விளம்பரங்களும் விளம்பரதாரர்களும்
அமெரிக்கர்களுக்குக் கால்பந்தாட்டம் ரொம்பப் பிடித்த ஆட்டம். ரவுண்ட் ராபின் ஆட்டத்திலேயே இந்தியா-ஆஸ்திரேலியா பத்து முறை மோதி, காலிறுதி, அரையிறுதி, அது தவிர மூன்று இறுதி ஆட்டங்கள் என்பது மாதிரி ரொம்ப அலைக்கழிக்காமல் சடசடவென்று சீஸனை முடித்துவிடுவார்கள். கூடைப்பந்து மாதிரி ஸ்கோர் நொடிக்கொருதரம் ஏறாது. கிரிக்கெட் மாதிரி நாள் முழுவதும் சிக் லீவ் எடுத்து பார்க்க வேண்டாம். ·புட்பால் மாதிரி ஓரிரண்டு கோல்கள் போட்டால் கூட ஆறு, ஏழு என்று எண்ணிக் கொள்ளலாம்.
முதலில் இதை பார்க்க ஆரம்பித்தபொழுது தெருவோர கிரிக்கெட்டில் ஆட்ட எண்ணிக்கையை ஏற்றிக் கொண்டே போவதுதான் நினைவுக்கு வந்தது. ஸ்கோரை குறித்துக் கொள்ளும் எங்க டீம் ஆள், அவ்வப்போது ஒன்றிரண்டு 'கவனித்துக்' கொள்வார். "என்னடா... இப்பத்தானே வந்தே... அதுக்குள்ள எப்படிடா முப்பது எடுத்தே?" என்று எதிரணி வியந்தாலும், அவர்களும் போலி ஓட்டுக்கள் நிறையவே போட்டு ரன்களை குவிப்பார்கள். இங்கு ஆடும் ·புட்பால் அதிகாரபூர்வமாகவே ஒரு கோலுக்கு நிறைய ஸ்கோர் வைத்துக் கொள்ளும் பழக்கம் இன்னும் எனக்கு விளங்கவில்லை.
இந்த வருட அமெரிக்க ·புட்பால் 'உலகக் கோப்பையை' எங்க ஊர் பாஸ்டன் அணி வென்றுள்ளது. அரையிறுதியில் பதினாலுக்கு பத்து என்று நாங்கள் முண்ணனியில் இருந்ததும், கடைசியில் மூன்று ரன் வித்தியாசத்தில் கோப்பையைத் தட்டி சென்றதும், 31,36 அடியிலிருந்தே கோலடிக்கத் தெரியாத வீரர், முப்பது நொடிகளே இருந்தபோது நாற்பத்தியோரடியில் இருந்து பந்தை புல்லட்டாக்கியது என்று மேலும் விளக்கி ஊசிப்போன வர்ண்ணை கொடுக்க விரும்பவில்லை.
அனேகமாக சூப்பர் பௌல் பார்ப்பது அதனூடே வரும் விளம்பரங்களுக்காகத்தான். நிகழ்ச்சியில் வரும் விளம்பரங்கள் இதற்கு முன் ஒளிபரப்பப் பட்டிருக்கக் கூடாது. விளம்பரங்களைத் தேர்ந்தெடுப்பதற்கு என்று ஒரு வல்லுநர் குழு கூட உண்டு. அனைத்து விளம்பரங்களும் நகைச்சுவையுடன் விளங்க வேண்டும். இவ்வளவு கிராக்கி செய்தாலும் ஒரு நிமிடத்துக்கு மூன்று மில்லியன் டாலர் கட்டணம். சூப்பர் பௌல் ஆட்டம் ஏமாற்றினாலும் நடுவில் வரும் இவை நம்மை ஏமாற்றாது. ஜான்ட் ஜாக்ஸன் புண்ணியத்தினால் இனி அந்த லிஸ்டில், அரையிறுதியில் வரும் கேளிக்கை ஆட்டங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
சில விளம்பரங்களையும், அதற்கு மனதில் தோன்றிய திரைப்பாடல்களையும் முதலில் பார்ப்போம்.
---------------------------------------------------
'இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்': இரு நண்பர்கள் தங்களின் நாய்களை நடைபயில கூட்டிச் செல்கையில் சந்திக்கிறார்கள்.
முதலாமவர்: 'என்னுடைய நாய் நான் சொன்னபடியெல்லாம் கேட்கும் தெரியுமா?'
இரண்டாமவர்: 'ஓ... அப்படியா'
மு: (ஆஜானுபாகுவான தன் நாயை பார்த்து) 'கொண்டு வா'
நாய் சமர்த்தாக ஓடிப்போய் ஒரு பியரை கொண்டு வந்து எஜமானரிடம் கொடுக்கிறது.
இ: (நோஞ்சானாய் இருக்கும் தன் நாயை பார்த்து) 'கொண்டு வா'
நாய் முதலாமவரின் மர்மஸ்தானத்தைக் கவ்வ, 'பட்-லைட்' பியரை காட்ச் பிடித்துக் கொள்கிறார்.
'கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே': இந்தியா பாகிஸ்தான் ஒரு நாள் போல் விறுவிறுப்பான ஆட்டம். ஆஸ்திரேலியர்கள் நடுவரை திட்டுவதை விட (அமெரிக்க பாணியில்) படு மோசமாக அர்ச்சனை செய்வதை கண்டுக்காமல் நிற்கிறார். பின்னாடியில் ஒலிக்கும் குரல், 'இவர் இந்த பொறுமையை எங்கு கற்றுக் கொண்டார்... தெரியுமா?' என காட்சியை அவர் வீட்டுக்கு மாற்றுகிறது.
அவரின் மனைவி முன்பு காட்டிய ஆட்டக்காரர்களை விட படு மோசமாக 'வீட்டை சுத்தம் செஞ்சு எத்தனை நாளாச்சு தெரியுமா? பாத்ரூம் குழாய் ஒழுகுதே... என்னிக்கு ரிப்பேர் பண்ணப் போறே? எனக்கு ஒரு புது டோஸ்டர் ஓவன் கேட்டேனே... அடுத்த எலெக்சனுக்குள்ளவாவது வாங்கித் தருவாயா? என்னை பார்த்து ஒரு தடவையாவது 'ஐ லவ் யூ' சொல்றியா?' என்று காச்மூச்.
இது பியருக்கான விளம்பரம் என்று சொல்லவும் வேண்டுமோ?
'அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்': காலியான கோடை வீட்டிற்குள்ளே கரடிகள் பிரவேசிக்கின்றன. ·ப்ரிட்ஜை திறந்து மீந்து போன பீட்ஸாவையும், மற்ற உணவையும் பார்க்கிறது. கூலர் பெட்டியில் காலியான தண்ணீர் பாட்டில்கள். குளிர் கண்ணாடியையும், ம·ப்ளரையும், ஜாக்கெட்டையும் அணிந்து கொள்கிறது. நேராகக் கிளம்பி பக்கத்து கடைக்குள் புகுந்து சாமான் வாங்க முயலுகிறது. கடைகாரர் எங்கே உன்னுடைய லைசன்ஸை காட்டு என கேட்க, கரடியும் சிரித்துக் கொண்டே ஒன்றை நீட்ட, அவரும் காசு வாங்கிக் கொண்டு அனுப்பி விடுகிறார்.
இதுவும் மதுபான விளம்பரம் என்று நினைத்தால் தவறு. 'பழஞ்சோற்றின் சுவையே பெப்ஸி உடனிருந்தால்தான்' என முடிகிறது.
''திருடாதே... பாப்பா திருடாதே': 'நான் மாட்டிக் கொண்டேன்'; 'நான் குற்றஞ்சாட்டபட்டேன்'; 'நான் தவறு செய்தேன்'; 'நான் அபராதம் கட்டினேன்'; என்று பலர் சோகமாக இறுக்கமான முகத்துடன் வருத்தம் தெரிவித்தார்கள். ஒரு இளம்பெண் 'இணையத்தில் இருந்து இசையை வலையிறக்கியதற்காக நான் தண்டிக்கப் பட்டேன்... ஆனால், இன்னும் தொடர்ந்து இசையை இலவசமாக இறக்கத்தான் போகிறேன்' என்று சிரித்துக் கொண்டே சொல்கிறாள்.
பெப்ஸி அருந்தினால், இலவசமாக பாடல்களை அதிகாரபூர்வமாக வலையிறக்கலாம் என்று முடிகிறது.
'ஆடாத ஆட்டம் எல்லாம் போட்டவந்தான் மண்ணுக்குள்ள': முழுக்க முழுக்க வெள்ளைப் பின்புலத்தில் தனியாக சிறுவன். பின்புற குரலாக 'உலகத்தைப் புரட்டி போடு' என்னும் மெல்லிய குரல். மீண்டும் மீண்டும் 'உலகத்தைப் புரட்டி போடு' குரல், கொஞ்சம் வலுவாக, ஆனித்தரமாக, நம்பிக்கையூட்டும் விதமாக. பார்த்துக் கொண்டிருக்கும் டிவியின் வழியாக தொடர்கிறது. டிவியில் குத்துச்சண்டை வீரர் மொகமதலி இப்பொழுது சொல்கிறார். டிவியில் இருந்து சிறுவனின் எதிரே அமர்ந்து அலி சொல்வதுடன் முடிகிறது.
'லீனக்ஸ்' என்னும் எழுத்துக்கள் தோன்றியவுடன் பிண்ணனியில் 'உலகத்தைப் புரட்டி போடுவோம்' குரல். 'ஐபிஎம்' என்று கொட்டை எழுத்துக்களை தேக்கிவிட்டு முடிகிறது.
'குண்டு..குண்டு.. குண்டு பொண்ணே': உணவகத்தில் கருப்பின வாலிபன் சோகமாக இருக்கிறான். ஹோட்டல் சிப்பந்தி 'என்னப்பா வருத்தம்' என்று வினவ, காதலி கைவிட்டதை சொல்கிறான். 'இதுக்குப் போய் அலட்டிக்கலாமா' என்று அவனை பெப்ஸி அருந்தச் செய்கிறாள். அடுத்த காட்சியில் அந்த குண்டு சிப்பந்தியுடன் டூயட் பாட காதல் செய்கிறான்.
'பெப்ஸி உடனிருந்தாலே சாண்ட்விட்ச்கள் சுவைக்கின்றன' என்கிறது இந்த விளம்பரம்.
'ஆசை அதிகம் வைச்சு': பீச் மணலில் பிகினி ஆடையில் இளங்கன்னிகள் வாலிபால் ஆடுகின்றார்கள். கடுங்குளிர்காலம் என்பதை பனியாகிப் போன நதிக்கரை காட்டுகிறது. ஒருவருக்கு கீழே விழுந்து பந்தை அடித்ததில் ரத்தம் கட்டிக் கொள்கிறது. சரி... பியரை வைத்துக் கொண்டு, தொப்பையை ஆட்டிக் கொண்டு கோட்டு மாட்டிக் கொண்டு ஆடவர் உட்கார்ந்திருப்பார் என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.
ஒலிம்பிக்குக்குத் தயார் செய்து வருகிறார்களாம். 'விசா' தவணை அட்டையை வைத்துதான் ஏதன்ஸில் நுழைவுச்சீட்டு வாங்க முடியுமாம்.
'வெற்றி நிச்சயம்... இது வேத சத்தியம்': முதிர் ஜோடிகள் உல்லாசமாக சூரியனில் காய்கின்றனர். நடுத்தர வயது ஆடவர், மகிழ்ச்சியுடன் பெண்ணை நெருங்குகிறார். வயாகராவுக்குப் போட்டி வந்தாச்சு. முப்பத்தாறு மணி நேரம் தாக்குப்பிடிக்க வைக்கும் 'சியாலிஸ்' என்னும் புதிய மருந்து அறிமுகமாகிறது.
'உன்னை விட... இந்த உலகத்தில் உசந்தது': ரம்மியமான வீட்டுக்கு சூப்பர் ·பிகரை அழைத்து வருகிறான் நாயகன். அவன் வளர்க்கும் செல்லப்பிராணியான சிம்பன்சியை பார்த்து பயப்படுகிறாள் நாயகி. 'அது ரொம்ப சாது! ஒரு நிமிடம் இரு... குடிக்க எடுத்து வருகிறேன்' என்று உள்ளே செல்கிறான். சிம்பன்ஸி உரிமையுடன் சோபாவில் பக்கத்தில் உட்கார்ந்து தோளில் கைபோட்டுக் கொள்கிறது. 'அவனுக்கு விவரம் பத்தாது... பயந்தாங்கொள்ளி! என்னுடன் மாடி பெட்ரூமுக்கு வா... சொர்க்கத்தையே காட்டுவேன். ஜாலியாக இருக்கலாம்' என்று அமர்க்களமான முக பாவனையுடன் சொல்லிவிட்டு, அவன் வருவதை பார்த்தவுடன் 'நான் உன்கிட்டப் பேசினதா காட்டிக்காதே' என்று மெல்ல கிசுகிசுக்கிறது.
ஓணான், தவக்களை என்று எல்லா மிருகங்களுக்கும் குரல் கொடுக்க வைக்கும் 'பட்' என்னும் பியரின் விளம்பரம்.
'காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்': முன்னூறு மைல் தள்ளி செல்லும் காதலிக்குப் பிரியாவிடை தருகிறான். விமானத்தில் வழியனுப்பிய பிறகே, பக்கத்து சீட்டில் உதட்டுச்சாயத்தை மறந்துவிட்டதை பார்க்கிறான். போலீஸிடம் பிடிபடாமல், அதிவேகமாக காரை செலுத்தி, அவளை பறந்த இடத்துக்கே, விமானத்துக்கு முன் ஓட்டி அடைகிறான். காதல் மயக்கத்துடன் அவனின் ஆர்வமான வருகையை ரசிப்பவள், காண வந்த காரணத்தை கேட்கிறாள். 'அந்த லிப்ஸ்டிக் என்னுடையது இல்லையே' என்று கோபக் கேள்விப்பார்வையில் முடிகிறது.
இதற்கும் பியருக்கும் எப்படி சம்பந்தமென்றால், அவள் அனாதையாக்கி சென்றபிறகு அவன் குடிக்க வேண்டிய மதுவகையை சொல்கிறது என நினைத்துக் கொள்ளலாம்.
'தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை': இது பின் நவீனத்துவமோ, இலைமறை காயோ, குறிப்பால் பொருளுணர்த்தும் வகையையோ சார்ந்த ஒரு விளம்பரம். ஒழுங்காகப் புரியாததால் மனதில் இன்னும் நிற்கிறது. தண்ணீரை சுமந்து கொண்டு வரும் கருப்பு கார்கள். எப்படி ஒரு கார் தண்ணீர் தூக்கமுடியும் என்று தெரியவில்லை. 'நில்' என்னும் சாலைவிதிகளையும் மதிக்காமல் விரைகின்றன. முச்சந்தியில் கூட நின்று கவனிக்காமல் நொடி நேரத்தில் ஒன்றையொன்று மோதிக் கொள்ளாமல் தண்ணீரை மேலே வைத்துத் துரத்திக் கொண்டு செல்கின்றன. 'காடிலாக்' காரை வாங்கினால் விபத்து நேராது என்கிறார்களா? 'கழுவுற மீனில் நழுவுற மீன்' மாதிரி தப்பிக்கலாம் என்கிறார்களா?
'செட்டப்ப கெட்டப்ப மாத்தி...': டீனேஜ் பெண் வீட்டில் இசைக்கு ஆடுகிறாள். அவளைப் பார்க்க தோழி வருகிறாள். குசுகுசுவென்று பேசிவிட்டு வெளியேக் கிளம்புகிறார்கள். தலைமுடியை கோதிவிட்டு சிகையலங்காரத்தை மாற்றிக் கொள்கிறாள். வேலையில் இருக்கும் பெண்டிர் உடுத்தும் ஆடைகளுக்கு மாறுகின்றனர். உதட்டுக்கு லிப்ஸ்டிக், கண்ணுக்கு மை, காதுக்கு ஒரு வளையம் என் 'இந்தியன் சுகன்யா பாட்டி' போல் இல்லாவிட்டாலும் ''ஆனந்தம்' சுகன்யா போல் வயதாக்கி கொள்கின்றனர். மதுவை வாங்க அலட்சியமாக கடன் அட்டையை நீட்ட அசராத கடைகாரர் லைசன்ஸை எடுக்குமாறு சிரிக்கிறார். பேந்தப் பேந்த விழிப்பவர்களின் பிண்ணனியில் 'நாங்கள் வயது வந்தவர்களா என சரி பாக்கிறோம்', குரல் மற்றும் எழுத்து.
இவை தவிர புரியாத மேஜிகல் ரியலிசமாக சில 'செவ்ரோலேட்' கார் இடுகைகளும், வைரமுத்து கவிதை போல் உள்ளங்கை நெல்லிக்கனியாக புரியவைத்த சவர ப்ளேட்களும், 'சிகரெட் தவிர்', 'போதை மறுத்து விடு' போன்ற சில உருப்படியான பிரசாரத் துளிகளும், 'ட்ராய்', 'தி அலாமோ' , 'ஹிண்டால்கோ' போன்ற எண்ணற்ற திரைப்பட விளம்பரங்களும், மறந்துவிட வேண்டிய வேறு சிலவும் கூட விளம்பரித்தார்கள்.
இடைவேளையில் ஜானட் ஜாக்ஸன் கட்டின ஆட்டம் காணக் கிடைக்காத காட்சி. அதைப் பற்றி வேறு என்றாவது பார்ப்போம்.
நன்றி: தமிழோவியம்
கருத்துரையிடுக