திங்கள், ஜனவரி 10, 2005

சுனாமி - ஜெயமோகன்

சுனாமிப் பேரழிவும் பேரழிவு அரசியலும்: அனுபவக் குறிப்புகள் - ஜெயமோகன்
Thinnai:

நான்செல்லும்போது பிணம் தேடும்வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டிருந்தன. கத்தோலிக்க சர்ச்சின் பாதிரியார்கள் தலைமையில் மீனவ இளைஞர்களே முதன்மையாக களத்தில் இருந்தார்கள். கூடவே சீருடை அணிந்த ஆர் எஸ் எஸ் தொண்டர்கள். சேவாபாரதியின் பாட்ஜ் அணிந்த ஆர் எஸ் எஸ் காரர்கள். குளச்சல்பகுதியில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத் தொண்டர்கள்.

மனித சடலங்களுக்கு ஒரு மரியாதையை நாம் எப்போதுமே அளிப்போம். இங்கே எதுவுமே இல்லை. தலைமாடு கால்மாடாக தாறுமாறாகக் கிடந்தன. ஆண் பெண் கலந்து. அரை நிர்வாணமாக. ஊதி உப்பி தோல் உரிந்து. குறிப்பாக குண்டான பெண்களின் மேல்தொடைகளும் ஆண்களின் தொப்பைகளும் நம்பமுடியாதபடி பெரிதாக ஊதியிருப்பது அசப்புப் பார்வைக்கு துணுக்குறச்செய்வது.

மனம் குமையவைப்பவை குழந்தை உடல்கள். நாம் கொஞ்சி முத்தமிட்டு மகிழ்ந்த குண்டுக்கால் கைகள் குட்டித்தொப்பைகள் .அவற்றைப் பார்ப்பது ஒரு தகப்பனின் நரகம்.அரசு உதவிகள் புதன்கிழமைவரை சொல்லும்படி எங்கும் இல்லை. தைரியமாக கையிருப்புத்தொகையை செலவிடவும் ஆரம்பித்த பல அதிகாரிகள் இருந்தார்கள். ஆனால் பெரும்பாலான அதிகாரிகள் அதை ஒரு வகை கூலியற்றவேலை என எண்ணி தவிர்க்கவே முயன்றார்கள், பொறுப்பில்லாமலும் எரிச்சலுடனும் இருந்தார்கள் என்று சொன்னார்கள். குறிப்பாக ரெவினியூ அதிகாரிகள் [கிராமநிர்வாக அதிகாரி] பிணங்களைப் பதிவு செய்ய அவர்கள் ஆதாரங்கள் கேட்டு நிறைய சிக்கல் செய்தார்கள் என்றார்கள்.இன்னும் குறிப்பாக பெண் அதிகாரிகள் எந்த விதமான பொறுப்பும் இல்லாமல் இருந்தனர். களத்துக்குப்போன பெண் அதிகாரிகள் அனேகமாக எவருமே இல்லை என்று பலர் சொல்லி கேள்விப்பட்டேன். நான் எவரையுமே பார்க்கவில்லை.

அரசு தரப்பிலிருந்து மிகப்பெரிய தவறு பஸ்களை நிறுத்தியது. சுனாமி அடித்த ஞாயிற்றுக்கிழமை ஏராளமான மக்கள் டிக்கெட் எடுக்காமல் பஸ்களில் எறி தப்பி ஓடினார்கள். அவர்கள் வழக்கப்படி ஆத்திரத்தில் சில பஸ்கள் மேல் தாக்கியதாகவும் சொன்னார்கள். உடனே நேசமணி போக்குவரத்து நிர்வாகம் எல்லா கடலோர பஸ்களையும் ரத்துசெய்துவிட்டது. செவ்வாய்கிழமைவரை எதுவும் ஓடவில்லை. அது உருவாக்கிய சிக்கல் சாதாரணமல்ல. இம்முடிவை யார் எடுத்தது என்று தெரியவில்லை.


சாதாரண மாநாட்டுக்குக் கூட நான்கு லட்சம் பேரைக்கூட்டும் திமுக ஏன் சில நூறு தொண்டர்களைக் கூட அனுப்ப முடியவில்லை? மதிமுகவின் களநடைபோடும் சீருடைத் தொண்டர்கள் எங்கே? எந்த அரசியல் கட்சியும் வியாழன்வரை என் கண்ணுக்குப் படவில்லை. சன் டிவி தமிழக அரசை குறை சொன்னதே, திமுக தலைவர்கள் தங்கள் தொண்டர்கள் ஒருலட்சம் பேருடன் களமிறங்கியிருந்தால் அது எவ்வளவு பெரிய இமேஜை உருவாக்கியிருக்கும் ! கோடிக்கணக்கான ரூபாய் செலவில் நடத்தும் நூறு மாநாடுகளுக்கு அது சமம் அல்லவா? வை. கோபால்சாமி செய்திருக்கலாமே? அவருக்கு சீருடைப்படை உண்டே ? அடுத்த தேர்தலுக்குக் கூட அது பெரிய உதவியாக இருக்குமே. ஏன் செய்யவில்லை? சன் டிவி தொண்டு நிறுவனங்கள் களத்தில் உள்ளன என்று பொதுவாக சொல்லியபடியே இருந்தது. அவையெல்லாம் மத நிறுவனங்கள் என்று சொல்லவில்லை.

மீட்புப்பணிக்கு எட்டு வேன் நிற்க மந்திரி கூட பந்தாவுக்கு எண்பது வேன் போயிற்று. ஏராளமான கார்கள் சூழ மன்னர்கள் போல வருகிற அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் கலெக்டர் வலதுபக்கமும் எஸ்பி இடதுபக்கமும் நிற்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் முக்கியத்துவம் போய்விடும் என்றும் நினைக்கிறார்கள். மக்கள் மத்தியில் வைத்து கலெக்டரிடம் சில கேள்விகள் கேட்டு சில கட்டளைகள் போட்டுவிட்டு அபப்டியே போவார்கள். திமுக மந்திரிகள் ஒருபடிமேலேபோய் அதிகாரிகளை மக்கள்முன்வைத்து திட்டி வசைபாடினார்கள்.

ஆனால் நம் நிர்வாக முறையில் கலெக்டர் என்பவர் மிக முக்கியமான அதிகாரி. எல்லா ஃபைலும் அவரால்தான் கையெழுத்து போடப்படவேண்டும். அவர் இல்லாமல் வேலைகள் அப்படியே நிற்கும். ஒரு வி ஐ பி வந்து போனால் உடனே அடுத்த விஐபி வந்தார் . கலெக்டர் இப்படி மாட்டிக் கொள்வதைப்பற்றி பலரும் திட்டிவருத்தப்பட்டார்கள். ரெவினியூ அதிகாரிகள் பிணங்களை பதிவுசெய்ய என்ன அடையாளம் கேட்க வேண்டும் என்று குழப்பம். அதை கலெக்டர் கூடிப்பேசி உத்தரவாக இறக்க வேண்டும். கலெக்டர் வி ஐ பிகக்ளை உபசரித்தபடி அலைந்தார். மூன்றாம்நாள்தான் உத்தரவு போடப்பட்டதாக சொன்னார் ஒருவர் .


குளச்சல் முகாமில் அப்படி வீணான சோறு நிறைய கிடந்தது. ஒருவரிடம் கேட்டேன் , அவர்களுக்கு வேண்டியதைக் கேட்டு அதைக் கொடுக்கலாமே என்று. இல்லை அன்னதானம் செய்தால்தான் புண்ணியம். அவர்கள் சாப்பிட்டுவிட்டு வாழ்த்துவதை நாம் காதால் கேட்கவேண்டும் என்றார். மதத்தின் இன்னொரு முகம் இது


பிராமணர்கள் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறார்கள். சேவைக்காக ஒரு பிராமணராவது நேரடியாகக் களமிறங்கினார் என்று இன்றுவரை நான் காணவோ கேட்கவோ இல்லை. பல நூற்றாண்டுகளாக தனித்துவாழ்ந்த அக்ரஹார வாழ்க்கை அவர்களுக்கு உருவாக்கியிருக்கும் மன அமைப்பு அது. அதைத் தாண்டியவர்கள் மிக மிகக் குறைவே. இயல்பான சாதிசமூக மனதைத் தாண்டுவது மிகவும் சிரமம்.


வெறுப்பை உருவாக்கிய இன்னொரு அம்சம் இப்போது 'ஆறுதல் கூற' வரும் சிதம்பரம் ,கார்திக் சிதம்பரம், முக ஸ்டாலின் ஆகியோருக்கு கட்சிக்காரர்கள் 'வருங்கால முதல்வரே தமிழகத்தின் எதிர்காலமே 'என்றெல்லாம் சொல்லி வெளியிடும் பத்திரிகை விளம்பரங்களும் சுவரொட்டிகளும். அவை பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ளவை. அப்பணம் நிவாரணத்துக்கு அளிக்கப்படலாகாதா என்ற கேள்வி போகட்டும், இது அநாகரீகமாக உள்ளது.

நன்றி: திண்ணை

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு