புதன், ஏப்ரல் 14, 2004

பாலாஜிக்கு ஹரே ராம் - ஞானக்கூத்தன் (1996)

கேள்விப்பட்டேன் அவளைப் பற்றி
ஒருமுறை கூடப் பார்த்ததில்லை ஆனால்,
ரவிக்கை மட்டுமாம் மேலே, தாவணி
எதுவும் இராதாம். இடுப்பில்
முடிச்சுப் போட்ட ஈரிழைத்துண்டாம்.
நழுவாது. ஆனால் காற்றில் பறக்குமாம்.

வீட்டுக் கூடத்தில் ஏதோ வேலையாய்
இருந்தவன் வாசலில் நிழலாடத்
திரும்பி பார்த்தேன். இருந்தாள்.
பாலாஜிக்கு ஹரேராம் என்று
பெயரிடப்பட்ட பிச்சைக்காரி,
முன்னே சொன்ன வர்ணனைக்கேற்ப

உடம்பு கோதுமை வர்ணம். பிச்சை
அரிசியில் கிடந்த வாயிலிட்டுப்
பல்லால் கொறித்தாள். அவளைக் காற்று
சோதனை போட வெட்கித் திரும்பினேன்.
பழைய சேலை ஒன்றைத் தந்தேன்.
உடுத்தவில்லை. மடித்துக் கொண்டாள்.

மறுநாள் கேள்விப்பட்டேன். உள்ளூர்க்
குதிரை வண்டிக்காரன், மண்டபத்தில்
அவளிடம் அயோக்யனானான் என்று,
மனதைக் கொஞ்சம் அரித்தது. நான் தந்த
சேலையில் இருந்தாளா அவள் அப்போது?

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு