வெள்ளி, ஜனவரி 16, 2004

கதை விட வாங்க - 1

தமிழின் பல இணைய தளமெங்கும் அடிபடும் 'மரத்தடி சிறுகதைப் போட்டியில்' வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

என்னுடைய அம்மாவின் எழுத்துகள் மூலம் எழுதும் ஆசை வந்தாலும் கல்லூரிக் காலம் வரை வெகுஜன பத்திரிகை வாசகனாக மட்டுமே காலம் தள்ளி வந்தேன். கையெழுத்துப் பத்திரிகை நடத்த இயலாத வட இந்தியாவில் ஒரு மூலையில் இருக்கும் கல்லூரி. இப்பொழுது மாதிரி வலைக் குறிப்புகள், இணைய சஞ்சிகைகள், மடலாடற் குழுக்கள் எதுவும் மாட்டாததால் பலர் என்னுடைய எழுத்துக்களில் இருந்து தப்பித்து வந்தனர்.

தினம் ஒரு கவிதையில் சேர்ந்தது மடலாடற் குழுக்களுடன் ஆன முதல் தொடர்பு. திஒக-வில் செவ்வாய்தோறும் வரும் கொத்து பரோட்டவிலாவது எழுத வேண்டும் என்று ஆசை வந்தது. அப்பொழுதுதான் அகத்தியர் குறித்து திஒக மடலில் தெரியவர, அங்கு சேர்ந்தேன். பிரமிக்கத் தக்க அளவுகளில் ஆழமான மடல்களைப் பார்த்து ஒதுங்கியே இருந்தேன்.

கொஞ்ச காலத்தில் இரா.மு. ராயர் காபி க்ளப் துவங்க அங்கும் இணைந்தேன். இப்பொழுது வலைப்பூக்கள் முளைப்பது போல், போன வருடங்களில் தோன்றிய, நான் கண்டுபிடித்த வேறு பல மடலாடற் குழுக்களிலும் சேர்ந்தேன். மதில் மேல் பூனையாக ஒதுங்கி இருக்கும் சிலரையும் பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கும் புலிகளையும் உசுப்பி விட சொக்கர் சிறுகதைப் போட்டியை அறிவித்தார்.

'சிவாஜி வாயிலே ஜிலேபி' என்னும் தலைப்பு. நான் ஒரு புரியாத கதையும், பிரசன்னா பரிசுக் கதையையும், எல்லே சுவாமிநாதர் ஒரு நகைச்சுவைக் கதையையும், இன்னும் பலர் தங்கள் முதல் சிறுகதையையும் எழுத வைத்த போட்டி. அதன் பிறகு பல முயற்சிகளில் தடுக்கி விழுந்தாலும் இன்னும் தொடர்ந்து கதை விட முயல்கிறேன். என்னுடைய இந்த வாரக் கதையைப் படித்து விட்டு விமர்சித்தால் அடுத்த கதையில் அவற்றை மனத்தில் கொண்டு எழுதுவேன்.

இணையத்தில் ஆங்காங்கே இருக்கும் 'எப்படிக் கதை எழுதுவது' என்னும் அட்வைஸ்களையும், ராகாகி மடல்களில் டிப்ஸ் கொடுத்த சிஃபி வெங்கடேஷ், புத்தகப் புழுவில் பட்டியலிட்ட பாரா அவர்களின் மடல்களையும் வரும் நாட்களில் பகிர்ந்து கொள்வேன்.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு