புதன், ஜூலை 07, 2004

பாரா-வின் பழைய வலைவீட்டில் இருந்து...

வந்துவிட்டதால் படித்துத் தொலைக்கக் கடவீர்!
டமடமடமடம (சுய தம்பட்டம்)

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்து மாணவி ஒருவர் தமது சனி தசையின் தாக்கத்தால் என் சிறுகதைத் தொகுப்புகள் இரண்டைத் தம் எம்.பில். ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு, என்னிடம் சில விவரங்கள் கேட்டார்.

எழுத்தாளனுக்கு அலுக்காத விஷயம் தன்னைப் பற்றிப் பேசிக்கொண்டே இருப்பது. அந்த மாணவிக்கு உதவியாகவோ, உபத்திரவமாகவோ அமைந்திருக்கக் கூடிய, நான் அனுப்பிய கட்டுரை இது. என்னைப் பற்றி இது சொல்லும் விஷயங்களில் 199 சதவீதம் உண்மையே. உண்மை தவிர வேறு இல்லை.



அன்புள்ள சகோதரி ப்ரியா அவர்களுக்கு,

வணக்கம். ஒரு மாதிரி பரீட்சை பேப்பர் போல் நீங்கள் அனுப்பிய கேள்வித்தாளைப் பார்த்து மப்பாகி, இரண்டு நாள் எழுதவே தோன்றாமலாகிவிட்டது. மன்னியுங்கள்.

இந்தக் கேள்வித்தாள்களைப் பார்த்துத் தான் பரீட்சைகள் நிறைந்த கல்வி உலகை விட்டுக் காததூரம் ஓடிவந்தேன். மீண்டும் கேள்விகளா?

மன்னிக்கவும். ஒண்ணு, ரெண்டு, மூணு என்று போட்டு பதில் எழுத எனக்குக் கைவரவில்லை. எனக்குத் தோன்றிய விஷயங்களை எழுதுகிறேன். உங்கள் கேள்விகளுக்குப் பொருந்தினால் எடுத்துப் போட்டுக்கொள்ளுங்கள். உதவாது எனக்கருதினால் கதவோரம் ஒரு டப்பா வைத்திருப்பீர்களே, அதில் போடுங்கள். (என் பரீட்சை பேப்பர்களை ஆசிரியர்கள் அப்படித்தான் செய்வார்கள்.)

என்னைப் பற்றி

பிரமாதமாக எதுவும் இல்லை. 1971ம் வருஷ அக்டோபரில் (எட்டாந்தேதி) நான் பிறந்தபோது தேவர்கள் பூமாரி பொழிந்ததை என் அம்மா தவிர வேறு யாரும் பார்க்கவில்லை. அல்லது தான் மட்டும் பார்த்ததாக அம்மா கதை விட்டிருக்கக் கூடும். அந்த வருஷம் பங்களாதேஷ் யுத்தமும் புட்டோ மரணமும் உலகப் பிரசித்தம். என் ஜனனம் என் வீட்டுப் பிரசித்தம்.

என் அப்பா திரு. ஆர். பார்த்தசாரதி ஒரு கண்டிப்பான வாத்தியார். செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கிற அத்தனை பள்ளிக்கூடங்களுக்கும் (அநேகமாக) அவர் தலைமை ஆசிரியராக ஒரு ரவுண்ட் சுற்றி வந்தவர்.

பழமொழியைப் பொய்யாக்கக் கூடாது என்பதால் வாத்தியார் பிள்ளையான நான் சமத்து மக்காக என் பாலகாண்டத்தைத் தொடங்கினேன். படிப்பில் சுமார். விளையாட்டில் ரொம்ப சுமார். பொறுப்பாகக் காரியங்கள் புரிவதிலோ என்றால், ரொம்ப ரொம்ப சுமார். இரண்டு கெட்டிக்காரத் தம்பிகளுக்கு அண்ணனாகப் பிறந்துவிட்டதன் பலனைப் பள்ளி இறுதி வரை அனுபவித்தேன். ("நீ மட்டும் எப்படிடா இத்தனை மக்கா இருக்கே?")

ஆனால் அந்த வயதிலேயே கொஞ்சம் எழுதும் சாமர்த்தியம் மட்டும் இருந்தது. அப்பா, டப்பா, சுப்பா என்று ஏதாவது கச்சாமுச்சாவென்று சொற்களை இட்டுக் கவிதை என்ற பெயரில் கிறுக்கும் கெட்ட வழக்கத்தை அப்போது கோகுலம் இதழின் ஆசிரியராயிருந்த (அமரர்) திரு. அழ.வள்ளியப்பா அநியாயத்துக்கு ஊக்குவிக்க, சரி, படிப்பு வராவிட்டால் ஒழிகிறது, நாம் பெரிய கவிஞராகிவிடலாம் என்று முடிவு செய்துகொண்டேன்.

பள்ளி முடித்து, சென்னை தரமணி சி.பி.டி.யில் இயந்திரவியல் டிப்ளமோவுக்காகச் சேர்ந்தேன். (நான் எங்கே சேர்ந்தேன்? அப்பா சேர்த்துவிட்டார்.)

செண்ட்ரல் பாலிடெக்னிக் என்று சொல்லப்படும் அந்தப் புண்ணியபூமி வருஷத்துக்கு சுமார் 100 பொறியியல் பட்டயதாரிகளையும் சுமார் 500 பொறுக்கிகளையும் உற்பத்தி செய்யும் திறமை மிக்க ஒரு நிறுவனம்.

நான் அங்கே 500ல் ஒருவனாக அடையாளம் காணப்பட்டேன். வகுப்புகளுக்குப் போன நேரங்களைவிட, பக்கத்தில் திருவான்மியூர் தியாகராஜா தியேட்டரில் மாட்னி போன நேரமே அதிகம். நான் பார்க்கிற வேகத்துக்கு புதுசு புதுசாகப் படங்கள் எடுத்துத் தள்ள கோடம்பாக்கத்துப் பரமாத்மாக்களுக்குத் தெம்பில்லை என்பதால் ஒரே படத்தை 10 முறைகள் கூடப் பார்த்ததுண்டு.

கோடியில் ஒருத்தரைத் தான் சினிமா மகாத்மாவாக்குகிறது. மற்றப்பேரையெல்லாம் மண்டைகாயவே வைக்கிறது. நான் இதிலும் மற்றவர்களுள் ஒருவன்.

பாடம் பிடிக்காது. சினிமாவும் பிடிக்கவில்லை என்றால் எங்கே போவது?

அப்போது தான் படிக்க ஆரம்பித்தேன். சத்தியமாகப் பாடங்கள் அல்ல. கதைப் புத்தகங்கள்.

ஆசிரியர் பெயரைப் பார்க்காமல் கிடைக்கும் அத்தனை நூல்களையும் படிப்பது என்று முடிவு செய்து ஆரம்பித்த அந்த வழக்கம் தான் என்னையும் எழுதத் தூண்டியிருக்க வேண்டும்.

அப்போது படித்ததில் லா.ச.ரா.வும் ஜானகிராமனும் என்னை ரொம்ப ரொம்ப பாதித்தார்கள். கண்கூசச்செய்யும் அவர்களது மொழி அழகு தந்த போதையில் ரொம்ப நாள் கிறங்கிக்கிடந்தேன். கிறக்கம் தெளிந்தபோது எழுத ஆரம்பித்தேன்.

முதல் கதை?

ஞாபகம் இல்லை. நிறைய எழுதிக் கிழித்திருக்கிறேன். எல்லாம் வெகு சாதாரணமான கதைகள். எனக்கே பிடிக்காதவை. அநேகமாக ஒரு 75 கதைகளுக்குப் பிறகு தான் பத்திரிகைகளுக்கே அனுப்பத் தொடங்கினேன். பிறகொரு 50க்குப் பிறகே வெளியாகத் தொடங்கின.

கதை மலரில் ஒரு கதை வந்தது. 1989 கடைசியில் . அதைத்தான் அச்சில் வந்த முதல் கதை என்று சொல்லவேண்டும். (நிலைமை என்று நான் வைத்த தலைப்பை ரோஷம் மானம் பார்த்தால் என்று அவர்கள் தோலுறித்துப் போட்டிருந்தார்கள்) பிறகு கல்கி. பிறகு விகடன். அப்புறம் கணையாழி.

ஆங். அந்தக் கணையாழிக்கதை தான் (அவளுக்கொரு அம்மா வேண்டும்) என் உருப்படியான முதல் கதை என்று சொல்லவேண்டும். சிறுகதை எனக்கு முதல்முதலாகப் பிடிபட்டது அங்கே தான்.

இதற்கிடையில் படித்த பாலிடெக்னிக்கை விட்டு ஓடி அமுதசுரபியில் திரு. விக்கிரமனுக்கு அசிஸ்டெண்டாக ஒரு பத்து மாதங்கள் உட்கார்ந்திருந்தேன். நாநூற்றைம்பது ரூபா சம்பளமும் ஒரு நாற்காலியும். போதாது? எதேஷ்டம்.

பிறகு காமகோடி என்றொரு தேங்காய்மூடிப்பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டே தாயில் நிறைய எழுத ஆரம்பித்தேன்.

என்ன எழவு வாழ்க்கை என்று அந்த வயசுக்கே உரிய நாலுபைசா தத்துவ சோகத்தில் என் முழுத்திறமையைக் காட்டி இரண்டு சிறுகதைகள் எழுதி கல்கிக்கு அனுப்பிவிட்டு, வீட்டில் சொன்னேன்: "இந்தக்கதைகள் ரெண்டும் எனக்கு வழி காட்டும்"

காட்டின.

கதை கல்கிக்குப் போய்ச் சேர்ந்த மூணு நாளில் ஆசிரியர் சீதாரவியிடமிருந்து ஒரு கடிதம். இந்தமாதிரி, உங்கள் மொழி நன்றாயிருக்கிறது. நீங்கள் கல்கிக்கு ரெகுலராக டிவி விமர்சனம் செய்யமுடியுமா என்று கேட்டு.

கசக்குமா?

ஆரம்பித்தேன். தொடர்ந்து சினிமா விமர்சனங்கள். ஏற்கெனவே தமிழ் சினிமா அலர்ஜி இல்லையா? படு நக்கலாக எழுதி வெளியான என் விமர்சனங்களுக்கு அங்கே செமை மரியாதை கிடைத்தது. கூடவே எனக்கு வேலையும்.

1992 டிசம்பர் 6. இரண்டு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்ப்வங்கள் நடந்தன. அயோத்தியில் மசூதியை இடித்தார்கள். நான் கல்கியில் அன்று தான் முதல்முதலாகக் காலெடுத்து வைத்தேன்.

ட்ரெய்னியாக, நிருபராக, உதவி ஆசிரியராக, துணை ஆசிரியராகப் படிப்படியாக வளர்ந்து அதி சுமார் எட்டரை வருஷங்கள் கல்கியின் வாழ்வில் நானும் என் வாழ்வில் கல்கியும் இரண்டறக்கலந்துவிட்டோம்.

ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன். நான் ஆயிரம் கல்கி இதழ்களை நாசப்படுத்தி என்னை ஒரு பத்திரிகையாளனாக உருவாக்கிக்கொண்டேன். ஆனால் ஆசிரியர் சீதா, பொறுமைத் திலகம். ஒரு வார்த்தை? மூச்.என் அத்தனை அட்டகாசங்களையும் என் எழுத்துத் திறமைக்காகச் சகித்துக்கொண்டார். அவர் இல்லாவிட்டால் இன்று எனக்கு இந்த நிலைமை இல்லை. சென்னை நகரின் நூற்றுக்கணக்கான பொறுக்கிகளுள் ஒருவனாகியிருப்பேன். இது மிகையே இல்லாத உண்மை.

பத்திரிகையாளனாக இருப்பது கதை எழுதுவதற்கு ரொம்ப சௌகரியம் என்பது என் அபிப்பிராயம். அப்போதுதான் உண்மைகள் அரிதாரமின்றி விரலுக்கு வந்துசேரும். நல்ல கதை என்பது முற்றிலும் கற்பனையில் வராது; வரமுடியாது. வாழ்க்கையிலிருந்து கதையை எடுக்கிறோம். கதை மூலம் வாழ்வை தரிசிக்கிறோம்.

சிலர் சமூகத்தைப் பார்த்துக் கதை எழுதுவார்கள். சிலர் தனி மனிதர்களைப் பார்த்து எழுதுவார்கள். நான் இரண்டாவது ரகம். பார்க்கப்பார்க்கத் தீராத ஆச்சர்யமாக எனக்கு மனித மனங்களே தெரிகின்றன. எத்தனை அன்பு, எத்தனை கருணை, எத்தனை குரூரம், எத்தனை கோப தாபங்கள், அழுக்குகள், அசிங்கங்கள், அருவருப்புகள்.

இதையல்லவா எழுதவேண்டும் என்று நினைத்தேன். எழுதிக்கொண்டிருக்கிறேன். கல்கியில் நான் எழுதிய எல்லா கதைகளுமே என் அந்தந்தக் காலத்து மன வளர்ச்சியை எடுத்துக்காட்டும். சமயத்தில் வீழ்ச்சியையும்.

மூவர் தொகுதியின் அனைத்துக் கதைகளும் கல்கியில் வெளியானவையே.

அந்தத் தொகுதி பரவலாக கவனிக்கப்பட்டு அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி போன்ற எழுத்து மேதைகளெல்லாம் என்னைக் குறிப்பிட்டு எழுதவும் இலக்கிய உலகில் ஒரு விநோதமான சம்பவம் நிகழ்ந்தது.

இவன் யார்டா, வெகுஜனப் பத்திரிகைக்காரன்; இலக்கியத்துக்கும் இவனுக்கும் என்ன சம்பந்தம் என்று ஒரு கோஷ்டி கச்சைகட்டிக்கொண்டு திட்டத் தொடங்கியது. சில சிற்றிதழ்களில் என் நூலுக்குக் கடுமையான விமர்சனங்கள் வந்தன. ரொம்ப நல்ல காரியம் அது. புத்தகங்கள் வேகமாக விற்கத் தொடங்கின.

ஆனால் எனக்கு வேறுமாதிரி தோன்றத் தொடங்கியது. இந்த இலக்கியவாதிகள் என்று சொல்லப்படும் மொத்தம் பத்திருபது பேர் இருக்கும் உலகத்தில் என்ன தான் பண்ணுகிறார்கள்? எது தான் அவர்களுக்கு இலக்கியமாம்? என்று பார்த்துவிட முடிவு செய்து, கொஞ்சம் உலக இலக்கியங்களைப் படிக்க ஆரம்பித்தேன்.

ஐயோ, என்ன அழகு! எத்தனை சிந்தனைகள்! எத்தனை விதமான கண்ணைப் பறிக்கிற உத்திகள். ஆஹா மேஜிக்கல் ரியலிசம். எழுத்தில் நேரடியாகச் சொல்லமுடியாத எவ்வளவோ விஷயங்களை இந்த உத்தி மூலம் சுலபமாகச் சொல்லிவிடலாமே!

இந்த என் பிரமிப்பு நீடித்திருந்த காலத்தில் பிறந்தது தான் 'பறவை யுத்தம்' தொகுதி.

நவீன எழுத்து வகையான 'மேஜிக்கல் ரியலிச'த்தைப் பயன்படுத்தி மிக எளிமையாகவும் கதை சொல்ல முடியும் என்று அந்தத் தொகுதி காட்டுவதாக இப்போது எல்லா சிறு பத்திரிகைகளும் வரிந்துகட்டிக்கொண்டு எழுதி, நான் கேட்காமலேயே ஒரு இலக்கியவாதி அந்தஸ்து கொடுத்துவிட்டன. நானும்வேறு வழியில்லாமல் தாடி வளர்த்து சொரிந்துகொண்டிருந்தேன்.

எல்லாம் கொஞ்ச நாள் தான். உத்திகள் வரும், போகும். நடை மாறும். மொழி மாறும். வாசகர்கள் மாறுவார்கள். களம் மாறும் . நல்ல எழுத்தாக இருந்தால் அது தானே நிலைத்து நிற்கும் என்பது எனக்குப் புரிய கரெக்டாகப் பத்து வருஷங்கள் ஆயின.

அதற்குள் இலக்கியச் சிந்தனை, ஜோதி விநாயகம் சிறுகதைப் பரிசுகள், லில்லி தேவசிகாமணி அறக்கட்டளை விருது, மலையாளத்தில் 15 கதைகள் மொழியாக்கம், தெலுங்கிலும் ஹிந்தியிலும் தலா ஒன்று, இருபதாம் நூற்றாண்டின் சிறந்த தமிழ்க் கதைகள் என்று சா. கந்தசாமி தொகுத்த மிக முக்கியமான ஆந்தாலஜியில் ஓரிடம் என்று சில சந்தோஷங்கள் எதிர்ப்பட்டுவிட்டன.

எட்டு வருஷத்துக்கு மேல் கல்கியில் துணையாசிரியராக இருந்த அனுபவம் என்னை அடுத்தக் கட்டத்துக்கு அழைத்துப் போகத் தொடங்கியது.

குமுதத்தில் கூப்பிட்டார்கள். சரி, கல்கியில் படித்தோம், குமுதத்தில் உத்தியோகம் பார்க்கலாம் என்று போனேன். நாலு கை நிறைய சம்பளமும் மூட்டை மூட்டையாக அனுபவங்களும் கிடைத்தன.

ஜங்ஷன் என்னும் மாதமிருமுறை பத்திரிகைக்கு அங்கே பொறுப்பாசிரியராக இருந்தேன். மரபுக்கும் புதுமைக்கும் பாலமாக நின்று செயல்பட்ட அந்தப் பத்திரிகைக்கு நான் கொடுத்த முகமும் முகவரியும் நிலைத்திருந்தவரை நான் அங்கே இருந்தேன்.

அது மாறத் தொடங்கியபோது அன்புடன் விடைபெற்று வெளியே வந்தேன். தற்சமயம் மானசரோவர் டாட்காம் என்னும் இணையத்தளத்தின் ஆசிரியராகப் பணி.

உத்தியோகம் வயிற்றுப் பிழைப்புக்கு. ஆத்மா விரும்புவதே வேறு. எனக்கென்றில்லை. எல்லா எழுத்தாளனுக்குமே அது தீராத பசி. மூன்று மாதங்களாக மனத்தில் கருக்கொண்டிருக்கும் ஒரு நாவலைச் சுற்றி இப்போது என் சிந்தனை கும்மியடித்துக்கொண்டிருக்கிறது. என் முதலிரண்டு நாவல்கள் நீங்கள் அறிந்திருக்கக் கூடும்.

அலை உறங்கும் கடல் (கல்கியில் வெளிவந்தது) மற்றும் புவியிலோரிடம்.

முன்னது அதன் அழகுணர்ச்சிக்கும் மேஜிக்கல் அம்சங்களுக்காகவும் சிலாகிக்கப் பட்ட அதே வேளையில் பின்னது, அதன் விபரீதமான கருப்பொருளுக்காக நிர்த்தாட்சண்யமாகப் புறக்கணிக்கப் பட்டது. இட ஒதுக்கீடு குறித்த விமர்சனபூர்வமான நாவல் அது.

இந்த இரு மாதிரியும் அல்லாமல் வேறொரு விதமான என் மூன்றாவது நாவலை இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன். 150 சிறுகதைகளுக்கு மேல் எழுதியவனுக்கு நாவல் கொஞ்சம் கஷ்டம் என்பது என் தனிக்கருத்து. சிறுகதையின் வரையறுக்கப்பட்ட சட்டங்களுக்குப் பழகியவன் நான். நாவலின் சுதந்தரம் மூச்சு முட்டச் செய்கிறது. ஆயினும் எழுதுவேன். எழுத்து என்பதே ஒரு அறிதல்முறை தானே? நான் அறிய அலைபவன்.

எழுத்தாளனாக் இருப்பது ஒரு சராசரி மிடில் கிளாஸ் ஆசாமிக்கு ஒரு லக்ஸரி. இதில் மிகையே இல்லை. எப்போதும் போராட்ட முகமூடிகளுடனேயே பூச்சாண்டி காட்டுகிற வாழ்க்கை. அது விடுக்கும் சவால்களை எதிர்கொள்ள முழுநேர லௌகீகியாக இருப்பதே சரி.

ஆனால் எழுத்தாளன் பகுதிநேர லௌகீகி; பகுதிநேர சன்னியாசி. இன்னும் புரியச் சொல்வதானால் ரெண்டுங்கெட்டான். இந்த ரக ரெண்டுங்கெட்டான்களைச் சமாளிக்கவும் சகித்துக்கொள்ளவும் விதிக்கப்பட்டு அனுப்புகிற மனைவிகளின் பாடு ரொம்பவும் பேஜாரானது. நம்மால் அவர்களைப் பார்த்துப் பரிதாபப் பட முடியுமே அன்றி உதவ இயலாது. உதவப் போனால் எழுத்து எழுந்து ஓடிப்போகும். நவீன வாழ்க்கை கலைமனத்துக்குச் சரியான வில்லன்.

ஆயினும் நான் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்றால் நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்று அர்த்தம். நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்றால் என் மனைவி என்னைச் சகித்துக்கொண்டிருக்கிறாள் என்று அர்த்தம்.

எல்லா நல்ல படைப்புகளும் யாருக்காவது நிச்சயம் கடமைப்பட்டிருக்கும். பெற்றோருக்கு. நண்பர்களுக்கு. உற்சாகமூட்டியவர்களுக்கு. உதவியவர்களுக்கு.

என் படைப்புகள் நல்லவையா என்று இன்னும் 99 ஆண்டுகள் கழித்துத் தெரியவரலாம். ஆனால் அவை அனைத்தும்என் மனைவிக்குக் கடமைப்பட்டிருக்கின்றன.

நியாயமாக அவளுக்கு நான் ஒரு தாஜ்மஹால் கட்டவேண்டும். பார்க்கலாம். ஒரு ஃப்ளாட்டாவது வாங்கித் தரமுடிகிறதா, என்று.

அன்புடன்,
பா.ராகவன்



மூவர்
முதல் சிறுகதைத் தொகுதி. அனைத்தும் கல்கியில் வெளியானவை. ஆசிரியர் சீதாரவிக்குக் கடமைப் பட்டவை. இந்தத் தொகுதியின் வெளியீட்டு விழாவின்போது தான் பிரசித்திபெற்ற விக்கிரமாதித்யன் வேதாள அவதாரம் எடுத்த சரித்திரப் புகழ்பெற்ற சம்பவம் அரங்கேறியது. என் மரியாதைக்குரிய கவிஞர் விக்கிரமாதித்யன் உள்ளே போன சரக்கின் விபரீத விளைவால் கச்சாமுச்சாவென்று கூட்டத்தின் மத்தியிலிருந்து கூப்பாடு போட அபூர்வமாக வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த எழுத்தாளர் வண்ணதாசனும் கவிஞர் இளையபாரதியும் அவரை வெளியே அழைத்து (அல்லது தூக்கி)ப் போய் சமாதானப்படுத்த வேண்டியதானது. மற்றபடி மேடையிலிருந்த மாலனும் திருப்பூர் கிருஷ்ணனும் ஆர். வெங்கடேஷும் சாரு நிவேதிதாவும் சீதாரவியும் பாரதி பாஸ்கரும் இதைப் பொருட்படுத்தாமல் கூட்டம் தொடர்ந்து சிறப்பாக நடந்து முடியச் செய்த பேருதவி மறக்க இயலாதது. இந்தக் கூட்டம் இன்னொரு வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்தது தமிழகத்தில் 200 பேர் கலந்துகொண்ட முதல் புத்தக வெளியீட்டு நிகழ்வு இது தான்.

பறவை யுத்தம்
நண்பர் இரா. முருகன் அறிமுகப்படுத்தி வைத்த மேஜிக்கல் ரியலிச உத்தியை இன்னொரு நண்பர் சு. வேணுகோபால் விளக்கமாகச் சொல்லித்தர, விளைவாக வெளிவந்த சிறுகதைத் தொகுதி இது. பெரும் பத்திரிகைகள் நைஸாகக் கண்டுகொள்ளாமல் விட, அநேகமாக எல்லா சிற்றிதழ்களும் வரவேற்ற இத்தொகுதிக்கு கோவை லில்லி தேவசிகாமணி அறக்கட்டளை பரிசு கிடைத்தது. அதைவிடப் பெரிய பரிசு ஒன்றை அசோகமித்திரன் கொடுத்தார். ஒரு நாள் இரவு தேவி பாரடைஸில் ஏதோ சினிமா பார்த்துவிட்டு வெளியே வந்து எல்.ஐ.சி. பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தபோது தற்செயலாக அவரைச் சந்தித்தேன். முன்னுரை முகவுரையெல்லாம் இல்லாமல் இரண்டு வரி சொல்லிவிட்டுப் போயே விட்டார். அந்த இரண்டு வரிகள்: "நல்லா எழுதறே. ஆனா எதுக்கு இவ்ளோ பெரிய கவசம்?" இதையே பின்னால் அவர் விருட்சம் காலாண்டிதழில் ஒரு கட்டுரையாகவும் எழுதியிருந்தார் என்பது ஒரு தகவலுக்காக. இதையே முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் கணையாழியில் இ.பா. அவர்கள் எழுதியிருந்தார். அவருக்கு எழுத்தில் பரீட்சைகள் பிடிக்கும். தோல்வி கண்டாலும் பரீட்சை எழுதுகிறவர்களைப் பிடிக்கும். ஆகவே இந்தத் தொகுதியில் கண்ட கவசத்தை அவர் ஆபரணமாக வருணித்துவிட்டுப் போய்விட்டார்.

அலை உறங்கும் கடல்
ஒரு பத்திரிகையாளனாக இராமேஸ்வரத்துக்கு செய்தி சேகரிக்கப் போயிருந்தேன். அது அகதிகள் மிகுதியாக வந்து இறங்கிக்கொண்டிருந்த நேரம். அரசியல் ரீதியிலான கொந்தளிப்பில் மாநிலமே சிக்கியிருந்தது. ஆனால் அதன் பாதிப்பு சிறிதுமற்று வழக்கமான நத்தைத் தனத்துடன் இயங்கிக்கொண்டிருந்த ராமேஸ்வரம் என்னும் நகரின் வாழ்க்கை என்னை வியப்புறவைத்தது. இலங்கை அகதிகளுக்கு இணையாகப் பரிதாபப்படவும் கவனிக்கப் படவும் வேண்டியிருந்த இராமேஸ்வரத்து மக்களின் வாழ்க்கையை ஒரு நாவலாகப் பதிவு செய்ய விரும்பினேன். கல்கியில் 23 வாரங்கள் தொடராக வெளிவந்து பிறகு நூலான இதுவே என் முதல் நெடுங்கதை. எழுதும் வரை நாவல் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். முடித்ததும் தான் இது நாவல் இல்லை என்பது தெரிந்தது. ஒரு நாவல் எழுதும் முயற்சியில் ஏற்பட்ட தோல்வியே என்னை நாவல் குறித்து அதிகம் படிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. விளைவாக ஆபீசுக்குப் பத்து நாள் லீவு போட்டுவிட்டு உட்கார்ந்து ஒரு சிறு நாவல் எழுதினேன். அது -

புவியிலோரிடம்
இடஒதுக்கீடு குறித்த விமர்சனபூர்வமான இந்நாவல், அது கொண்ட கருப்பொருளினாலேயே இலக்கிய உலகில் நிர்த்தாட்சண்யமாக நிராகரிக்கப் பட்டது. ஆயினும் என்னளவில் மிகுந்த திருப்தி தந்த படைப்பு. இலக்கியம் எழுதுபவனுக்கு அதைத் தாண்டியும் சில தகுதிகள் அல்லது தகுதியின்மைகள் வேண்டும் என்கிற ஞானத்தை எனக்கு அளித்த வகையில் இந்நாவல் எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று.

நிலா வேட்டை, ஜெயித்தகதை, பணம் உங்கள் சாய்ஸ் - இந்த மூன்று நூல்களும் எழுதியிருக்கிறேன். சொல்லிக்கொள்ள அவற்றில் ஏதுமில்லை என்பதால் வெறும் பெயருடன் நிறுத்திக்கொள்கிறேன்.

நன்றி: இப்பொழுது கூகிள் கொண்டுவராத பாராவின் ஜியோசிடிஸ் ஹோம்பேஜ்

2 கருத்துகள்:

புதைபொருளைத் தேடிப்பிடித்துக் கொண்டுவந்து கொடுத்தமைக்கு நன்றி. ஒரே ஒரு கூடுதல் தகவல் சொல்லலாமா?

அந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை மாணவிக்குப் பட்டம் கிடைத்துவிட்டது. சென்ற மாதம் தபாலில் சாக்லேட் அனுப்பியிருந்தாள்.

In 1991, Kalkiyil Hindi "Hum" Padathukku vimarsanam ezhithiyathu yaaru Guruve?!

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு