வெள்ளி, மே 14, 2004

முதல்முறையாக ஒரு இத்தாலியப் பெண் பிரதம மந்திரியாகிறார்

ஆளுங்கட்சிக்கு எதிரான அலை என்கிறார்கள். சோனியா வெளிநாட்டவர் என்பதெல்லாம் செல்லாது என்கிறார்கள். 'ஜனகனமன... ஜனங்களை நினை' என்கிறார்கள். பணக்காரர்கள் பணம் மட்டுமே கொடுப்பார்கள்; நடுத்தர மக்கள் வாய்கிழிய விமர்சிக்க மட்டுமே செய்வார்கள்; ஏழைகள் மட்டுமே வாக்களித்து, ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருபவர்கள் என்கிறார்கள். மக்கள் நலனுக்காக பாடுபடவேண்டும், மன்மோகன் சிங் பிரதமராக வேண்டும், என்று எல்லாம் நிறைய ஆசைப் பட்டியல் தொடர்கிறது.

சோனியா காந்தி பிரதம மந்திரியாகப் போகிறார். வாஜ்பேயைப் போல அவரும் கூட்டணி ஆட்சியமைக்கிறார். அவரைப் போலவே மந்திரிசபையை பாலன்ஸ் செய்வது, யாதவ்களை திருப்திபடுத்துவது, அயோத்தியா பிரசினையில் மௌனம் சாதிப்பது, இஃப்தார் விருந்துக்கு செல்வது, பாகிஸ்தான் பார்டரை தொட்டு வருவது, என்று இன்றியமையாத கடமைகளை செவ்வனே செய்வார்.

அவர்தான் பிரதம மந்திரி என்பது இன்னும் முடிவாகவில்லை. இருந்தாலும், காங்கிரஸ் கட்சியில் அவரை எதிர்க்கும் திராணி ஒருவருக்கும் இல்லை. இந்தியாவில் அரசியல் கட்சிகளும் குடும்பங்களும் ஒரே விதமான மனப்பான்மை கொண்டவை. குடும்பங்களில், பெரியவர்களை மறுத்துப் பேசினால், பெற்றோர்களுக்கு மரியாதை தருவதில்லை; தாந்தோன்றி என்று விமர்சிக்கப் படுவார். கட்சித்தலைவரை எதிர்த்துப் பேசினால், துரோகி என்று முத்திரை குத்தப்படுவார். கட்சியை விட்டே நீக்கப்படுவார். சோனியா இல்லாவிட்டால், அந்த இடத்தில் ராகுல் அமர்வார் என்பதாலும் பெரிய வித்தியாசம் எதுவுமில்லை.

இத்தாலிய குடிமகள் உரிமையைத் துறந்ததனால், பிஜேபி ஆரம்பித்த இரட்டைப் பிரஜா உரிமை போன்றவற்றை என்ன செய்யப் போகிறார் என்று சொல்லவேண்டும். பொருளாதார தாராளமயமாக்கலை எப்படி கட்டுப்படுத்தப் போகிறார், எங்கு என்பதையும் இப்போதே தெளிவாக திட்டம் போட்டு, கம்யூனிஸ்ட்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பாடதிட்டங்களை, ஐஐடி/ஐஐஎம் கட்டண விவகாரம், கல்வித்துறையில் ஆக்கபூர்வமான மாற்றங்கள் என்ன என்பதையும் வெளியிட வேண்டும். எம்.எம். ஜோஷி செய்தது போல் திரைமறைவில் அரங்கேற்றாமல், விவாதத்துக்குப் பிறகு அவசியம் புதிய கொள்கைகளைக் கொண்டுவர வேண்டும். லல்லூ போன்றவர்கள் எதிர்த்தாலும், பெண்களுக்கு மக்களவையில் ரிசர்வேஷன் தரவேண்டும். பாகிஸ்தானுடனான நல்லுறவுக் கொள்கையில் மாற்றங்கள் இருந்தால் சொல்ல வேண்டும்.

இவை போன்ற நாட்டின் பாதையை திருத்தக்கூடிய அயோத்தியா முதல் விவசாய நலத்திட்டங்கள் வரை ஒரு ப்ளூ-பிரிண்ட் போட்டு ஒப்புதல் வாங்கிக் கொண்டு கூட்டணி ஆட்சியமைக்க வேண்டும்!

ஒரு வெளிநாட்டினர் நாட்டின் மிகப் பொறுப்பான பதவியில் அமர்வதை ஒரு என்.ஆர்.ஐ.யாகப் பொறுக்க முடியவில்லை. ஆனால், என்னுடைய குழந்தையே அமெரிக்கவாசியாக இருந்துவிட்டு, பின்பு என்றாவது ஒரு நாள் இந்தியராக மாறி, தேர்தலில் போட்டியிட்டால் ஆதரிக்க மாட்டேனா? தலைமையில் மட்டும் மாற்றம் வந்தாலும், அதிகாரிகளும் ஆணையர்களும் ஆங்காங்கே மாற்றப்பட்டாலும், அவர்களின் செயல்பாடுகளில் பெரிய மாறுதல் எதுவும் வந்துவிடப் போவதில்லைதானே?

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு