நத்தார் தினத்து எண்ணங்கள்
நான் கத்தோலிக்கப் பள்ளியில் படித்தாலும் நத்தார் தினத்தின் (கிறிஸ்துமஸ்) அருமை பெருமைகளை அறியாமலேயே வளர்ந்தேன்.
எங்கள் தெருவில் எதிர்த்த வீட்டில் மட்டுமே டேப் ரிகார்டர் உண்டு. அல்லது அவர்கள் மட்டுமே 'விநாயக சதுர்த்தி' திருவிழா ஸ்பீக்கராக 'நேயர் விருப்பத்தை' 144-வது வட்டாரத்துக்கே அலற விடுவார்கள். சூலமங்கலம் சகோதரிகளின் சஷ்டி கவங்களையும், 'ராஜா... ராஜாதி ராஜா'க்களையும் அதிக அளவில் கேட்டது அங்கேதான். டிசம்பர் 25 அன்று எங்களுக்கும் கேக் கொடுப்பர்கள்.
சாண்டா வந்து பரிசுகள் தந்தாரா என்று சொல்லவில்லை. இந்தியாவில் தேர்தல் வருவது போல் அடிக்கடி நான் கொடுக்கும் சென்னை வருகையில், கேட்க வேண்டும் என்று நினைத்து, மறக்கும் நிகழ்வுகளுள் ஒன்று. அவர்கள் வீட்டில் நட்சத்திரமும் தொங்க விடுவார்கள். மந்தவெளி தெருவின் மாட மாளிகைகள் பலவற்றிலும் வித விதமாக சிவப்பிலும், இன்ன பிற வண்ணங்களிலும் மரத்தில் பல்ப் நட்சத்திரங்கள் எரியும். புத்தாண்டு வரை இருக்கும். நட்சத்திரம் வைக்கும் வீடுகளில் மட்டுமே யேசு அருள்பாலிப்பார் என்பது வருத்தத்தை கொடுத்தது. நாமும் வைக்கலாமா என்று கேட்டால் சிவன் கோபித்துக் கொள்வாரோ, மார்கழி வெண்பொங்கல்கள் கிடைக்காதோ, அரையிறுதி பரிட்சையில் ·பெயிலாயிடுவேனோ, பள்ளியில் எல்.பி.டபிள்யூ. என்பதற்கு லவ் பி·போர் வெட்டிங் என்று சக மாணவனுக்கு சொன்னது டீச்சர் காதில் எட்டி, என்னை (செல்லப்பிராணி) பெட்-லிஸ்ட்டில் இருந்து கழற்றி விட்டு விடுவாரோ என்று பயந்து ஒதுங்கியே நடப்பேன்.
இன்றோ வீட்டின் அடுப்பு வழியாகவோ, டிவியிலிருந்தோ, சாண்டா வருகிறார். விளக்கேற்றிய கிறிஸ்துமஸ் மரத்துக்கு அடியில் என் மகளுக்கும், மனைவிக்கும், (எனக்கும் கூடத்தான்) பரிசுப் பொருட்கள் வைத்து செல்கிறார். தோட்டத்துப் பச்சை பசேல் மரத்தின் வாசனை வீட்டை நல்ல நாற்றமடிக்க வைக்கிறது. ஒரு நாள் வரும் சாண்டாவிற்காக வருடம் முழுக்க சொன்னபடி கேட்கும் குழந்தைக்காகவாவது அனைவரும் கிறிஸ்துமசை விமரிசையாகக் கொண்டாடுதல் அவசியம்.
அண்டை அயலாரையும், நண்பர்களையும் கண்டாலேயே பயந்து எங்கள் பின் ஒளிந்து கொள்ளும் என் மூன்று வயதுப் பெண், பெருங்கடைகளில் இருக்கும் ஒட்டு தாடி சாண்டாவிடம் வாஞ்சையுடன் மடியில் உட்கார்ந்து கொள்கிறாள். பிள்ளை பிடிப்பவர்களும், கடத்துபவர்களும் இனி சாண்டா க்ளாஸாக வேடம் கட்டிக் கொண்டால் போதும். ஒரு கத்தல், பிடிவாதம் இல்லாமல் குழலூதும் பைப்பராக சிறார்கள் சென்று விடுவார்கள்.
அமெரிக்காவில் பணம் நன்றாகப் புழங்கிக் கொண்டிருந்த காலங்களில் 'நன்றியறிவித்தல் தினம்' முடிந்ததில் இருந்தே அலங்காரங்கள் பிரமாண்டமாக இருக்கும். மயிலாப்பூரின் மாட வீதிகள், மல்லேஸ்வரத்தின் க்ராஸ் ஸ்ட்ரீட்டுகள், டெல்லியின் ரிங் ரோடுகள் என அமெரிக்கர்களின் ஒவ்வொரு முக்கிய தெருக்களும் அமர்க்களப்படும். கல்யாணத்தன்று மண்டபத்தின் வெளியில் இருக்கும் விளக்குச் சரம் போல், ஒவ்வொரு வீட்டிலும் எல்.ஈ.டி.க்களே ஆக்கிரமித்திருக்கும். கையாட்டும் சாண்டா, மான் வண்டி சாண்டா, கார் போனால் குதிக்கும் சாண்டா, பொம்மை பனி சித்திரங்கள், என்று பல வண்ணங்களில் மின்சார கட்டணத்தை சிரப்புஞ்சி தண்ணீராக செலவழிப்பார்கள்.
இன்றைய மந்த நிலையிலும், அனேக இலையுதிர்ந்த மரங்கள் சரவிளக்குகள் தாங்கியிருக்கின்றன. வீட்டு வாசலில் மாட்டுத் தொழுவத்தில் யேசு பிறந்த காட்சியமைப்பு நினைவு கூறப் படுகிறது. பார்த்தவுடன் பச்சக்கென்று ஒட்டிக்கொள்ளும் சந்தோஷமும், மகிழ்ச்சியும் நாமும், நம் வீட்டை ஒளி வெள்ளத்தில் மிதக்க விட வேண்டும் என்று ஆசைப்பட வைக்கிறது. கிறிஸ்து பிறந்த சமயத்தில் பனி பெய்தால், நாம் இருக்கும் இடங்களில் பனி கொட்டினால், விழா பூரணமாய் ஏற்றுக் கொள்ளப் பட்டதாய் கருதுகிறார்கள். நல்ல வேளையாக இந்த கிறிஸ்துமசுக்கு, யேசு பாஸ்டனில் அருள்பாலிக்கவில்லை. கொஞ்சமாய் மழை மட்டுமே கொடுத்தார். ஸ்விஸ் மக்கள்தான் அதிக அளவு புண்ணியம் செய்தவர்கள். அவர்கள் நாட்டில்தான் அதிக தடவை நத்தார் தினத்தன்று பனி பெய்ததாக சொல்கிறார்கள். அமெரிக்காவில் யூடாவின் உப்பு ஏரி நகரத்தில் (சால்ட் லேக் சிடியின் தூய தமிழ்) இருக்கும் நண்பன் திட்டிக் கொண்டுதான் இருந்தான். மூன்றடி பனி வந்ததற்காக 'சந்தோஷப் படேண்டா' என்று நான் கேட்டேன். சுத்தம் செய்பவர்களும் கொண்டாட போய் விட்டதால் தெருவெங்கும் பனி அப்படியே இருந்து விட்டது. அடுத்த நாள் காலை அலுவலகம் செல்ல வேண்டிய அவசர நிலை. ஸ்கீ மொபைல் இருந்தால் ஒழுங்காக போயிருப்பேன் என்று புலம்பிக் கொண்டிருந்தான்.
தீபாவளியாகட்டும், கிறிஸ்துமசு ஆகட்டும், எனக்கு காலை பேப்பர் தேவை; பனி நீக்கப்பட்ட சாலைகள் தேவை; பொதுப் போக்குவரத்து தேவை; தாறுமாறாக ஓட்டுபவர்களை பிடித்து உள்ளே தள்ள சாலையோர காவல் படை தேவை; அவசரமாக ரொட்டி வாங்க ஒரு பெட்டிக் கடை தேவை. டிவியில் பத்து சேனலகளின் செய்தி வாசிப்புகள் தேவை. அவர்களுக்கும் பைன் மரங்களின் புத்தம் புதிய வாசனையை உள்ளடக்கிய வீட்டில், ஒரு கையில் பேப்பரோடும், ஒரு கண்ணில் சி.என்.என்.னின் தலைப்புச் செய்திகளோடு, மற்றொரு கையில் காபியோடும், இன்னொரு கண்ணில் உறவினர்களின் பரிசுப் பொருட்கள் அங்கலாய்ப்புகளை வேடிக்கை பார்த்துக் கொண்டே, சன்னல் வழியாக பனி பொழிவதை ரசிக்க ஆசை இருக்காதா?
வைகுண்ட ஏகாதசி அன்று எங்கள் மரத்தின் அலங்காரங்களை நீக்கி, கிறிஸ்துமஸ் அலங்கரிப்புகளை அடுத்த வருஷத்துக்காக அட்டை பெட்டியில் அடைத்து வைக்கிறோம். பார்த்தசாரதிக்காக பட்டினியும் உண்டுதான். இந்திய சமூக உணர்விற்காக மஹாலஷ்மி கோவிலும் செல்வோம்.
கருத்துரையிடுக