திங்கள், ஜூன் 28, 2004

சொல்லாமலே போன கதை

'செயின்ஃபில்ட்' (Seinfeld) அமெரிக்காவில் புகழ்பெற்ற காமெடித் தொடர். அதில் வரும் ஒரு காட்சியை இந்தப் படம் நினைவுக்குக் கொண்டு வந்தது.

Seinfeld: 'அந்த சினிமாவுக்குப் போகலாம்... ரெடியா?'
நண்பர்கள்: 'ஐயோ... அந்தப் படமா! படு மோசமாச்சே... நான் வர மாட்டேன்!'
Seinfeld: 'மோசமான படத்துக்குத்தான் கூட ஆள் வேண்டும். தனியாக காமெண்ட் அடிக்கமுடியாது; கிண்டல் செய்வதை ரசிக்க துணைக்கு ஒருத்தர் வேண்டும்!'

'லாஸ்ட் இன் ட்ரான்ஸ்லேஷனை' (Lost in Translation) பார்த்த சோகத்தைப் பகிர்ந்து கொள்ள மனைவி இருந்தது ஆறுதல். படத்தின் அறிமுகம்+விமர்சனத்தை இங்கேயே நிறுத்திக் கொள்ளலாம். இருந்தாலும் இன்னும் கொஞ்சம்....

அமெரிக்கர்கள் இருவர், ஜப்பானில் சந்தித்து நட்பு பாராட்டுகிறார்கள். நடு வயது போராட்டத்தில் தத்தளிக்கிறோமோ என்று குழம்பும் ஹீரோ 'பில் முர்ரே'. இளவயது உளவியல் பட்டதாரியாக அழகு ஹீரோயின் 'ஸ்கார்லெட் ஜோஹான்ஸன்'. தொலைபேசியில் ரிப்போர்ட் கொடுக்கும் மனைவியை காதில் வாங்கிக் கொண்டு, குழந்தைச் செல்வங்களிடமிருந்து தப்பித்து, வாழ்க்கையை தள்ளி வருகிறார் ஹீரோ. புகைப்பட பிடிப்பு மேல் பெரும்பிடிப்பு கொண்ட காதல் கணவனிடம் பிடிப்பில்லாமல், போரடிக்கிறது ஹீரோயினுக்கு. விஸ்கி விளம்பரத்திற்காக டோ க்யோ வந்து சேருகிறார் 'எண்பதுகளின் மார்க்கெட் இழந்த சிவாஜி கணேசன்' போன்ற ஹீரோ.

சாதாரணமாக தனிமையில் வாடும் ஆண்-பெண் சந்தித்தால், ஒரு முத்தம், ஒரு நிலவு, ஒரு விருந்து, பிறகு படுக்கை என்று நிறையப் படங்கள் முன்னேறும். (படுக்கையில் எவ்வளவு தூரம் முன்னேறுகிறார்கள் என்று காட்டப்படுவதை பொறுத்து, PG-13, R, NC-17 என்று சான்றிதழ் தந்து விடுவார்கள்.) இங்கு இயக்குநர் சோஃபியா வித்தியாசப் படுகிறார். நிஜ வாழ்வில் எவ்வாறு நடந்து கொள்வோமோ, எவ்வாறு சும்மா, சாதாரணமாக அளவளாவுவோமோ, அவ்வாறே டயலாக்+காட்சியமைப்பு வைத்தது ஆச்சரியம்தான்.

ஹீரோ, ஹீரோயின் இருவரும் ஜெட்-லாஃக்கினால் அவதிப்படுகிறார்கள். (இவ்வளவு நாள் ஜெட்-லாஃக் நீடிக்கும் என்று எந்த மறத்தமிழனும் ஒப்புக் கொள்ளமாட்டான். கிடைக்கும் இருபது நாள் விடுமுறையில் இவ்வளவு நாள் 'இது இரவா... இல்லை பகலா' என்று கஷ்டப்பட்டால் வெகேஷன் கோவிந்தா.... கோவிந்தா....). ஜப்பானிய மொழி தெரியாமல் சிற்றுண்டி முதல் ஆஸ்பத்திரி வரை அல்லல்படுகிறார்கள். (முப்பது நாளில் ஜப்பானிய மொழி புத்தகங்களையும் நக்கலடிக்கிறார்கள். காதலியிடம் சொல்லும் 'நான் உங்கள் குடும்பத்துக்கு அறிமுகமாக விரும்புகிறேன்' போன்ற சொற்றொடர்களை எசகுபிசகாக ஓட்டல் மேனேஜரிடம் சொல்லி ரியாக்ஷன் பார்த்து சிரிப்பது... சொக்கன் இப்பொழுதுதான் ஜப்பானில் இருந்து திரும்பியுள்ளார்... அவ்வளவு கஷ்டமா இருக்கிறதா என்று விசாரிக்க வேண்டும்).

இந்தப் படத்தை இயக்கியவர் 'காட்ஃபாதர்' புகழ் கோப்போலாவின் மகள் சோஃபியா. அவரின் நிஜ வாழ்க்கையை கிட்டத்தட்ட பிரதிபலிப்பவராக ஹீரோயின் கதாபாத்திரம். தனக்கும், தன் முன்னாள் கணவனுக்கும் இடையிலே இருந்த பிஸினஸ் ஒப்பந்தத்தை ஒத்த திருமணம், கணவனுக்கும் 'There's Something About Mary' கேமரான் டையாஸுக்கும் உள்ள உறவு போன்றவற்றின் தாக்கம் நிறைந்திருப்பதாக விஷயமறிந்த IMDB வட்டாரங்கள் சொல்கிறது.

படத்தின் இறுதியில் பில் முரே, ஹீரோயினின் காதில் ஏதோ கிசுகிசுப்பார். அவர் என்ன சொன்னர், அவள் ஏன் மெல்ல சிரித்தாள் என்பது மிகவும் அலசப்பட்டது. அது என்ன என்பது நமக்குத் தெரியாது. கிட்டத்தட்ட படம் முழுக்கவே, அது போல் பூடகத்தன்மை.

மரத்தடி குழுமத்தில் ஷக்தி எழுதியதுபோல் ஸ்ல்ல்ல்ல்லோ படத்திலும் இதை சேர்க்கமுடியாது. ஆனால், மாறுபட்ட எதையோ சொல்ல வரும் கதாசிரியர், வித்தியாசமான தாக்கத்தைக் கொண்டு வர நினைத்து ஏமாற்றிக் கொள்கிறார் என்றே தோன்றியது! கவிதையில் சப்-டெக்ஸ்ட் பார்த்திருக்கிறேன். கதைகளில், திரைப்படங்களில் கூட ரசித்திருக்கிறேன். வெளிப்படையாய் ஏதும் புரியாமல், பூடகத்தனமை மட்டுமே குடிகொண்டு, ஆஸ்கார் விருது தேர்வாளர்களுக்கு மட்டுமே விரும்பக்கூடிய படம்.

1 கருத்துகள்:

I didnt like it either. It didnt impress me and i dont think that movie deserved such an attention in Academy and media.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு