ஞாயிறு, ஜூன் 13, 2004

தோணியும் அந்தோணியும்

சைதன்யா:

அவை எங்களுக்கான கணங்களாய் அமைந்தன. விளக்க முடியாதவை அவை. மேலே வானம். சுற்றிலும் கடல். வானத்திலிருந்து நீலம் வழிந்து கடலில் இறங்கியிருக்கிறது. மெல்லிய குளிர். சல்லாத் துணி போலும் இருள். நிலக்கடலையின் பாதித்தொலி போல் சிறு படகு. கூட மைக்கேல். நாங்கள் பேசிக் கொள்ள எதுவும் இல்லாமல் கிடந்தோம். எங்கள் உள் மௌனங்கள் ஒன்றையொன்று தழுவிக் கிடந்தன. பேசி அந்தக் கணத்தைக் கொச்சைப்படுத்திவிட வேண்டாமாய் இருந்தது. உணர இயற்கை ஆயிரம் விஷயங்களை உள்ளே நிரப்பிக் கொண்டே இருக்கிறது. பிரமிப்போ, மயக்கமோ கூட சிறு வார்த்தையாடலோ கூட அதை அசக்கி விடும். குறிப்பாக, அந்தக் கணம் தன் பவித்திரத்தினை இழக்க நேர்ந்து விடும். இயறகை என்பது பூதம். வார்த்தை என்பது குப்பி. பூதம் சீசாவுக்குள் மாட்டிக் கொள்பதாவது...? என்ன குரூரம்? இருவருமே அதை விரும்பவில்லை. மனதின் அந்தரங்க வளாகங்களையும் சற்று இறுக்கம் தளர்த்திக் கொள்ள, ஆசுவாசப்பட வேண்டித்தானே இருக்கிறது? திருமணம் என்கிற அளவில், மனதுக்கினியவர்கள் பெரியவர்கள் முன்னிலையில் மாலை மாற்றிக் கொள்வது போல... நாங்கள் இயற்கை முன் அதை வழிபாடுணவுடன் அடிபணிந்து நிற்கிறோம். எங்கள் இருவருக்குமாய் இயற்கை தன் காருண்யத் தழுவலை நிகழ்த்துகிறது. நாங்கள் அதன்முன் ஒட்டிப் பிறந்த ரெட்டைப் பிள்ளைகளாய் உணர்கிறோம். ஒரு தாயின் இரு தனங்களையும் பற்றி ஆளுக்கொரு பக்கம் அமுதுண்கிறோம். அவன் பெற்ற தட்பநுட்பம் எனக்கானதாகவும் என் அனுபவம் அவனுடையதுமாகவும் அமைகிறது. மொழியால் இதை விளக்க முடியுமா? கூடுமா? இணக்கமான மௌனத்திலும் ஆழங்காற்பட்டு உள்ளிறங்க வேறு ஏதாலும் இயலுமா? அன்பின் பரிமாற்றத்தினை ஒரு மௌனம் விளக்கும் அளவு, சிறு புன்னகை தெளிவிக்கும் அளவு மொழி தெரிவிக்க எந்நாளும் சாத்தியப்படாது. உணர்வுக் கடலுக்கு பாத்தி வெட்டி விடுகிறது மொழி.

காலம் உறைந்து கிடந்தது எங்களுக்கு வெளியே. அலைக்குதிரைகள் கட்டிக் கிடக்கின்றன. நாங்கள் மல்லாக்கப் படுத்திருந்தோம். மேலே வானம் - பயமுறுத்த வேணாமோ அந்த வானத்தின் முகம். நான் தனியே இப்படி வானத்தைப் பார்த்துப் படுத்துக் கிடக்கவும் கூடுமோ? வெப்பம் வெளிக்கசிய குளுமையைத் தக்கவைத்துக் கொள்ளும் மண்பானை போல அந்த இணக்கமான நல்லமைதி, நிசப்தம் பிரம்மாண்டத்தோடு தொப்புள்கொடி சுற்றிக் கிடந்தது. ஆ... கூட அவன். நாங்கள் எங்கள் ஆத்மாக்களை இதோ, இந்தக் கடலில் வானத்தின் நீலம் போலும் அலசிக் கொண்டிருக்கிறோம் ஒருசேர. எங்கள் மௌனம் ஒருவருக்கொருவர் சமிக்ஞைகளைப் பரிமாறிக் கொண்டேதான் இருக்கிறது. நாம் அதை உணர்வதில்லை. அதை உணர்த்த - உணரக்கூட யாராவது வேண்டியிருக்கிறது. அவரும் வெளிப்படையான மனதுடன், பரிமாறும் பெருவிருப்புடன் அதை வெளிப்படுத்த எந்தவிதக் கட்டாயத்தையும் நிர்ப்பந்தத்தையும் சுயநலமான எதிர்பார்ப்பையும் கொள்ளாதவராய் அமைய வேண்டியிருக்கிறது.

எத்தனை ifs and buts, provideds - அப்படி நட்பும் சாத்தியப்பாடுகளுமே வெகு அரிதாகவே கிடைக்கின்றன. பேசி அதை இழத்தல் தகாது. விளக்கியுரைத்து அதைக் குழப்பிவிடுதல் மகாபாவம்.

பாற்கடலில் துயில்கொண்ட பரமன். மகாலெட்சுமி. அருகே செல்லமோ செல்லமான மனைவியில்லாமல் பரந்தாமனால் அப்படிக் கண்மூடிக் கிடந்திருக்க முடியுமா என்ன? ஐயோ, நான் ஏன் இந்தக் கணங்களுக்காய் வார்த்தைகளைக் குதப்பிக் கொண்டிருக்கிறேன் எனக்குள்? அவரவர் உள்வாசனையை அவரவர் எட்டிப் பிடிக்க நான் ஒதுங்கி வழிவிட வேண்டும். அதற்கு சகமனிதனை நம்பு. நேசி. கைப்பிடித்துக் கொள். சிரி. ரசி. மனதை - நுழையீரலை விரியத் திற. ஏதாவது உள்நுழையக் காத்திரு. வசதி பண்ணிக் கொடு. வானத்தின் நீலம் இறங்க இறங்க வெளிற வேணாமோ? வானம் மேலும் அடிவண்டலாய்க் கலங்கி, கெட்டிப்பட்டு, நீலம் கருநீலமாகி, கருப்பாகிவிட்டது.

(பழைய இந்தியா டுடேயில் வெளியான சிறுகதையில் இருந்து எனக்குப் பிடித்த சில பகுதிகள்)


0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு