திங்கள், மே 24, 2004

மத்திய அமைச்சரவை

பத்ரி அதிர்ச்சியான ஆச்சரியங்கள் என்று மந்திரி சபை பட்டியலையும் அதை குறித்தத் தன்னுடைய கருத்தையும் பதிந்துள்ளார். தொடர்ந்து எழுந்த சில எண்ணக் கேள்வி குழப்பங்கள்:

1. கமல்நாத்: கல்கத்தாவின் செயிண்ட். சேவியர்ஸ் கல்லூரியில் இருந்து வணிகவியலில் பட்டம் பெற்றவர். ஹவாலா டைரி குறிப்பில் இடம் பெற்றவர். 1991ல் சுற்று சூழல் துறை அமைச்சராக இருந்தவர். அப்பொழுது உலகளாவிய அளவில் மாசுக் கட்டுப்பாடு நிர்ணயங்களையும், அபராதங்களையும் வகுத்தவர். தொடர்ந்து நெசவுத்துறையை கவனித்தபோது முன்னெப்போதும் இல்லாத அளவு பஞ்சு உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் சாதனை படைத்தார்.

2. தமிழகம்: இதுவரை மத்திய அமைச்சரவையில் எப்போதுமே இல்லாத அளவில் 12 பேர் அமைச்சர் பதவி பெற்றுள்ளனர் என்பது மகிழ்ச்சிகரமானது. வருமாண்டுகளில் தமிழகம் செழிக்க இது உதவும். மத்திய - மாநில அரசுகளிடையே உறவுகள் பலப்பட்டால் பலன் அதிகமாக இருக்கும்.

3. வாரிசு ராஜ்ஜியம்: தயாநிதி மாறனும் அன்புமணியும் அமைச்சரவையில் இருக்கிறார்கள். முன் அனுபவம் அதிகம் இல்லையெனினும் இருவருமே நிறைய படித்தவர்கள். எம்.பி.பி.எஸ் டாக்டருக்கு சுகாதாரத்துறையும், ஹார்வார்ட் மேலாண்மை படித்தவருக்கு தகவல் தொடர்புத்துறையும் தந்திருக்கிறார்கள். தயாநிதி மந்திரியாவார் என்று தெரிந்துதான் மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள். அன்புமணி அமைச்சராவதும், சோனியா பிரதம மந்திரியாக வாய்ப்புள்ளது மாதிரி ஓரளவு அனுமானிக்கப்பட்டதுதான். விஜய், சூர்யா போன்ற நடிகர்களின் திறமைக்கு மதிப்பு கொடுப்பது போல், இவர்களுக்கும் வாய்ப்பளித்து, பொறுத்திருந்து மதிப்பிட வேண்டும்.

4. பாமகவின் மூர்த்தி: ரெயில்வேயில் அதிரடியாக நல்ல காரியங்களை செய்து வந்தவர்தான். ஆனால், இவர் மீண்டும் இடம்பெறாததற்கு (வாரிசு அரசியல் தவிர) சில காரணங்களைக் குறிப்பிடலாம். அதிகாரிகளிடம் இவர் அதிருப்தி சேகரித்ததாக வந்த ஜூ.வி. செய்திகள். இந்தத் தேதிக்குள் அதை முடிப்பேன் என்பது மக்களிடம் செல்வாக்கை உயர்த்தலாம். ஆனால், அதை செய்து முடிக்க அதிகாரிகளின் சனி/ஞாயிறு இழப்புகள், அரசுக்கு ஆகும் ஓவர்டைம் பட்ஜெட் மீறல்கள் போன்றவை வெளியில் தெரியாது.

5. Conflict of interest: அமெரிக்காவின் துணை ஜனாதிபதியுடன் வேட்டைக்குப் போகும் உற்ற ஜட்ஜ் நண்பர், அவருடைய வழக்கை விசாரிக்கிறார். இங்கு நட்பை விட நீதித்துறையின் மேல் உள்ள மதிப்பு முக்கியம். அவ்வாறே, (சன் டிவி) உறவை விட (தகவல் தொடர்புத்துறை) அமைச்சகம் மனசாட்சிப்படி முக்கியத்துவம் பெறும் என்று நம்பலாம். அவ்வாறே இல்லாவிட்டாலும், மந்திரிசபையில் பங்கு வகிக்கும் திமுக, அனைத்து முடிவுகளிலும் தன்னுடைய கருத்தை வலியுறுத்தி மாற்றியமைக்க முயலும்; இப்பொழுது, காங், திருடனின் கையிலேயே சாவியைக் கொடுத்து விட்டதால், தயாநிதி மாறனுக்குக் கூடுதல் பொறுப்பும், ஊடகங்களின் உன்னிப்பான ஆராய்தலும் கிடைக்கும்.

தகவல் ஆதாரம்: ரீடிஃப், என்.டிடி.வி, The Hindu : The Union Council of Ministers

பிகு: ரிடிஃப் போன்ற தளங்களுக்கு அரசாங்க அறிக்கை போல் ஏதாவது கிடைத்து, அதை அப்படியே வெளியிட்டிருக்கலாம்; சாதனைப் பட்டியலில் எவ்வளவு தூரம் உண்மை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

1 கருத்துகள்:

தகவலுக்கு நன்றி. பொறுத்திருந்து பார்ப்போம் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். சூர்யா - தயாநிதி உதாரணம் சரியில்லை என்று தோன்றுகிறது. பல வருடங்கள், பல படங்களில் நடித்து - ஊத்தி மூடிய படங்களையும் சேர்த்து - உதவாக்கரையிலிருந்து உருப்படியாகி வந்துள்ளார் சூர்யா. விஜயும் அப்படியே. தயாநிதி என்ன செய்வார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்! Conflict of interestஇலும் அப்படியே.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு