முல்ஹோலண்ட் ஃபால்ஸ்
'ஜெனிஃபர் கானலி'யைப் பார்த்தால் மகாத்மாவே சபலப்பட்டு போவார் - IMDB-இல் துழாவியபோது 'பிதாமகனில்' ஒரு பாடலுக்கு வந்துபோகும் சிம்ரன் போன்றவரை குறித்து ஒருவர் எழுதியிருக்கிறார். படத்தின் கதாநாயகி மெலனி கிரிஃபித்துக்கு, மோசமாக நடிப்பவர்களுக்காகத் கொடுக்கப்படும் ராஸ்ப்பெரி விருது வழங்கப்பட்டிருக்கிறது. 1950களின் லாஸ் ஏஞ்சலீஸை கண்முன்னே கொண்டு வருகிறது. ஹாலிவுட்டின் சத்யராஜ் 'ஜான் மால்கோவிச்' நடித்திருக்கிறார். எஸ். ராமகிருஷ்ணனை கேட்டால் 'காக்க... காக்க'வின் ஆங்கில ஒரிஜினல் இதுதான் என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்வார்.
என்னதான் சிறப்பான நடிகர்களை பொருத்தமான வேடங்களுக்குப் போட்டாலும், கதாபாத்திரத்தின் சித்தரிப்பு தெளிவாக இல்லாவிட்டால், படம் மக்களை சென்றடையாது என்பதற்கு, இந்தப் படம் நல்ல உதாரணம். நான்கு எல்லே போலீஸ். சட்டத்தை துச்சமாக மதித்து, சட்டத்தை நிலை நாட்டுபவர்கள். ஹீரோ, மனைவியுடன் மகிழ்ச்சியான வாழ்வில் இருக்கிறார். அப்பொழுது அங்கு நிகழும் ஒரு பெண்ணின் மரணம் எவ்வாறு அவர்களைப் பிரிக்கிறது என்பதை குழப்பாமல் சொல்லியிருகிறார்கள்.
படத்தின் தலைப்பு ஒரு காரணப் பெயர். மாஃபியாத் தலைவர்களும், போதை ராஜக்களும் எல்லேயில் கால் வைத்தால், நால்வர் அணி அவர்களைத் தள்ளிவிட்டு விடும் இடத்தின் பெயர்தான் 'முல்ஹோலண்ட் ஃபால்ஸ்'. என்கவுண்டர், ஜெயில், வாய்தா, வக்கீல், மனித உரிமை என்று எல்லாம் சிரமப்படாமல், ஒரேயொரு தள்ளு. ஹாலிவுட் படங்களின் எதிர்பார்ப்புக்குரிய தரத்தை 1950ல் உலாவந்த மகிழுந்துகளின் மூலமும், ஆடைகள் மூலமும் சிறப்பாக காட்டுகிறார்கள். குற்றம் செய்பவர்களை தண்டிக்கும் நால்வரின் தலைவரே சபலப் படுவது, பெரிய மனிதர்களின் சிறுமைத்தனம், கணவன்-மனைவி இடையே நிகழும் புரிதல், கோவலன் ஹீரோவின் குற்றவுணர்ச்சி என்று மன அலசல்களை நிறைய கோடிட்டு காட்ட வாய்ப்பிருந்தும் 70-எம்எம் அளவுக்குக் கோட்டை விட்டிருக்கிறார்கள்.
ஜெனிஃபர் கானலியின் படங்களாக பார்த்து வரும் எனக்கு, அவருடைய மிகச்சிறிய காரெக்டர் வருத்தத்தைத் தந்தது. ஜான் மால்கோவிச்சும் கலக்கல் நடிகர். அவருக்கு சில சுவாரசியமான வசனங்கள் தரப்பட்டுள்ளன. அணுவை குறித்து ஐந்து வரிகளில் சிறுகுறிப்பு கொடுத்து, வாழ்க்கையின் பெருங்குறிப்பு வரைகிறார். அவருடைய வசனங்களில் இருந்து சில....
ஹீரோயின் மெலனி கிரிஃபித் தூக்கம் வராமல் கணவனுக்காக காத்திருக்கும்போது கையில் வைத்திருக்கும் எர்னஸ்ட் ஹெமிங்வேயின் 'A Farewell to Arms'ஐ யாராவது வாசித்திருக்கிறீர்களா?
ஏ.எம்.சி.யில் ஒளிபரப்பாகும்போது அவசியம் ஒரு முறை பார்க்கலாம்.
ஜெனிஃபர் , 'எ ப்யூட்டிஃபுல் மைண்ட்' திரைப்படத்தில் ஜான் நேஷின் மனைவியாக நடித்தவர் தானே !!!
சொன்னது… 6/26/2004 09:21:00 PM
அவரேதான்... ஆஸ்கார் கூட கெலித்தார்.
சொன்னது… 6/27/2004 08:41:00 PM
கருத்துரையிடுக