'இம்' என்றால் திருட்டு... 'இச்' என்றால் திருட்டு!
எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவள் முதன் முதலாக குப்புற படுத்துக் கொண்டது, நீஞ்ச ஆரம்பித்தது, தவழத் தொடங்கியது, உட்காரத் தெரியாமல் படுக்கையில் அடிக்கடி விழுந்தது, பின் ஒருவாறாக உட்கார கத்துக் கொண்டது என பலவற்றையும் வீடியோவில் பதிவு செய்திருக்கிறேன். அவளுக்கு 'அ, ஆ..', சொல்லிக் கொடுப்பது, ஆங்கில சொற்றொடர்களின் தமிழ் அர்த்தம் என எல்லா வீட்டிலும் எல்லாரும் சொல்லிக் கொடுப்பதை முடியும்போது பயிற்றுவிக்கிறேன். இவற்றின் போது எனக்கு நிகழும் அனுபவங்களை, நண்பர்களின் வாரயிறுதி டின்னர் விருந்துகளிலோ, இந்தியாவுடன் தொலைபேசியில் பேசும் நள்ளிரவுகளிலோ ஆர்வத்துடன் விவரிப்பேன்.
போன ஞாயிற்றுக்கிழமை அதிசயமாக சில வேலைகளைத் தொடர்ந்து செய்ய ஆரம்பித்தேன். பாத்ரூம் முழுக்க சுத்தம் செய்வது, ஒட்டடை அடிப்பது, பழைய படித்த புத்தகங்களில் இருந்து உபயோகமான பக்கங்களை மட்டும் கிழித்து வைத்துக் கொண்டு மற்றவற்றை தூக்கிப்போட்டது, ரொம்ப நாளாக உபயோகிக்காத என்றோ பயனளிக்கக்கூடிய சில சாமான்களை பரணில் பத்திரபடுத்தியது என்று ஒரு மணி நேரம் சென்றிருக்கும். சமையலில் வழக்கம்போல் மும்முரமாய் இருந்த அம்மாவிடம், என் மகள் சென்று, 'அப்பா, ரொம்ப வேலை பண்றாம்மா' என்று சொன்னது ஆச்சரியமாக, கொஞ்சம் வெட்கமாகவும் இருந்தது.
என் குழந்தை சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதன் ஆழ்மனதில் எவ்வாறு சில ஆணாதிக்க (இந்திய) பிம்பங்கள் விழுந்தது என்று ஓரமாக வருத்தப்பட்டது. அவற்றை மாற்ற என்ன செய்யலாம் என்று தனியாக யோசிக்கவேண்டும். அமெரிக்கப் பெற்றோரின் குழந்தைக்கு, சனியோ, ஞாயிறோ, தந்தை களத்தில் இறங்கி பெயிண்ட் அடித்தாலோ, களை பிடுங்கி செடி நட்டாலோ, பெரிய விஷயமாக இராது. ஆர்வத்துடன் கூடமாட உதவிகள் செய்வாளாக இருக்கும். இல்லை, தோழர்களோடு விளையாட ஓடிப் போய்விடுவாளாக இருக்கும். தந்தை முழுச் சோம்பேறியாக இருந்து, திடீரென்று ஒரு நல்ல நாளில் கலப்பை தூக்கினால், எந்த நாட்டிலும் குழந்தை வியக்கும்.
எஸ்.ராமகிருஷ்ணனின் தமிழில் சுட்ட படங்களை விமரிசித்ததை பார்த்தவுடன் ஒவ்வொரு நாட்டு குழந்தைகளின் மனோபாவத்தோடு ஒப்பிடத் தோன்றியது. பிற மொழிகளில் வெளிவந்த படங்களை ஆங்கிலத்தில், உள்ளூர் கலாசாரத்திற்கு ஏற்ப மாற்றிக் கொடுக்கிறார்கள். நியு யார்க் டைம்ஸ் முதல் லோக்கல் பத்திரிகை வரை, முன்னுமொரு காலத்தில் எழுதப்பட்ட ரோமியோ-ஜூலியட் கதைகளை காலத்திற்கேற்ப முலாம் பூசி கொடுத்தால் கூட வியந்து பாராட்டுகிறது. ஆங்கிலத்தில் முன்பு வெளிவந்த 'Around the world in 80 days', '12 Angry Men' என பத்து வருடத்திற்கொரு முறை போதிய இடைவெளி விட்டுவிட்டு மறுபதிப்பு தந்து கொண்டேயிருக்கிறார்கள்.
'மகளிர் மட்டும்' படத்தையும் அதன் ஆங்கில பதிப்பையும் ஒரு சேர பார்க்கலாம். நமது மொழிக்கு ஏற்ப, தமிழ் பழக்கவழக்கங்களுடன் திரைக்கதை, வசனம் அமைத்து, மனதில் நிற்கும் காட்சியமைப்போடு படத்தைத் தந்ததற்கு பாராட்ட வேண்டாம். அட... இது மொழி மாற்றம்தானே... என்று டப்பிங் படத்தை பார்க்கும் முன்-நிர்ணயித்த பார்வையுடன் படம் பார்க்கும் கலர் கண்ணாடியை இறக்கி விட்டுக் கொள்ளலாம். Sense & Sensibility என்னும் ஆங்கில படம் மிகவும் ரசிக்கத்தக்கது. 'ஒன்றி பார்க்க முடியுமா?' என்று கேட்டால் என்னால் முடியாது. ஆனால், 'கண்டு கொண்டேன்... கண்டு கொண்டேன்'-இல் தபுவின் நடுத்தர வர்க்க சமன்பாடுகள் மனதைப் பிசையும். 'Godfather'-தான் 'நாயகன்' என்பது எல்லாப் படங்களுக்கும் வார்ப்புரு தேடும் நோக்கோடு ஒப்பிடுவதை சொல்கிறது. ஒரே genre திரைப்படங்களா? ஆம்... தழுவலா? நிச்சயம் இல்லை.
புத்தகங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் படங்கள் ஆஸ்கார் தேர்வாகிறது. அவை கூட அக்மார்க் ஒரிஜினல் இல்லை என்பதால் உலக அரங்கின் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என சொல்லலாம். 'சதி லீலாவதி' தத்து எடுக்கப் பட்ட தமிழ்ப்படமாகவே இருக்கட்டும். அதை தமிழர்களின் குணத்திற்கேற்ப எவ்வாறு மாற்றப்படவில்லை என்பதை விவரிக்கவேண்டும். சண்டைக் காட்சிகளைப் பார்த்தால் இது ஏற்கனவே ஆங்கிலப் படத்தில் ஜேம்ஸ் பாண்ட் செய்வது போல் இருக்கிறது என்று அங்கலாய்ப்பது எனது நுண்ணிய கிரகிப்புத்தன்மையையும், அனேக படங்களை பார்த்தையும் சுட்டலாம். ஆனால், அந்த சண்டை எவ்வாறு நம்பமுடியாமல் இருக்கிறது என்று ஃப்ரேம் பை ஃப்ரேம் அலசுவதை விட்டு விட்டு, 'உன் குழந்தை ஏற்கனவே பக்கத்து வீட்டுப் பையன் எழுதிய ABCDதானே எழுதுகிறது' என்பதுதான் பலரின் கூற்றாக இருக்கிறது.
எனக்கு இரண்டு பேரும் அ..ஆ..இ...ஈ, எழுதுவதில் பிரசினையில்லை. இருவரும், அதை அவர்கள் கையெழுத்தில் எழுதினார்களா என்பதில்தான் எனக்கு ஆர்வம்.
இரண்டு பதிவுக்கான விஷயத்தை ஒன்றாக்கி விட்டீர்களே !
சொன்னது… 6/22/2004 10:23:00 AM
எந்த இரண்டு? ;)
சொன்னது… 6/22/2004 11:43:00 AM
கருத்துரையிடுக