செவ்வாய், பிப்ரவரி 22, 2005

அறியாமை

நாள்குறிப்பை புரட்டியபோது அகப்பட்ட உவமைக் கதை. எந்தப் பாடலில், சங்க இலக்கியத்தில் படித்தேன் என்று குறிக்க மறந்திருக்கிறேன். எவராவது அறிந்திருந்தால் சொல்லலாம்.

அவன் கண்பார்வையற்றவன். அன்பான மனைவி. தாய்ப்பால் குடிக்கும் குழந்தையும் உண்டு. பசியால் குழந்தை அழுகிறது. அம்மா பால் கொடுக்க ஆரம்பிக்கிறாள். குழந்தை எவ்வாறு அலறலை நிறுத்தியது என்று தகப்பன் வினவுகிறான். பால் கொடுத்து பசியைப் போக்குவதாகச் சொல்கிறாள்.

'பால் எவ்வாறு இருக்கும்?'

'வெள்ளையாக இருக்கும்.'

'வெள்ளை எப்படி இருக்கும்?'

'வாத்தைப் போல் இருக்கும்.'

'வாத்து எப்படி இருக்கும்?'

வீட்டு வாசலில் இருக்கும் வாத்து பொம்மையை எடுத்துக் காட்டுகிறாள்.

மண் பொம்மையைத் தடவி பார்த்தவனுக்குக் கோபம் வருகிறது.

'அடிப் பாவீ.... மண்ணையா என் குழந்தைக்குக் கொடுக்கிறாய்!' என்று அவளை அடிக்க ஆரம்பிக்கிறானாம். குழந்தை மீண்டும் அழ ஆரம்பிக்கிறது.



இன்று என்னுடைய நாள்குறிப்பில் குறித்து வைத்துக் கொண்டது:

ஜெயஸ்ரீ: "கண்ணால் காண்பவர்களிடமே அன்புசெலுத்த முடியாத நீ காணாத கடவுளிடம் எவ்வாறு அன்பு செலுத்துவாய்?" என்று என் பள்ளியில் எங்கு பார்த்தாலும் எழுதி வைத்திருப்பார்கள்.

கண்ணால் காண்பவர்களையே வெறுக்க முடியாத நான் காணாதவர்களை எப்படி வெறுக்கமுடியும் என்பது இணையத்தில் என் கொள்கை. எனவே இங்கு எல்லோரிடமும் அன்புடனேயே எழுதுகிறேன்.



சுரேஷ் கண்ணன்: தலைமை உரை ஆற்றிய எழுத்தாளர் பிரபஞ்சன், அயல்நாடுகளில் எழுத்தாளர்கள் மக்களாலும், அமைப்புகளாலும் கொண்டாடப்படுவதாகவும் தமிழ்நாட்டில் அது குறைந்த அளவிலேயே இருப்பதாகவும் ஆதங்கப்பட்டார்.

தமிழகத்துக்கும் அமெரிக்காவுக்கும் உள்ள அபூர்வ ஒற்றுமை இது. புத்திசாலிகளாக இருப்பதால் இரண்டு இடங்களிலும் இகழப்படுதலுக்கும் பைத்தியக்காரனாவதற்கும் சாத்தியங்கள் அதிகம். ஃப்ரான்ஸிலோ லத்தீன் அமெரிக்காவிலோ கிடைக்கும் மதிப்புக்கும் செவிமடுப்புக்கும் வெகுஜன ஊடகங்களில் கிடைக்கும் பக்கங்களுக்கும் ஒப்பிடும்பொழுது பிரபஞ்சனின் ஆதங்கத்தின் நியாயம் விளங்குகிறது. அரசியல்/ஜாதித் தலைவர்களின் பரபரப்பு அறிக்கை, நடிகர்கள் படிக்கும் புத்தகங்கள், ஆகியவைகளுக்குத்தான் இங்கு கொண்டாட்டாம். இவ்வாறு வரன்முறைகளில் கைவைக்கப்படுவதும் இவரின் வருத்தத்துக்கு இன்னொரு காரணமாக இருக்கலாம்.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு