வியாழன், ஜூன் 17, 2004

உயிரெழுத்து குழுமம்- அம்புலி மாமா... அம்புலி மாமா...

சேவியர் - #5258: சதுரங்கம் படத்துக்காக யுகபாரதி ஒரு பாடல் எழுதினார்,

அம்புலி மாமா அம்புலி மாமா
ஆசை தீர முத்தம் தாதா
கன்னக் சிவப்பில்
பின்னம் கழுத்தில்

என்று போகும் அந்தப் பாடல். இந்தப் பாடலில் பல்லவியை நண்பர் பழனிபாரதியிடம் இவர் சொல்ல. பிரமாதமாக இருக்கிறதே என்று பாராட்டியவர்.... பேரழகன் படத்துக்காக பாடல் எழுதும் போது அதைக் காப்பியடித்து

அம்புலிமாமா அம்புலிமாமா
அம்புலிமாமா நாந்தானே....

என்று பாட்டை எழுதிவிட்டார். பாடலைக் கேட்ட யுகபாரதி அதிர்ச்சியாகி... இப்படியும் இருக்கிறார்களா கவிஞர்கள் என உள்ளுக்குள் உடைந்தே போனார். பழனி பாரதி ஒரு பாடலைச் சம்பாதித்தார்.... ஒரு நல்ல நண்பரை இழந்து விட்டார். இப்போது என்னுடைய கேள்வியெல்லாம்..... எத்தனை (பிரபலமாகாத) கவிஞர்களின் கற்பனைகள் இப்படி திரைப்படப் பாடலாசிரியர்கள் சிலரால் திருடப்பட்டு விற்பனையாகிறதோ ?

புதியமாதவி - #5264: கவிஞர் இன்குலாப் என்னிடம் சொல்லியிருக்கின்றார்.. " என் கவிதைகளில் சில உருவகம், படிமம், சொல்லாடல் எல்லாம் சீவகசிந்தாமணியில் இருப்பதை என் கவிதைகளை நான் எழுதியப் பிறகு நான் மணிமேகலை நாடகத்திற்காக சீவகசிந்தாமணியை முழுமையாக வாசிக்கும்போது உணர்ந்தேன்..இப்போதெல்லாம் ஏதாவது புதிய கற்பனை, படிமம் வந்து விழுந்தால் நமக்கு முன் எழுதிய சீவகசிந்தாமணியில் இருக்கின்றதா என்று புரட்டிப் பார்க்கின்றேன்..!!!"

என் கவிதை "போராளியின் பயணத்தில் " நான் எழுதியிருந்தது..

கதறினாள் சின்னாத்தா-எந்தக்
கண்ணனும் வரவில்லை

"பாஞ்சாலிக்குப்
பட்டுச்சேலைக் கொடுத்த
கண்ணபிரானின் கரங்கள்
சின்னத்தாயின்
நிர்வாணத்தில்
சிறைப்பட்டுப்போனது"

ஆனால் அச்சில் வரும்போது இந்த வரிகள் நீக்கப்பட்டு அவசரம் அவசரமாக எழுதிக்கொடுத்தேன்

"அவள் கதறுலுக்கு ஓடிவர
அவள் என்ன
ஐவருடன் படுத்த
தர்மராஜனின் தர்மபத்தினா..?"
என்று.

ஏன் தெரியுமா,, என் பட்டுச்சேலை வரிகளின் கருத்து அப்படியே கவிஞர் இன்குலாப் எழுதி மிகவும் பேசப்பட்டு விமர்சிக்கப்பட்ட வரிகள் என்று. என் கவிதைகளை வரிவிடாமல் வாசித்து பிழைத்திருத்தமும் செய்த அய்யா இன்குலாப் அவர்கள் ஏன் என்னிடம் இதைச் சொல்லவில்லை..? விடுவேனா சொல்லுங்கள்.. கேட்டேன்.. அய்யா சொன்னார்.. நீ என் கவிதையை வாசிக்கலை. உனக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாதுனு எனக்குத் தெரியும்.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு