தீராநதி - குமுதம்.காம்
சுஜாதா நேர்காணல்:
சிறுவயதில் நான் மாங்காய் அடித்தது, பள்ளிக்கூடம் ‘கட்' அடித்தது போன்ற தகவல்கள் வாசகர்களுக்கு எந்த விதத்திலும் தேவையற்றவை என்றே கருதுகிறேன்.
பெரும்பாலான கதைகள் இதுபோல் பத்திரிகைகளின் அவசரத்துக்காக எழுதியவைதான். இதனால் கதையின் தரம் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், சில நேரங்களில் இதனாலேயே அது நல்ல கதையாக அமைந்து விடவும் வாய்ப்புகள் உண்டு. ‘அவசரம் இல்லை, எப்போது வேண்டுமானாலும் கொடுங்கள்' என்றால் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்து கடைசியில் எழுதாமலேயே விட்டுவிடுவேன். எனவே, எனக்கு அவசரம் தேவையாகத்தான் இருக்கிறது. இந்த விஷயத்தில் புதுமைப்பித்தனை என்னுடைய முன்னோடி என்று சொல்லலாம். அவருக்கு ஒரு கை போதுமானதாக இருக்கவில்லை. இரண்டு கைகளும் தேவைப்பட்டிருக்கின்றன. அவருடைய அவசரத்தைப் பார்க்கும்போது, அவருடைய குறைந்த வாழ்நாளை அவர் முன் உணர்ந்துவிட்டார் என்றுதான் தோன்றுகிறது. ‘சித்தி' குறுநாவலில் அந்த அவசரம் தெரியும். குறுநாவலின் வடிவம் அவருக்குப் பிடிபிடவில்லை. ஆனால், அதற்காகக் காத்திருக்க அவகாசம் இல்லை. கைவரும் அளவுக்கு எழுத வேண்டிய கட்டாயம்.
‘‘கதை எப்படி இருக்கிறது என்பதை அடுத்த வாரம் வாசகர்கள் கடிதத்தில் இருந்து தெரிந்து கொள்வேன்'' என்பார். அவ்வளவு நம்பிக்கை. நானும் அந்த நம்பிக்கையை எப்போதும் தவறாகப் பயன்படுத்தியதில்லை. ஏனெனில், அவரைவிட என் கதைகள் மீது எனக்குதான் பொறுப்புகள் அதிகமாக இருக்கின்றன.
சாம்ரசட் மாம், டபிள்யு டபிள்யு ஜேக்கப்ஸ், டி.ஹெச்.லாரன்ஸ், ஜேம்ஸ் ஜாய்ஸ், அப்புறம் சில அமெரிக்க எழுத்தாளர்கள். முக்கியமாக ஜான் அப்டைக். மற்றபடி அனேகமாக எல்லா எழுத்தாளர்களது முதல் நாவலையும் படித்து விடுவேன். விளாதிமிர் நபக்கோவுடைய, ‘லோலிதா' நாவலின் பெரிய பாதிப்புகள் என் எழுத்துகளில் உண்டு. கிரேட் பிராட்பெரி, ஒ.ஹென்றி, செகாவ், மாப்பஸான், கேதரின் மான்ஸ் பீல்ட் இவர்களுடைய நடைகளும் என்னைப் பாதித்தன.
தீவிர வாசகர்கள் பார்த்துவிட்டு சிறியதாக புன்னகைத்துவிட்டுப் போய்விடுவார்கள். அல்லது கை கொடுத்து விட்டுப் போவார்கள். அவ்வளவுதான்; நீயும் பெரிய மனிதன், நானும் பெரிய மனிதன் என்பது மாதிரி. ஆனால் பெரும்பாலும் தொந்தரவுதான். கிட்டத்தட்ட ஒரு சினிமா நடிகனுக்கு உண்டான அளவு தொந்தரவு. எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்கு வருவார்கள். சும்மா பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தோம் என்பார்கள்.
அதற்கு பின்னால் உள்ள காரணங்கள் என்ன என்பதும் தெரிந்தது. நான் அதனைப் பொருட்படுத்த வேண்டியதில்லை என்றுதான் நினைக்கிறேன். பதில் எழுதினால் அதற்கு ஒரு மறுப்பு வரும். அப்புறம் மறுப்புக்கு மறுப்பு வரும். அப்படியே போய்க்கொண்டே இருக்கும்.
இலக்கியத் தரமாக எழுதும் ஒருவனால் வெகுஜன வாசகர்கள் விரும்புவதுபோல் எழுத முடியாது. முடியாது என்பதைவிட கூடாது என்று அவர்கள் கருதுகிறார்கள். அப்படிச் செய்வது ஆலயப் பிரவேசம் மாதிரி ஒரு பெரிய மீறல் என்று நினைக்கிறார்கள்.
நவீனத்துவம், பின்நவீனத்துவம், அமைப்பியல்வாதம் போன்ற பல்வேறு விஷயங்கள் தங்களுடைய பண்டிதத் தன்மையைக் காட்டிக்கொள்ளும் அளவிலேயே முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றைச் சரியாக விளக்குவதற்கான முயற்சிகள் நடக்கவில்லை.
என்னுடைய தனிப்பட்ட ‘பர்சனாலிட்டி' என்பது வேறு. என் எழுத்து என்பது வேறு. இரண்டையும் குழப்பாமல் இருந்ததால்தான் இவ்வளவு வருடம் என்னால் தாக்குப் பிடிக்க முடிந்திருக்கிறது என்று நினைக்கிறேன். எழுத்தாளன் அவனுடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் அவனது எழுத்தையும் சேர்ப்பதன் மூலம் வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்ளக் கூடாது என்பதைத்தான் என் வாழ்க்கையின் பாடமாக நினைக்கிறேன்.
எஸ்.ராமகிருஷ்ணன்
உலகம் - சிறுகதை
நன்றி: kumudam.com
கருத்துரையிடுக