் பின்தொடர்தல் போட பயமாக இருக்கிறது. எனக்கு ஹிட்ஸ் தேவை
என்று போட்டீர்கள் என்று கிண்டல் செய்து கண்ணடித்து விடுவார் சிவகுமார்.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு