காதலர் தினத்துக்கு ஒரு அமெரிக்க அபலையின் கடிதம்
என் முன்னாள் காதலன் எழிலனுக்கு,
எப்படி இருக்கிறாய்? நான் இப்போது தான் உனது கல்யாணப் பத்திரிகை கிடைக்கப் பெற்றேன்.
உங்களுக்கு எல்லாம் திருமணமாவது புத்தி புகட்ட வேண்டும். அப்பாவி இந்தியனாய் கல்லூரியில் நுழைந்தாய். இந்திய மாணவர்களில் பலருக்கு அமெரிக்கப் பெண்களைப் பற்றிய பிம்பம் தான், உன் மனத்திலும் குடி கொண்டிருந்திருக்கும்.
வெள்ளைக்காரியோடு படுத்து எழுந்திருப்பதுதான் லட்சியம். முடி வெள்ளையாக இருந்தால் வலையில் விழ வைப்பது எளிது. கொஞ்சம் பணம், மனதை வசீகரிக்கும் பரிசுகள் கொடுக்க வேண்டும்.
இந்தியப் பெண்கள்தான் குடும்பப் பாங்கானவர்கள். வீட்டுக்கு விளக்கேற்ற பொருத்தமானவர்கள். அமெரிக்க வனிதைகளோ, விலைமாதருக்கு ஒப்பானவர்கள். அவர்களுக்கு திருமணம் வேண்டாம். குழந்தைகள் வேண்டாம். மனசாட்சி கூட கிடையாது.
உங்கள் ஊரில் பெண் என்றால் மதிக்கத்தக்கவள். அமெரிக்காவில் அவர்கள் பாலுறவைக் கற்றுக் கொடுக்கும் சாதனம். தமிழ் நாட்டில் தெய்வீகக் காதல் செய்வாய். அமெரிககாவில் அதுவே டைம் பாஸ¤க்கு செய்யப்படும் கேளிக்கை. அங்கு கல்யாணம் செய்து கொண்டால், வாழ்நாள் முழுக்க ஒருத்தியோடு அனுசரித்துப் போய் குடும்பம் நடத்துவாய். இங்கு மோதிரம் மாற்றினால், விவாகரத்துக்கு காரணம் தேடிக் கொண்டிருப்பாய்.
எப்படி உன்னால் தமிழ் நாட்டில் இல்லாத போது ஒரு கொள்கை, உன் பெற்றோருடன் இருக்கும் போது வேறோரு கொள்கை என்று வாழ முடிகிறது?
இனப் பாகுபாடு, வெள்ளை, கருப்பு, பழுப்பு என்று எல்லாம் என்னைப் பிரித்து பார்க்கிறார்கள் என்று நீ புலம்பும் போது, எனக்குப் பாவமாய் தோன்றும். ஆனால், உண்மையில் நீங்கள் தான் இன வெறியர்கள்.
உன்னுடைய அம்மாவின் விருப்பதிற்காக, உங்களின் குலம், கோத்திரம், மொழி, ஜாதியை சேர்ந்த ஒருவரைத்தான் நீ மணமுடிப்பாய். நமது காதல் முக்கியமில்லை, நம்முடைய உண்ர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுக்கத் தேவையில்லை.
எனது அப்பா, அம்மா எவ்வளவோ தேவலை. அவர்களுக்கு உன்னை நான் வாழ்க்கத் துணையாய் தேர்ந்தெடுப்பது பிடிக்காவிட்டாலும், என் விருப்பங்களுக்கு மதிப்பு கொடுப்பவர்கள். நான் சந்தோஷமாய் இருப்பதற்காக அவர்களின் கோட்பாடுகளை உடைத்துக் கொள்ளத் தயங்காதவர்கள்.
நான் வெள்ளை என்பதால், உன் குடும்பம் நமது திருமணத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நான் வெள்ளை என்பது எனது நிறம். அதை விட உனது மனதைக் கவர்ந்த பெண் என்பது முக்கியம். நான்கு வருடங்களாய் கழித்த, மனம் ஒன்றிய நேரங்களும், நம்மில் நாம் கண்ட குணாதசியங்களும், ஆசைகளும் பகிர்ந்து கொண்ட நேர்மையையும் விட, உன்க்கு இப்பொழுதுதான் தெரிந்த அந்த புதியவள் முக்கியமாகி விட்டாள்.
கோவிலுக்கு வாரம் தவறாமல் செல்கிறாய். நானும் வருவேன். அப்போழுது வேற்று மதக்காரி என உரைக்க வில்லை. எனது நாட்டில், நீ இருக்கிறாய். அப்பொழுது வேற்று ஊர்க்காரர்கள் எனஉணரவில்லை. என்னுடன் சேர்ந்து இருந்தாய். அப்பொழுதும் இனம், மொழி எல்லாம் காரணமாகப் படவில்லை.
இவற்றை உங்கள் அம்மாவிடம் விளக்கத்தான், புரிய
வைக்கத்தான் உனக்குத் தெரியவில்லை. அப்படி
எல்லாம் கிடையாதென்றால், அமெரிக்க ப்ளாண்ட்
உனக்கு ஒரு காட்சிப் பொருள். நயாகரா அருவி
சென்று குளிப்பது போல், நீர்வீழ்ச்சியில் ஒதுங்கி
வருவது போன்று அமெரிக்கப் பெண்களிடம் உறவு
வைத்துக் கொள்வது, எப்பொழுது வேண்டுமானாலும்
சென்று வரலாம். அனுமதிப்பார்கள். பார்ப்பதற்கு,
இரசிப்பதற்கு அழகாக இருக்கும். காசு கொடுத்தால், எப்படி சென்றடைய வேண்டும் என்று தெரிந்தால் போதும்.
ஆனால் வீட்டிற்குத் திரும்பிய பிறகு ஷவரில் குளிப்பது போன்றது தமிழ்ப்பெண் மண முடிப்பு. நிரந்தரமானது. அழுத்தம் அதிகமாக, வேகமாகத் தண்ணீர் வராது. அவ்வப்போது ரிப்பேரும் ஆகலாம்.
நயாகராவின் மேல் காதல்; ஆனால், ஷவரிடம் அனுதினம் உபயேபாகம். இருந்தாலும், வீட்டிலேயே நயாகரா இருந்தால் வேண்டாம் என்று சொல்லும் உன்னை ஆச்சரியமாகப் பார்க்கிறேன்.
நாங்கள் காட்சிப்பொருள் அல்ல. உன்னுடைய அம்மாவுக்கோ, அக்காவுக்கோ கொடுக்கும் மரியாதையை எங்களுக்கும் கொடு. நாங்கள் வளர்ந்த விதம் வேறு, கொடுக்கப் பட்ட சுதந்திரம் அதிகம் என்பதால், நாங்கள் உங்கள் ஊர் பெண்களை விட கீழ்த்தரமானவர்கள் இல்லை.
அடுத்த முறை விமானத்தில் இருந்து இறங்கும் போதோ, கோடை விருந்தின் பீயர் கெ·க்கின் அருகிலோ, கல்லூரி நூலகத்தின் உணவகத்திலேயோ எங்களைப் பார்த்தால், எங்களோடு அறிமுகப் ப்டுத்திக் கொண்டால், எங்களின் ஆர்வங்களையும், அழகையும், நிறத்தை மட்டும் வைத்து பார்க்காதே.
உன்னுடைய இனம் திருந்தும் என்னும் நம்பிக்கையுடன்,
(இன்னாளிலும்) உனது காதலி.
கருத்துரையிடுக