தமிழா... தமிழா
விருந்தினராகச் சென்ற இடத்தில் இன்ஸ்டண்ட் காபி கொடுக்காமல் அதிசயமாக ·பில்டர் காபி கொடுப்பது போல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா (ஒரே) ஒரு நாள் போட்டியில் ஜெயித்துள்ளது. அந்த ·பில்டர் காபியிலும் ஸ்டார்பக்ஸ், மாக்ஸ்வெல் என்று புளித்த கொட்டையை அரைக்காமால், நரசுஸ் காபி போட்டு எடுத்து வந்தால் எப்படி இருக்கும்? தமிழ்நாட்டின் பாலாஜி பந்துகளில் நாலு பேர் வீழ்ந்தது அவ்வளவு ஆச்சரியங்களையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது.
தமிழ்நாட்டின் பிற வீரர்களைப் போல் இல்லாமல் பல ஆட்டங்கள் தொடர்ந்து ஆடவைக்கவும், ஆட்டத்தில் சரியான வாய்ப்புகள் கொடுக்கவும் இறைவனை வேண்டுவது அல்லாமல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. 'தெற்குத் தேய்கிறது; வடக்கு வாழ்கிறது' என்று எதற்கோ குரல்கொடுத்தவர்கள், கிரிக்கெட்டையும் கண்டு கொள்ளாமல் விட்டது வருத்தமே.
தமிழ்நாட்டின் ரஞ்சி அணியை ஹிந்துவின் எழுத்துக்களில் தொடர்ந்து ரசித்து வந்த பலரில் நானும் ஒருவன். வி. சிவராமகிருஷ்ணனும், அப்துல் ஜபாரும் என்னுடைய பள்ளிக் காலங்களில் தொடர்ந்து ஏமாற்றாத வீரர்கள். ஒருவர் ஆட்டத்துக்கு ஆட்டம் ஒழுங்காக ஆடினால் அணியில் என்றாவது இடம் பெறுவார் என்னும் அணி அரசியல் தெரியாத பொற்காலம் அவை.
கல்லூரியில் சேர்ந்த பிறகும் வெங்கடரமணாவையும் சரத்தையும் ஆர்வத்துடன் தொடர்ந்து ஹிந்துவில் படித்து வந்தேன். பள்ளியில் கூடப் படிக்கும் போதே மிரட்டியவர் சரத். சரத்தின் ஆட்டம் நேரில் பார்ப்பதற்கு பயமாக இருக்கும். டீமுக்கு ஆள் எடுக்க மாங்கொட்டை டாஸ் போட்ட காலங்களிலேயே, வந்து விழும் முதல் பெயர் சரத் ஆகத்தான் இருக்கும். எதிரணியில் சரத் ஆடினால், ·பீல்டீங் வெகு சுலபம். சும்மா நின்றிருந்தால் போதும். தலைக்கு மேல்தான் பந்துகள் சென்று கொண்டிருக்கும்.
கருமமே கண்ணாயினார் மாதிரி சரியான குறிக்கோள்கள், விளையாட்டில் பயிற்சியின் மூலம் விடா முயற்சி, என பாடத்திட்டத்தில் வரும் வள்ளுவரின் குறளுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாய் இருப்பவன். தமிழ் நாட்டுக்காக ஆட வாய்ப்பு கிடைத்தவுடன், அடுத்து இந்தியாவுக்காக ஆடச் செல்லும் வாய்ப்பு மிக அருகில்தான் இருக்கிறது என்று தமிழ்நாடு அணியின் கிரிக்கெட் வீரர்களை அறிந்தவர்கள், இந்தியாவில் ரஞ்சிக் கோப்பையை முக்கியமாகக் கருதும் நபர்கள் அனைவரும் எண்ணியிருப்பார்கள்.
டீன் வயதின் எழுச்சி நாயகன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு கிடைத்தபோது இந்த முடிவுகள் வலுப்பெற்றன. அவருக்காவது மட்டை மட்டுமே பிடிக்கத் தெரியும். நம்ம பையனுக்கு பந்தையும் சுழல விடத் தெரியுமே என்னும் நம்பிக்கைதான் காரணம். ஒன்றோ இரண்டோ 'ரெஸ்ட் ஆ·ப் இந்தியா' ஆட்டங்கள் மட்டுமே ஆடி முடித்த அவரை, இன்று பின்னோக்கிப் பார்க்கையில் அபிஜித் காலே கண்ணில் படுகிறார்.
பணமுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும் என்பது போல காலே முயற்சி செய்தார். ஆனால், இந்தியாவிற்காக ஆட இன்னும் பற்பல விஷயங்கள் உள்ள பிள்ளையாக இருக்க வேண்டும். பாம்பேயில் பிறந்தால் நலம்; தேர்வாணைக் குழுவில் சித்தப்பா இருந்தால் சௌகரியம்; எம்.பி.யாக மாமா இருந்தால் வாய்ப்பு நிச்சயம்; இது எதுவும் இல்லை என்றால் லஞ்ச முதலீடு செய்யவாவதுத் தயாராக இருக்க வேண்டும்.
வி. சிவராமகிருஷ்ணன் ரஞ்சியில் ஒரு ஆட்டத்துக்கு 43 வீதம் ஆறாயிரம் ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளார். இப்பொழுதும் ஆடிக் கொண்டிருக்கும் சரத் 55 வீதம் ஏழாயிரத்தைத் தாண்டி விட்டார். ஒரு உதாரணத்துக்கு வாயுள்ள பிள்ளை ராபின் சிங்கை எடுத்துக் கொள்வோம். அவர் ஓர் ஆட்டத்துக்கு 52 வீதம் 4127 ரஞ்சி ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
சரத்துக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை; நிரூபிக்கவும் இல்லை. வெங்கடரமணாவின் நிலை படு மோசம். மேற்கிந்தியத் தீவுகளிடம் இரண்டு மாட்ச் தோற்றுப் போய்விட்ட பிறகு கடைசி ஆட்டமான நான்காவது போட்டியில் ஒரு வாய்ப்பு கொடுக்கப் படுகிறது. எழுபது பந்துகள் மட்டுமே வீசிய பிறகு, இந்திய அணியை விட்டுக் கழற்றி விடப் படுகிறார். ஒரு நாள் போட்டியில் பத்து ஓவர்களில் 36 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து இரண்டு விக்கெட் எடுத்த மிக மோசமான ஆட்டத்திற்காக நீக்கப் படுகிறார். இதுதான் 'one-match wonder'.
தமிழ்நாட்டில் அதிக அளவில் விக்கெட் வீழ்த்தியவர்களில் சுனில் சுப்ரமணியம் மூன்றாவது நிலையில் உள்ளார். (வெங்கட்ராகவனும், விவி குமாரும் முதலிரண்டில் உள்ளார்கள்). நியுசிலாந்துக்கு எதிரான தன்னுடைய அரங்கேற்ற ஆட்டத்தில் ஒரு இன்னிங்ஸ¤க்கு மூன்று விக்கெட் வீதம் ஆறு விக்கெட் வீழ்த்தி 'சிறந்த பந்து வீச்சாளர்' பரிசையும் பெறுகிறார். அதன் பிறகு பத்தாண்டுகளுக்கு அடுத்த வாய்ப்பு கிடைக்காமல், தமிழ் நாட்டிற்காக மட்டுமே மிளிர்கிறார்.
தமிழ்நாட்டுக்கு மட்டும் இந்த ஓரவஞ்சனை இல்லை என்பது சோகத்தில் ஆறுதல். காட்டாக ரிஸ்வான் சம்ஷத் என்று என்னுடைய பள்ளிக் கால கவனத்தைக் கவர்ந்த உத்தர பிரதேசக்காரரை பார்ப்போம். 47 ரன்கள் வீதம் 6000 ரஞ்சி ஓட்டங்கள். ஓரளவு பந்தும் வீசக் கூடியவர். சரியான mentor-களோ, ஆதரவாளர்களோ இல்லாததுதான் இவர்களின் பிரசினை.
ராபின் சிங்குக்குக் கிடைக்கும் இந்திய இடங்கள் ஏன் வெங்கட ரமணாவுக்கும், ரிஸ்வான் சம்ஷத்துகளுக்கும் கிட்டுவதில்லை?
இந்த வருட ரஞ்சி நிலைமையைப் பார்த்தால் தனி மனித அக்கிரமிப்புகள் நன்று விளங்கும். பூனை, நாயும், கிளியும் கூட பெற்ற பிள்ளை போல மடியினிலே இருப்பது போல் ஏழு பாயிண்ட் மட்டுமே எடுத்த பெங்காலில் இருந்து கங்குலி. க்ரூப்பில் இரண்டு முறை தோற்று கடைசி நிலையில் இருக்கும் பரோடாவில் இருந்து கூட பலர் இருக்கிறார்கள். ஆனால் மும்பை போல் மூன்று வெற்றிகளை பெற்று க்ரூப்பின் முதலிடத்தில் இருக்கும் தமிழ்நாட்டு அணிக்கு என்ன பயன். நமக்கு வளர்த்து விடத் தெரியவில்லை.
நடக்கும் விஷயங்களைச் சொல்லிக் குற்றப் பார்வையில் அடிபடாமல், அணியில் இருப்பதற்கான சமரசங்களையும் சரியான விகிதாசரங்களில் செய்து கொண்டு, அவ்வப்போது வெற்றியும் ஈட்டித் தந்து, தன்னுடைய வாழ்க்கையையும்சிதைத்துக் கொள்ளாத அனைத்து ரஞ்சி வீரர்களுக்கும் எனது பாராட்டுகள்.
நன்றி: தமிழோவியம்
கருத்துரையிடுக