திங்கள், அக்டோபர் 11, 2004

விமர்சனம் எழுத வேண்டிய படங்கள்

1. House of Sand and Fog - புத்தகமாக படிப்பது பெட்டர். முதல் அரை மணி நேரத்தைப் போலவே படம் முழுக்க எடுத்துச் செல்லவில்லை. தனிமைக்குத் தள்ளப்பட்ட ஜெனிஃபர் கானலி கவனமின்மையால் வீட்டை இழக்கிறாள். ஈரானை விட்டு நாடு கடத்தப்பட்ட பென் கிங்ஸ்லி இந்த வீட்டை அடிமாட்டு விலைக்கு வாங்குகிறார். மிட்-லைஃப் போராட்டத்தில் இருக்கும் இன்ஸ்பெக்டர் பார்வையாளனாக ஜெனிஃபருக்காகத் தடுமாறுகிறார். ஓரளவு நல்ல புத்தகம். அருமையான நடிகர்கள் -- கதாபாத்திரங்கள்; அனுபவிக்கத்தக்க படப்பிடிப்பு. ஏமாற்றும் திரைக்கதை/இயக்கம்.

2. Talk to Her - துளி பிசகினால் குழம்பக்கூடிய கதை. முரட்டுக்காளைகளை அடக்கும் ஒருத்தியையும், பணக்கார உளவியல் நிபுணரின் மகளையும் விரும்பும் இருவரின் கதை. பாலே, நவீன நாடகங்களை உறுத்தாமல், பொருத்தமாக இணைத்திருக்கிறார்கள். தற்கால பரபரப்பு செவ்விக்களை கிண்டலடிக்கிறார்கள். கொஞ்சம் 'ஈடிபஸ்' தொட்டுக் கொள்கிறார்கள். சிந்தனையை விரிவாக்கும் படம்.

3. Insomnia - படம் முழுக்க நாமும் தூங்காமல் கஷ்டப்படுவது போன்ற பிரமை. அடக்கி வாசிக்கத் தெரிந்திருக்கும் ஆல் பசினோ மீண்டும் 'அட' சொல்லவைப்பார். காமெடி மட்டுமே கலக்குவார் என்று நினைத்த ராபின் வில்லியம்ஸும், ஆஸ்கார் நாயகி ஹில்லாரி ஸ்வான்க்ஸும் கூட இருப்பதாலோ? யார் நல்லவர்கள், சந்தர்ப்பவசத்தால் குற்றவாளியாவோமோ, வழிகாட்டுனர்களே வழுக்கியிருந்தால், குடும்பத்துக்காகக் கடமைகளில் சமரசம் என்று பல சங்கதிகளைத் தொடுவதால், கொஞ்சம் தாக்கம் குறைச்சலாக இருக்கிறது.

4. Mr. Deeds - 1936-இல் வெளிவந்த Mr. Deeds Goes to Town என்னும் படத்தின் மறுபதிப்பு. ஆங்காங்கே போர் அடித்தாலும் அவ்வப்போது வரும் ஜான் மெக்என்ரோ போன்ற தலைகள் சுவாரசியபடுத்துகின்றன. கவலையை மறக்க பார்க்கலாம். பார்த்த கொஞ்ச நேரத்தில் மறக்கலாம்.

5. Half Past Dead - அர்ஜுன் இன்னும் தமிழில் சுடவில்லை. மனைவியைக் கொன்றவனை ஜெயிலுக்கு வந்து கண்டுபிடிக்கும் கதை. ராஜேஷ்குமார் பாக்கெட் நாவல் போன்ற விவரிப்பு. நல்ல டைம்பாஸ் படம்.

6. The Green Mile - சோடா பாட்டில் சொல்லியதால் பார்த்த படம். ஸ்டீபன் கிங் இந்த மாதிரி புத்தகங்களும் பின்னியிருக்கார் என்பதைச் சொல்கிறது. எதற்காக ஃப்ளாஷ்பேக்கில் சொல்லப்படுகிறது என்பது புரியவில்லை. அதிக காலம் வாழ்வதால் என்ன ஆகும் என்பதை சொக்கனும் ஒரு சிறுகதையில் கோடிட்டுக் காட்டியிருப்பார்.'கோஃபி' நிச்சயம் பல இடங்களில் மனதைத் தொடுவார்.

7. The Scorpion King - தமிழுக்கு மொழியாக்கம் செய்யத்தகுந்த படம். இளைய தலைமுறைக்கு ஏற்ற 'வாய்' வைத்தியம் (போன படத்தில் கூட இதே முறையில் குணமளிக்கப் படுகிறது!); வன்முறை நிறைந்த அசகாய வாட்போர்கள்; பாலைவனத்து டூயட்; விவேக் காமெடி -- என்று சகல அம்சங்களும் நிறைந்த மசாலா காவியம்.

8. Intolerable Cruelty - அருமையான கதை. சொதப்பலான இறுதிப் பகுதி. ஜீவனாம்சத்துக்காகவே திருமணம் முடிக்கும் காரியக்காரப் பெண்ணுக்கும் -- அத்தகைய கரக்கும் பட்சிகளிடம் இருந்து நயாபைசா கொடுக்கவிடாமல் வாதிடும் விவாகரத்து ஸ்பெஷலிஸ்ட்டுக்கும் காதல் மலர்ந்தால்...! கமல் இந்த மாதிரி வேடங்கள் நிறைய கட்டிவிட்டார். சூர்யாவும் ஸ்னேஹாவும் நடித்தால் பொருத்தமாக இருக்கும்.

9. The Cell - வித்தியாசமான சங்கிலித்தொடர் கொலையாளியின் கதை + படமாக்கம். நம்ம ஊர் தர்சேம் சிங் இயக்குநர். கன்னாபின்னா கற்பனையில் அசத்தும், பயமுறுத்தும் அரங்க அமைப்புகளைக் கொண்டு வருகிறார்கள். அதுவே திகட்டி, பார்வையாளனை ஒதுக்கிவிட்டு படத்தை முன்னெடுத்துச் செல்கிறது. கெட்ட கனவில் வரும் அத்தனை அருவருப்பான சமாசாரங்களையும் எப்படித்தான் ஆவணப்படுத்தினார்களோ! ஜெனிஃபர் லோபஸ் அருமையான பாடகி; Maid in Manhattan போன்ற படங்களில் அசத்துபவர். இங்கு பொருந்தவில்லை.

10. Apocalypse Now - மார்லன் ப்ராண்டோ இறந்தவுடன் எல்லோரும் காட்ஃபாதர் குறித்துப் பேச, 'பார்வை' மெய்யப்பன் மட்டும் இந்தப் படத்தின் திரைக்கதைக்கான சுட்டியை எடுத்துப் போட்டார். படத்தை குறித்து நிறைய சொல்லலாம். நதியின் ஊடே மார்ட்டின் ஷீனின் பயணங்களைப் பார்த்தால் கெர்ரி மேற்கொண்ட அதி ஆபத்தான ஸ்விஃப்ட் படகு ரோந்துகளை அறியலாம். படத்தை சரியாகப் புரிந்துகொள்ள Conrad-இன் "Heart of Darkness" உதவும் என்கிறார்கள். படத்தை மீண்டும் பார்த்து கடைசி உரையாடல்களை அசை போட்ட பிறகு மீண்டும் பதியவேண்டும். வியட்னாம் சண்டையை குறித்த படங்களின் விரிவான ஆழமான அலசலுக்கு: Acid Redux - By David Edelstein

2 கருத்துகள்:

The Scorpion King already dubbed and released in Tamil which was flop.

Suresh

பல படங்கள் டப்பிங் மட்டுமே செய்யப்பட்டு வருகிறது. 'ரீமேக்' செய்தால் நன்றாக ஓடும் என்று தோன்றுகிறது :-)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு