பயண நேரம் - சல்மா
பாபு மற்றும் பிகே சிவகுமார் ராகாகியிலும் மரத்தடியிலும் தங்களை ஈர்த்த கவிதைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். சல்மா சிலசமயம் பழக்கப்படுத்திய உருவகங்களையே கொடுப்பதாக பட்டது.
'கண்கள் பூக்கள் மீதிருக்க
மனம் தேடிப் போகிறது
வரைபட வீட்டின்
தனிமையை'
என்று முடிக்கும் அவர் 'இரண்டாம் ஜாமத்துக் கதை'யில்
'சுவரோவியத்தில் அமைதியாக
அமர்ந்திருந்த புலி
இவ்விரண்டாம் ஜாமத்தில்தான்
என் தலைமாட்டிலமர்ந்து
உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது' என மீண்டும் பயன்படுத்துகிறார்.
பெண்ணியக் கவிதைகள் தொலைக்காட்சி சீரியல்களைவிட
ரொம்ப கழிவிரக்கம் பேசுகிறது என்று தோன்றும் எனக்கு,
அவருடைய தொகுப்பில் வேறுபட்ட பதிவுகளையும் பார்த்தது
நல்ல அனுபவமே.
பயண நேரம் - சல்மா
பயணம் நிகழ்கையில்
ஜன்னலோர இருக்கை வாசிகள்
அதிர்ஷ்டசாலிகள்
சீறும் காற்று
முடியைக் கலைக்கவும்
கண்ணில் தூசு விழவுமாய்
அசௌகர்யங்கள் இருந்தாலும் கூட
மனிதருள்,
இயற்கையுள் நுழைய
வேண்டும் ஜன்னலோர இருக்கைகள்
பாதையோரத்தில்
இடிந்து கிடக்கும்
ஒற்றைச் சுவர்
என்னவாய் இருந்திருக்கும்?
அது ஓர்
அச்சம் தரும் நினைவு
முடிவு நேரம் அறிவிக்கப்படாத
பயணம் துரிதப்படுத்துகிறது
எல்லாவற்றையும் முடிக்க
ஏதொன்றுமே
முடிவடைவதில்லை.
பயணம் முடியும் வேளை
தகிக்கும் நிறைவின்மை
அச்சுறுத்துகிறது அனைவரையும்
சமயத்தில் எரிக்கிறது
எல்லாவற்றையும்
நன்றி: ஒரு மாலையும் இன்னொரு மாலையும் - சல்மா -
காலச்சுவடு பதிப்பகம் - விலை ரூபாய் 40
கருத்துரையிடுக