செவ்வாய், ஆகஸ்ட் 17, 2004

காதல் எப்போதும் - செழியன்

வீட்டில் யாருக்கும் தெரியாமல்
நள்ளிரவில் கண்விழித்து
உனக்குக் கடிதம் எழுத
விருப்பம் என்றேன்.
தீர்ந்த மைப்புட்டியில்
இரண்டு மின்மினிகளை அடைத்து
மேசைவிளக்கெனப்
பரிசளிக்கிறாய்.
கவிதையானதுதான் காதல்
எப்போதும்.
முதல் முத்தம் புறங்கையில்.
இரண்டாவது
ஃபேர் அண்ட் லவ்லி மணக்கும்
கன்னத்தில்.
மங்கிய இரவில்,
பூங்காவில்
தற்செயலாய் நீ
முகம் நிமிர்ந்த கணத்தில்
மூன்றாவது.
முத்தத்தை விடவும் இனிமையானது
பின் நிகழும் மௌனம்.
அவஸ்தையானதுதான் காதல்
எப்போதும்.

முத்தம் கேட்டால்
காகிதத்தில் முத்தமிட்டுக்
கடிதம் தருவாய்.
சிறுதுயில் கொள்ள
உன்மடி கேட்டால்
நீண்ட கனவுகள் தருவாய்.
உடனிருக்கும் வாழ்க்கை
கேட்டால்
முழுவாழ்க்கைக்குமான
நினைவுகள் தருவாய்.
ஏமாற்றமானதுதான் காதல்
எப்போதும்.


Thanks: vikatan.com

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு