வியாழன், செப்டம்பர் 16, 2004

சுய சாசனம்

தமிழோவியத்தில் என்னுடைய குறுநாவல் வெளிவருகிறது. அடுத்த வாரத்துடன் (நாளை) முடியும்.

படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொன்னால் பயனடைவேன். முன்கூட்டிய நன்றிகள் :-)

படிக்க: சுய சாசனம்

2 கருத்துகள்:

அன்புள்ள பிசுப்ரா,

உங்கள் 'சுய சாசனம்' படித்தேன், ஒரே மூச்சில் விறுவிறுவென்று படிக்கும்படி கதை இருந்தது - கிட்டத்தட்ட அறுபது பக்கங்களுக்கு, அதுவும் கிராமத்து வாசனையே இல்லாத ஒரு வாசகனைக் கட்டிப்போடுவது சாதாரண விஷயமில்லை - பாராட்டுகள் !

கதையில் நான் ரொம்ப ரசித்த விஷயம், இயல்பான வசனங்கள் - நேரில் இருந்து பார்த்ததுபோல் (ஐ மீன், ஒட்டுக்கேட்டதுபோல்) ஒரு எண்ணம் உண்டாகிறது ! (எனக்குப் பிடித்த சில வசனங்கள் / வர்ணனைகளைக் கீழே பட்டியலிட்டுள்ளேன்)

'சுயசாசனம்' என்ற தலைப்பே ஒரு அழகு - ஒரு நவீன நாவலைப்போன்ற பிரம்மையை உண்டாக்கினாலும், கொத்தடிமைகளாக வாழும் கிராமத்தவர்களின் வாழ்க்கையை, ஒரு காதல் கதையோடு சேர்த்துச் சொல்ல நினைத்தது நல்ல விஷயம் - சிறப்பாக வந்திருக்கிறது !

ஆனால், அந்தப் பண்ணையாரும், அவருடைய மகனும், இன்னபிறரும், ஒரு திரைப்படத்துக்கான கதைபோன்ற தோற்றத்தை உண்டாக்குகிறார்கள் - இதே கதைக்களத்தை வைத்துக்கொண்டு, மேலும் சிறப்பாக ஒரு 'கனமான' நாவலும் எழுதமுடியும் - to start with, அந்தப் பண்ணையார் வில்லனாகதான் இருக்கவேண்டுமா ? தாம் செய்வதின் விளைவுகளை அறியாத, அல்லது அறியும்படி வளர்க்கப்படாத ஒருவராகவும் காண்பிக்கலாம், தடுமாறுகிறவராகவும் இருக்கலாம் - எல்லாம் 'லாம்'கள்தான் - யோசனைகள்தான் !

கதையில் தொடர்கதைக்குரிய எந்த குணங்களும் காணோம் - இதுபோன்ற ஜனரஞ்சகமான கதையில், ஒவ்வொரு வாரமும் 'தொடரும்' போடும்போது ஒரு சிறிய கொக்கி வைத்தால் நன்றாயிருக்கும் - இதைக் குறையாக சொல்லவில்லை என்பதறிக !

பொன்னி சாகத் துணிவது, அவளுடைய பாத்திரத்தில் ஒரு சிறு கறையை உண்டுபண்ணிவிடுகிறதோ என எண்ணுகிறேன் - அதற்கு முன்பும், பின்பும் அவளிடம் தெரியும் ஒரு முதிர்ச்சி, அந்த அத்தியாயத்தில் காணோம் - ஏதோ பாத்திர உருமாற்றம் நிகழ்ந்துவிட்டதுபோல், அவளுடைய காதலன் படுமுதிர்ச்சியாகி விளக்கங்கள் பேசுவதும் கொஞ்சம் உறுத்துகிறது !

அப்புறம், அந்த சின்னப் பண்ணையை அத்தனை அவசரமாக தண்டிக்கவேண்டுமா என்ன ? :)

கதையின் இறுதிப் பகுதியில், விக்கிரமன் படத்தில் வருவதுபோல், ஒட்டுக்கேட்ட ரகசியம், அறிவுரை, எல்லாம் சுபம் என்று முடித்திருக்கிறீர்கள் - என்றாலும், கதை முடிந்த நிறைவு தெரிகிறது.

கதையில் சில நீளநீள வசனங்கள், திரும்பத் திரும்ப வருவதுபோல் ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது ( குறிப்பாக பிற்பகுதியில், உவமைகள், உலகப் பெரியவர்களின் வாழ்க்கையிலிருந்து, புராணங்களிலிருந்து உதாரணங்கள் என்று பாத்திரங்களுக்குள் புகுந்துகொண்டு தூள் கிளப்புகிறீர்கள் !)

நாவலின் கடைசி ஒன்றிரண்டு அத்தியாயங்களில், வசனங்களின்மூலமே கதையை (காலத்தை) நகர்த்தும் உத்தி பிடித்திருந்தது - மிகச்சில வர்ணனைகளைத் தவிர்த்து, கதை முழுதுமே அப்படிதானோ ?

குறைகள் apart, அக்கினிப் பிரவேசம் கதையை, கிராமத்துப் பின்னணியில் மறு உருவாக்கம் செய்ததுபோல் சுவையாக செய்திருக்கிறீர்கள் - அந்த வகையில் இது ஒரு வெற்றிகரமான படைப்புதான் !

பாராட்டுகள், உங்களின் அடுத்த படைப்புக்காகக் காத்திருப்பேன் ....

- என். சொக்கன்,
பெங்களூர்.

"அப்பா, பட்டாசுலே நெருப்பு வெச்சா தீவாளி, பட்டாசு கடைக்குத் தீ வைச்சா நஷ்டம்பா! உங்களுக்கு நைச்சியமா கண்டிக்க வராது. ஆர்ப்பாட்டம் பண்ணி ஆ, ஊம்பீங்க! விளையாட்டு வினையாகும்... விடுங்க..."

வயணமா ஆக்க, அரியக் கத்துக்க... கட்டினவன் வயிறு வாழ்த்தும்"

"ஏன் பேச்சை மாத்தறீங்க? கருவாட்டுக் குழம்பை ஊத்தினாலும் காரியத்தை மறக்கமாட்டா இந்த லட்சுமி! கேட்டதுக்கு பதில் எங்கே?"

"இதென்ன எல்லாரும் பண்ணையிலே உழைக்கிறது நேர்த்திக் கடனா?

ஒரு பொண்ணோட மானத்தைக் காப்பாத்தற விஷயத்துலே கோழைன்னு பேர் வாங்கினா குத்தமில்லே!

"நல்லாத் துப்புவாளே! நம்ம வாய் மட்டும் சும்மா இருக்குமா? அவ வெறும் எச்சலைத் துப்பினா நீ வெத்தலை போட்டுத் துப்பு...

வசதியுள்ளவங்க சடங்குங்கற பேரிலே மேளம், பந்தல், சமையல்னு நாலு தொழிலாளிங்க பிழைக்க செலவழிக்கச் செஞ்ச ஏற்பாட்டை... இல்லாதவங்க, கடன் வாங்கியாவது செய்யணுமா?

சுழியாவது, முழியாவது... ஒரு தரம் விழுந்த குழந்தை அப்படியே கிடந்தா அது நடக்கவே நடக்காது. குளவி கலைக்கக் கலைக்க கூடு கட்டுது... மனுசன்தான் இல்லாத வியாக்ஞானம் படிச்சுக்கிட்டு சோம்பேறியா செக்குமாடு கணக்கா குண்டு சட்டிக்குள்ளியே குதிரை ஓட்டறான்..."

நாலு புள்ளை பொறந்தா நாலு புள்ளையும் அடமானமா? புள்ளையே பொறக்கலேன்னா கடனை எவன் அடைப்பான்? ஆக கடன் அடையணுமின்னா வமிசம் அழியணும். அப்படித்தானே?

"நம்ம கண்ணைத் துணியிலே கட்டிகிட்டு விடியலேன்னா எப்படி?

பெரிய வில்லாலே ஒண்ணும் அகாது. அம்பு முனையிலே வைக்கிற இரும்புத் துண்டுக்குத்தான் மதிப்பு.

எத்தனை பெரிய துன்பமென்றாலும் பாழும் வயிறு நேரத்துக்குப் பசிக்கிறதே! வியர்வை நாற்றம் குளிக்க வேண்டும் என்று முறையிடுகிறதே! அழுக்குத் துணியை அணிந்து கொள்ள மனசு மறுக்கிறதே! இவ்வளவு தேவைகளை வைத்துக் கொண்டு மனிதன் சும்மா உட்கார்ந்து சோகம் கொண்டாட முடியுமா?

ஏரில் உழுத காளையைக் கொன்று செருப்புத்தானம் செய்கிற வள்ளலை

தாமரைக் குளத்திலே விழுந்துடுவேன்... அதுக்குக் கையில்லாட்டாலும் என்னைக் கட்டிக்கும். கையாலே தள்ளியிருந்தா ஒதுங்கி இருப்பேன்... நீங்க சொல்லாலே தள்ளறீங்க!

முள்வாங்கி போதாது. அரிவாளைத் தூக்கணும்.

லுங்கியோட விழுந்தா ஊர் கேவலமாகப் பேசும். மேலும் பண்ணையாரைக் கண்டு பயப்படறவங்கதான் அதிகமாவாங்க...

தோட்டத்துலே இருக்கறப்போ காக்கா எச்சம் போட்டதேன்னு எச்சலை துப்பியா பழத்தை சுவாமிக்கு நைவேத்யம் பண்றோம்? திருடன் வந்து சிலையைத் திருடறான். சிலையைக் கண்டுபிடிச்சதும் கோவில்லே பாதுகாக்கறதில்லையா?

பகையாளி எந்த நோக்கத்தோட திட்டம் போடறானோ அதுபடியே நடந்தா வெற்றியடைஞ்சவன் அவனேதான்.

தவறி சாக்கடையிலே விழுந்தவன் அதிலேயேவா கிடக்கான்? அப்புறம் செண்ட், சோப்பு, பூ எதுவும் உபயோகிக்கறதில்லையா? அவன் வாசனைக்கே அருகதையில்லாதவன்னு நீ சொல்ற மாதிரி இருக்கு.

கவுச்சிக்கு அலைஞ்ச வெறிநாய். சட்டியை உடைக்காமப் போச்சேன்னு சந்தோஷமா இருக்கேன்.

இந்த செட்டிகுளத்து மண்ணோட மகிமைடா. காத்தடிச்சா தாழை பூத்துடும்.

நெல்லோட இருந்தாலும் அரிசியைத் தாங்க ஏத்துக்கறோம். உமியை ஒதுக்கிடறோம்.

புராணத்துலே அந்தக் கதையெல்லாம் ஏன் எழுதி வெச்சிருக்காங்க தெரியுமா? தெரிஞ்சு செஞ்சாதான் குத்தம். தப்பு செய்யாதவன் லோகத்திலே கிடையாது. தப்பை உணர்ந்து வருந்தினா மன்னிப்பு உண்டு.

விரிவான விமர்சனத்திற்கு எனது நன்றிகள்.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு