செவ்வாய், மார்ச் 08, 2005

கர்நாடக இசையும் பேனா மையில் காவியும்

நன்றி: Thinnai - Weekly Tamil Magazine



நேர்காணல் : வசந்த் -- இகாரஸ் பிரகாஷ்: கர்நாடக இசை பற்றி விமர்சனம் எழுத, கர்நாடக இசை பற்றிய அடிப்படை அறிவு வேண்டும். இசை என்று மட்டுமல்ல. மற்ற எந்தத் துறைக்கும் இது பொருந்தும். ஆனால், சினிமாவில் இந்த இலக்கணம் கடைபிடிக்கப்படாது. கடந்த பத்தாண்டுகளில் தாங்கள் பார்த்த திரைப்படங்கள், தங்களுடைய புரிதல் நிலைகள் ஆகியவற்றை வைத்துத்தானே, திரைப்படங்களை மதிப்பீடு செய்கிறார்கள்? குறிப்பாக வெகுசன ஊடகங்களில். இவர்கள் போன்றவர்களால் தான் நல்ல திரைப்படங்களுக்கான இரசனை இன்னும் மேம்படாமல் இருக்கிறது என்று நினைக்கிறேன். ரசிகர்கள், தங்களுடைய புரிதலைத் தாண்டி இன்னும் ஒருசில படிகள் மேலே ஏறி வரவேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள். பிற மொழிப்படம் என்றால் அது ஆலிவுட் படங்கள் மட்டுமல்ல. இத்தாலிய , ஈரானிய, ஐரோப்பிய திரைப்படங்கள் எத்தனையோ இருக்கின்றது. சமீபத்தில் நடந்த ஒரு சினிமா புத்தக வெளியீட்டு விழாவில், ஒரு இயக்குனர் மேடையில் பேசுகின்றார், "எங்களுக்கு எங்கஊர் குலதெய்வமே போதும், உலக சினிமாவெல்லாம் வேண்டாம் " என்று.


குமுதம் அரசுவின் பேனா மையில் கலந்திருப்பது என்ன -- நெருப்புநிலவன்: ஜெயமோகன் குமுதத்தில் தொடர் எழுதப் போகிறார் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மு.கருணாநிதி அவர்கள் தொடர் எழுதிக் கொண்டிருந்தபோது, அவரை விமர்சிப்பதற்கு அந்தத் தொடரின் தலைப்பை வைத்துக் கார்ட்டூன் போட்டுச் சீண்டியது குமுதம். அரசியலில் முதிர்ச்சியும், விமர்சனங்களைத் தாங்கிக் கொள்வதில் பக்குவமும் பெற்ற கருணாநிதி அவர்கள் குமுதத்தில் எழுதி வந்தத் தொடரையே நிறுத்தி விட்டார். ஜெயலலிதா அவர்கள் குமுதத்தில் தொடர் எழுதிக் கொண்டிருந்தபோது அவரைப் பற்றியும் குமுதம் ஏதோ விமர்சிக்க, அவரும் அவர் தொண்டர்கள் வர்ணிக்கிற தாய்மையின் முதிர்ச்சியுடன் தொடரை நிறுத்திவிட்டு வேறு வார இதழில் எழுதினார்.

எனவே, பிரபலமானவர்களை எழுத வைக்கும்போதெல்லாம், "நான் யாருக்கும் பயந்த ஆள் கிடையாது தெரியுமா" என்று உதார் விடுகிற முகமாகக் குமுதம் இத்தகையக் காரியங்களைச் செய்வதுண்டு. இப்படிச் செய்ய வேண்டிய ஈகோவின் உந்துதலோ வர்த்தக உத்திகளோ குமுதத்துக்கு இருக்கிறது என்று சொல்லலாம். இதைப் பத்திரிகைக்கேயுரிய தைரியம், சுதந்திரம் என்றெல்லாம் அவசரப்பட்டுப் பாராட்டி விடமுடியாது. குமுதத்தின் சமூக பிரக்ஞை கோடம்பாக்கத்துச் சுந்தரிகளின் முன்னழகுடனும், இடையழகுடனும், பின்னழகுடனும் நிறைவுற்று விடுவது ஆண்டாண்டு காலமாக அறியப்பட்ட ரகசியம்தானே.

ஜெயமோகனுக்குக் கொடுக்கப்படும் இந்த முக்கியத்துவம் ஜெயமோகனைப் பிடிக்காதவர்களுக்கு நிச்சயம் எரிச்சலூட்டும். ஜெயமோகனாவது சீண்டலைப் பொருட்படுத்தாமல், தொடரைக் குமுதத்தில் தொடர்ந்து எழுதுவார் என்று எதிர்பார்ப்போம். என்ன ஜெயமோகன் சம்பாதித்து வைத்திருக்கிற எதிரிகள் அவர் தொடரை எழுதமால் போனால், அவருக்கு முதிர்ச்சியில்லை என்று சர்ட்டிபிகேட் கொடுப்பார்கள். எழுதினாலோ, "அரசு அப்படிச் சொல்லியும் குமுதத்தில் வெட்கம் கெட்டு எழுதியதன் மூலம் தன் பேனாவில் கலந்திருப்பது காவி நிறம் என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்துவிட்டார்" என்று முற்போக்குக் கண்டுபிடிப்புகள் நிகழ்த்துவார்கள். எப்படியும் ஜெயமோகனுக்குத் திட்டுதான்.

ஒரு படைப்பாளி என்ன கொள்கை வைத்திருக்கிறார், எந்தக் கட்சி சார்பு கொண்டிருக்கிறார் என்பதையெல்லாம் படைப்பைப் படிக்கும்போது கவனத்தில் யாரும் கொள்வாரென்றால், அது படிப்பவரின் குறையே. ஓர் படைப்பாளியை அவர் சொல்கிற கருத்துகள் ஏற்றுக் கொள்ளத்தக்கனவா இல்லையா என்பதைவிட, படைப்பாளியின் ஒட்டுமொத்த ஆளுமை, வீச்சு, கலைத்திறன் என்று பிறவற்றின் அடிப்படையிலேயே மதிப்பிடுவது சரியான காரியமாக இருக்கும். அந்தக் காரணத்தினாலேயே, ஜெயகாந்தன் ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்புடையவராகவும், பின்னாளில் காங்கிரஸ் கட்சி சார்புடையவராகவும் ஆகியிருந்தபோதிலும், இலக்கிய விமர்சகர்கள் யாரும் அவர் பேனாவில் சிவப்பு மையோ, காவி-வெள்ளை-பச்சை கலந்த மையோ வழிவது பிடிக்கவில்லை என்று சொல்லவில்லை. அரசியல் ஆர்வமுடைய - எல்லாவற்றிலும் தங்கள் கொள்கைகள் இல்லாவிட்டால் நிராகரித்துவிடுகிற - கத்துக்குட்டிகள் அப்படி ஏதும் கத்தியிருக்கலாம்.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு