கோலிவுட்டும் இயக்குநர் சினிமாவும் பிதாமகன் இயற்கை மற்றும் மீடியா முன் வைக்கும் சில விஷயங்கள் - க்ருஷ்ணா : "இரண்டு படங்களுமே தீபாவளி ரீலிஸ¤க்கு தயாராய் இருந்தது. ப்ரீவியூஷோ, பத்திரிகையாளர் காட்சி எல்லாமே தீபாவளி நாளை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டன. ஆனால் ஒரு படம் தீபாவளி அன்று வெளியானது. மற்றொன்று வெளிவர முடியாமல் போனது. அதேசமயம் இரண்டு படத்தின் இயக்குநர்களுமே அந்தந்த அளவில் மீடியாவின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார்கள். படம் வெளியானதும் பாலாவை மீடியா அண்ணாந்து பார்த்து சிலாகித்தது. சற்று தாமதமாக வெளியான மற்றொரு படத்தின் இயக்கம் கவனிக்கத்தக்க ஒன்று என்ற அளவில் பாராட்டப்பட்டது. ஆக இரண்டு படங்களுமே வழக்கமான தமிழ் சினிமா சூழலில் இருந்து ஏதோ ஒன்றில் வித்தியாசப்பட்டிருப்பதை தமிழ் மீடியாக்கள் அடையாளம் கண்டு கொண்டு அதை அடி கோடிட்டு காட்டி உயர்த்திப் பிடிப்பது ஆரோக்யமான விஷயம் தான்.
விக்ரம், சூர்யா, லைலா, சிம்ரன், கருணாஸ், லொக்கேஸன், மேக்கப், ஒளிப்பதிவு என்று எல்லாவற்றையும் தாண்டி பிதாமகன் பாலாவுக்கு மட்டுமே சாத்தியமானதாய் எதன் அடிப்படையில் மீடியா நம்பியது - சில பார்வையாளர்கள், நல்ல சினிமா விரும்பிகள், சினிமா கனவுகளுடன் இருப்பவர்கள் என்று இந்த பட்டியல் நீளும். இதன் ரகசியம் முற்றிலும் முழுக்க பாலாவுக்கு தெரியும். அது வியாபரம் சார்ந்தது, தனி மனித ஆளுமை மற்றும் ஒரு விஷயத்தின் மாற்று பார்வையின் வெற்றி சூட்சுமம் சார்ந்தது.
நல்ல சினிமா விரும்பிகள் சிம்ரனின் தொப்புள் காட்டாததைத்தான் சிலாகித்துக் கொண்டிருப் பார்கள். பாலாவின் படத்துக்கு சிம்ரன் தேவைப்பட்டதை உணரமாட்டார்கள், அல்லது உணர்ந்தாலும் வியாரத்துக்கு என்ன செய்ய முடியும் என்று அடங்கி விடுவார்கள்.
அடிப்படையில் இந்த படத்தின் திரைக்கதை ஒரு உயிரற்ற சடலம் போல் அப்படியே கிடக்கிறது. அதை தூக்கி நிறுத்துவதற்கு, படத்தின் இறுதிக்காட்சியில் சித்தன் வில்லனோடு போடும் சண்டையை பாலா திரைக்கதையோடு போட்டிருக்கிறார்.
சின்னதம்பி பிரபு கேலிக்குள்ளாக்கப்பட்டது போல் சித்தனைப் பார்த்து எந்த மீடியாவாவது கேள்வி எழுப்பியதா என்று தெரியவில்லை.
அடுத்தது இந்த படம் விளிம்புநிலை மனிதர்களை முக்கிய பாத்திரமாக்கி இருப்பதாக ஒரு தோற்றம் கொடுப்பது. இது இன்னும் சோகம். நந்தாவில் கருணாஸ் செய்த பாத்திரத்தின் நீட்சிதான் பிதாமகனின் சக்தி பாத்திரம்.
சித்தனை வளர்த்தவருக்கு வேண்டுமானால் குடும்பம் இல்லாதிருந்திருக்கலாம். ஆனால் தனி நபராக ஒரு கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவம் பார்க்க முடிந்த வாழ்வியல் பக்குவம் கொண்டவர். அப்படி ஒருவர் ஒரு நாயைக் கூட தோழமையோடு தான் வளர்த்திருப் பார். ஒரு மனிதனை நாயாக அல்ல.
இயற்கை படத்தின் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் வேறு மாதிரி சொல்கிறார். இந்த படத்தின் கதாபாத்திரங்கள் மாதிரி எனக்கு மகன்களோ மகளோ இருந்தால் அது என்னால் விரும்பப்படக்கூடிய ஒன்று. அவர்களோடு என்னால் ஆரோக்கியமான உறவு கொள்ள முடியும். அப்படிபட்டவர்கள் தான் என்றும் என் கதாபாத்திரமாக இருப்பார்கள்.
கோலிவுட் கணக்கில் ஹீரோவை நம்பி எடுக்கப்பட்ட படம் தான் என்றாலும் இந்த படத்தில் ஹீரோக்கள் விரவிக்கிடக்கிறார்கள். பாரில் பீர் பாட்டில் பொறுக்கும் முதியவர், ஒரு பெண் பாலியல் தொழிலாளி என்று பட்டியலிட முடியும். ஹீரோயிஸம் என்பது ஒரு காட்சியில் அல்லது படத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு விஷயமன்றி வேறொன்றுமில்லை.
தியேட்டருக்குள் வரும் முதல் வார கூட்டத்தில் சிக்கிக் கொண்டு அந்த கூட்டத்தோடு கூடவே இயக்குநர் சினிமாவை நெருங்குவதற்கான பிரயத்தனங்களில் இந்த படங்கள் ஒரு படிக்கட்டு தான் என்பதும், முழுமையானதல்ல என்பதும் கூட அவர்களுக்குத் தெரியும். ஆனால் மீடியாவிற்கு, சினிமாவைப் பொறுத்தவரை இந்த வளர்சிதை மாற்றம் எதுவும் கிடையாது. அவை சினிமாவிற்கான விளம்பர நிறுவனங்களைப் போல் செயல்படத் தொடங்கி விட்டன என்பது தான் தற்போதைய உண்மை. "
முழு கட்டுரையும் படிக்க ஆறாம்திணை செல்க.
புதன், டிசம்பர் 17, 2003
புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக