புதன், ஜூலை 13, 2005

காலச்சுவடு ஜூலை 2005

  • உலகமயமாக்கலின் பின்னணியில் மொழிக் கொள்கைகளின் அரசியல் :: செ.ச. செந்தில்நாதன்
    ஒரு பெரும்பிரிவு மக்கள் பாதுகாப்பான நிலையை அடைந்திருக்கிறார்கள். அவ்வாறு அடைந்திருப்பவர்களின் பொருளாதாரப் பார்வை (மொழிப் பார்வையும்தான்) வேறு மாதிரி இருக்கும். தலித்துகளும் பிறரும் இந்தச் சலுகை பெற்ற சமூகத்தவரின் முன்னுரிமைகளை முன்மாதிரியாகக் கொள்ளாமல் புதிய உலகளாவிய வாய்ப்புகளை முன்னிறுத்திக்கொண்டுதான் தங்கள் பொருளாதாரப் பார்வையை வகுக்க வேண்டும்.

  • கீழிருந்து எழும் உலகமயம் :: ஜெரமி பிரெச்சர், டிம் கோஸ்ட்டெல்லோ, பிரெண்டன் ஸ்மித் - தமிழாக்கம்: சிங்கராயர்

    காலச்சுவடு வெளியீடாக வரவிருக்கும் கீழிருந்து எழும் உலகமயம் நூலிலிருந்து ஒரு பகுதி கீழே தரப்படுகிறது. இந்நூல் ஜெரமி பிரெச்சர், டிம் கோஸ்ட்டெல்லோ, பிரெண்டன் ஸ்மித் ஆகியோர் எழுதிய Globalization From Below என்னும் நூலின் மொழிபெயர்ப்பு.

    கூட்டுக்கழகங்கள், சந்தைகள், முதலீட்டாளர்கள், மேல்குடிகள்யாவும் உலகமயமாகிக்கொண்டு உள்ளன. பொருளியல் வல்லுனர்களும் மேதைகளும் கூட்டுக்கழக நிர்வாகிகளும் உலகின் பெரும் பணக்கார நாடுகளின் தலைவர்களும் அடிக்கடி கொண்டாடிவரும் உலகமயமானது உண்மையில், அவர்கள் 'மேலிருந்து திணிக்கும் உலகமயம்' ஆகும்.

  • அசோகமித்திரனின் கலை மேதை :: சுந்தர ராமசாமி
    'கடவு' இலக்கிய அமைப்பும் கிழக்கு பதிப்பகமும் இணைந்து நடத்திய 'அசோகமித்திரன் - 50' நிகழ்வில் சுந்தர ராமசாமி ஆற்றிய உரையின் பதிவு.

  • கல்வி உலகமயமாதல்: சில ஆபத்துகள் :: பி.ஆர். ராமானுஜம்
    (பேராசிரியர் பி.ஆர். ராமானுஜம் புதுதில்லி இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தொலைக் கல்விக்கான ஊழியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (STRIDE) இயக்குநர். 1986இல் 'இலக்கியக் கோட்பாடுகள்: நவீனத்துவமும் மார்க்சியமும்' என்னும் தலைப்பில் ஆய்வு செய்து ஹைதராபாதில் உள்ள ஆங்கில மற்றும் வெளிநாட்டு மொழிகளுக்கான மைய நிறுவனத்தில் (CIEFL) முனைவர் பட்டம் பெற்றவர்.
    அறிவுசார்ந்த தேடலும் ஆராய்ச்சியும் கேள்விகள் கேட்பதும் கல்விக்கு அந்நியமானவை என இந்தக் கல்விக்கூடங்கள் நினைப்பதால் கையாலாகாத ஆசிரியர்களும் கற்கும் திறமையற்ற மாணவர்களும் பல்கிப் பெருகும் கல்வித் தொழிற்சாலைகள் மிகவும் லாபகரமாக இயங்குவதற்கு உலகமயமாதல் வசதிசெய்து தருகிறது.

  • தலையங்கம்: தேர்வு முறையைத் திருத்துங்கள்
    சுகாதார வசதி என்பது மிகவும் புறக்கணிக்கப்பட்டதாக இருக்கும் நமது நாட்டில் மருத்துவர்களுக்கு மிகுந்த தேவை உள்ளது. மருத்துவக் கல்வியை விரிவுபடுத்த வேண்டியது அவசியமாகும்.

  • சோரகவி மரபு: 'லீலா வினோதம்' :: பெருமாள்முருகன்
    எவ்வளவு பெரிய நூலாக இருந்தாலும், எத்தனை புகழ் பெற்றிருந்தாலும் பயப்பட வேண்டியதில்லை, பெயரை மட்டும் மாற்றித் தன்னுடையதாக்கிக்கொள்ள முடியும் என்பது தமிழ்ச் சூழலில் சாதாரணம். மூலநூல் தொடர்பானவர்கள் உயிருடன் இருப்பினும் பிரச்சினை இல்லை.

  • சிறுகதை: இரட்சகன் வருகிறான் : பொ கருணாக்ரமூர்த்தி
    'உங்க தோஸ்த்து ஜெர்மனிக்குப் போயும் இப்ப பத்துப் பதினைந்து வருஷங்களாச்சு, ஒவ்வொரு முறை வாறபோதும் தவறாமல் 'நீ பாஸ்போட்டை எடு, பாஸ்போட்டை எடு' என்கிறாரேயொழிய உருப்படியாய்க் கூப்பிடுறதுக்கு வழியொன்றும் பண்றதாய்க் காணமே . . . '

  • கீரிப்பட்டி, பாப்பாபட்டி: கதவருகில் நிற்கும் மரணம் :: ரவிக்குமார்
    பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில்கூட நடக்க முடியாத அளவுக்கு இங்கே சாதிக் கொடுமைகள் நடந்துகொண்டிருப்பதைப் பார்த்தால் நாகரீகத்தின் அடையாளமாகவும் முன்னேற்றத்தின் வெளிப்பாடாகவும் கருதப்படும் நகரமயத்துக்குப் பதில் நாடே கிராமமயம் ஆகிவிட்டது என்றுதான் முடிவு செய்யத் தோன்றுகிறது.

  • மொழி: நெஞ்சு பதைக்கிறது :: நஞ்சுண்டன்
    மொழி நடை, மொழி நயம் ஆகியவற்றின் சில நுட்பமான அம்சங்களைப் பற்றி நஞ்சுண்டன் எழுதுகிறார். இலக்கணச் செறிவை மட்டுமன்றி நடைமுறைப் பிரச்சினைகளையும் இப்பகுதி கணக்கில் எடுத்துக்கொள்ளும்.

  • நேர்காணல்: பிரிட்டிஷ் இயக்குநர்கள் ஜானா பிரிஸ்கி - ராஸ் காஃப்மன் :: அ. முத்துலிங்கம்
    கல்கத்தா சிவப்பு விளக்குப் பகுதியைச் சேர்ந்த குழந்தைகளுடன் வாழ்ந்து, அவர்களைப் பற்றி விவரணப் படம் எடுத்து ஆஸ்கார் விருது பெற்றார்கள் ஜானா பிரிஸ்கி, ராஸ் காஃப்மன் என்ற பிரிட்டிஷ் இயக்குநர்கள். இவர்கள் படமெடுத்த கதையும் பேட்டியும்.

  • புதிய வாசல், புதிய வெளிச்சம் :: கலையம்சம் கொண்ட படங்களைப் பரவலாகக் கொண்டுசெல்லும் முயற்சி
    அதிநவீன வசதிகளும் தோற்றப்பொலிவும் கொண்டு, சென்னை மேல்தட்டு மக்களின் கேளிக்கை மையங்களில் ஒன்றாக விளங்கிவரும் சத்யம் திரையரங்க வளாகம், கலை உணர்வுடன் உருவாக்கப்பட்ட திரைப்படங்களையும் ஆவணப் படங்களையும் மாதந்தோறும் இலவசமாகத் திரையிட்டுவருகிறது. இந்த மாற்றம் தானாகவே நிகழ்ந்துவிடவில்லை.

  • மதிப்புரை: உலக சினிமா - முழுமை கூடாத முயற்சி :: அம்ஷன் குமார்
    உலக சினிமா பற்றித் தகுந்த கட்டுரைகளை முதலில் தேர்ந்தெடுத்துக்கொண்டு அவற்றை மொழிபெயர்த்துத் தொகுத்திருக்கலாம். அல்லது தகுதியான ஒரே மூலநூலைத் தேர்ந்து அதைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கலாம். அவ்வாறெல்லாம் செய்யப்பட்டிருந்தால் செம்மையான உலக சினிமா வரலாறு தமிழுக்குக் கிடைத்திருக்கும்.

  • உ.வே.சா. 'குள்ளமானவர்' அல்லர்! :: ஐராவதம் மகாதேவன்
    ஐயரவர்கள் தமிழ்ப் பணியில் மட்டுமல்ல, உருவத்திலும் உயர்ந்தவரே!

  • அற்றைத் திங்கள்: ந. முத்துச்சாமியும் நாடகமும்
    மே மாத அற்றைத் திங்கள் நிகழ்வில் பங்கேற்ற முத்துசாமி 'எழுத்து' இதழ் காலகட்டத்தையும் அதையொட்டித் தன் பிரக்ஞையைக் கூர்தீட்டிக்கொள்ள உதவிய நட்புகளையும் பற்றிப் பேசினார்; தனது நாடக ஆக்கத்திற்கான முக்கியமான உந்துவிசை புதுக்கவிதை என்றும் அது உருவாகிய புதிதில் தனக்கு ஏற்பட்ட புரியாமையையும் குழப்பத்தினையும் தீர்த்துவைத்தவர் சி.சு. செல்லப்பாதான் என்றும் நினைவுகூர்ந்தார்.

  • இதழ் அறிமுகம்: கூத்தரங்கம்
    'கூத்தரங்கம்' என்னும் பெயரிலான இருமாத நாடக இதழ் ஒன்று, இலங்கையிலிருந்து 2004ஆம் ஆண்டு மார்ச் முதல் தொடர்ந்து வெளிவருகிறது. யாழ்ப்பாணம், திருநெல்வேலியிலிருந்து வெளிவரும் இவ்விதழ் கலை, குறிப்பாக நாடகம், தொடர்பான எல்லாவற்றையும் இடம்பெறச் செய்து பரவலான வாசிப்பை ஏற்படுத்த முயற்சிப்பதாக உள்ளது.

  • கோணங்கள்: அத்வானியின் பயனற்ற சாகசம் :: அரவிந்தன்
    'கொள்கைப் பிடிப்புள்ள' தலைவராகத் தலை நிமிர்ந்து நிற்கவும் முடியாமல் மிதவாதத் தலைவராக மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெருக்கிக்கொள்ளவும் முடியாமல் மானத்தோடு ராஜினாமா செய்துவிட்டுப் போகவும் மனமில்லாமல் தவிப்பது அவரது அரசியல் வாழ்வின் வீழ்ச்சிக்குத் தொடக்கமாக இருக்கலாம்.

  • பழனிவேள் கவிதைகள்


  • அகமும் அயலும்: 'உயிர் தின்ற காலம்' :: பிரஸன்னா ராமஸ்வாமி
    >கான் சர்வதேசத் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட ப்ரஸன்னா ராமஸ்வாமி தன் அனுபவங்களை இத்தொடரில் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்.

  • எதிர்வினை: அதுவா அழகரசனின் விருப்பம்?
    முற்போக்காளர்களின் அரசு எதிர்ப்பு, ஆதிக்கச் சாதி எதிர்ப்பாக மாறிய நிலையில் அறிவுஜீவிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டதாக அழகரசன் அவதானிக்கிறார். அந்த நெருக்கடியின் விளைவுகளாகப் பெரியார் குறித்த மறுவாசிப்புக்கான எதிர்வினைகளைக் கருதுகிறார். இது அறிவுஜீவிகளின் அடிப்படையையே சந்தேகிக்கும் மோசமான கருத்து.

  • தேவை தடைகள் அல்ல, கருத்துப் பரிமாற்றம் :: அ. ராமசாமி
    புகைபிடிப்பவர்களே இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என நமது அரசாங்கம் நினைக்கலாம். அப்படி நினைத்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கை திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் புகைபிடிக்கும் காட்சிகளுக்குத் தடை என்னும் சட்டத்தைக் கொண்டுவருவது அல்ல.


  • அஞ்சலி: சிவராம் - கொலையும் குருதியும் ஒரு துளி மையும்
    ஒரு அறிவுஜீவித வறுமைக்குள் ஈழத் தமிழ்ச் சமூகம் சென்றுகொண்டிருக்கிறதா என்று அவர் எழுப்பிய வினாவுக்கு 'ஆம்' என்பதாக இருந்தது அவரது படுகொலை.

  • அஞ்சலி: போல் ரிகர் - தத்துவக் கதவுகளைத் திறந்தவர்
    மனித மனசாட்சியின் ஆழங்களையும் ஆழ்மனத்தின் செயல்பாடுகளையும் பற்றி உளவியல் ஆய்வு வாயிலாகவும், உரையியல் வாயிலாகவும் சிந்தித்த போல் ரிகரின் மறைவு ஒரு பெரிய இழப்பு என்றபோதிலும், தத்துவச் சிந்தனை அவரை மறக்க முடியாத அளவுக்குப் பல கதவுகளைத் திறந்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

  • கதா புருஷன்: அடூரின் உலகிற்கு ஒரு சாளரம் :: சு. தியடோர் பாஸ்கரன்
    கதகளிப் பாரம்பரியத்தில் தோன்றி, நாடகத்தில் ஈடுபாடு கொண்டு, பின்னர் சினிமாக் கலையை முறைப்படி கற்ற கோபாலகிருஷ்ணன், நிகழ்கலைகளின் அழகியலில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். சினிமாமீது பரவலாக இருக்கும் உதாசீன நோக்கில் அக்கலை வடிவின் நியாயங்கள், நெறிகள், தனித்தன்மைகள் நீர்த்துப் போய்விடக் கூடாது என்பதில் தீவிர அக்கறை கொண்டவர்.

  • கலை: படித்துறைக் காட்சிகள் :: திவாகர் ரங்கநாதன்
    பொதுவாகப் புகைப்படக் கலைஞர்களுக்குத் தென்படும் வாரணாசிக் காட்சிகளை மட்டுமின்றித் தனது பார்வையையும் தொழில்நுட்பத் திறனுடன் வெளிப்படுத்தியிருக்கிறார் வினோத். இவரது முதல் கண்காட்சி இது.

  • 2 கருத்துகள்:

    அம்ஷன் குமாரின் கட்டுரையும், அ.முத்துலிங்கத்தின் செவ்வியும் மிக அருமையாக இருந்தது. நினைவூட்டியதற்கு நன்றி :) !!

    Yahoo! 360° - My Blog - PK Sivakumar - ஜூலை 2005 காலச்சுவடு - சிறு குறிப்புகள்

    ஜூலை 2005 காலச்சுவடில் பொ. கருணாகரமூர்த்தி இரட்சகன் வருகிறான் என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். எனக்குப் பிடித்திருக்கிறது. கருணாகரமூர்த்தியின் படைப்புகள் கிண்டலும், சுய அங்கதமும், யதார்த்தமும், படித்து முடித்தபின்னும் பல நாட்கள் மனதை அலைகழிக்கும் கனமும் இயல்பெனக் கொண்டவை. இந்தக் கதையும் அப்படித்தான். கதையின் அடிநாதமாக மனிதநேயமும் அறவியலை நோக்கிய பயணத்தை பொதுவாகிப் போன அறம் தவறிய வாழ்க்கை வழியே விவரிக்கிற போக்கும் இருக்கும். இவர் தன்னுடைய வலைப்பதிவில் இட்டிருந்த கதைகள் சிலவற்றை முன்னர் படித்திருக்கிறேன். அவையும் பிடித்திருந்தன. இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை நான் மிகக் குறைந்த அளவே வாசித்திருக்கிறேன். ஆனாலும், நான் விரும்பிப் படிக்கிற இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களில் அ.முத்துலிங்கம், கருணாகரமூர்த்தி ஆகியோர் எப்போதும் உண்டு. சொல்லப்போனால், அ.முத்துலிங்கத்தின் எழுத்துகூட அதற்குரிய இடத்தையும் கவனத்தையும் பெற்றிருக்கிறது. கருணாகரமூர்த்தியின் எழுத்துக்குரிய இடமும் கவனமும் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.

    சிற்றிதழ்களில் வெளிநாட்டுக் கலைஞர்களிடம் அ.முத்துலிங்கம் செய்துவருகிற நேர்காணல்கள் சிறப்பானவை. அதுவும் நேர்காணலை மின்னஞ்சல் மூலம் செய்வதில் இருக்கிற நடைமுறைச் சிக்கல்களை மீறி இந்த நேர்காணல்கள் சிறப்பாக அமைந்து வருகின்றன. ஒரு நேர்காணல் சிறப்பாக அமைய அதைச் செய்பவர் நிறையவே முன் தயாரிப்புகள் செய்ய வேண்டும். மெனக்கெட வேண்டும். இந்த நேர்காணல்களில் அ.முத்துலிங்கத்திடம் இருக்கிற பத்திரிகையாளரும், வாசகரும், அறிவுஜீவியும் வெளிப்படுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கல்கத்தா சிவப்பு விளக்குப் பகுதியைச் சேர்ந்த குழந்தைகளுடன் வாழ்ந்து, அவர்களைப் பற்றிய விவரணப்படத்தை எடுத்து ஆஸ்கார் விருது பெற்ற ஜானா ப்ரிஸ்கி, ராஸ் கா·பென் நேர்காணல் இந்த இதழில் இடம் பெற்றிருக்கிறது.

    நேர்காணலில் ஒரு கேள்வி: சாதிப் பிரச்னை என்று சொல்கிறார்கள். சோனா கச்சியில் அதைப் பார்த்தீர்களா?

    ப்ரிஸ்கி: சாதிப் பிரச்னை ஒரு பிரச்னையே அல்ல. எங்கள் படத்தில் தோன்றும் எட்டுச் சிறார்களில் இரண்டு பேர் பிராமணச் சிறுமிகள். நான் பார்த்த அளவில் விபசாரத்தில் பிறந்த குழந்தைகள்தான் உண்மையில் தீண்டத்தகாதவர்கள்.

    ப்ரிஸ்கியைக் கட்டுடைத்துப் பார்க்கிறேன் என்று யாரும் கிளம்பிக் குழப்பியடிக்காமல் இருக்க பிரார்த்திப்போமாக.

    சினிமாவில் சிகரெட்டுக்குத் தடை பற்றி அ.ராமசாமி பல எதிர்க்கருத்துகளை முன்வைத்திருக்கிறார். அ. ராமசாமி ஆசிரியர் வேலை பார்க்கிறார் என்று அறிகிறேன். ஆசிரியர்கள்பாலும் மருத்துவர்கள்பாலும் எனக்கு எப்போதுமே ஒரு சாப்ட் கார்னர் உண்டு. சமூகத்துக்கு அவர்கள் செய்கிற பங்களிப்பின்பால் பிறந்தது அது. அந்தக் காரணத்தினாலேயே சில நேரங்களில் அ. ராமசாமி எதிர்க்கருத்துகள் என்ற பெயரில் உடன்பாடில்லாதவற்றை எழுதினாலும்கூட மெல்லிய முறுவலுடன் வாசித்துவிட்டுப் போய்விடுகிறேன். உதாரணமாக - வீரப்பன் விவகாரத்தில் பள்ளிக் குழந்தைகளை வைத்து வீரப்பன் பற்றி எடுத்த கேள்வி பதிலை அப்படியே சமூகத்துக்குப் பொருத்திப் பார்த்தார். இது பொருத்தமில்லாதது. சரியான சர்வேயும் இல்லை. ஆனால், சிகரெட்டுக்குத் தடை பற்றிய இந்தக் கட்டுரை எனக்குப் பிடித்திருக்கிறது.

    எஸ். ராமகிருஷ்ணனின் உலக சினிமா புத்தகம் பற்றி அம்ஷன் குமார் எழுதிய மதிப்புரை ஒன்றும் வந்துள்ளது. முழுமை பெறாத முயற்சி என்கிறார் அம்ஷன் குமார். நான் பொருட்படுத்திப் படிக்கிற சக வலைப்பதிவாளர் சந்தோஷ் குருவும் இந்தப் புத்தகம் பற்றி திருப்தியுறாமல் எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது. புத்தகம் இப்போது கைக்கு வந்துள்ளது. படித்துப் பார்க்க வேண்டும்.

    உலகமயமாக்கலின் பின்னணியில் மொழிக் கொள்கையின் அரசியல் என்ற ஒரு கட்டுரையை செ.ச. செந்தில்நாதன் எழுதியிருக்கிறார். முதலில் செந்தில்நாதன் என்ற பெயரைப் பார்த்ததும், இடதுசாரி பத்திரிகைகளில் எழுதுகிற செந்தில்நாதன் என்று நினைத்தேன். அந்தச் செந்தில்நாதன் ஏதோ ஒரு முற்போக்கு எழுத்தாளர் அமைப்பின் பொறுப்பிலும் இருந்ததாக ஞாபகம். ஆனால், அவர் இல்லை இவர் என்று கட்டுரையின் முடிவில் இருந்த குறிப்பின் மூலம் அறிய முடிந்தது. மொழிக் காவலர்கள் முரண்படக் கூடிய பல ரியலிஸ்டிக் மற்றும் தேவையான யோசனைகளை இந்தக் கட்டுரை முன்வைக்கிறது.

    கீழிருந்து எழும் உலக மயம், கல்வி உலகமயமாதல் குறித்த கட்டுரைகள் இருக்கின்றன. அவற்றை இன்னும் படிக்கவில்லை. நிதானமாகப் படிக்க உத்தேசித்திருக்கிறேன்.

    பெருமாள் முருகன் தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றுபவர். அவரின் அடிப்படையான தமிழார்வமும், பணியும் அவர் எழுதுகிற தனிப்பாடல் பற்றிய குறிப்புகள், புத்தக மதிப்புரைகள் ஆகியவற்றில் பெரிதும் உதவுகின்றன. மரபும் நவீனமும் அறிந்த ஒரு பார்வையை இப்படிப் பழம் இலக்கியங்களின்பால் ஈடுபாடு உடையோர் கொணர முடியும். மரபை அறிந்து கொள்ளாமல் நவீனத்துவம் பேசிப் பிரயோசனமில்லை என்பதால், நம் மரபில் புலமை மிக்க ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன், ஜெயமோகன், பெருமாள் முருகன் போன்றவர்கள் சொல்கிற கருத்துகளை நான் ஆர்வத்துடன் படிப்பதுண்டு. இந்த இதழில் சோர கவி மரபு - லீலா வினோதம் என்ற தலைப்பில் பெருமாள் முருகன் எழுதியிருக்கிற கட்டுரை, எப்படி ஒரு புத்தகத்தைத் தழுவி இன்னொரு புத்தகம் வந்திருக்கிறது என்று எடுத்துச் சொல்கிறது. கு.பா.ரா. இதழ் தொகுப்புகளின் பதிப்பைப் பற்றி பதிப்பின் குறைகளைச் சுட்டிக் காட்டிப் பெருமாள் முருகன் எழுதியிருந்தது ஞாபகம் வருகிறது.

    கீரிப்பட்டி - பாப்பாபட்டி பற்றி ரவிக்குமார் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். கீரிப்பட்டியிலும் பாப்பாபட்டியிலும் அல்லது இந்தியாவின் எந்தப் பகுதியிலும் தலித்துகள் மீது மட்டுமில்லை வேறெந்த சாதியினர் மீதும் இழைக்கப்படும் அடக்குமுறைகளையும் கொடுமைகளையும் கண்டு ஓர் இந்தியனாக நான் வெட்கப்படுகிறேன். எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு இவற்றுக்குச் சட்டரீதியான வழிகளில் நிவாரணம் காணப்பட வேண்டும். கட்சி பேதமின்றி அனைவரும் முன்னெடுத்துச் சென்று போராட வேண்டிய விஷயம் இது. இந்த இடத்தில் ராஜ் கௌதமன் ஒருமுறை இது சாதிப் பிரச்னை மட்டுமில்லை, மனங்களின் பிரச்னை என்ற ரீதியில் சொன்னது நினைவுக்கு வருகிறது. எனவே, அரசுசார் மற்றும் அரசுசாராத தொண்டு நிறுவனங்கள் ஜாதீயக் கொடுமைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துகிற திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்த வேண்டும். அனைவரையும் கல்வியறிவும் விழிப்புணர்வும் பெறவைப்பது மனங்களின் தடைகளை மீறி அனைவரும் வெளிவர உதவும்.

    சிற்றிதழ்களில் வருகிற கவிதைகளைப் பற்றிப் பேசுகிற உத்தேசமில்லை. எனக்குப் புரியாத கவிதைகள் எனக்கானவை அல்ல என்றும் எனக்குப் புரிகிற சிரத்தை எடுத்து எழுதப்படாத கவிதையை புரிந்து கொள்கிற சிரத்தை எடுத்துப் பரீட்சைக்குப் படிப்பதுபோல படிக்க வேண்டுமா என்றும், ஒண்ணுமே புரியலை. அதனாலே நல்ல கவிதை போலிருக்கு என்றும் நேரத்துக்கும் மூடுக்கும் தகுந்தமாதிரி சிற்றிதழ் கவிதைகளை நான் தாண்டிப்போய் விடுகிறேன். நவீன கவிதையை எப்படிப் புரிந்து கொள்வது என்று யாரேனும் புத்தகம் எழுதினால் முதல் ஆளாகக் காசு கொடுத்து வாங்கத் தயார்.

    பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். மற்றும் அத்வானியின் சமீபகால கூத்துகள் பற்றி அரவிந்தன் எழுதியிருக்கிறார். மென்மையாக விமர்சித்திருக்கிற மாதிரி எனக்குத் தோன்றுகிறது. செய்திகளைத் தொகுத்துத் தந்திருக்கிற மாதிரியும் தெரிகிறது. தன் கருத்தாக அரவிந்தன் என்ன சொல்ல வருகிறார் என்று தெளிவாகப் புரியவில்லை.

    நான் விரும்பிப் படிக்கிற இன்னொரு கட்டுரையாளர் தியோடர் பாஸ்கரன். சினிமா, இயற்கை மற்றும் சூழலியலைப் பற்றி இவர் எழுதுகிற கட்டுரைகள் முக்கியமானவை. இந்த இதழில் அடூரின் உலகிற்கு ஒரு சாளரம் என்ற கட்டுரையை எழுதியிருக்கிறார். கலைப்படத்திற்கும் ஆவணப்படத்திற்கும் என்ன வித்தியாசம் என்று ஒருமுறை அடூரிடம் கேட்டபோது, எனக்குத் தெரியாது. நான் கலைப்படம் எடுப்பதில்லை, சினிமா எடுக்கிறேன் என்று அடூர் சொன்ன பதிலைத் தியோடர் பாஸ்கரன் பகிர்ந்து கொள்கிறார். இந்தப் பதிலை சினிமாவுக்கு மட்டுமில்லை எழுத்துக்கும் பொருத்திப் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

    இவையில்லாமல் அஞ்சலிக் கட்டுரைகள், வாசகர் கடிதங்கள், படித்துறை, கான் சர்வதேச திரைப்படவிழா பற்றிய கட்டுரை என்று பலவும் உள்ளன. அவற்றைப் பற்றிச் சொல்வதற்கு எனக்கு ஒன்றும் இல்லை.

    PK Sivakumar

    கருத்துரையிடுக

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு