திங்கள், பிப்ரவரி 02, 2004

ஜி. நாகராஜன்

'குப்பைகளை மேயாமல் தெரிந்து கொள்ள வேண்டியவர்களைத்
தெரிந்து கொள்ளாத நஷ்டத்திற்கு ஆளாகாமலிருக்கும் சௌகரியத்தை
நண்பர் கிருஷ்ணன் நம்பியால் அனுபவித்து வருவதாக' சுரா சொல்கிறார்.
அதே போல் எனக்கு ஜி.என்னை அறிமுகப்படுத்தி புத்தகத்தையும் கடனாகக்
கொடுத்த நண்பர் மாதுவுக்கு நன்றி.

புத்தகத்தில் இருந்து...

ஜி. நாகராஜன் படைப்புகள்
காலச்சுவடு பதிப்பகம்
ரூ. 145/-
'கண்டதும் கேட்டதும்' - ஒரு சுய விமர்சனம்

இத்தொகுப்பில் அடங்கியுள்ள என் கதைகளில் முழுமையாக சிறுகதை
இலக்கணத்தைப் பெற்றிருக்கும் ஒரே கதை 'யாரோ முட்டாள் சொன்ன
கதை'. மற்றவை எல்லாம் ('மிஸ் பாக்கியம்' தவிர) வெறும் முயற்சிகளே.
ஆங்கிலத்தில் சொல்வதென்றால் அவற்றை sketches, vignettes என்று
கூறலாம். இம்முயற்சிகளிலும் என்னுடைய ஆற்றலையும் பல்வேறு
குறைபாடுகளையும் காணலாம் என்பது வேறொரு விஷயம். இந்த
அடிப்படையில்தான் நண்பர் சுந்தர ராமசாமியின் முன்னுரை அமைந்தது
என்று நம்புகிறேன்.

'தீராக்குறை' வாசகர்களிடத்து எந்த ஆழமான பாதிப்பையும் ஏற்படுத்தக்
கூடியதல்ல. அது நமது உள்ளத்தில் ஏதோ மூலையை இலேசாக
நெருடுகிறது; அவ்வளவுதான். 'தீராக்குறை'யின் நடையிலுள்ள சிக்கனமும்
எளிமையும் சிலருக்குப் பிடிக்கலாம்.

ஆசிரியரின் வெற்றி கண்ட சிறுகதையாக 'மிஸ் பாக்கிய'த்தைப் பார்க்கலாம்.
அதாவது சிறுகதையாக விமர்சிக்கப்படும் தகுதியைப் பெறுகிறது என்பதையே
'வெற்றி கண்ட சிறுகதை' என்பதன் மூலம் உணர்த்துகிறேன். அது
குறைபாடில்லாத நல்ல சிறுகதை என்று கூற முடியாது. பள்ளி ஆசிரியர்
என்ற முறையில் அதனைச் சிறுகதை என்று பார்த்தால் 40% தருவேன்.
......

வைகை, ஆகஸ்டு - செப்டம்பர் 1978
பொன் மொழிகள்

சில எழுத்தாளர்கள் தங்கள் 'பொன் மொழிகளை' தங்கள் கதைகளிலேயே
புகுத்தி விடுகின்றனர். என் கதைகளில் 'பொன் மொழிகளே' இல்லை
என்று ஒரு நண்பர் குறைபட்டுக் கொண்டார். எனவே, உதிரியாகவாவது
சில 'பொன் மொழிகள்' உதிர்க்கிறேன்.

1. உண்மை நிலைத்திருக்கும் அளவுக்குத்தான் பொய்யும் நிலைத்திருக்க
முடிகிறது. அதாவது இரண்டுக்கும் கிட்டத்தட்ட சம ஆயுள்.

2. மனிதர்களிடம் நிலவ வேண்டியது பரஸ்பர மதிப்பே தவிர, பரஸ்பர
அன்பு அல்ல; அப்போதுதான் ஏமாற்றுக் குறையும்.

3. தன்மான உணர்வின் வெளிப்பாடாக விளங்கும் அளவுக்குத்தான்
தேசபக்தியைப் பொறுத்துக் கொள்ள முடிகிறது.
......
இன்னும் தேங்காய் துவையல், பெண்ணின் கற்பு, உலக அமைதி,
எள்ளுருண்டை, 'காலி சிந்த்' புடவை, பல்லாங்குழி ஆட்டம், பொய்ப்பல்,
இத்யாதி இத்யாதி பற்றியும் 'பொன் மொழிகள்' தர முடியும்

ஞானரதம், மே 1972பரத்தையர் பற்றி

'அடுத்து வருபவன் ஆணா, அலியா, கிழவனா, வாலிபனா, அழகனா,
குரூபியா, முரடனா, சாதுவானவனா, என்றெல்லாம் கவலைப்படாது
அவனிடத்துத் தன்னைத் தானே ஒப்புவித்துக் கொள்கிறாலே அந்தச்
சிறுமியிடத்து யாரும் ஒரு தெய்வீக உணர்வைச் சந்திக்காமல் இருக்க
முடியாது. சமுதாயம் அவ்வப்போது கற்பிக்கும் போலி ஏற்றத்தாழ்வு
உணர்ச்சிகளுக்கு இரையாகாமல் இருப்பவன் ஒருவனே இதைப் புரிந்து
கொள்ளமுடியும். எது எப்படி இருப்பினும் 'தேவடியாள்' என்பதை ஒரு
வசைச் சொல்லாகப் பயன்படுத்த நியாயமே இல்லை. வேண்டுமென்றால்
தி. ஜானகிராமனது 'கோவில் விளக்கு' என்ற சிறுகதையையோ அல்லது
ஏஜின் ஓனீலின் 'அன்னா கிறிஸ்டி' நாடகத்தையாவது படித்துப் பாருங்கள்...
பரத்தை மாதவியின் நல்லியல்புகள்தானே மணிமேகலையிடத்துக்
குடிகொண்டன.

சதங்கை, ஏப்ரல் 1984

நாகராஜனின் உலகம் - சுந்தரம் ராமசாமி

நாகராஜனின் அச்சேறிய உலகம் 200 கிராம்தான் இருக்கும். வருடத்திற்கு
அரை டன் கழித்துக் கொண்டிருக்கும் பட்டாளத்தின் மத்தியில், பாவம்
நாகராஜன்! மூன்று லட்சத்திச் சொச்சம் விற்பனைப் பத்திரிகைகளில்
இவர் உருப்படி ஒன்று கூட வெளியானதில்லை. அவருடைய மாணவர்களுக்குக்
கூட, கணக்கு வாத்தியாரின் இந்த விஷமங்கள் தெரிந்திருக்க நியாயமில்லை.
புரட்டி பார்த்த உறவுப் பெண்களோ 'சீ! அசிங்கம்!' என்று சொல்லி விட்டார்களாம்!

அவர் மீது இந்த உலகம் காட்டிய அக்கறை ஒரு புறமிருக்கட்டும்.

தன்னுடைய அனுபவ உலக்த்தின்பால் நாகராஜனுக்கு ஏற்பட்ட தீவிர
அக்கறையின் விளைவுகள் இக்கதைகள்.

கதைகளை சொல்லிக் கொள்ள வந்தவர் அல்ல இவர். விளக்கங்களும்
உரைகளும் விரவிவரும் உபந்நியாசம் இலக்கியக் கலை ஆகாது என்பது
இவருக்குத் தெரியும். பின்கட்டின் சாளரம் ஒன்றைத் திறந்துவிட்டு கம்மென்று
வாயை மூடிக்கொண்டு நம்முடன் நின்றபடி உள்ளே எட்டிப் பார்க்கிறார்;
இந்தத் தருணத்தில் சாளரத்தைத் திறந்ததுதான், தான் செய்த ஒரே காரியம்
என்ற பாவத்துடன்.
......

'யாரோ முட்டாள் சொன்ன கதை'யை அவர் நிகழ்த்திக் கொண்டு போகும்
முறையும் ரசிக்கும்படியாக இருக்கிறது. நிகழ்காலத்தில் இரண்டு கீற்று,
நிகழ்ந்து முடிந்தவை இரண்டு கீற்று, இப்படி முடைகிறார் ஆசிரியர்.

'கண்டதும் கேட்டதும்' சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்ற முன்னுரை.
12 ஏப்ரல் 1971முன்னுரை - சி. மோகன்
'நாளை
மற்றொரு நாளே'
நாவல் ஜி நாகராஜனுடைய பிரதானமான படைப்பு.
திருவாளத்தான் வேலைகள் செய்து வாழும் கந்தனின் ஒரு நாளைய
வாழ்க்கையை அகப்படுத்தும் நாவல். கார்கோட்டை நகரில் ஒரு
ஞாயிற்றுக்கிழமை அது. தன் குடிசையில் காலைக் கனவிலிருந்து
விழித்தெழும் கந்தன், மறுநாள் காலை லாக்கப்பில் மீண்டுமொரு
அதிகாலைக் கனவிலிருந்து விழித்தெழுவது வரையான ஒரு நாளின்
நிகழ் சம்பவங்களும், நினைவிலிருந்து கிளர்ந்தெழும் கடந்த காலச்
சம்பவங்களும், கிளைக் கதைகளுமாக நெய்யப்பட்டு கந்தனின் 12
ஆண்டு கால வாழ்க்கையை வடிவமைத்திருக்கும் நாவல்.

"நீங்க வாழ்க்கையில் எதைச் சாதிக்கணும்னு திட்டம் போட்டிருக்கீங்க?"
என்று கேட்கும் முத்துச்சாமியிடம், "எந்தத் திட்டம் போட்டு சொர்ணத்தம்மா
வயத்துல வந்து பொறந்தேன்" என்று சிரித்தபடிக் கூறும் கந்தன், தூங்கிக்
கொண்டிருந்த தன்மீது பானையை வீசியெறிந்து உடைத்து நொறுக்கிவிட்டு
சிறு வயதிலேயே வீட்டைவிட்டு ஓடிப் போய்விட்ட மகன் சந்திரனைப் பற்றி
நினைக்கும்போது, "அவன் சுயநலத்தில்தான் எத்தனை அழகு? சுயநலத்தை
மறைக்க முயன்றால்தான் அது அசட்டுத்தனமாகவோ விகாரமாகவோ
தோன்றுகிறது" என்று சிலாகித்துக் கொள்ளும் கந்தன், 12 ஆண்டுகளுக்கு
முன்னர் ஒரு நல்ல ஏற்பாடாக இருக்குமென்று எண்ணி விலைப்பெண்ணாக
வாழ்ந்த மீனாவைத் தற்செயலாகக் கோவிலில் சந்தித்த மாத்திரத்திலேயே
மணக்க எண்ணி மணந்து கொண்டு பின்னர் மீனாவை விலைப் பெண்ணாகத்
தொழில் புரிய வைக்கிறான்.
......
ஜி நாகராஜன் படைப்புகளின் முழுமையான தொகுப்பு இது. இத்தொகுப்பில்
'நாளை மற்றொரு நாளே' (நாவல்), குறத்தி முடுக்கு (குறு நாவல்), 33

சிறுகதைகள்
, 'நிமிஷக்
கதைகள்'
என்ற தலைப்பில் நான்குக்
குட்டிக்கதைகள் இவற்றோடு கட்டுரைகள், உதிரிக் குறிப்புகள்,
விமர்சனப் பார்வைகள் என சில உரைநடை எழுத்துகளும் இடம்
பெற்றிருக்கின்றன.
......
ஜி.என் தன் சிறுகதைகளில் பல்வேறு வாழ்நிலைக் கலன்களைக்
கையாண்டிருக்கிறார். தமிழ்ச் சிறுகதையின் வளமான மரபில் ஜி.
நாகராஜனின் வருகை துணிச்சலான எழுத்து என்பதாலேயே
முக்கியத்துவம் பெறுகிறது. அதிர்ச்சிக்காகவோ, கிளர்ச்சிக்காகவோ,
பரபரப்புக்காகவோ எழுத்தில் காட்டிய துணிச்சல் இல்லை இது.
வாழ்வையும் எழுத்தையும் வெகு சுபாவமாக, மனத்தடைகளோ,
இறுக்கங்களோ, ஒழுக்க நியதிகள் சார்ந்த பதற்றங்களோ
இன்றி அணுகியிருப்பதில் விளைந்திருக்கும் துணிச்சல்.

ஜனசக்தி வாரமலரில் இவருடைய அணுயுகம் கதை
பிரசுரமாவதிலிருந்து இவருடைய படைப்புலகம் விரியத் தொடங்குகிறது.
இவருடைய எழுத்துகள் சரஸ்வதி, சாந்தி, ஜனசக்தி, இரும்புத்திரை,
ஞானரதம், கண்ணதாசன், கணையாழி, சதங்கை, இல்லஸ்டிரேட்டட்
வீக்லி ஆ·ப் இந்தியா போன்ற இதழ்களில் வெளிவந்திருக்கின்றன.

நன்றி: தமிழோவியம்

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு