திங்கள், ஜூன் 21, 2004

மீண்டும் மீண்டும் வா....

திரைக்கு வந்து சில வாரங்களே ஆன தமிழ்ப் படங்களை திருட்டு விசிடியிலும், திரைக்கு வந்து சில மாதங்களே ஆன ஆங்கிலப் படங்களை திருடாத டிவிடியிலும், பார்த்து விடுவதால், சன் டிவி, கே டிவி, என்.பி.சி. ஹெச்.பி.ஓ., டி.என்.டி. இன்ன பிற முப்பது சொச்ச தொலைக்காட்சிகளில் காட்டப்படும் படங்கள், பார்த்த படங்களாவே இருக்கின்றது. இந்த மாதிரி channel-surfing செய்துகொண்டு, பார்க்காத படம் தெரிகிறதா என்று தேடும்போது, கிடைக்கும் சில காட்சிகள் சுவாரசியம். கடந்த சில வாரங்களாக இந்த மாதிரி தடுக்கி விழுந்து மீண்டும் ஆங்காங்கேபார்த்த படங்கள், வாட் வுமன் வாண்ட்; சதி லீலாவதி; மின்சாரக் கனவுகள்; ப்ரிட்ஜெட் ஜோன்ஸ் டைரி; பாட்சா.

What Women Want சிரிப்பதோடு நிறுத்தாமல் கொஞ்சமாய் சிந்திக்கவும் வைக்கும் படம். விவேக் முதல் 'செம ரகளை' சத்யராஜ் வரை தமிழில் சரியாக உல்டா செய்யாத கதாநாயகனாக மெல் கிப்ஸன். பெண்களை போகப் பொருளாக மட்டும் நினைப்பவர். திடீரென்று பெண்கள் மனதில் நினைப்பதை அறியும் சக்தி பெறுகிறார். (ஆண்கள் நினைப்பதை இன்னும் அவரால் கிரகிக்க இயலாது. ஆண்கள் ஏதாவது நினைக்கிறார்களா என்று கேட்டால், எனக்கு பதில் தெரியாது.)

அந்தக் காலத்து விக்ரமாதித்தனுக்குத் தெரிந்த ஆய கலைகள் அறுபத்து நான்கில், பிறர் மனதில் இருப்பதை அறிவதும் ஒன்று. விளம்பர நிறுவனத்தில் வேலை பார்க்கும் மெல் கிப்ஸன், எவ்வாறு, பெண்களின் மனதை அறிந்து, Nike காலணி விளம்பரம் முதல் ஹீரோயினின் காதல் வரை கவர்கிறார் என்பதே திரைக்கதை. பெண்கள் எதைப் பற்றி சிந்திக்கிறார்கள் என்பதை கொஞ்சம் politically incorrect-ஆக சொல்லும் தத்துவப் படம். தகப்பனாக, மகளின் சிந்தனைகளை கேட்பது, மேலாளராக, சகாக்களின் எண்ணங்களை அறிந்து கொள்வது, அவரை மெல்ல மாற்றி, male chauvinismஐ குறைக்கிறது.

Bridget Jones Diary கொஞ்சம் வழவழா கொழகொழா வகையைச் சார்ந்தது. சுவாரசியமான Chick-flick என்பது எப்படிப்பட்ட வகை என்று கேட்டால் இப்படத்தை தைரியமாக நான் உதாரணம் சொல்வேன். டைரி என்பது டைட்டிலிலேயே இருக்கிறதே, படம் முழுக்க டைரி வடிவில் சொல்லப்படுகிறதோ, என்று எண்ணினால், ஆங்காங்கே கொஞ்சம் டைரி டெக்னிக் உபயோகப்படுத்திக் கொண்டார்கள். Streetsmart நடிகரான Hugh Grant-ஐ, கிட்டத்தட்ட வில்லனாக காண்பித்ததால் மட்டும் எனக்குப் படம் அவ்வளவாக ரசிக்கவில்லை.

மனதில் நினைத்ததை, உள்ளது உள்ளபடியே பேசும் ஒருத்திக்கு, உற்ற துணை கிடைக்குமா? கிடைத்தாலும், அதை கெடுப்பதற்கு ஒருவன் எவ்வளவு தூரம் முயல்வான் என்பதுதான் கதையின் அடிநாதம். அம்மாவால் பெண் பார்க்க வைக்கப்படும் முதல் காட்சியில் ஆரம்பித்து கடைசி காட்சியில் காதலனிடம் டைரியை விளக்குவதற்காக ஓடும் காட்சி வரை ரெனீ ஜ்வெல்கர் இனிப்பான அடுத்த வீட்டுப் பெண்ணாக வந்து போகிறார். வித்தியாசமான படம். படம் பார்க்கும்போது 'ஐய்யயோ... இவ்வாறு செய்யாதே' என என்னை நானே தர்மசங்கடத்தில் ஆழ்த்தி கொள்வதே படத்தின் வெற்றி. உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம்; ஆனால், பார்க்கவேண்டிய படம்.

சதி லீலாவதி - ஆங்கில மூலம் எது என்பது குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து ரசிக்கும் படம்;

மின்சாரக் கனவுகள் - வானொலியில் வரும் ஞாயிற்றுகிழமை ஒலிசித்திரம் போல் கேட்டேன். எவ்வளவு பார்க்காத காட்சிகள்! விசிடிக்காரர்கள் அழகாக எடிட் செய்கிறார்கள்;

பாட்சா - 'எனக்கு இன்னொரு பெயர் இருக்கு' என்பதற்காக முதல் பகுதியை இண்டெர்வல் வரை மீண்டும் மீண்டும் பார்க்கலாம்.

1 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு