செவ்வாய், ஜூலை 05, 2005

ஞாநி

'ஓ' பக்கங்கள் ::

புதுக் கவிதைக்கு அடுத்தபடியாக, தமிழில் பிரமாண்டமாக வளர்ந்து வரும் துறை, குறும்படத்துறை. ஒரு அஞ்சல் அட்டை இருந்தால் போதும், புதுக்கவிதை எழுதிவிட முடியும் என்று ‘கவிஞர்’கள் நம்புவது போலவே, ஒரு ஹேண்டிகேம் கிடைத்தால் போதும், குறும்படம் செய்துவிடலாம் என்று நினைக்கும் ‘இயக்குநர்கள்’ எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஹேண்டிகேம் மூலம் தொழில் நுட்பம் எளிமையாக மாறியதும், தமிழகத்தில் கடந்த ஐந்தே ஆண்டுகளில் சுமார் 30 கல்லூரிகளில் விஸ்.காம், மாஸ்.காம் பட்டப் படிப்புகள் அறிமுகமானதும் இந்த ‘இயக்குநர்கள்’ எண்ணிக்கையை அதிகப்படுத்தி இருக்கின்றன.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் நமக்கு மின்சாரம் தருவது மட்டுமன்றி, வேறு அக்கறைகளிலும் ஈடுபட்டிருக்கிறது. அரசாங்க நிறுவனம் ஒன்று, ஒரு பெரிய புத்தகக் கண்காட்சியையும், சிறுகதைப் போட்டியையும் நடத்துவது நெய்வேலியில் மட்டும்தான். இந்த ஆண்டு முதல் குறும்படப் போட்டியும் நடத்துகிறார்கள். அதற்கு வந்த 76 குறும்படங்களையும் இரண்டு நாட்களில் பார்த்து, பரிசுக்குரியதைத் தேர்ந்தெடுக்கும் சிக்கலான வேலையைச் செய்து முடித்தபோது, புதுக்கவிதை சந்தித்த அதே பிரச்னைகளைக் குறும்படங்களும் சந்திப்பது தெரிந்தது.

மொழி மீது ஆளுமை இல்லாமலே கவிதை எழுத முற்படுவது போல, கேமரா, ஸ்க்ரிப்ட் பற்றியெல்லாம் எந்தப் புரிதலும் இல்லாமலே குறும் படம் எடுப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம். எப்படி பல மோசமான புதுக்கவிதைகளில்கூட ஓரிரு வரிகளில் பளிச் என்று சில சிந்தனைப் பொறிகள் தெறிக்குமோ, அது போல அலுப்பூட்டும் குறும்படங்களிலும் சின்னச் சின்ன பளிச்சுகள் இருக்கத்தான் செய்கின்றன.

குறும்படங்களை எடுப்பவர்களில் இன்று பல வகையினர் இருக்கிறார்கள்.

1. மாணவர்கள்: எய்ட்ஸ், போதைப் பழக்கம், வரதட்சணைக் கொடுமை பற்றியெல்லாம் படம் எடுத்தால் எங்கேயாவது, ஏதாவது அவார்டு கிடைத்துவிடும் என்ற மூட நம்பிக்கை இவர்களில் பலருக்கு இருக்கிறது. மீதிப் பேர் விளம்பரப் படம் எடுப்பதற்கான பயிற்சி மாதிரி ‘காக்க காக்க’ கட்டிங்கில் படம் எடுக்கிறார்கள்.

2. தங்களைக் ‘கலைஞர்’கள், ‘இலக்கியவாதி’கள் என்று நம்புகிறவர்கள்: தன்னால் நன்றாக நடிக்க முடியும் என்று நினைக்கும் இளைஞர்கள், அந்த நடிப்புத் திறனை வெளிப்படுத்த கதை செய்து எடுக்கும் படங்களில், மிகையான, செயற்கையான நடிப்புடன் கூடவே, அவர்களின் அப்பாவித்தனமான ஆர்வமும் தெரிகிறது. 1950-கள், 60-களில் வெளி யான பட பாணியிலேயே இன்னமும் கதை, வசனம், பாடல்கள் எழுதும் ‘இலக்கியவாதி’களை இந்தக் குறும் படங்களில் நிறையவே சந்திக்கலாம்.

3. சமூக அக்கறையுடைய இளைஞர்கள்: ஓர் அசலான பிரச்னையை ஆவணப்படுத்தும் ஆர்வத்துடன் படம் எடுக்கும் இவர்களில் பலருக்கு எளிமையான தொழில்நுட்பமே எதிரியாகிவிட்டது. ஹேண்டிகேமில் ஆட்டோ ஃபோகஸில் போட்டுப் படம் எடுக்கும்போது, யாரைப் பேட்டி எடுக்கிறாரோ அவர் முகம் கறுப்பாகவும், பின்னால் இருக்கும் பிரகாசமான வானம் பளிச்சென்றும் இருப்பதால் ஏற்படும் நெருடல்கள் இவர்களுக்குப் புரிவதில்லை. ஆடியோ துல்லியமாகப் பதிவாகியிருக்கிறதா என்பதையும் கவனிப்பதில்லை. விளைவு, நல்ல நோக்கத்துடன் எடுக்கப்பட்ட மோச மான படங்களாக இவை ஆகிவிடு கின்றன. இந்த வகைப் படங்களைப் பெருக்குவதில் தொண்டு நிறுவனங் களின் தொண்டு கணிசமாக இருக்கிறது.

4. விசிட்டிங் கார்டு இயக்குநர்கள்: பிரமாண்டமான வர்த்தக சினிமாவில் கால் பதிக்க விரும்பும் இளைஞர்கள், உதவி இயக்குநராகச் சேர விரும்புவோர், சேர்ந்திருப்போர் என்று பலர், குறும்படத்தை ஒரு விசிட்டிங் கார்டு போலக் கருதுகிறார்கள். இவர்களில் பலரின் படங்களில் கமர்ஷியல் படத்துக்கான அம்சங்களும் இருப்ப தில்லை; மாற்றுப் படங்களுக்கான தேடலும் இருப்பதில்லை. இரண்டுக்கும் நடுவில் எங்கோ சிக்கிக்கொள்கின்றன.

இந்த வகைகளில் சேராமல் சினிமா, சமூகம் இரண்டின் மீதும் அக்கறையுடனும், இரண்டைப் பற்றியும் கற்றுக்கொள்ளும் உழைப்புடனும் குறும்படம் எடுப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், குறும்படப் போட்டிக்கு வந்த 76-ல் அப்படிப்பட்ட படங்களாக ஐந்தாறு தேறுவதுகூட கடினமாகத்தான் இருக்கிறது.

குறும்படங்கள் எடுப்பவர்களுக்குச் சில அடிப்படைகளைக் கற்பிக்கும் பயிற்சிப் பட்டறைகள் தேவை. இவற்றையும் சரியானவர்கள் செய்யா விட்டால் ஆபத்தாகிவிடும். எனவே, நேர்மையான படைப்பாளிகளைக் கொண்டு பயிற்சி முகாம்கள் நடத்தலாம். ஒவ்வொரு கல்லூரியிலும் குறும்பட விழா நடத்தலாம். சினிமாக் கொட்டகைகளில் சனி, ஞாயிறுகளில் காலை 8 முதல் 10 மணி வரை குறும்படங்களைப் போட்டுக் காட்ட லாம். டி.வி. சேனல்களில் தினசரி இரவில் ஒரு அரை மணி நேரம் குறும்படங்களை ஒளிபரப்பலாம். எல்லா ‘லாமு’ம் நிறைவேறினால், குறும் படத் துறையில் சுய உதவிக் குழுக்களுக்கு நிகரான புரட்சி ஏற்படும்.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு