திங்கள், ஏப்ரல் 19, 2004

சென்னையில் ஒரு வெயில் காலம்

பெங்களூரில் இரண்டு வருடம், டெல்லியில் ஒரு வருடம், கல்கத்தாவில் இரண்டு மாதம், ராஜஸ்தானில் நான்கு வருடம், என்று இந்தியாவை க்ளோசப்பில் பார்த்தாலும் சென்னையோடு இருக்கும் love-hate தொடர்பைப் புதுப்பித்துக் கொண்டேன். வழக்கமாக ஒரு நாள் மட்டுமே சென்னையில் தங்கி பாஸ்டன் திரும்பிவிடும் எனக்கு இந்த முறை நீண்ட விடுமுறை. பத்து நாட்கள் இருந்தாலும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா என திகட்டாத இருப்பு.

போன முறை ஏ.ஆர்.ரெஹ்மானையும் அதற்கு முந்திய முறை ரஞ்சிதாவுடனும் விமானத்தில் சிறிய சந்திப்புகள் கிடைத்தது. இந்த முறை மனைவி+குழந்தை. 'ஆண்ட்டி என்ன கேட்டா' என்று ஏர் ஹோஸ்டஸ் ஆங்கிலத்தில் கேட்டதை மொழி பெயர்த்தும், 'அங்கிள் என்ன சொல்றா' என்று பைலட் ஜெர்மனில் பேசுவதை விளக்கியும், மஞ்ச பொத்தானை அமுக்காதே என்று சொல்லியும் அமுக்கியதால் வந்து கோபத்துடன் 'என்ன வேணும்' என்று வினவிய விமான-விருந்தோம்பியிடம் மன்னிப்பு கேட்டும், மேகங்களையும் பாலைவனங்களையும் வேடிக்கை காட்டியும் விமானப் பயணம் சென்றது.

எனது celebrity meeting disorder syndrome-ஐ த்ரிஷா தீர்த்துவைத்தார். பார்க் ஷெராடன் வாசலில் பேசாத செல்·போனை ரொம்ப நேரம் காதில் வைத்துக் கொண்டு சோகமாகக் காத்திருந்தார். ரொம்ப நேரம் காத்திருந்தும்
பேசுவதாகவும் தெரியவில்லை; செல்பேசியைக் காதை விட்டும் எடுக்கவில்லை என்பதால் பொறுமையிழந்து நகர்ந்தேன்.

சென்னையில் ட்ரா·பிக் நன்றாக நகர்கிறது. பாஸ்டனையோ வேறு வளர்ந்த அமெரிக்க நகரங்களின் downtown-களுடன் ஒப்பிட்டால், ஆனந்தக் கண்ணீரே வருகிறது. பாரிமுனையாகட்டும், திரையரங்குகள் நிறைந்த அண்ணா சாலையாகட்டும், கடைகள் மட்டுமே உள்ள தியாகராய நகர் முதல் ஸ்டெர்லிங் ரோட் வரை எல்லா இடங்களிலும் வெகு எளிதாக ஆட்டோவும், காரும், டூ-வீலர்களும் ஓட்டப்படுகின்றன.

அமெரிக்கர்களுக்குக் கலாசார அதிர்ச்சி ஏற்படும் என்று முன்பு சொல்வார்கள். இப்பொழுது அந்த மாதிரி ஏதும் நிகழாது என உறுதியாக சொல்லலாம். பெண்கள் சுதந்திரமாக க்விகீஸ் காபி கடை வாசல்களிலும், மாண்டியத் ரோட் சந்திப்புகளிலும், இன்ன பிற upscale hangout-இன் திறந்தப் பிரதேசங்களில் ஊதித் தள்ளுகிறார்கள். லை·ப்ஸ்டைல், க்ளோபஸ், ஷாப்பர்ஸ் ஸ்டாப் என எல்லாப் பிரதேசங்களிலும் ஸ்லீவ்லெஸ் மினி டாப்களும், மைக்ரோ ஸ்கர்ட்களும் பாய் ·ப்ரெண்ட்களால் வாங்கித்தரப்படுகின்றன.

பைக்களில் முன்பு குழந்தையை இடுக்கிக் கொண்டு சேலையைப் பிடித்துக் கொண்ட மனைவியை பின்புறம் அமர்த்திய பேண்ட்-ஷர்ட் கனவான்களைப் பார்ப்பேன். அவர்களுடன், டை கட்டிய வாலிபர்கள் கொஞ்ச நாள் முன்பு பார்த்தேன். இப்பொழுது இவர்களுடன் காதில் கடுக்கண் அணிந்த, கறுப்பு பனியன் அணிந்த, அரை நிஜார் அணிந்த வாலிபர்களையும் அவர்களை இறுகப் பற்றிய இறுக்கமான ஆடைகளை அணிந்த வாலிபிகளையும் புதிதாக சேர்த்துக் கொள்ளலாம்.

ஐயங்கார் கல்யாணங்களில் இன்னும் 'சாத்தமுது வேணுமா' என விசாரிப்புகளுடன் (காதல் செய்தாலும்) விரிவான கல்யாணங்கள் நடைபெறுவது; கோவில்களில் எக்கச்சக்க கூட்டத்தினால், திடகாத்திரமாக இருந்து தள்ளுமுள்ளு தெரியாவிட்டால் பிரதோஷக் காலங்களில் கபாலி கோவில் உள்ளே கால் வைக்க முடியாமல் இருப்பது; லேண்ட்மார்க் அருகே 'பார்க்' என்று நண்பருடன் பேசிக் கொண்டு செல்லும்போது உரிமையோடு மக்கள் 'பார்க் ஹோட்டல்
இங்கே இல்லையே... வழி தவறிட்டீங்களா?' என நட்போடு வழி காட்ட முயல்வது; என்று பலவிதத்தில் சென்னையின் flavor intact-ஆக இருக்கிறது.

நிறைய ஆர்ட் காலரிகள்; அவற்றில் விதவிதமான கண்காட்சிகள். ரசனைக்கேற்றவாறு பயிலரங்குகள், கருத்தரங்குகள், திருவிழாக்கள், பொருட்காட்சிகள் என்று ரசிக்கத்தக்க சுவாரசியமான இடம்.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு