சனி, டிசம்பர் 06, 2003

The buzzword seems to be Manushyaputhiran
பாஸ்டன் பாலாஜி


அம்மா இல்லாத முதல் ரம்ஜான்

அம்மா இல்லாத
முதல் ரம்ஜான்
நன்றாய் நினைவிருக்கிறது
அம்மாவைப்போலவே.

எல்லா வீடுகளுக்கும்
வெள்ளையடித்த சுவர்களையும்
எங்களுக்கு
ஞானத்தையும் கொண்டுவந்த
ரம்ஜான்.

அதிகாலையில்
குளிக்க எழுப்பிவிடும்
அம்மாவை எழுப்பிவிட
அன்று யாருமில்லை.

தூங்காத இரவை
சூரியன் எடுத்துச் சென்றபின்
எழுந்தோம்.

உலகம் முழுவதற்கும் போதுமான
நிராதரவும், ஏழ்மையும்
எங்கள் வீட்டில்
கப்பிக்கிடந்தது.

பிறரது
இரக்கத்தின் கனத்தை
பொறுக்கச் சக்தியில்லாத
தங்கை
கொடுத்தனுப்பப்பட்ட
எல்லாப் பட்சணங்களையும்
திருப்பியனுப்பிவிட்டு
ஐதீகம் மீறி
எண்ணெய் சட்டி
பற்றவைத்தாள்

தந்தை சாப்பிடாமலே
தொழுகைக்குச் சென்றார்.
அவரைப்போன்றோரின்
காதல்பற்றி
கவிதைகளில் குறிப்பிடப்படுவதில்லை.

சின்னத் தம்பியை
கட்டாயப்படுத்தி
புத்தாடை அணிவித்தோம்.

அம்மா இறந்த இரவில்
'இனிமேல்
வரவே வராதா ?'
என்றழுத பிள்ளையை
அப்படியே விட்டுவிட முடியாது.

ஆண்டுக்கொருமுறை
தெருவெல்லைகள் கடந்து
வீடுவீடாய்ச் செல்லும்
உறவுக்காரப் பெண்கள்
எங்கள் வீட்டில்
நுழையாமலே கடந்துசென்றனர்.

அம்மா இறந்த மறுநாள்
சாவு பயத்தில்
மெடிக்கல் செக்-அப்
செய்துகொண்டவர்கள்தான்
அவர்கள்.

(அம்மாவுக்கு சாகிற வயசா ?
சாகிறதுக்கு வயசா ?)

நரம்புகளைத் தூண்டும்
மந்திரங்களின் பேரொலியுடன்
தொழுகை ஊர்வலம்
வீதியில் சென்றது.

பாட்டியின் கைகள்
ஏன் அவ்வளவு பயங்கரமாய்
நடுங்கின ?

மூலைக்கு மூலை
சாவு சிரித்தது.

அம்மாவை
நீலம் பாரித்த முகத்துடன்
மீண்டும் தூக்கிவந்து
கிடத்தியதுபோலிருந்தது.

முந்தைய ரம்ஜானில்
இந்த அளவுக்கு
இல்லாமல் போவோம் என
நினைத்திருப்பாளா ?

பண்டிகைகள் கொண்டாடாத
நாத்திகனான நான்
முகத்தை மூடிக்கொண்டு
அழுதேன்.

பின்னர்
வேறு ரம்ஜான்கள் வந்தன.

அதிகாலைக் குளியல்,
வெள்ளையடித்த சுவர்கள்,
வீட்டில் கூட்டம்,
புத்தாடைகளின் நறுமணம்,
அம்மா இடத்தில் அண்ணி.

எல்லாமே
எப்படியோ
சரிக்கட்டப்பட்டு
திரும்பிவிடுகிறது.

ஆனால்,
நானந்த
முதல் ரம்ஜானை
பத்திரமாய் வைத்திருப்பேன்.

ஏனெனில்,
அல்லாவை எதிர்த்து
எங்கள் அம்மாவுக்காக
கொண்டாடப்பட்ட அது.

- மனுஷ்ய புத்திரன்

'என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்' தொகுப்பிலிருந்து

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு