வெள்ளி, ஏப்ரல் 29, 2005

நூல் அறிமுகம் : திராட்சைகளின் இதயம்

tamiloviam.com

சாய் பாபாவின் பக்தனாக என் நண்பன் ஆனது விநோதமான கதை. நாகூர் ரூமியின் 'திராட்சைகளின் இதய'த்தைப் போல.

அவன் கடவுளை விட பாபாவைப் பெரிதும் நம்புபவன். டென்னிஸ் பந்து போல் பெங்களூருக்கும் சென்னைக்கும் வாராவாரம் விழுந்து கொண்டிருந்தாலும், ஒயிட்·பீல்டையும் சுந்தரத்தையும் தவற விடாதவன். ஒவ்வொரு வியாழன். அன்றும் பஜன் ஞாயிறன்று வீட்டிலேயே பஜனை விளக்க கூட்டங்கள். (நல்ல அறுசுவை உண்டியுடன் என்பதால் நானும் அவ்வப்போது ஆஜர்.) அவரின் படத்தில் இருந்து விபூதி கொட்டுவது அனேக தினங்களில் நிகழும் மாயாஜாலம். கண்ணாடி ·ப்ரேமுக்குள் இருந்த பாபாவை இமைப்பதற்கு மட்டுமே கண்ணை மூடி நான் கண்காணித்தாலும், பூஜையின் முடிவில் சந்தனம் குங்குமம் பூசிக் கொண்டிருப்பார். அவனுடைய வாழ்விலும் பாபா நிறைய மாற்றங்களை நிகழ்த்தியதாக நண்பன் உறுதியாக நம்பினான். கண்ணுக்குத் தெரிந்த அதிசயங்களை விட, பாபாவினாலேயே, தனக்கு பணி மாற்றமும், சமூக உயர்வும் அடைய முடிந்ததாக விளக்கியிருக்கிறான்.

பாபாவினைத் தொழ ஆரம்பித்த பிறகு அவனிடம் பல மாற்றங்களை உணர முடிந்தது. பெங்களூரின் மதுக்கடைகளுக்கு எங்களை அழைத்துச் சென்று கொண்டிருந்தவன், தான் தன்னார்வலனாகத் தொண்டாற்றும் மருத்துவமனைக்கு ஒத்தாசைக்கு வருமாறுக் கூப்பிட ஆரம்பித்தான். மாலைகளை எவருடனும் செலவிடாமல், தனிமையில் கழித்தவனுக்கு, பொருத்தமான நட்பு வட்டம் கிடைத்திருந்தது. கிடைத்த வேலையில் காலந்தள்ளிக் கொண்டிருந்தவன், சுய முனைப்பினால் விருப்பமான துறைகளை எங்களுடன் கலந்தாலோசிக்க ஆரம்பித்தான். எதை எடுத்தாலும் 'அது அப்படித்தான்' என்ற விட்டேற்றித்தனம் ஓடிப்போய், தன்னம்பிக்கை தெரிந்தது. எங்களின் நான்காண்டு கல்லூரி வாசம் செய்ய முடியாததை, சாய் பாபா ஊட்டி விட்டிருந்தார்.

அவன் கொஞ்ச நாள் கழித்து அமெரிக்கா வந்தபிறகும் பாபாவை மறக்கவில்லை. ஆனால், முன்புபோல் கண்மூடித்தனமான நம்பிக்கை குறைந்திருக்கிறது. ஞாயிறுகளில் இன்றும் தன்னார்வ நிறுவனங்களின் தொண்டுகளுக்கு சென்று வருகிறான். அவ்வப்போது பஜன்களுக்கும் போகிறான். ஆனால், அவனின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் 'பாபா பார்த்துக்குவார்' என்னும் மனோபாவம் காணவில்லை.

'திராட்சைகளின் இதய'த்தைப் படிக்கும்போது என் நண்பனின் நினைவு வந்தது. அவனிடம் புரிந்து கொள்ள இயலாத பாபாவின் பக்தியை, கொஞ்சம் திரையைத் திறந்து, புரியவைக்க முயற்சிக்கிறார் ரூமி. இந்தியாவில் அவன் கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கையையும், காலப்போக்கில் மாற்றிக் கொண்ட பற்றையும், முசலியார் ஹஜ்ரத்தைக் கொண்டு விளக்கிச் செல்கிறார். இந்தப் புரிதல்களுக்கு, முஸ்லீம் சூழல்களும் இஸ்லாமிய தத்துவங்கள் சிலவும் கை கொடுக்கிறது.

கலகலவென்று மெஹ்ருன்னிஸாவின் அறிமுகம். கோபமான தமிழ்ப் பட ஹீரோ போன்ற ஜுனைத்தின் கோட்பாடுகள் என்று அமர்க்களமான ஆரம்பம். Archetype, comfort-zone, புத்தரின் ஆசை மறுப்பு போன்ற எண்ணங்களை நேரடியாகப் போட்டுடைக்கும் சொற்பொழிவுகள் என்று தொடரும்போதுதான் அயர்ச்சி முதன் முறையாக எட்டிப் பார்த்தது.

தொலைக்காட்சித் தொடர்களின் ஆளுமைகளுக்கு வீழ்வதைப் போல் உணர்ச்சிகளுக்கு அடிமையாகிப் போவதை ஆண்டவனின் லீலைகளுடன் அலசுகிறார். I, Robot திரைப்படத்தில் வரும் உகந்த கேள்விகளை உரிய தருணத்தில் கேட்கும் முக்கியத்துவத்தை எடுத்து வைக்கிறார். இறப்புக்குப் பின்னும் உயிர்ப்புடன் இருக்கும் வார்த்தைகள் போல் குருவின் சொற்பொழிவுகளைக் காட்டுகிறார். ஆனால், 'காதலன்' படத்தின் 'பேட்டை ராப்' பாடல் போலின் அர்த்தமற்ற அடுக்கு சொற்கள் போல நடு நடுவே நிகழ்த்தப்படும் அற்புதங்கள் தொய்வைக் கொடுக்கிறது. இந்த அதிசயங்கள், எனக்கு முசலியாரிடம் மதிப்பை விட 'சரி... அப்புறம்??!' என்னும் எதிர்பார்ப்பையே அதிகரித்து ஏமாற்றியது.

நடுத்தர வர்க்கத்தின் 'நாளை' குறித்த பயம் இன்னும் அழுத்தமாக அலசப்பட்டிருக்கலாம். அவர்கள் திருப்தியான வாழ்வை எதிர்நோக்குபவர்கள். போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்தாக நினைப்பவர்கள். அடைய முடியாததை வெட்டென மறப்பவர்கள். சுய முன்னேற்ற நூல்களைக் கூட skeptic ஆக பார்ப்பர்வகள். இவை தடிமனானப் புத்தகத்தின் பொருளடக்கத்தை மட்டும் படிப்பது போல் எழுதப் பட்டிருக்கும் பகுதிகள்.

வாழ்வின் லட்சியங்கள், இளக்காரம் செய்வது, extroverts/introverts, போன்ற பல கனமான விஷயங்களை இலக்கிய புத்தகத்தில் பொம்மை பார்ப்பதையொத்து முசலியார் தொட்டு மட்டும் செல்கிறார். உண்மைகளின் பின்னால் பொதிந்திருக்கின்ற அந்த உண்மையான உணமையை அடையாளம் காட்டவில்லை. அவற்றை சுய விவாதமாக்க உள்ளத்தில் சிந்தனைகளையும் கிளப்பவில்லை.

இஸ்லாமிய சொற்களுக்கான விளக்கங்களை ஆங்காங்கே கொடுத்திருப்பதற்கு பதிலாக புத்தகத்தின் இறுதியில் மொத்தமாக தொகுத்திருக்கலாம். விட்டுப் போன சொற்களையும் சேர்த்திருக்க இந்த முறை வசதியாக இருக்கும்.

விஷ்ணு சஹஸ்ரநாமம் படிக்கும்போது கேரளாவின் பூந்தானம் தவறாக சொல்வதை, பாகவதத்துக்குப் பொருள் எழுதிய நாராயண பட்டத்திரி திருத்துவார். குருவாயூரப்பனுக்கே இந்த பெரிய மனுஷத்தனம் பிடிக்காமல், அடுத்த நாள் நாராயண பட்டத்திரியின் கவிதைகளுக்கு ஒப்புதல் தராமல் நிராகரிப்பார். இறுதியில் பூந்தானத்திடமே சென்று விளக்கம் பெற்று, அலங்கார பக்தியை விட அடக்கமான பக்தியே மேல் என்று பட்டத்திரி புரிந்து கொள்வார். அதே போல் ஓதச் சொல்லும் இஸ்முகள் அரபி இலக்கணப்படி தவறாக இருந்தாலும், பக்தியோடு ஓதினால் பலன் கிடைக்கும் என்பதை 'கை·பியத்' என்று விளக்கும் இடங்கள் வெகு அருமை.

முதலமைச்சருக்கு வழங்கப்படும் பொக்கேயை அதீத மரியாதையுடன் வளைந்து வாங்கிச் செல்லும் ச·பாரி அதிகாரி போன்ற உவமைகள் வறட்சியான கோடை மழை போல் ஆங்காங்கே புன்னைகையோட விடுகிறது. Bipolar disorder மாதிரி உளவியல் ரீதியிலும் ஞானிகளையும் சூ·பிக்களையும் விளக்க முயற்சித்திருக்கலாம். இதற்கு அடிக்கல்லாக சில இடங்களைக் கோடிட்டாலும் ஆழங்களுக்கு இட்டுச் செல்லாமல் கடற்கரையிலேயேக் கையை விட்டு விடுகிறார்.

'ஒடையாத பொருளைப் பத்தி ஒரு மணி நேரம் பேசணும். ஒடஞ்சி போன பொருளே ஒரு விநாடிலெ நீங்க மறக்கணும்.' என்று முசலியார் சொல்வார். 'திராட்சைகளின் இதயம்' என்னுடைய புரிந்துணர்வில் உடையப் பட்ட பொருள். ஆனால், இன்றளவில் என்னால் உடைந்தவைகளை சீக்கிரமே மறக்க முடிவதில்லை.



--------------------------------------------------------------------------------

நாவலில் இருந்து....


  • 'தன்னுடைய வாழ்வையும் பிரச்னைகளையும் தொலைபேசி மூலம் இன்னொருவரிடம் ஒப்படைப்பவர்களை நினைத்து ரொம்ப எரிச்சலாக வந்தது.'

  • 'கடற்கரை மண்ணில் உடல் படும்போது மெத்தையில் இல்லாத சுகம் கிடைக்கிறது. ஏன், ஊரில் இருந்த வேல்முருகன் டூரிங் டாக்கீஸில் சினிமா பார்க்கும்போது, தரை டிக்கெட்டில் மண்ணைக் குவித்து அதன் மீது உட்கார்ந்து கொள்ளும் போதும்தான் நாற்காலியில் உட்காரும்போது கிடைக்காத சுகம் கிடைக்கிறது. மண்ணின் மகிமை என்பது அதுதானோ?'

  • 'தப்பு பண்றதைவிட தப்பு, அதுக்கு காரணம் சொல்றது.'

  • 'இந்த மாதிரி உணவு வகைகளைக் கண்டுபிடித்தவர்களுக்கு நோபல் பரிசு மாதிரி ஏதாவது கொடுக்க வேண்டும்.'

  • 'என்னப் பத்தி யாராவது உங்களுக்கு கோவம் வர்ற மாதிரி, வருத்தம் வர்ற மாதிரி பேசுனா, நீங்க கேட்டுகிட்டு மல்லாக்கொட்டை மாதிரி சும்மா இருக்கணும். அது மட்டுமல்ல, நீங்க செய்யுற வேலெய அந்த சொல் பாதிச்சுடாம பாத்துக்கணும்.'

  • குருக்கள் தமது விளையாட்டுக்களை (சோதனைகளை) சிஷ்யர்களோடு மட்டும் வைத்துக் கொள்வது நல்லது.


  • புத்தக விபரங்கள்:

    திராட்சைகளின் இதயம் - நாகூர் ரூமி
    கிழக்கு பதிப்பகம் - விலை ரூ. 75

    மேலும் விவரங்களுக்கு: kamadenu.com

    0 கருத்துகள்:

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு